> குருத்து: Internal Audit : இரண்டு பேரின் வேலை பறிபோனது!

September 9, 2026

Internal Audit : இரண்டு பேரின் வேலை பறிபோனது!

 தேவக்கோட்டை மில்லில்….

 

துவக்க காலத்தில், என்னுடைய 20 களில் தணிக்கையாளர் திரு. சிதம்பரம் அவர்களிடம் மூன்று ஆண்டுகள் உதவியாளராக இருந்தேன். மூன்று உதவியாளர்கள். பெரும்பாலும் அலுவலகம் பக்கம் தலை வைத்தே படுக்கமாட்டோம்.  நேரே நிறுவனங்களுக்கு போய், சோதனை (internal Audit) செய்வது தான் எங்களது வேலை.

 

ஒருமுறை தேவகோட்டை, காரக்குடியில் இரண்டு பஞ்சாலைகள் இருந்தன. அதில் தேவகோட்டையில் இருந்த பஞ்சாலைக்கு நானும் சக ஊழியரும் சோதிக்க போயிருந்தோம். அந்த பஞ்சாலையில் தான் துவக்க காலத்தில்  ஊழியராகவும் எங்கள் தணிக்கையாளர் வேலை செய்திருந்தார்.  தணிக்கையாளரானதும் கூடுதல் பொறுப்புகளை தந்துவிட்டனர்.

 

முதல்நாளில் 50+ வயதில் இருந்த கணக்காளரிடம்  கையிருப்பு ரொக்கத்தைப் பார்த்தால் மூன்று லட்சம் வரை இருந்தன.  எண்ணிப் பார்த்தால், 85 ஆயிரம்  குறைந்தது.   இளவயது என்பதால்… என்னை ஏற்கனவே எண்ணிவிட்டீர்கள் என ஏமாற்றப் பார்த்தார். பரவாயில்லை. வாங்க முதலில் இருந்து எண்ணுவோம் என எண்ணினால், மீண்டும் அதே தொகை குறைந்தது. அதற்கு  பிறகு அவர் அமைதியாகிவிட்டார்.

 

நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டுமே! தெரிவித்தேன்.  தணிக்கையாளரின் வீட்டு தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டால்… பழுதாகி இருந்தது. நேரே வீட்டுக்கே போய்விட்டேன். என்னைப் பார்த்ததும், “காலையில் தான் தேவகோட்டை போனீங்க! இப்ப வந்து நிற்கிற!” என்றார்.   விசயத்தைச்  சொன்னதும், அந்த கணக்காளருக்கு பள்ளி முடிக்கிற காலத்தில் இரண்டு பசங்க இருக்காங்களே! இப்படி ஆகிப்போச்சா! என வருந்தினார்.  பிறகு அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டதாக செய்தி வந்தது.

 

மதுரை மோட்டார்ஸ் நிறுவனம்

 

ஹீரோ ஹோண்டா நிறுவனம். மாதத்திற்கு ஒருமுறை தணிக்கைக்கு போவோம்.  அந்தமுறை நான் முதன் முதலாக போயிருந்தேன்.   இந்தமுறையும் கையிருப்பு ரொக்கத்தை சோதித்த பொழுது, நிறுவனத்தின் கணக்கு சரியாக இருந்தது.

 

ஆனால்,  வண்டிகள் பதிவு செய்வதற்காக,  வாடிக்கையாள்ர்கள் RTO செலுத்தவேண்டிய பணத்தை .. தனித்தனி கவர்களில் போட்டு வைத்திருந்ததில், நான்கு கவர்களில் பணம் இல்லை. பொய்க்கவர்களாக இருந்தது.  கேட்டால், ”வீட்டின் அவசர மருத்துவ தேவைக்கு அதை எடுத்துச் செலவழித்துவிட்டேன். நிர்வாகத்திடம் தெரிவித்துவிடாதீர்கள்” என பாவமாக கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்.   அவருக்கும் வயது 50+ ல் இருந்தார்.

 

தணிக்கையாளருக்கு போனில் தெரியப்படுத்தினால்,  எப்பொழுதும் கொஞ்சம் கிண்டலாக பேசுகிறவர் “என்னப்பா! போகிற இடத்தில் எல்லாம், கேசியரை காலி பண்ணிடற! சரி! நிர்வாகத்திடம் முறையாக தெரிவித்துவிடு!” என்றார்.

 

-         - இரா. முனியசாமி

0 பின்னூட்டங்கள்: