வேறு வேறு விஷயங்களுக்காக நமது உறுப்பினர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த ஏற்காடு பயணத்தைப் பற்றியும் பேச்சு வந்தது.
நிறுவனங்களில் வேலை பார்க்கும் நால்வர், “ஜூலை முதல் வாரம் சார்… சம்பளம், TDS, கணக்குகள்… எங்கும் நகர முடியாது” என்றார்கள். அதே நேரத்தில், “ஜூன் கடைசி வாரம் இருந்திருந்தால்,
ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம்” என்ற வார்த்தையும் வந்தது. இது ஒரு சிறிய கவனிக்க வேண்டிய விஷயம்.
நமது வேலைகள் எப்போதும் நம்மை சுற்றியே இருக்கும். அவை முடிந்த பிறகே நாம் ஓய்வெடுப்போம் என்று காத்திருந்தால், அந்த நாள் வருவது அரிது. வேலை நமக்கு விடுப்பு கொடுத்து, “சென்று வாருங்கள்” என்று சொல்லாது. நாம்தான் அதிலிருந்து சில நாட்களை எடுத்துக்கொள்ள
வேண்டியிருக்கிறது.
இங்கே எனக்கு தெரிந்த ஒரு மனிதர் நினைவுக்கு வருகிறார். கே.கே. நகரில் இருக்கும் தணிக்கையாளர் திரு. கிருஷ்ணன். 38 வயது வரை LIC-ல் Branch Manager ஆக
பல மாநிலங்களில் பணியாற்றியவர். அதற்குப் பிறகு முடிவு செய்து, தேர்வு எழுதி தணிக்கையாளராக மாறினார்.
இப்போது நடுத்தர, பெரிய நிறுவனங்களை கையாள்கிறார். ஆனால் அவரின் வேலை முறையே வித்தியாசம். ஜூலை மாதம் கடைசி தேதி என்றால், அவர் ஜூன் மாதத்திலேயே முடித்துவிடுவார். அக்டோபர் மாதம் கடைசி தேதி என்றால், அதிகப்பட்சம் செப்டம்பருக்குள்
முடித்து விடுவார்.
நாம் கடைசி தேதிகளில் தளத்தோடும், ஆவணங்களோடும் மல்லுக்கட்டிக்
கொண்டிருக்கும் நேரத்தில், அவர் அமைதியாக ஒரு நாட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பார்.
அவரிடம் ஒரு பழக்கம்: பயணத்திற்காக எந்த ஏஜென்சியையும் அணுகமாட்டார். தானே படித்து, தங்கும் இடம் முதல் திட்டம் வரை அனைத்தையும் முன்கூட்டியே அமைத்து, தன் துணைவியாருடன் கிளம்பிவிடுவார்.
இந்தியாவிலிருந்து தொடங்கி, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம்… இப்படி 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
இது மட்டும் அல்ல. அவரது அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும்
ஐந்து நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை, மேலும் பயண செலவுக்கும் உதவி அளிக்கிறேன் என்றார். ஒருமுறை சிரித்துக்கொண்டே
சொன்னார்: “இவ்வளவு கொடுத்தும், சிலர் இன்னும் ஊரைவிட்டு நகர மாட்டேன் என்பார்கள்” என்று.
இந்த அனுபவம் ஒரு விஷயத்தை நினைவுபடுத்துகிறது. பயணம் என்பது நேரம் இருந்தால் செய்வது அல்ல. நேரம் ஒதுக்கி செய்வது. நாம் செய்யாமல் இருந்தால், வேலை எப்போதும் காரணம் தரும். இந்த ஆண்டு நமது சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஏற்காட்டிற்கு இரண்டு நாள் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இது ஒரு சாதாரண சுற்றுலா அல்ல. சில நாட்கள் வேலை வட்டத்திலிருந்து வெளியே வந்து, மனதையும், உறவுகளையும் சீராக்கிக்கொள்ளும் ஒரு வாய்ப்பு. இந்த முறை வர முடியாத காரணங்கள் இருந்தால், அது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் வர முடியும் நிலை இருந்தும் தள்ளிப்போட வேண்டாம்.
ஏனெனில்… இப்படியான வாய்ப்புகள் அடிக்கடி வருவதில்லை. இறுதியாக... வேலை எப்போதும் இருக்கும். ஆனால் அந்த வேலைக்கிடையில்
நாம் உருவாக்கிக்கொள்ளும் நினைவுகள்தான் நீண்ட நாள் நிற்கும்.
- இரா. முனியசாமி

0 பின்னூட்டங்கள்:
Post a Comment