> குருத்து: கவனக்குறைவும் சிதைவான வாழ்வும்!

November 24, 2026

கவனக்குறைவும் சிதைவான வாழ்வும்!


சாலையில் செல்லும்போது ஒரு விஷயத்தை அடிக்கடி பார்க்க முடிகிறது. வண்டி ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசுவது, காதில் ஒலிக்கருவியை மாட்டிக்கொண்டு ஏதோ கேட்டுக்கொண்டே செல்வது. சிலருக்கு வண்டி ஓட்டுவது ஒரு வேலையாகவே தெரிவதில்லை. ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டே பயணிப்பது போல இருக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல் இதை செய்கிறார்கள்.

 

ஆனால், அந்தச் சில நிமிடக் கவனக்குறைவு ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

 

எங்கள் பழைய வீட்டுக்கு எதிரே ஓர் இளைஞர் வசித்து வந்தார். ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். இரண்டு பிள்ளைகள். அவருடைய துணைவியாரும் நல்ல நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சிறிய குடும்பம். கணவன், மனைவி இருவரும் சம்பாதிக்கிறார்கள். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். இதைவிட என்ன வேண்டும்?

 

ஆனால், ஒருநாள் நடந்த ஒரு விபத்து அந்தக் குடும்பத்தின் அத்தனை மகிழ்ச்சியையும் புரட்டிப்போட்டுவிட்டது.

 

வேலை நிமித்தமாக அம்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். வழியில் ஒரு பெரிய கிரேன். அதன் ஓட்டுநரின் கவனக்குறைவால் இவரது வாகனம் கிரேனில் சிக்கிக்கொண்டது. சுற்றியிருந்தவர்கள் எவ்வளவோ கத்தியும், கூச்சலிட்டும் பார்த்தார்கள். ஆனால் ஓட்டுநரின் காதில் எதுவுமே விழவில்லை. காரணம், காதில் ஒலிக்கருவியை மாட்டிக்கொண்டு வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்தார்.

 

ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். ஒரு மனிதர் உயிருக்கும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். சுற்றியிருப்பவர்கள் பதற்றத்தில் கத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த ஓட்டுநருக்கோ எதுவுமே கேட்கவில்லை!

 

ஒருவழியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். உயிர் பிழைப்பதே சந்தேகம் என்ற நிலை. ஆறு மாதங்களுக்கு மேல் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியிருந்தது. உடல் முழுவதும் காயங்கள். ஒரு காலில் கடுமையான முறிவு. அறுவை சிகிச்சை ஒன்று முடிந்தது. சிறிது இடைவெளியில் இன்னொன்று என தொடர்ச்சியான அறுவை சிகிச்சைகள்.  ஆனாலும், ஓராண்டு முடிவில் ஒரு காலைக் காப்பாற்ற முடியாமல் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

ஒருமுறை அண்ணாநகரில் உள்ள பிரபல மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் அவர் வீட்டுக்குச் சென்றபோது, வீடு வீடாகவே இல்லை. ஒரு மருத்துவமனை போலக் காட்சியளித்தது. படுக்கை, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் என வீடு முழுவதும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள்.

 

ஓராண்டில் மட்டும் மருத்துவச் செலவு முப்பது லட்சம் ரூபாயைத் தாண்டிவிட்டது. அவர் பணிபுரிந்த நிறுவனம் குறைந்தபட்ச மருத்துவக் காப்பீடு செய்திருந்தது. அதற்கு மேலும் நிறுவனமே செலவுகளை ஏற்றுக்கொண்டது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் நிறுவனத்தாலும் தொடர்ந்து செலவுகளை ஏற்க முடியவில்லை.

 

கணவரைக் கவனித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் துணைவியாரும் வேலையை விட்டுவிட வேண்டியதாயிற்று. இரண்டு வருமானம் வந்துகொண்டிருந்த குடும்பத்தில், ஒரே நேரத்தில் வருமானமும் நின்றுபோனது. மருத்துவச் செலவு ஒருபுறம், பிள்ளைகளின் எதிர்காலம் மறுபுறம். ஒரு குடும்பம் எத்தனை பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டது!

 

இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.

 

விபத்து நடந்தது ஒருவருடைய கவனக்குறைவால். ஆனால் அதன் பாதிப்பு அந்த ஓட்டுநருடன் நின்றுவிடவில்லை. விபத்தில் சிக்கியவரின் மனைவி, பிள்ளைகள், பெற்றோர் என ஒட்டுமொத்தக் குடும்பமும் அதன் வலியைச் சுமக்க வேண்டியிருக்கிறது.

 

சென்னையின் சாலைகள் கடந்த இருபது ஆண்டுகளில் எவ்வளவோ மாறிவிட்டன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. போக்குவரத்து நெரிசல் பெருகியிருக்கிறது. இத்தகைய சூழலில் நாம் இன்னும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டாமா? ஆனால், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவது, காதில் ஒலிக்கருவியை மாட்டிக்கொள்வது என கவனச்சிதறல்களை நாமே வலிய வரவழைத்துக்கொள்கிறோம்.

 

இன்னொரு பக்கம் மருத்துவச் செலவுகள்.

 

ஒரு சிறிய விபத்து என்று நினைத்துச் செல்லும் மருத்துவமனை, சில நேரங்களில் நமது பல ஆண்டு சேமிப்பையே காலி செய்துவிடுகிறது. நல்ல வருமானம் உள்ளவர்கள்கூட மருத்துவக் காப்பீடு எடுப்பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை. 'அப்படி ஏதாவது வந்தால் பார்த்துக்கொள்ளலாம்' என்று தள்ளிப்போடுகிறோம்.

 

ஆனால், நோய் வந்த பிறகோ, விபத்து நடந்த பிறகோ மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ள முடியாது. அப்போது கையில் இருப்பதுதான் நமக்கான ஆதாரம். சிறுகச் சிறுகச் சேர்த்த சேமிப்பை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று கொட்ட வேண்டிய நிலை வந்துவிடுகிறது.

 

விபத்தைத் தவிர்ப்பது நமது பொறுப்பு. எதிர்பாராத மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும் நமது பொறுப்பு.

 

வாகனம் ஓட்டும்போது சில நிமிடங்கள் செல்போனை ஒதுக்கி வைப்பதால் நமக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால், அந்தக் கவனக்குறைவால் ஏற்படும் விபத்து பல குடும்பங்களின் வாழ்க்கையையே பறித்துவிடலாம்.

 

மருத்துவக் காப்பீட்டுக்காகச் செலுத்தும் தொகை வீண் செலவல்ல. நம்முடைய சேமிப்பையும், குடும்பத்தின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு முன்னேற்பாடு.

 

இறுதியாக... சாலையில் நாம் காட்டும் கவனமும், வாழ்க்கையில் நாம் செய்துகொள்ளும் முன்னேற்பாடும் நமக்காக மட்டுமல்ல; நம்மை நம்பி வாழும் குடும்பத்தினருக்காகவும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

 

-          இரா. முனியசாமி

0 பின்னூட்டங்கள்: