> குருத்து

October 9, 2009

தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல! 'இந்துக்களின்' திருவிழா!



முன்குறிப்பு : தீபாவளியை கொண்டாட தமிழ்நாடு தயாராகி வருகிறது. துணிக்கடைகளில் கூட்டம் பிதுங்கி வழிவதும், எந்த பக்கம் திரும்பினாலும், முதலாளிகள் தங்கள் பொருளை விற்று தீர்ப்பதற்கு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ரயில்களிலும், பேருந்துகளிலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிரம்பிவிட்டன. இடம் கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிறார்கள். ஆங்காங்கே தீபாவளிக்காக வாங்கப்படும் வெடிகள் பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன. நிற்க.

தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல! 'இந்துக்களின்' திருவிழா.

பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான், நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார்

- பண்பாட்டு துறை ஆய்வாளர் தொ. பரமசிவன், இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தார், பிறகு, திருநெல்வேலியில் உள்ள மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியராகவும், பதிவாளராகவும் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். (தற்பொழுது எதுவும் பணியில் இருக்கிறாரா என தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்)

****

தீபாவளி

இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, என்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் 'தேசிய திருவிழா' போலக் காட்டப்படுகிறது. ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவே தான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில் கூடத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் 'இந்து'க்களின் திருவிழாவாக அமைகிறது.

தமிழர் திருவிழா - இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்கைன் பழைய மதங்களாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளீ) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருகார்த்திகைத் திருவிழாவே.

நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். இந்த நாளே பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் இருபத்து நாலாம்
தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுகொண்டார். ஆகவே, பிராமணீய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மாகாவீரர் இறந்த நாளையே அக்கும். விசயநகரப் பேரரசான, 'இந்து சம்ராஜ்ஜியம்', தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் 'பக்தி சிரத்தை'யுடன் கொண்டாடுகின்றனர். வடநாட்டு இந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும் சடங்காகும். தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல 'கங்கா ஸ்நானம்' செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா' என்று பாரதி தாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

- தொ.பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள்' லிருந்து. பக்.58, 59

****

மேலும் சில தகவல்கள்

தீபாவளி பற்றிய இன்னபிற கதைகள் - தமிழ்ச் சமணம்

தொ.பரமசிவன் எழுதிய நூல்கள் குறித்த தகவல்

தேவையில்லாத தாலியும், சில உருப்படியான தகவல்களும் - தொ.பரமசிவன் - நந்தவனம்

தமிழ் - தொ. பரமசிவன் எழுதிய நூல் அறிமுகம்

"தெய்வம் என்பதோர்" - தொ. ப. எழுதிய கட்டுரை தொகுதி குறித்த ஒரு பார்வை

September 30, 2009

கைவிடப்பட்டவன்! ( Cast Away)




தனிமை

'இது தெரியாதா உனக்கு?'
சங்கடப்படுத்தும் கேள்விகள்
வருவதில்லை.

வலிந்து
புன்னகைக்க வேண்டியதில்லை

செய்யும் செயலுக்கு
விளக்கம் சொல்ல தேவையில்லை.

என்னை அறிந்த
நான்.

பல விதங்களில்
தனிமையில்
செளகரியமாக உணர்கிறேன்.

தனிமை பிடிக்கும்!
தனிமையை மட்டுமல்ல!

****

நான்கு ஆண்டுகளாக நீங்கள் மனிதர்களற்ற ஒரு குட்டித் தீவில் தனியாக மாட்டிக்கொண்டால் என்ன ஆவீர்கள்? அநேகமாய் பைத்தியம் பிடிக்குமா? இல்லையெனில் நம்பிக்கைகளையும், முயற்சிகளையும் ஒன்றாய் திரட்டி தப்பித்து விடுவீர்களா?

இனி இந்த படம் பற்றி நான் சொல்வதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்! நீங்கள் ஒருமுறை படம் பாருங்கள்.

கதையெனப் பார்த்தால்...

உலக அளவில் தனது கிளைகளைப் பரப்பியுள்ள ஒரு தனியார் கூரியார் நிறுவனத்தில் நாயகன் அதிகாரியாக (system analyst) பணிபுரிகிறார். பணி நிமித்தமாக வேறு நாட்டுக்கு விமானத்தில் கிளம்புகிறார். வழியனுப்ப வரும் தன் காதலிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறார்.

விமானம் பரந்த பசிபிக் கடலில் மேலே பறக்கும் பொழுது, புயலும், மழையும் சுழற்றியடித்து, மோசமாக விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கிறது. உடன் வந்த விமானிகள் இறந்து போக, ஆபத்துக்கு உதவ வைத்திருக்கும் ஒரு மிதக்கும் படகு மூலம் மயக்க நிலையிலேயே பல மைல்கள் கடந்து, ஒரு குட்டித் தீவில் ஒதுங்குகிறார்.

தீவை ஒட்டி, எந்த விமானமும், கப்பலும் கடந்து போகாத நிலையில்... நாலு ஆண்டுகள் தனியாக வாழ்கிறார். இறுதியில்... கிடைத்த பொருட்களை கொண்டு, ஒரு படகு (!) போல ஒன்றை செய்து, பல நாட்கள் பயணித்து... ஒரு சரக்கு கப்பல் அவரை காப்பாற்றுகிறது.

தன் நாடு திரும்பினால்... அங்கே அவருக்கு அடுத்த அதிர்ச்சி. உயிருக்கு உயிராய் காதலித்த தன் காதலி இன்னொருவரின் மனைவியாக, ஒரு குழந்தைக்கு தாயாகவும் இருக்கிறார்.

தீவிலும் தனிமை. ஒருவழியாய் தப்பித்து கரை வந்தால்... சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும், தனிமை. புதிய நாட்டுக்கு, புதிய வாழ்க்கை தேடி பயணிக்கிறார். படம் முடிகிறது.

ஒரு மேலை நாட்டைச் சேர்ந்த சகல வசதிகளையும் கொண்டு வாழ்ந்த ஒரு மனிதன், அந்த தீவில் ஒதுங்கிய பிறகு, பரமபத விளையாட்டில், பாம்பு கொத்தி, துவங்கிய கட்டத்திலேயே தள்ளப்பட்டுவிடுகிறான். மனிதன் துவக்க காலங்களில் எதிர்கொண்ட எல்லா சிரமங்களையும், போராட்டங்களையும் எதிர்கொள்கிறான்.

தீயை மூட்ட எவ்வளவு முயற்சிகள்? அப்படி பல சிரமங்களுக்கு பிறகு, தீயை உருவாக்கிய பின்பு, அவன் ஆடும் சந்தோச ஆட்டம் இருக்கிறதே! அடடா! துவக்கத்தில் ஒரு சின்ன மீனை பிடிக்க கூட திணறும் நாயகன், பிறகு, நாலு ஆண்டுகளில் வேட்டையாட திறன் பெற்றுவிடுகிறான். பச்சையாகவும் தின்கிறான்.

இந்த மண்ணில் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது, இந்த மொத்த சமூகமும் உற்பத்தியில் ஈடுபட்டு, வசதியாக வாழ தேவையான அனைத்து பொருட்களையும், வசதிகளையும் உள்ளங்கையில் தயாராக தருகிறது. ஆனால், இது புரியாமல் சில ஜென்மங்கள் காசு கொடுத்தால், இங்கு எல்லாம் கிடைக்கும்! நான் ஏன் மற்றவர்களை மதிக்க வேண்டும் என பேசுகின்றன! இந்த மாதிரி ஆட்களை அந்த தனித்தீவிற்கு நாமே ஒரு கோடி ரூபாய் பணத்துடன் 6 மாததிற்கு அனுப்பி வைக்கவேண்டும். அங்கே போனதும், அந்த பணமெல்லாம் மதிப்பில்லாத தாள்களாக உருமாறிவிடும். பணத்தை எரித்து, குளிர் காய்வதற்கு ஒருவாரத்திற்கு பயன்படலாம்.

நாலு ஆண்டுகளில் அவன் போட்டிருந்த ஆடை எல்லாம் கிழிந்த நிலையில் இலை தழைகளை தான் ஆடையாக கட்டியிருப்பதைப் பார்க்கும் பொழுது,

"நமக்கான ஆடையை நாம் தாம் தயாரிக்க வேண்டுமெனில்,
இன்னும் மனிதன் இலை தழையை தான் கட்டித்திரிய வேண்டும்" என்று அப்துல்ரகுமான் சொன்னது நினைவுக்கு வருகிறது.

யாருமற்ற தீவில், யாரிடம் பேசுவது? அந்த வெறுமையை நாயகன், அவனோடு கரை ஒதுங்கிய ஒரு பந்தை வில்சன் என நண்பனாக உருவகப்படுத்தி கொள்கிறான். எல்லாவற்றையும் அந்த பந்திடம் விவாதிக்கிறான். கோபித்து கொள்கிறான். எல்லாவற்றையும் அமைதியாக (!) கேட்டுக்கொள்கிறது! இறுதியில் தப்பித்து போகும் பொழுது, நடுக்கடலில் பந்து அவனை விட்டு பிரிந்துவிடுகிறது. ஒரு நல்ல நண்பனை இழந்த ஒருவன் எவ்வளவு கதறுவானோ அந்த அளவுக்கு கதறுகிறான்!

பெருநகரங்களில் பலரும் நிறைய பேசுகிறார்கள். கேட்க பலருக்கு பொறுமை இருப்பதில்லை. தன் பிரச்சனைகளை காதுகொடுத்து கேட்கும் மனிதருக்காக பலரும் ஏங்குகிறார்கள். நாயகனுக்கு கிடைத்த பந்து போல, நானும் பலருக்கும் பயன்பட்டிருக்கிறேன்.

இன்னும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். எதிரில் உள்ள எல்லோரையும் இந்த பந்து போல நினைத்து கொண்டு, தன் சுய புராணங்களை பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த படம் பார்த்ததும் அவர்கள் தான் நினைவுக்கு வந்தார்கள். அவர்களையும் ஒரு 6 மாதத்திற்கு இந்த தீவிற்கு கடத்த வேண்டும்.

படம் 2000ல் வெளிவந்தது. டாம் காங்ஸ் (Tom Honks) - நாயகன். இந்த படத்திற்காக ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்டு, கிளேடியேட்டர் நாயகனுக்கு கிடைத்ததால், ஆஸ்காரை தவறவிட்டுவிட்டார். அருமையான நடிப்பு. இவரை ஏற்கனவே Saving private riyan, Forrest Gump - இரண்டு படங்கள் மூலம் அறிந்திருக்கிறேன். நல்ல நடிகர்.

நல்ல படம். பாருங்கள்!

மேலும் சில தகவல்கள்!

தனித்தீவில்...

கேஸ்ட் அவே - விக்கிபீடியா

September 25, 2009

பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்! - பாகம் 2


அப்படியென்றால், பணத்தின் மதிப்பு எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

அந்த மதிப்பு என்பது சம்பந்தபட்ட பொருளை உற்பத்தி செய்வதற்குச் செலவாகும் மனிதர்களின் உழைப்பை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இந்த உழைப்பின் மதிப்பே சமுதாய மதிப்பாக தீர்மானிக்கப்படுகிறது.

இப்படி மனிதனால் உற்பத்தி செய்யப்படும் பொருளை வாங்கவும் விற்கவும் ஒரு பொருள் ஊடகமாக தேவைப்படுகிறது. அதுதான் பணம். (அதாவது மனிதர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதற்கு எப்படி ஒரு மொழி தேவைப்படுகிறதோ அதை போன்றே) இதன் மதிப்பு என்பது நீண்ட நாள் நீடித்து இருக்ககூடிய - மாறாமல் இருக்கக் கூடிய - தகுதி வாயந்ததாகவும் இருக்கக் கூடிய பொருளைத்தான் பயன்படுத்த துவங்கினர். இதை கணக்கில் கொண்டு தான் தங்கத்தை உலக நாடுகள் அனைத்தும் பொருட்களை வாங்கவும், விற்கவும் பரிமாற்றிக் கொள்ளவும் ஒரு பொருளாக ஊடகமாகப் பயன்படுத்த துவங்கினர்.

துவக்கத்தில் தங்க காசுகளைத்தான் நாணயமாக தயாரித்து வணிகத்திற்கு பயன்படுத்தினர். அதாவது ஒரு அரசு தனது நாட்டில் உள்ள தங்கம் முழுவதையும் தன்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிறது. பின்பு ஒரு தங்க காசுக்கு (நாணயத்திற்கு) 1/4 அவுன்ஸ்-க்கான தங்க மதிப்பாக தயாரிக்கிறது.

அதாவது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் மதிப்பு ரூ. 1000 என்றால் 1/4 அவுன்ஸ் தங்கத்தின் மதிப்பு ரூ. 250 என்று வைத்துக்கொள்வோம். அரசு 1/4 அவுன்ஸ் தங்க நாணயத்தை மக்களிடம் கொடுத்து அதற்கானப் பொருளைப் பெற்றுக்கொள்கிறது. இந்த அடிப்படையில் காசுகளை தயாரித்து மக்களிடம் புழக்கத்தில் விடுகிறாது.

புழக்கத்தில் விட்ட தங்க காசுகளை வரி மூலம் திரும்ப பெற்று அரசின் தங்கத்தின் கையிருப்பை உறுதி செய்கிறது. அதாவது எவ்வளவு தங்கம் கையிருப்பு இருக்கிறதோ, அதற்கேற்ப தான் நாணயம் தயாரிக்க முடியும் என்பது நியதி.

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால்..

நாட்டின் மொத்த உற்பத்தியைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப தங்க நாணயங்களை தயாரித்து புழக்கத்தில் விடுதல். அதாவது 500 டன் தங்கத்தின் மதிப்பிற்கு பொருள்களின் உற்பத்தி இருக்கும் பட்சத்தில் 500 டன் தங்கத்தின் மதிப்பிற்கு 1/4 அவுன்ஸ் எடை கொண்ட தங்க காசுகளை தயாரித்து வெளியிடுவர்.

அதாவது,

1/4 அவுன்ஸ் எடை கொண்ட (ரூ. 250 மதிப்புள்ள) தங்க காசிற்கு ஒரு பசு மாட்டை வாங்க முடியுமென்றால், ஒரு பசுவின் விலை ரூ. 250. (பழைய லண்டனின் நாணயம் 1/4 அவுன்ஸ் - ஒரு தங்க காசு)

அரசினால் தங்கத்தை அதிகரிக்க முடியாத சூழலில், பொருளுற்பத்தியை அதிகரிக்க முடியாத சூழலில் அல்லது வேறு சில காரணங்களால் அரசானது தங்க காசுகளை (நாணயங்களை) அதிகரிக்க நினைக்கிறது. அப்பொழுது புழக்கத்திலுள்ள 500 டன் எடையுள்ள தங்கத்திற்கேற்ப 1/4 அவுன்ஸ் எடையுள்ள தங்க காசுகளை 1/8 அவுன்ஸ் எடையுள்ள தங்க காசுகளாகத் தயாரித்து வெளியிடும்.

இதன் விளைவு, தங்க காசின் மதிப்பு 50% குறைந்து விட்டதால், ஒரு காசு கொடுத்து வாங்கிய பசுவை இனி இரண்டு தங்க காசுகளைக் கொடுத்து வாங்க வேண்டியது வரும்.

இது முந்தைய காலங்களில்... நவீன காலங்களில் எப்படி?

அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்! - பாகம் 1