> குருத்து: பொதுவுடைமை
Showing posts with label பொதுவுடைமை. Show all posts
Showing posts with label பொதுவுடைமை. Show all posts

February 11, 2024

சமையலறை பொதுவுடைமை!


என் அம்மா என்னை அடுப்பைத் தொடவிட்டதில்லை. சுத்து வேலைகள் மொத்தமும் வாங்குவார்.

 

திருமணத்திற்கு பிறகு சுமார் 16 பேர் கொண்ட குடும்பம். சமையல் தெரியாமல் உள் நுழைந்தேன். காப்பி கலக்க கூட கை நடுங்கும்.

 

தினமும் மாலை டிபன் ஏராளமான பண்டிகைகள், அது போக பிறந்தநாள் திருமணநாள் விழாக்கள் என 16 பேருக்கும் மாறி மாறி வரும்.

 

அரிசி பருப்பை மட்டுமே நாங்கள் வெளியில் இருந்து வாங்குவோம். ஊறுகாய், வற்றல், அப்பளம் என அனைத்தும் வீட்டில். பட்சணங்கள் தனியர்களின் ருசிக்குத்தக்க இரண்டு மூன்று கறிகாய்கள் என நான் கண்டவை அனைத்தும் சமையலறையாக மாறிப்போனது.

 

பத்து பேருக்கு அடை தோசை வார்க்க வேண்டும். அழுகை வரும். பண்டிகை வந்தாலே வயிற்றைக்கலக்கும். வீட்டு வேலைக்கு ஆள் கிடையாது. எந்நேரமும் குடும்பத்தைப் பற்றி யோசிக்கணும். நாலு பேர் கூடினாலே சாப்பாட்டைப்பற்றி பேசுவார்கள்.

 

எங்கம்மா சமைக்கற மாதிரி வராது என அனைவரும் என் மாமியாரை சுரண்டினோம். அவர்களுக்கு அது பெருமை. பாக்கியம்.சமையலறை ராஜ்ஜியத்தை தரமாட்டார்.

 

எனக்கு இயல்பிலேயே சமைப்பது பிடிக்காது. தீவிர மனநோயாளியாகும் அளவு பாதிக்கப்பட்டேன். அது அவர்கள் குற்றமல்ல.நான் மறுப்பு சொன்னதே இல்லை. ஏனெனில் கலாச்சாரம் அப்படி பழக்கியிருந்தது.

 

என் மகன் பள்ளி சேர்ந்த பிறகு அவனுக்கு என சமைக்க துவங்கியது. பிறகு அவனது ருசிக்காக சமைக்க துவங்கினேன்

 

அதுவரை அவர்களது மெனுதான். அம்மாவாசை விரதநாள் என ஏக கட்டுப்பாடுகள். எல்லாம்  தாண்டி மகனுக்கென உள்நுழைந்த எனக்கு மூச்சு முட்டியது. மகன் தோசைப்பிரியன். ஆறு பேருக்கு சப்பாத்தியும் தோசையும் என நொந்திருக்கிறேன்.

 

பிறகு தான் எனக்கான ஞானோதயம் கிடைத்தது. அது என்னவென்றால் என் அம்மா என் மாமியார் என்னை ஒதுக்கியது போல அல்லாமல் சமையலைறையினை அனைவருக்குமானதாக ஆக்குவது.

 

மகனை மகளை கணவரை சமைத்துக்கொள்ள  அவர்களின் இயல்பான ஆர்வத்துடன் ஊக்குவித்திருக்கிறேன்.

 

அதென்ன ஊக்குவிப்பு?

 

முதலில் அவர்கள் செய்வதில் குறை சொல்ல மாட்டேன். கீழே சிந்திருக்கு மேல கொட்டிருக்கு ரக புகார்கள் இல்லை.

 

அடுத்தது பொருட்களை டப்பா மாற்றி வைத்து சதிவேலைகள் செய்யாமல் இருப்பது.

 

உணவின் ருசி முன்பின் இருப்பின் பரவாயில்லை. சரிபண்ணிக்கலாம் என சொல்வது. அதுக்குத்தான் நானே பண்றேன் என சொல்லாமல் இருப்பது.

 

சமையலறை என் கோட்டை அல்ல என்பதில் இருந்த தெளிவு, விட்டுக்கொடுத்தல்.

 

மோசமாக இருந்தால் நால்வருமே சரி செய்யணும். நால்வருமே ஒரே நேரத்தில் கிச்சனில் இருப்போம் என்ற வழிமுறை.

 

இதற்கு முதலில் பலத்த எதிர்ப்பு மாமியார் தரப்பில் இருந்து கிடைத்தது. குழந்தைகளை சமைக்க விடுகிறேன் என்று,  என் அம்மா வரை புகார் சென்றது.

 

என் அம்மாவுமே என் தம்பியிடம் சமையலறையை கொடுத்திருந்தார்.  பின்னர் எல்லாம் தானாக சரியானது.

 

ஆக இப்போது மாமியாரே எங்களுடன் சமைக்கிறார். அவரும் தன் பிடியினை தளர்த்தி கொடுத்தார்.

 

இதற்கு 15 வருடங்கள் ஆனது. எனது மனநிலை கடுமையான ட்ராமாவிற்கு சென்று மீண்டது.

 

ஆனால் பிள்ளைகளுக்கு அத்தனை தன்னம்பிக்கையும் மகிழ்வும். எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்வார்கள் என்பது நிச்சயம்.

 

அவ்வளவுதான் இதில்.

 

என் ராஜ்ஜியம் என் மதிப்பு போகும் என் பிள்ளை என் கையை விட்டு போய்விடுவான் நான் சமைப்பது போல வராது. என் மகனுக்கு யாராவது செய்தால் பிடிக்காது எனக்கென ஒரு மரியாதை இல்லாது போய்விடும் என்றெல்லாம் பேசும் பெண்கள் நீங்கள் என்றால் நான் ஒன்று சொல்வேன். ஒன்று நீங்கள் முட்டாள் அல்லது திருட்டுத்தனம் உடையவர். இந்த இரண்டினையும் அம்மா பாசம் என சுகர் கோட் தடவுகிறீர்கள்.

 

எந்த அம்மாவும் தன் பிள்ளைகள் ஊனத்தைப்போல பிறர் கையேந்துவதை விரும்பமாட்டார்கள். அவர்கள் காலில் நிற்கத்தான் சொல்லித்தருவார்கள். அதுவே பாசம். அதுவே அன்பு. அதுவே பிள்ளைகளுக்கு செய்யும் நியாயம்.

 

பேம்பரிங் செய்து பிள்ளையை கைக்குள் வைத்து இன்னொரு பெண்ணை கெடுப்பது என்றோ மகளை கைக்குள் வைத்து அவளது குடும்பத்தில் தலையிட்டு அதையும் கெடுப்பது என்றோ செய்யும் செயல்களுக்கு குடும்ப அரசியல் என்று பெயர். பாசம் என பொய் சொல்லாதீர்கள்.

 

பெண்களே நீங்கள. இறந்து போனால் உங்களது வீடு அடுத்தவாரம் தனது கடமைகளை தானே துவங்கும். நீங்கள். நினைப்பது போல. எதுவும் நிற்காது. ஆண்களுக்கும் இது பொருந்தும். கிடைக்கிற கொஞ்ச காலத்தில் வாழும் வழியை பாருங்கள்.

 

சமையலறை வீட்டின் பிற பகுதிகளைப்போன்றே அனைவருக்கும் பொதுவானது என்பதை நீங்கள் உணருங்கள். பிறகு ஆண்களைச்சொல்லலாம்.

 

சமையலறையிலும் அவசியம் வேண்டும் பொதுவுடமை.

 

-          ஷோபனா நாராயணன்

June 6, 2023

Hunger (2023)




 "எல்லோரும் பசியுடன் இருக்கிறார்கள், ஆனால் ஒவ்வொருவரின் பசியும் வித்தியாசமானது."

“உங்கள் சமூக அந்தஸ்து நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.”
- படத்திலிருந்து…!
****

நாயகி தனது படிப்பை முடித்துவிட்டு, அப்பா நடத்தி வந்த அந்த சிறிய உணவகத்தை, தாய்லாந்தின் ஒரு நகர்ப்புற பகுதியில் பொறுப்பேற்று நடத்தி வருகிறாள். அங்கு சாப்பிட வந்த ஒருவன் ”அருமையாக சமைக்கிறாய். உன் திறமை வெளிப்பட வேண்டுமென்றால் இங்கு வந்து பார்” என ஒரு கார்டை கொடுத்துவிட்டு போகிறான். அவளும் அசிரத்தையாக வாங்கி வைத்துக்கொள்கிறாள்.

அவர்களைப் பற்றி விசாரித்தால், “Hunger” என்ற பெயரில் தாய்லாந்தின் பிரபல சமையல் நிபுணராக (chef) இருக்கிறார். மிகப்பெரிய பணக்காரர்கள் எல்லாம், அவருடைய தேதிக்காகவும், சாப்பிடவதற்காகவும் ”உச்” கொட்டிக்கொண்டு சாப்பிட காத்திருக்கிறார்கள்.

இந்த துறையில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அவள் அவரைப் போய் பார்க்கிறாள். சோதனைத் தேர்வில் வெற்றி பெற்று குழுவில் இணைந்துகொள்கிறாள். அந்த நிபுணரோ மிக மிக கறாராகவும், கண்டிப்பாகவும் நடந்துகொள்கிறார். தவறிழைத்தால் கடுமையாக தண்டனையும் தரக்கூடிய ஆளாகவும் இருக்கிறார்.

பணக்கார்களுக்காக சமைக்கும் பொழுது, அந்த நிபுணர் வளைந்து கொடுத்து போகிறார். உதாரணமாக சட்டத்திற்கு புறம்பாக ஒரு பறவையை வேட்டையாடி ஒரு பணக்காரர் சமைக்க சொன்னால், மறுப்பு இல்லாமல் சமைத்து தருகிறார். அவரிடம் எந்தவித தயக்கமும் இல்லை. ”தவறும் இல்லை” என்கிறார்.

இப்படி சில அம்சங்கள் பிடிக்காமல், அவரின் குழுவில் இருந்து வெளியேறுகிறார் நாயகி. இன்னொரு பணக்காரன் நாயகியின் திறனறிந்து, ஒரு பெரிய உணவகத்தை உருவாக்கித் தருகிறான்.

இந்த தொழிலில் உள்ள “நெளிவு சுழிவுகள் கழுத்தறுப்புகள்” எல்லாம் அவளைத் தொந்தரவு செய்கின்றன. இறுதியில் என்ன ஆனது என்பதை படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு மனிதன் உயிர் வாழ உணவு அவசியம். அந்த உணவைப் பெற சமூக உற்பத்தியில் அவன் ஈடுபடுவது அவசியம். ஈடுபடுகிறான். அதில் கிடைத்ததை வைத்து உணவை உண்கிறான். இங்கு பெரும்பாலான மக்கள் உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு உழைத்தாலும், அவர்களுக்கு ”நல்ல” உணவு, பல சமயஙக்ளில் உணவே கிடைப்பது பெரிய போராட்டமாக இருக்கிறது. பசி ஒவ்வொரு வேளையும் அவனைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. குடும்பத்தை விட்டு நகரங்களை நோக்கி, பெரும் நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறான். மாநிலங்கள் கடக்கிறான். நாடுகள் கூட பறந்து செல்கிறான்.

சமூக உற்பத்தியில் எல்லோரும் உழைத்தாலும், பெரும்பாலான மக்களுக்கு ”உயிர் வாழ்வதற்கு மட்டும்” சொற்பத்தை கொடுத்துவிட்டு, உற்பத்தியில் கிடைக்கும் பெரும்பலனை சிறுபான்மையினர் மலை போல பல தலைமுறைகளுக்கு சொத்தைச் சேர்த்துக்கொள்கிறார்கள். பெரும்பாலான மக்களை பசி துரத்திக்கொண்டே இருக்க, இவர்களுக்கு பசி என்பதே உணர முடியாத நிலையில் வாழ்கிறார்கள்.

ஒவ்வொரு வேளைக்கும் விதவிதமாய் சாப்பிடுகிறார்கள். புதிது புதிதாய் தேடித்தேடி தின்கிறார்கள். பல மணி நேரம் அது பற்றி சிலாகித்து பேசுகிறார்கள். தின்பதற்காகவே, மாநிலங்கள், நாடுகள் பறந்து செல்கிறார்கள். தின்று தின்று பல மடங்கு உடல் வீங்குகிறார்கள். படத்தில் சொல்வது போல “உங்கள் சமூக அந்தஸ்து நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.”

படத்தில் இந்த சமூக ஏற்றத்தாழ்வையும், பசி குறித்த அரசியலையும் பளிச்சென நேரடியாக சொல்லாவிட்டாலும், பார்க்கிற நம்மால் நன்றாக உணர முடிகிறது.

படத்தின் ஒரு காட்சியில், பெருங்கடனில் சிக்கிய ஒரு பணக்காரன், அந்த சமையல் நிபுணரை வரவழைத்து, விருந்து சமைத்து, நன்றாக சாப்பிட்டுவிட்டு, துப்பாக்கியில் தன் மனைவி, சின்ன குழந்தையையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்வான்.

மார்க்ஸ் ஓரிடத்தில் சொல்கிறார். ஒரு பெரும் பணக்காரன் தன் வீட்டின் உணவு டேபிளில் அமர்ந்தால், விதவிதமான உணவு, பழரசங்கள், பால் என பலவும் இருக்கும். அவனுக்கு அன்றைக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் சாப்பிட்டுவிட்டு நகர்வான்.

சோசலிச சமூகம் உலகம் முழுவதும் பரவி, கம்யூனிச சமூகம் நிலவும் பொழுது, அப்பொழுதும் சமூகம் மொத்தமும் உழைப்பில் ஈடுபடும். அந்த பணக்காரன் சாப்பிடுவது போல மொத்த சமூகமும் தனக்கு பிடித்தமானதை, ஆரோக்கியமானதை சாப்பிடும் என்கிறார்.

பசிக்காக நாம் ஓடிக்கொண்டே இருந்தால், வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே தான் இருக்கும். சமூக ஏற்றத்தாழ்வுகளை களையும் போராட்டத்தை முன்னெடுத்தால் தான், இங்கு எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்.

படத்தில் நடித்த நாயகி, நிபுணராக வருபவர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். உப பாத்திரங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். Sitisiri Mongkolsiri நேர்த்தியாக இயக்கியிருக்கிறார். அவருடைய மற்ற படங்களையும் தேடிப்பார்க்கவேண்டும்.நெட் பிளிக்சில் இருக்கிறது. பாருங்கள்.

January 15, 2023

தாய் நாவல் - விலை ரூ. 150 மட்டுமே!

ரசிய இலக்கியங்கள் உலகப்புகழ் பெற்றவை.  அவற்றில்  ஒன்று மார்க்சிம் கார்க்கி  எழுதிய “தாய்”  நாவலும் சிறப்பான ஒன்று. ரசியாவில் கொந்தளிப்பான காலம் 1905. அந்த காலகட்டத்தில் எழுதி, இன்றைக்கும் உலகத்தின் பல மொழிகளில்  மொழிமாற்றம் செய்யப்பட்டு வாசகர்களால் படிக்கப்படுவதுதான் இதன் சிறப்பு. 

 

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து… மூன்று நாட்களில் படித்து முடித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

 

இந்த நாவல்  இரண்டு பாகங்கள் உடையது. நாவலின் 578 பக்கங்களில், முதல் பாகம் 273 பக்கங்கள் கொண்டது. மீதி இரண்டாம் பகுதிக்கானவை.

 

தொழிலாளர்களும், விவசாயிகளும் இணைந்து சமுக மாற்றத்தில் செயலாற்றவேண்டும் என்ற அடிப்படையில்… தொழிலாளர்களின் துயர வாழ்க்கை, தொழிலாளர்களை அமைப்பாக்குவது குறித்து முதல் பாகத்திலும், விவசாயிகளின் வாழ்க்கை, விவசாயிகளை அமைப்பாக்குவது குறித்து இரண்டாம் பாகத்திலும் அருமையாக எழுதியிருப்பார் கார்க்கி.

 

தாய் நாவல் தொ.மு.சி. ரகுநாதன் மொழிபெயர்ப்பு சிறப்பானது.  கலைஞர் கருணாநிதி நாவலின் உள்ளடக்கதில் ஈர்க்கப்பட்டு, அவருடைய கைவண்ணத்தில் மொழிபெயர்ப்பு செய்தார்.

 

இப்பொழுது இந்த பதிவு குறிப்பாக எதற்கு என்றால்…. பொதுவாக இந்த நாவலை சில பதிப்பகங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். விலை ரூ. 350, ரூ. 400 என விற்கிறார்கள்.  நேற்று புத்தக திருவிழாவில் கடை எண் : 158ல்  தாய் நாவலை கெட்டி அட்டையில் தரமான வடிவத்தில் ரூ. 150க்கு பார்த்ததும் பெரிய ஆச்சர்யம்.  திருமணத்தில் புத்தகங்களை பரிசாக கொடுக்கும் வழக்கம் இருப்பதால், ஐந்து புத்தகங்கள் வாங்கிக்கொண்டேன்.

 

எப்படி உங்களால் இவ்வளவு குறைவாய் கொண்டு வரமுடிகிறது என கேட்டதற்கு… ஸ்டாலில் இருந்த தோழர் இதற்கான விளக்கம் தந்தார்.

 

”நாங்கள் பதிப்பகத்தை தொழில் முறையில் நடத்துகிறவர்கள் இல்லை.  ”சீர் வாசகர் வட்டம்” என்ற பெயரில் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.  புத்தகங்களை கூட்டாக படிக்கிறோம். விவாதிக்கிறோம்.  அதன் வழியாக சிறந்த புத்தகங்களை தேர்வு செய்கிறோம்.  சமூக அக்கறை கொண்டவர்களிடம் நன்கொடைகள் பெறுகிறோம்.  தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளில் இருந்தும் 119 நன்கொடையாளர்கள் இதற்காக உதவியிருக்கிறார்கள். இந்த புத்தகத்தின் இறுதி பக்கங்களில்  உதவியர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறோம். 

 

நாங்கள் இதை ஒரு இயக்கமாக கொண்டு செல்கிறோம். ஆகையால் இதன் பதிப்பில், விற்பனையில் ஈடுபடும் எங்கள் தோழர்கள் சம்பளம் என எதையும் பெற்றுக்கொள்வதில்லை. இப்படி குறைவான விலைக்கு கொண்டு வருவதால், சில ஆயிரம் புத்தகங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே விரைவாக விற்பது நடக்கிறது. இப்படி ஒரே நேரத்தில் சில ஆயிரம் புத்தகங்கள் பதிப்பதால் புத்தகத்தின் அடக்க விலை நிறைய குறைகிறது. 

 

கடந்த காலங்களில் தந்தை பெரியாரின் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்தை மலிவு பதிப்பாக கொண்டு வந்தோம்.  இதுவரை 4 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறோம். கடந்த ஆண்டு புதுமைப்பித்தன் சிறுகதைகளை தொகுப்பாக மலிவு பதிப்பாக கொண்டு வந்தோம்.  அதன் தொடர்ச்சியில் இந்த ஆண்டு மார்க்சிம் கார்க்கியின் ”தாய்” நாவலை கொண்டு வந்திருக்கிறோம்” என்றார்.

 

”நல்ல காரியத்தை செய்கிறீர்கள். தொடர்ந்து உற்சாகமாய் செயல்படுங்கள்” என வாழ்த்துகளை தெரிவித்து விடைபெற்றோம்.


புத்தக கண்காட்சிக்கு செல்பவர்கள் கடை எண் 158ல் வாங்குங்கள். போக 

வாய்ப்பில்லாதவர்கள் கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்புகொள்ளுங்கள். 

9566331195, 9600652285, 9865252105.

 

ஆசிரியர் : மாக்சிம் கார்க்கி

தமிழில் : தொ.மு.சி. ரகுநாதன்

பக்கங்கள் : 578

விலை : ரூ. 150

May 5, 2022

தோழர் மார்க்ஸ்


18 வயதில் வறுமை ஏன்? ஏற்றத்தாழ்வு ஏன்? என்ற மண்டையை குடையும் கேள்விகளோடு பதில் தேடி அலைந்த நாட்கள் நினைவில் மேலெழும்புகின்றன.


தேடித் தேடி படித்திருக்கிறேன். தேடித்தேடி பார்த்திருக்கிறேன். தேடித்தேடி விவாதித்திருக்கிறேன். கிடைத்த பதில்களும் முரண்பட்டவைகளாக இருந்தன. உலகை வியாக்கியானம் செய்வதல்ல! மாற்றுவது தான் தேவை! என அழுத்தமாய் சொன்ன தோழர் மார்க்சை கண்டடைந்தேன். எல்லாவற்றிற்கும் முரணற்ற முறையில் எனக்கு பதில் வைத்திருந்தார்.

20களில் இளமை வேகத்தில் மார்க்சை, லெனினை நேசிப்பீர்கள். 30களில் சராசரியாகிவிடுவீர்கள் என்றார்கள் சில மூத்தவர்கள். இதோ 40+களிலும் மார்க்சை பின்பற்றிவருகிறேன். சொன்னவர்கள் குழம்பிபோய்விட்டார்கள்.

சமூகத்தின் மீதான நேசம் குறையாதவரை எப்பொழுதும் மார்க்சின் மாணவன் தான். மனித குலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வாக மார்க்சியம் என்னும் தீச்சுடரை நமக்கு தந்துள்ளார். அதை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம்.

மார்க்ஸ்க்கும் எனக்கும் பிறந்தநாள் தொடர்பு இருக்கிறது. பள்ளியில் சேர்க்கும் பொழுது எனக்கும் அவரின் பிறந்த நாளை தான் கொடுத்துள்ளார்கள்.

உலக மக்களின் மீது மாறாத அன்புகொண்டு தன் இறுதிநாள் வரை உழைத்த தோழர் மார்க்சுக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்
!
நம் கனவு தான் அவரின் கனவும்! அதை உறுதியுடன் முன்னெடுத்து செல்வோம்!!

October 24, 2021

அச்சம் - கலீல் ஜிப்ரான்


கடலுக்குள்
நுழைவதற்கு முன்பு
ஒரு நதி பயத்தில் நடுங்குகிறது
என்று கூறப்படுகிறது.
 
தான் பயணித்த பாதையை
அது திரும்பிப் பார்க்கிறது
மலையின் சிகரங்களிலிருந்து
காடுகளை கிராமங்களைக்
கடந்து வந்த நீண்ட நெடிய பாதை
 
 
எதிரில் அது பார்க்கிறது
மிகப்பெரிய சமுத்திரத்தை
அதற்குள் நுழைவதென்றால்
என்றென்றைக்கும்
காணாமல் போவதென்று அர்த்தம்
ஆனால் வேறு வழியில்லை
அந்த நதி திரும்பிச்செல்ல முடியாது
எவரும் திரும்பிச்செல்ல முடியாது
திரும்பிச்செல்வது வாழ்வில் சாத்தியமில்லை
சமுத்திரத்தில் நுழைவதெனும்
முடிவைத் துணிந்து எடுத்துத்தான் ஆகவேண்டும்
ஏனெனில் அப்போதுதான் அச்சம் அகலும்
ஏனெனில் அங்குதான் நதிக்குப் புரியும்-
சமுத்திரத்தில் நுழைவதென்பது
மறைந்துபோவதல்ல,
அது சமுத்திரமாய் ஆவது
 
தமிழில் : ரவிக்குமார்
 

February 18, 2021

நம்மை அறிவுபூர்வமாக ஆயுதபாணியாக ஆக்கிக் கொள்ளத் தேவையாக இருக்கிறது


 “ஸ்டாலினுடைய தனி நூலகத்தில் 25000 நூல்கள் இருந்தன. அவருடைய சமகாலத்தில் வாழ்ந்த ரூஸ்வெல்ட் சர்ச்சில் போன்ற அனைவரையும் விட அரசியல், பொருளாதாரம் மற்றும் உலக வரலாற்று ஞானம் மிக மேம்பட்டதாக இருந்தது”

****
"நாமும் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காக நம்மை அறிவுபூர்வமாக ஆயுதபாணியாக ஆக்கிக் கொள்ளத் தேவையாக இருக்கிறது.

ஸ்டாலின் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் கொடுங்கோலன், சர்வாதிகாரி, கொலைகாரர் என்று நிறைய எழுதித் தள்ளி இருக்கிறார்கள். இன்னொரு பாதி அவரை முட்டாள் என்று சித்தரித்து வைத்திருக்கிறார்கள். மார்க்ஸ் அறிவுஜீவி. ஏங்கெல்ஸ் அறிவுஜீவி, லெனின் கூட அறிவுஜீவி, ஸ்டாலின் ஒரு முட்டாள். சர்வாதிகாரி என்ற பிம்பம் முதலாளித்துவ அறிவுஜீவிகள் மத்தியில் பரப்பப்பட்டு இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தவர், அதிலிருந்து படித்து வந்தவர். அவரை இழிவு படுத்தும் ஆயுதமாக இதனைப் பயன் படுத்துகிறார்கள்.

இதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னால் FRONTLINE ஆங்கில நாளேட்டில் AG நூரானி என்ற வழக்கறிஞர்/எழுத்தாளர் ஸ்டாலின் பற்றிய ஒரு நூல் பற்றி எழுதியிருந்தார். அதை எழுதும் போது வேற சில முக்கியமான எழுத்தாளர்களை மேற்கோள் காட்டிச் சொல்கிறார். “ஸ்டாலினுடைய தனி நூலகத்தில் 25000 நூல்கள் இருந்தன. அவருடைய சமகாலத்தில் வாழ்ந்த ரூஸ்வெல்ட் சர்ச்சில் போன்ற அனைவரையும் விட அரசியல், பொருளாதாரம் மற்றும் உலக வரலாற்று ஞானம் மிக மேம்பட்டதாக இருந்தது” என்று கம்யூனிச எதிர்ப்பாளர்கள் சொல்வதை இவர் மேற்கோள் காட்டுகிறார். அது என்ன விஷயம் என்றால் அவரும் செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன்தான். ஒரு நாட்டினுடைய தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது, ஒரு கட்சியினுடைய தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது அந்தப் பொறுப்பிற்குத் தகுதியானவனாக தன்னை வளர்த்துக் கொள்வது அவரது விருப்பு வெறுப்பு சார்ந்தது அல்ல. அது ஒரு தார்மீகக் கடமை."

– தோழர் மருதையன் "பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும்" கட்டுரையிலிருந்து....


- முகநூலில்.... 18/12/2020