> குருத்து: யோகா
Showing posts with label யோகா. Show all posts
Showing posts with label யோகா. Show all posts

June 21, 2025

யோகா : கழுத்து வலி போயே போச்சு!


2014ல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் நாளை ஐக்கியநாடுகள் சபை சர்வதேச யோகா தினமாக கொண்டாட அறிவித்தது.  இதற்கான முன்னெடுப்புகளை இந்தியா செய்ததாக பதிவு செய்கிறார்கள்.

 

ஜூன் 21 ஏன் என்றால்… கோடை காலத்தில் ஆண்டின் மிக நீண்ட நாள். இந்த நாள் வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்டது. ஆகையால் இந்த நாள் நல்ல நாள் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இன்று நாடு முழுவதும் யோகாவிற்கான சிறப்பு முகாம்களை அறிவிக்கப்பட்டு செய்திருக்கிறார்கள். ஆந்திராவின் ஒரு கடற்கரையில் முதல்வரும், இந்திய பிரதமரும் மூன்று லட்சம் மக்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

 

விவரம் தெரிந்த நாள் முதல், தினம் ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்துவந்திருக்கிறேன். சில காலம் ஓடியிருக்கிறேன். சில காலம் ஜிம்முக்கு போயிருக்கிறேன்.  ஒரு கட்டத்தில் யோகாவிடம் வந்து சேர்ந்தேன்.

 

ஒவ்வாமை பிரச்சனை உடலில் சில தொந்தரவுகளை, மூச்சு பிரச்சனைகளை உருவாக்கி கொண்டு இருந்தது. அதைச் சமாளிக்கவும் யோக ஆசனங்களும், மூச்சு பயிற்சிகளும் பெரிதாய் உதவியது.

 

கொரானாவிற்கு முந்தைய காலத்தில், விடிகாலை 5.30 முதல் 6.30 வரை வாரத்தில் ஐந்து நாட்கள்  அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் எங்கள் பகுதியில் யோகா மையத்திற்கு தொடர்ச்சியாய் சென்று வந்தேன்.  அந்த அறையில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 15 பேர் வரை செய்யலாம். சில மாதங்களில் இடம் இல்லாமலும் போகிற அளவுக்கு ஆட்கள் வந்துவிடுவார்கள். ஒரு சில மாதங்களில் நான் மட்டுமே சென்று வருவதும் உண்டு.

 


யோகா செய்வது நாள் முழுவதும் உடலையும் சிந்தனையையும் சுறுசுறுப்பாக இருக்க வைக்கும்.  சர்க்கரை, ரத்த அழுத்தம் என சிரமப்படுவர்களுக்கு அதை கட்டுக்குள் வைக்க உதவும். யோகா தரும் பலன்களை அனுபவித்தவர்கள் தொடர்ச்சியாய் வந்து கொண்டே இருந்தார்கள்.

 

சமீபத்தில் கூட பின்னங்கழுத்தில் வலி கடுமையாக இருந்தது. வலியை கூட பொறுத்துக்கொள்ளலாம். அதோடு தலைச்சுற்றலும் சேர்ந்து கொண்டது பெரிய பிரச்சனையாகிவிட்டது. மருத்துவமனை சென்றால், தலைச்சுற்றலை கட்டுப்படுத்த ஒரு மாத்திரையும், வலியை மறக்க ஒரு மாத்திரையும் தந்து அனுப்பிவிட்டார்கள்.

 

அதன் பிற்கு, சென்னை அண்ணாநகரில் தமிழக அரசு இயக்கும் மருத்துவமனையில் ஒரு பிரிவு யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு இயங்குகிறது. உடம்பில் என்ன பிரச்சனையோ, அதற்கேற்ற யோக ஆசனங்களை கற்றுத்தருவார்கள். அக்குபஞ்சர் சிகிச்சை, எண்ணைய் தடவி விடுவது என அங்கு கொடுக்கப்படும் எல்லா சிகிச்சையும் மருந்தில்லா மருத்துவமாக இருப்பது தான் அதன் சிறப்பு.  இரண்டு மாதங்கள் தொடர்ந்து போனதில் கழுத்து வலி கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

 

யோக ஆசனங்கள் பற்றிய ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். அதை இன்னும் அறிவியல்பூர்வமாக மாற்ற வேண்டும்.

 

இன்னொரு விசயம். யோக ஆசனங்கள் என்றாலே பொதுவெளியில் சிரமமான ஆசனங்களை மட்டுமே சாசகமாக செய்துகாட்டுகிறார்கள். அது அபத்தம் என்பேன். பொதுமக்களை குறிப்பாக வயதானவர்களுக்கு மனதளவில் ஒவ்வாமையை உருவாக்கிவிடும். யோகாவில் எளிய ஆசனங்கள் பல நூறு கணக்கில் உண்டு. எல்லா வயதினரும் செய்ய முடியும் என்பது முக்கியமானது.

 

இந்தியாவில் பா.ஜ.க பல ஆண்டுகளாக தன்னுடைய நிகழ்ச்சி நிரலில் யோகாவை இணைத்திருக்கிறார்கள். பல பகுதிகளில் யோகாவை இலவசமாக சொல்லித்தருகிறேன் என தங்கள் இந்துத்துவ கருத்துக்களை பரப்புவதற்காக அதை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். அதனால் பா.ஜ.க பிடிக்காத பலருக்கும் யோகா மீதான ஒருவித ஒவ்வாமையை உருவாக்கியிருக்கிறது. தினசரி நாம் செய்யும் எல்லா வித பயிற்சிகளையும் விட யோகா பல பலன்களை தரக்கூடியது. ஆகையால் அவர்களை ஒதுக்கிவிட்டு, யோகாவை கற்று பலன்களை அனுபவிப்போம். மக்கள் மத்தியில் பரப்புவோம்.

November 26, 2019

யோகா

அம்மாவிடமிருந்து கொஞ்சம் ஒவ்வாமையும் (Allergies), அப்பாவிடமிருந்து கொஞ்சம் ஆஸ்துமாவும் சொத்தாக எனக்கு வந்து சேர்ந்தது.

அதிலிருந்து தப்பிக்க யோகா வகுப்புக்கு போக ஆரம்பித்தேன். இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஹோமியோபதி மருந்து, உணவு கட்டுப்பாடு, யோகா என மூன்றும் வேலை சேர்ந்து ஆஸ்துமா பிரச்சனையிலிருந்து என்னை காப்பாற்றின.

2009 ல் யோகா செய்ய துவங்கினேன். பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன.

விடிகாலை 5.30 முதல் 6.30 வரை ஒரு பேட்ஜ். வாரத்தில் ஐந்து நாட்கள். திங்கள் முதல் வெள்ளி வரை. ரூ. 300ல் துவங்கினேன். இப்பொழுது ரூ. 700.

இரண்டு நாட்கள், ஒரு வாரம், ஒரு மாதம் வந்தவர்கள்- என இந்த பத்து ஆண்டுகளில் எங்கள் பகுதியில் உள்ள பாதி பேரிடம் அறிமுகமாகிவிட்டேன். 
இடையில் இரண்டு வருடம் நான் மட்டுமே தொடர்ச்சியாக போனேன். மாஸ்டர் தான் ஐந்து நாட்கள் வருவதற்கு பதிலாக நான்கு நாட்கள் தான் வருவார். ஒரு நாள் மட்டம் போட்டுவிடுவார்.

யார் தொடர்ச்சியாக வருகிறார்கள் என்றால், அதன் பலனை நன்றாக உணர்ந்தவர்களும், ஆஸ்துமா, தைராய்டு, சர்க்கரை என சிரமப்படுபவர்கள் தொடர்ந்து வந்து நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகளில் 7 மாஸ்டர்கள் வரை மாறிவிட்டார்கள். எல்லோருமே சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வார்கள். சிலரிடம் அர்த்தம் கேட்டிருக்கிறேன். தெரியாது என்பார்கள். அதில் ஒரு மாஸ்டர் இந்துத்துவ கருத்துக்களை பேசுவார். அதையும் நான் கேள்விகள் கேட்டு இடைமறித்ததும் நிறுத்திவிட்டார். நான் மந்திரங்களை சொல்வதில்லை. எந்த மாஸ்டரும் ஏன் என கேள்வியும் கேட்டதில்லை.

உடல் உழைப்பிலிருந்து பிரிந்துவிட்ட நடுத்தர வர்க்க ஆட்கள் தான் யோகா பக்கம் வந்து சேர்கிறார்கள். அப்படி வருபவர்களை இந்துத்துவ ஆட்கள் ஆன்மிகம், கோயில், குளம் என தள்ளிக்கொண்டு போகிறார்கள்.

யோகாவை இந்துத்துவ ஆட்கள் கையில் எடுத்ததால், முற்போக்கு முகாம் ஆட்களுக்கு யோகா மீது ஒவ்வாமை வந்துவிட்டது. நாம் அதை புறக்கணிக்க வேண்டியதில்லை.

யோகா அவர்களுடைய சொத்தில்லை. நாம் யோகாவை அவர்களிடமிருந்து காப்போம்.

- 21, June 2019 - முகநூலிலிருந்து...

May 27, 2009

யோகா அனுபவம் (3)



யோகா பயிற்சியின் அனுபவங்களை எழுதும் தொடர்ச்சியில்... இந்த பதிவு.

யோகா செய்வதால் எனக்கு கிடைக்கும் பலன், பிறகு இந்தந்த தொல்லைகளுக்கு யோகா நல்லது என நான் பட்டியலிடுவதைக் காட்டிலும், தொல்லைகளிலிருந்து விடுப்பட்டவர்களே… அவர்களுடைய சொந்த வார்த்தைகளில் சொல்வது என்பது இன்னும் அழுத்தமாய் இருக்கும். மேலும், ஆண்கள் யோகா செய்வது எளிது. பெண்களுக்கு சிரமம் என பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அதற்கும் இந்த பதிவு விளக்கம் தருகிறது.

நான் செல்லும் யோகா மையத்தில் மூன்று மாதங்களுக்கொருமுறை யோகாவால் உள்ள பலன்களை சொல்லுங்கள் என யோகா ஆசிரியர் கோருவார்.

சிலர் சொன்னார்கள். நீங்களும் கேளுங்கள்.

ஆங்கில பள்ளி ஆசிரியை – வயது 38

‘கடந்த மூன்றரை ஆண்டுகளாக யோகா வகுப்புக்கு வருகிறேன். மூச்சிரைப்பு பிரச்சனையால் எனக்கு பல ஆண்டுகளாக தொந்தரவு. இதனால் தினசரி வேலைகள் செய்வதற்கே மிகச் சிரமப்பட்டேன். மாதத்தில் பாதிநாள்கள் மருத்துவமனைக்கு சென்றுவருவேன். மருந்தின் துணையோடு தான் வாழ்ந்து வந்தேன்.

யோகா பயிற்சிக்கு பின், மூச்சிரைப்பு கட்டுப்பட்டிருக்கிறது. மருத்துவரை மாதம் ஒரு முறை அளவில் தான் பார்க்கிறேன். முன்பு முகம் எப்பொழுதும் வாடியிருக்கும். இப்பொழுது மலர்ச்சியாக இருக்கிறது.

ஆங்கில பள்ளி ஆசிரியை – வயது 35

கடந்த 8 மாத காலமாக வகுப்புக்கு வருகிறேன். இடுப்பு வலி மிக அதிகமாக இருந்ததால்... என்னால் உட்கார, நிற்க என்பது மிக சிரமமானதாக இருந்தது. இப்பொழுது 2 மணி நேரம் என்றாலும் வலி இல்லாமல் உட்காரவோ, நிற்கவோ முடிகிறது. 5கிலோவிற்கும் மேலே எடை குறைந்திருக்கிறேன். தொப்பை நன்றாக குறைந்துவிட்டது. 5 வயது குறைந்த மாதிரி இருக்கு. நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது.

52 வயது பெண்மணி – வீட்டில் இருப்பவர்

கடந்த 4 ½ வருடமாக யோகா வருகிறேன். தைராய்டு பிரச்சனையால் அவதிப்பட்டேன். யோகா தொடர்ந்து செய்வதால், கட்டுப்பட்டிருக்கிறது(பேலன்ஸ்சிங்). யோகா செய்வதை விட்டுவிட்டால் தைராய்டு பிரச்சனை செய்கிறது.

33 வயது பெண்மணி – வீட்டில் இருப்பவர்

2 வருடமாக யோகா வகுப்புக்கு வருகிறேன். வருவதற்கு முன்பு எனக்கு தைராய்டு பிரச்சனை, ஒற்றை தலைவலி, முதுகுவலி இருந்தது. அதிகமான கோபம் வரும். தொடர்ந்து வகுப்புக்கு வருவதால் இப்பொழுது ஒற்றை தலைவலியும், முதுகுவலியும் இல்லை. முக்கியமாக எதற்கெடுத்தாலும் கோபப்படுவேன். வீண்பயமும், சந்தேகமும் இருந்து கொண்டே இருக்கும். இது ஒரு மன வியாதியோ என நினைத்து கொண்டேயிருந்தேன். இப்பொழுது முற்றிலும் குணமாகிவிட்டேன். இப்பொழுது மனசும் உடம்பும் லேசாக இருக்கிறது.

34 வயது – ஆண் - மேனேஜர்

எனக்கு தொடர்ச்சியாக முதுகுவலியும், கழுத்து வலியும் இருந்தது. மேலும், உடல் கனத்து, நிறைய சோம்பறித்தனத்துடன் இருந்து வந்தேன். இப்பொழுது 6 மாத காலமாக யோகா செய்வதால்... முதுகுவலியும், கழுத்துவலியும் இல்லை. உடல் லேசாக இருக்கிறது.

35 வயது – ஆண் - மேனேஜர்

அலர்ஜி பிரச்சனையால், அடிக்கடி ஜலதோசம் பிடித்து வந்தது. அதன் வளர்ச்சியில், ஆஸ்துமாவில் கொண்டு வந்து நிறுத்தியது. தொடர்ச்சியான மருந்து, மாத்திரைகள். அதனால், நரம்பு தளர்ச்சியே வந்துவிட்டது. ஒரு சமயத்தில், இயங்குவதோ, நன்கு சிந்தித்து வேலை செய்வதே சிரமமாகி போனது. நம்பிக்கையிழந்து சோர்வுற்று இருந்தேன். யோகா – கடந்த 9 மாத காலமாக தொடர்ச்சியாக செய்து வருகிறேன். நல்ல முன்னேற்றம். ஜலதோசம் பிடிப்பது நின்றது. உடலும், மனசும் லேசாக ஆனது. மருந்து, மாத்திரைகள் எப்பொழுதாவது தான் சாப்பிடுகிறேன். இப்பொழுது 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறேன்.

.....

இப்படி இன்னும் பலர் சொன்னார்கள். சுருக்கமாய்...

7ம் வகுப்பு படிக்கிற பையன்... வகுப்பில் நிறைய பேசுவதாய் என் மேல் கம்ளைன்ட். இப்பொழுது குறைவாக பேசுவதாக சொல்கிறார்கள்.

27 வயது – வேலைக்கு செல்லும் பெண். முன்பெல்லாம், எப்பொழுதும், உடலிலும், மனதிலும் ஒரு பதட்டம் இருந்து கொண்டேயிருக்கும். இரண்டு மாத காலமாக யோகா செய்வதால்.. இப்பொழுது பதட்டம் குறைந்து இருக்கிறது.

37 வயது – விற்பனை பிரதிநிதி - ஆண் - யோகா செய்வதால்... என்னால் ஒழுக்கமாக இருக்க முடிகிறது. நாள் முழுவதும்...சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.

******

இன்னும் எழுதுவேன்.

******

மேலும் படிக்க...

முந்தைய பதிவுகள்

யோகா அனுபவம் – 1
யோகா அனுபவம் - 2

April 1, 2009

யோகா – அனுபவம் (2)


யோகா செய்ய ஆரம்பித்த பொழுது, இப்படி ஒரு “சிக்கலில்” சிக்கிக்கொள்வேன் என நினைத்து கூடப்பார்த்ததில்லை.

அது என்ன ‘சிக்கல்’? என்பதை விளக்க ஒரு குட்டி பிளாஷ் பேக் பிளாக் & ஒயிட்டில் சொல்லியாக வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, என் சொந்த ஊரில் பரபரப்பு துளியும் இல்லாமல், அமைதியாக ஓடும் ஓடையைப் போல வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது என சொல்ல முடியாவிட்டாலும், ஓடிக்கொண்டிருந்தது.

அப்பொழுதெல்லாம், எப்பொழுதும் மூக்கில் ஒருபக்க அடைப்பும், கொஞ்சம் தலைக்கனத்துடன் (!) சுற்றிக்கொண்டிருப்பேன். காரணம், நமக்கு அடிக்கடி ‘சல்ப்’ பிடிப்பது தான் காரணம். தொடக்க காலங்களில், இரண்டு மாதத்திற்கொருமுறை ஜலதோசம் பிடித்து.. பிறகு, மாதம், வாரம் என சுருங்கி, ஒரு கட்டத்தில்.... தீவிரமாகி யாராவது பேசும் பொழுது ‘ஐஸ்’ வைத்தால் கூட ஜலதோசம் பிடித்துக்கொண்டது. இந்த பிரச்சனையால், என் மூக்குக்கு வாசனை என்பதே தெரியாமல் போனது. அதிதீவிர வாசனை இருந்தால் மட்டுமே என் மூக்கால் உணரமுடியும்.

நிற்க. இதற்கொரு சுமூக முடிவு கான வேண்டும் என, காது மூக்கு தொண்டை சிறப்பு நிபுணரைப் பார்த்தேன். ஒரு வருடம் மருந்து, மாத்திரை, பீஸ் என அல்லல்பட்டேன். திடீரென மருத்துவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பணப்பிரச்சனையா என்று தெரியவில்லை. உங்களுடைய மூக்கில் ஒரு குட்டி அறுவை சிகிச்சை செய்யவேண்டும் ரூ. 10,000 ஆகும். இரண்டு நாள் ஓய்வெடுத்து விட்டு, பிறகு வேலைக்கு போய்விடலாம் என்றார்.

இதேவேளையில், என் அலுவலகம் வளர்ச்சிப்படிகளில் தாவி, சென்னைக்கு இடம்பெயர்ந்தது. என்னையும் அழைத்தார்கள்.

சென்னைக்கு நகர்வது பற்றியெல்லாம், நான் என்றைக்கும் சிந்தித்தேயில்லை. பிறகு, தீவிரமாய் சிந்தித்து, சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.

அறுவை சிகிச்சை செய்யாதது எவ்வளவு நல்லதாக போய்விட்டது என நினைத்துக்கொண்டேன்.
கூவத்தைக் கடக்கும் பொழுது பலரும் மூக்கு சுழித்தார்கள். வேகவேகமாக கடந்தார்கள். நான் சளைக்கவேயில்லை. எப்பொழுதும் போல மித வேகத்துடனே கடந்தேன்.மணம் அறியாத மூக்கால், சென்னைக்காகவே என் ஊரில் தயாராகி வந்தது போல உணர்ந்தேன்.

இப்பொழுது யோகா செய்ய ஆரம்பித்த பிறகு, மூக்கடைப்பு கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. மூச்சுப்பயிற்சி செய்வதால், மூச்சு சீரானது. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக
மூக்கிற்கு மணம் தெரிய ஆரம்பித்தது. இப்பொழுது 5 மாதம் முடிவடைந்துவிட்டது. நன்றாகவே முன்னேற்றம்.
இப்பொழுது சென்னையில் பல இடங்களை கடப்பதற்கே பலரைப்போல நிறைய சிரமப்படுகிறேன். வர வர சென்னையில் இருப்பதே பிடிக்காமல் போய்கொண்டிருக்கிறது. இப்பொழுது, ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால், சென்னையை விட்டு தப்பிக்க ஓட தயாராக இருக்கிறேன்.

இப்பொழுது மீண்டும் முதல் வரிகளை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன்.

யோகா செய்ய ஆரம்பித்த பொழுது, இப்படி ஒரு “சிக்கலில்” சிக்கிக்கொள்வேன் என நினைத்து கூடப்பார்த்ததில்லை.

உண்மை தானே!

March 15, 2009

யோகா – அனுபவக் குறிப்புகள்


கடந்த சில மாதங்களாக யோகாசனம் கற்றுக்கொண்டு இருக்கிறேன். அதில் சொல்லிக்கொள்ளும்படி சில நல்ல பலன்கள் கிடைத்தன.

சமூக துன்ப துயரங்களை தான் பொதுவாக பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறோம். கொஞ்சம் மாற்றாக சில நல்ல பலன்களையும் பகிர்ந்துகொள்ளலாமே என்ற எண்ணத்தில் இந்த பதிவு.

இனி, யோகா பற்றி அதன் வரலாறு, சமூகத்தில் உலவும் தப்பெண்ணங்கள், யோகா யாருக்கு?, யோகா மூலம் இந்து மதத்தை பரப்புகிறார்களா? வெளிநாடுகளில் யோகாவின் வளர்ச்சி என்பதை அகாடமிக் ஆய்வு அடிப்படையில் அல்லாமல், ஒரு அறிமுகமாய் அடுத்தடுத்து குட்டி குட்டி தலைப்புகளாக எழுதலாம் என்று இருக்கிறேன். நீங்களும் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த பதிவில்.. யோகா-வால் கிடைத்த பலன்கள்

• பல சமயங்களில் மூளை கட்டளையிடுவதை உடல் கேட்க மறுத்தது. (சோம்பறித்தனமா
இருந்ததை தான் கொஞ்சம் பில்டப்பா வேறு மாதிரி சொல்றேன்). யோகா போனபிறகு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது. இதை கொஞ்சம் வாய்விட்டு சொல்லிவிட்டேன். வீட்டிலும், அலுவலுகத்திலும் இதையே சொல்லி, என்னிடம் நிறைய வேலை வாங்குகிறார்கள். அது ஒரு தனிக்கதை.

• பழங்குடியினர் மாதிரி சூரியன் வருவதற்கு முன்பே, எழுந்து வேலைகளை தொடங்கிவிட வேண்டும் என்பது பல ஆண்டுகள் (!) கனவு. இப்பொழுது சாத்தியப்பட்டிருக்கிறது. வகுப்பு நேரம் 5.30 முதல் 6.30 வரை. அதனால், 4.45 க்கே எழுந்துவிடுகிறேன்.

• உணவு மற்றும் சுவாச ஒவ்வாமை பிரச்சனையால் நுரையீரல் தொந்தரவு இருந்தது. யோகாவும், மூச்சுப்பயிற்சியும் செய்வதால் இப்பொழுது தொந்தரவு நிறைய குறைந்திருக்கிறது.

• பெரு நகர வாழ்வில் இயல்பாய் எழும் மனப்பதட்டம் கொஞ்சம் குறைந்து, நிதானத்துடன் இயங்க முடிகிறது.

இன்னும் எழுதுவேன்.