> குருத்து: புத்தகங்கள்

February 2, 2025

புத்தகங்கள்


சென்னையில் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு இரண்டு முறை சென்றேன்.  ஒருமுறை சென்னையில் இயங்கும் GST Professionals societyயின் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் ”ஜி.எஸ்.டி குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்” என்ற புத்தகத்தை எளிய கேள்வி பதில் வடிவத்தில் 567 பக்கங்களுக்கு எழுதி தொகுத்திருந்தார்.  மணிமேகலை பிரசுரம் அச்சிட்டு வெளியீட்டு விழாவும் வைத்திருந்தது.  கடந்த 05/01/2025 அன்று நிகழ்வில் கலந்துகொண்டு,   சில புத்தகங்களையும் வாங்கி வந்தேன்.

 

புத்தக திருவிழாவின் கடைசி நாளன்று இலக்கியாவையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.  சில புத்தகங்களை வாங்கினேன்.   இலக்கியாவும் ஆர்வமாய்  இரண்டு நாவல்களை வாங்கினார்.  எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமென்றாலும் படி! நான் வாங்கித்தருகிறேன் என எப்பொழுதும் சொல்லிவருகிறேன்.

 

ஒரு இரும்பு பீரோ நிறைய புத்தகங்கள் நிறைந்து இருந்தாலும், (புத்தகங்களின் கணம் தாங்காமல் பீரோவின் கால் ஒருபக்கம் ஒடிந்துவிட்டது) படிக்க வேண்டிய புத்தகங்கள் என ஒரு பெரிய பட்டியலே வைத்திருந்தாலும், அந்தந்த காலக்கட்டத்தில் என்ன மனநிலையோ அது தான் புத்தகத்தை தேர்வு செய்கிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொண்டுள்ளேன்.

 

இருப்பினும் இது காணொளிகளின் காலம் என்பதால், படிப்பதும் குறைந்துகொண்டே வருகிறது என்பதை என் வாசிப்பை வைத்தே உணரமுடிகிறது.  இருப்பினும் தொடர்ந்து வாசிக்க முயன்று வருகிறேன்.

 

புத்தகங்களினால் பெற்றதை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது.  தினம் இரவு கொஞ்சம் படிப்பதோ, இலக்கிய கூட்டங்களின் உரைகளை கேட்டோ தான் உறங்குகிறேன்.

 

நேற்று ஒருவர் புத்தக திருவிழாவிற்கு வந்து சென்றவர்களை கூர்ந்து கவனித்தேன். 500 நபர்களில் பத்து பேர்களிடம் மட்டும் தான் புத்தக பைகளைப் பார்த்தேன் என வருத்தப்பட்டிருந்தார்.  அதற்காகவே வாங்கிய புத்தகங்களின்  புகைப்படத்தை  இங்கு பகிர்ந்துள்ளேன்.

 

கொஞ்சம் படத்தை உற்றுப்பார்த்தால், ஒரே புத்தகத்தையே சிலவற்றை வாங்கியிருக்கிறேன்.   இத்தனை வருடங்களில் திருமணங்களில் மணமக்களுக்கு பரிசாக புத்தகங்களைத் தான் தருகிறோம். சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு பரிசாக கொடுக்கும் பொழுது,  அந்த மணமகன் என் திருமண பரிசுகளில் புத்தகங்களாக தருவது நீங்கள் மட்டும் தான்! என்றார்.

 

படித்தவற்றில் துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாசிப்பதற்கு வசதியாக சில புத்தகங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்து, வாங்கித் தருகிறோம்.

 

- பேஸ்புக்கில், 14/01/2025

0 பின்னூட்டங்கள்: