> குருத்து: மொபைல் காலத்தில் ஏன் தனிமை அதிகரிக்கிறது?

June 27, 2026

மொபைல் காலத்தில் ஏன் தனிமை அதிகரிக்கிறது?

 


"இப்போதெல்லாம் யாரும் யாருடனும் பேசுவதில்லை!" இந்த வாசகத்தை பெரியவர்கள் அடிக்கடி சொல்வதை கேட்டிருப்போம். முதலில் கேட்டால் அது ஒரு பழைய தலைமுறையின் புலம்பல் போலத் தோன்றலாம். ஆனால் கொஞ்சம் சுற்றிப் பார்த்தால் அதில் ஒரு உண்மை இருப்பதை மறுக்க முடியாது.

 

மனிதர்களின் வாழ்க்கையில் வசதிகள் அதிகரித்திருக்கின்றன. தகவல் தொடர்பு வேகம் அதிகரித்திருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் சில நொடிகளில் தொடர்பு கொள்ள முடிகிறது.

 

ஆனால் ஒரு கேள்வி... மனிதர்கள் உண்மையில் முன்பைவிட அதிகமாக பேசுகிறார்களா? அல்லது முன்பைவிட குறைவாகப் பேசுகிறார்களா?

 

ஒரு காலத்தில் வீட்டின் முன் திண்ணை இருந்தது. மாலை நேரங்களில் அக்கம் பக்கத்தினர் கூடுவார்கள். தெரு, ஊர், விவசாயம், வேலை, குழந்தைகள் என்று ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள்.

 

இன்று? ஒவ்வொருவரின் கையிலும் ஒரு மொபைல் இருக்கிறது. ஆனால் ஒருவருக்கொருவர் பேச நேரமில்லை. உறவுகளை வளர்ப்பது பணத்தால் அல்ல. உரையாடலால் தான்.

 

ஒருவருடன் தொடர்ந்து பேசும்போதுதான் அவருடைய மகிழ்ச்சி, கவலை, பயம், ஆசை, ஏமாற்றம் ஆகியவற்றை அறிய முடியும். அங்கேதான் உறவு வேரூன்றுகிறது.

 

ஆனால் இன்று பல வீடுகளில் ஒரு விசித்திரமான காட்சி. தந்தை ஒரு திரையைப் பார்க்கிறார். தாய் ஒரு திரையைப் பார்க்கிறார். பிள்ளைகள் வேறு திரைகளைப் பார்க்கிறார்கள். அனைவரும் ஒரே அறையில் இருக்கிறார்கள். ஆனால் யாரும் யாருடனும் இல்லை.

 

சில நேரங்களில் ஒரு வீட்டில் ஒரு மணி நேரம் அமைதியாக இருக்கும். சண்டை இல்லை. பிரச்சினை இல்லை. ஆனால் உரையாடலும் இல்லை. அந்த அமைதி ஆரோக்கியமான அமைதி அல்ல; உறவுகள் மெதுவாக விலகும் அமைதி

.

சமூகத்திலும் இதே நிலைதான். முன்பு தேநீர் கடை, பூங்கா, தெருமுனை, சங்கக் கூட்டம், நண்பர்கள் சந்திப்பு என்று பல இடங்களில் மக்கள் பேசினார்கள். இன்று பலர் சந்திக்கிறார்கள். ஆனால் பேசுவதில்லை.

 

சந்தித்தாலும், சில நிமிடங்களில் அனைவரின் பார்வையும் மொபைலுக்குள் சென்று விடுகிறது. அதனால் ஒரு விசித்திரமான முரண்பாடு உருவாகியுள்ளது.

 

நமக்குப் பழக்கமானவர்கள் அதிகம். ஆனால் நெருக்கமானவர்கள் குறைவு. தொடர்புகள் அதிகம்.ஆனால் தொடர்புணர்வு குறைவு. நண்பர்கள் பட்டியல் நீளம். ஆனால் மனம் திறந்து பேசக்கூடியவர்கள் சிலரே. இதன் விளைவாக தனிமை மெதுவாக வளர்கிறது.

 

தனிமை என்பது அருகில் யாரும் இல்லாத நிலை மட்டும் அல்ல. நம்மைச் சுற்றி பலர் இருந்தாலும், நம்மை யாரும் உணரவில்லை என்ற உணர்வும் தனிமைதான்.

 

மொபைல் தொழில்நுட்பம் இதில் குற்றவாளி அல்ல. அது ஒரு கருவி மட்டுமே. ஆனால் அந்தக் கருவி மனிதர்களுக்கிடையிலான உரையாடலை மாற்றி, உறவுகளுக்கான நேரத்தை முழுவதுமாக எடுத்துக்கொள்ளத் தொடங்கும்போது பிரச்சினை உருவாகிறது.

 

உறவுகள் பேசிப் பேசித்தான் வளரும். அமைதியாக இருந்தால் மரம் வளராது. தண்ணீர் ஊற்ற வேண்டும். அதேபோல் உறவுகளுக்கும் உரையாடல் என்ற தண்ணீர் அவசியம்.

 

இன்று தனிமை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, வீட்டிலும் சமூகத்திலும் உரையாடல் குறைந்து வருவதுதான்.

 

மொபைல் நம்மை உலகத்துடன் இணைத்திருக்கலாம். ஆனால் நமக்கு அருகில் இருப்பவர்களுடன் பேசும் பழக்கத்தை இழந்துவிட்டால், அந்த இணைப்பு முழுமையடையாது.


இறுதியாக...

 

நாளொன்றுக்கு சில நிமிடங்களாவது மொபைலை தள்ளி வைக்கலாம். வீட்டில் இருப்பவர்களுடன் பேசலாம். நண்பர்களை நேரில் சந்திக்கலாம். ஒரு மனிதக் குரலைக் கேட்கலாம். ஏனெனில் மனித உறவுகளின் அடித்தளம் "இணையம்" அல்ல.  உரையாடல் தான்.


- இரா. முனியசாமி

0 பின்னூட்டங்கள்: