> குருத்து

July 30, 2010

பட்டினியில் வதங்கும் மக்களும்! வீணாய் போகும் உணவும்!


இந்திய உணவு கழகம் விவசாயிகளிடமிருந்து அரிசி, நெல், மக்காசோளம் என பல விளைபொருட்களை கொள்முதல் செய்கிறது. ஆனால் அதை முறையாக பாதுகாப்பதற்கு குடவுன்கள் இல்லாததால், வெயிலிலும், மழையிலும் காயவிட்டு விடுகிறார்கள். இதனால் ஏற்படுகிற இழப்பு எவ்வளவு தெரியுமா? வருடத்திற்கு ரூ. 50000 கோடிக்கும் மேலே! அளவில் மதிப்பிட வேண்டுமென்றால், கொள்முதல் செய்யும் பொருட்களில் 20% வீணாய் போகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அறியும் சட்டம் மூலம் உணவு இந்திய உணவு கழகம் சொன்ன பதில் என்ன?

1997 முதல் 2007 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் வீணாகிப்போன பொருட்களின் மதிப்பு - 10 லட்சம் டன். அதை அப்புறப்ப்டுத்த சில கோடிகள் செலவானது.

10 லட்சம் டன் உணவை கொண்டு, 1 கோடி இந்தியருக்கு 1 வருடத்திற்கு வயிறார சாப்பாடு போடலாம் என்கிறார்கள்.


இப்படி வீணாய் போவதைப் பற்றி நடந்த வழக்கில், சமீபத்தில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து, சில கேள்விகளுக்கு அரசிடம் பதிலளிக்க சொல்லியிருக்கிறார்கள்.

"மக்கள் பசியால் வாடும் பொழுது, ஒரு கோதுமையை வீணடித்தால் கூட குற்றம் தான். பாதுகாப்பதற்கு குடவுன் இல்லையென்றால், குறைந்தபட்சம் தார்ப்பாலின் போட்டு மூட வேண்டியது தானே! உங்களால் பாதுகாக்க முடியவில்லை யென்றால், பசியால் வாடும் மக்களுக்கு சாப்பிட கொடுங்கள்"

அதிகாரிகளுக்கும், அரசுக்கும் எத்தனை கேள்விகள் கேட்டாலும் உரைக்காது. நாமும் பல காலம் பார்த்து கொண்டு தானே இருக்கிறோம்.

பசியால் வாடும் மக்கள் உணவு கிடங்குக்குள் உள்ளே புகுந்து, உணவை கைப்பற்றுவது தான் ஒரே தீர்வு. அந்த நல்ல நாள் எந்த நாளோ?!


தொடர்புடைய சுட்டிகள் :

http://www.deccanherald.com/content/84222/food-grains-rot-fci-godowns.html

http://sikhsangat.org/2010/07/rs-800-cr-wheat-goes-waste-annually-why-not-let-farmers-exports-their-crops-in-a-democratic-way/

வயிற்றில் அடிக்கிறார்களே! - தினமணி தலையங்கம்

July 26, 2010

நலிவடையும் நகைத் தொழிலாளர்கள்!


முன்குறிப்பு : "செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை" என்கிற விளம்பரத்தைப் பார்த்தால், எப்பொழுதுமே எரிச்சல் வருகிறது. செய்வதற்கு ஏன் கூலி இல்லை? இதையே காரணம் காட்டி, நகை செய்யும் தொழிலாளர்களின் கூலியை குறைத்து தருகிறார்கள் என்று முன்பு ஒருமுறை ஒரு செய்தி கண்ணில்பட்டது. அதற்கு பிறகு, செய்திகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நகைக்கடை தொழிலாளர்கள் சிலர் தற்கொலை செய்தி படிக்கும் பொழுது இது தொடர்பாக தரவுகள் தேடி எழுத வேண்டும் என நினைத்ததுண்டு. தினமணியில் வந்த இந்த கட்டுரை நகைக்கடை தொழிலில் உள்ள சில பிரச்சனைகளை தொட்டுக்காட்டுகிறது. படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*****

நகைத் தொழிலை மற்ற தொழிலைப்போல சாதாரணமாகக் கருதிவிட முடியாது.​ அதிக நுட்பமும்,​​ வேலைப்பாடும் மிகுந்த இத் தொழில்,​​ தமிழகத்தில் பாரம்பரியமிக்க தொழிலாகவும்,​​கலையின் சிகரமாகவும் கருதப்படுகிறது.​ தமிழகத்தில் நகைத் தொழிலில் சுமார் 10 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.​ இவர்கள் நகைத் தொழிலைப் பாரம்பரியமாகச் செய்து வருபவர்களே.​ கலை சார்ந்தும்,​​ கலாசாரம் சார்ந்தும் இருக்கும் இத் தொழில்,​​ இப்போது அழிவை நோக்கி வேகமாகப் பயணிக்கிறது.

​ உலக அரங்கில் இந்திய நாட்டு நகைகளுக்கு அதிக மதிப்பும்,​​ நல்ல வரவேற்பும் இருக்கிறது.​ ஆனால்,​​ அதை உருவாக்கும் தொழிலாளர்களுக்கு மதிப்பும்,​​ வரவேற்பும் அண்மைக்காலமாகக் குறைந்து வருகிறது.​ நகைத் தொழிலில் பல ஆயிரம் கோடி பணம் புழக்கத்தில் இருந்தாலும்,​​ இந்தத் தொழில் ஈடுபடுகிறவர்கள் வறுமையிலேயே இருக்கின்றனர்.

​ நகைத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வளம்கூட இப்போது இல்லை.​ இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.​ முக்கியமாக,​​ ஆன்-லைன் வர்த்தகமும்,​​ இயந்திரமயமாக்கலும் இத் தொழிலில் ஈடுபடுகிறவர்களை வறுமைக்கு வேகமாக இழுத்துச் செல்கிறது.

​ பல சாகசங்களைச் செய்து ஒருவர் தொழிலை நிமிரச் செய்தாலும்,​​ ஒரு காலகட்டத்தில் அவர் பெரும் நஷ்டத்திலும்,​​ கடனிலும் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுவதாக அத் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் கூறுகிறார்கள்.

​ கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து ​ வருவதால்,​​ சிறுதொழிலாகச் செய்த பலர், வேறு தொழிலுக்குச் செல்கின்றனர்.​ இன்னும் ​ சிலர் வேறுவழியின்றி இத் தொழிலைச் செய்து வருகின்றனர்.​ விலை உயர்வால் சாதாரண மக்களுக்குத் தங்கம் கனவாகி வருவதால்,​​ இவர்களுக்கு சாதாரணமாகக் கிடைக்கும் வேலைகள் குறைந்துள்ளன.​ இதன் காரணமாக முகூர்த்தம்,​​ பண்டிகை காலங்கள் தவிர்த்து மற்ற காலங்களில் தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

​ 10 ஆண்டுகளுக்கு முன்புவரை இத் தொழிலில் ஒரு சில பெரிய நகைக் கடைகள் ​ மட்டுமே இருந்தன.​ ஆனால் இன்று அப்படியில்லை.​ தொழில் துறையில் பெரிய அளவில் கால்பதித்திருக்கும் தனியார் நிறுவனங்கள்,​​ நகை தயாரிப்புத் தொழிலிலும் போட்டிபோட்டு இறங்கி வருகின்றன.​ இந் நிறுவனங்களிடம் எந்தவிதத்திலும் போட்டியிட முடியாமல் சிறிய அளவில் நகைப் பட்டறை வைத்து,​​ தொழில் செய்து வந்தவர்கள் விழிபிதுங்கிய நிலையில் உள்ளனர்.

​ இது ஒருவகை நெருக்கடி என்றால்,​​ ஆன்-லைன் வர்த்தகம் மற்றொரு வகை நெருக்கடியைக் கொடுக்கிறது.​ தங்க வர்த்தகம் ஆன்-லைன் வர்த்தகத்தில் சேரும்வரை பண்டிகைக் காலங்கள்,​​ முகூர்த்தங்கள் போன்ற நாள்களில் மட்டுமே தங்கம் விலை உயர்ந்து வந்தது.​ ஆனால்,​​ இப்போது ஆன்-லைன் வர்த்தகத்தால் காலையில் ஒரு விலை,​​ மாலையில் ஒரு விலை என தங்கத்தின் விலை சூதாட்டம் போன்று நிலையில்லாமல் இருக்கிறது.​ பெரிய வியாபாரிகளுக்கு இந்த விலை உயர்வும்,​​ குறைவும் பொழுதுபோக்காக மாறியுள்ள நிலையில்,​​ நகைத் தொழில் மூலம் வாழ்க்கை நடத்திவந்த தொழிலாளர்கள் தெருவுக்கு வந்துள்ளனர்.

​ சொந்தமாக நகைப் பட்டறை வைத்து முதலாளியாக இருந்த பலர்,​​ இப்போது பெரிய நகைக் கடைகளில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.​ மேலும்,​​ நகைத் தொழிலாளர்கள் பரம்பரையாகச் செய்து வந்த தங்களது தொழிலுக்கு வேறு வழியின்றி விடை கொடுத்து,​​ இன்று கட்டடத் தொழிலாளி,​​ ஹோட்டல் ஊழியர் என வேறு தொழிலுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது.

​ இத் தொழிலில் இப்போது இளைய தலைமுறையினர் குறைவான அளவே காணப்படுகின்றனர்.​ இதனால் நகைத் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.​ இத் தொழிலின் பெரும் பகுதி,​​ இப்போது பெரிய வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதால்,​​ நகைத் தொழிலாளர்கள் வாழ்க்கையும் அந் நிறுவனங்களை மையமாக வைத்தே சுழலத் தொடங்கியுள்ளது.

​ இதில் சில நகைத் தொழிலாளர்கள் கந்துவட்டிக்குக் கடன் வாங்கித் தொழில் செய்து,​​ கந்து வட்டியிலேயே தங்களது வாழ்நாள் சம்பாத்தியம் முழுமையையும் இழந்து வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.​ சிலர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் அண்மைக்காலமாக அதிகமாக நடைபெறுகின்றன.

​ நகைத் தொழிலில் இனிமேல் நல்ல எதிர்காலத்துக்கு வாய்ப்பு இல்லை எனக் கருதப்படுவதால்,​​ இத் தொழிலுக்கு முன்புபோல இளைய தலைமுறையினர் வருவது இல்லை.

இன்னும் சில ஆண்டுகளில்,​​ இளைய தலைமுறையினரே இத் தொழிலில் ஈடுபடாத சூழ்நிலை ஏற்படலாம்.

பெரிய வணிக நிறுவனங்கள் நகையைத் தயாரிப்பது,​​ விற்பது என முழுமையாக வாணிப நோக்கில் செயல்படுவதால்,​​ நகைத் தொழிலில் கலாசாரம் சார்ந்த விஷயங்கள் மறைந்து வருகின்றன.​

​ இத் தொழிலில் ஈடுபடுகிறவர்களை காப்பாற்ற,​​ தங்க விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.​ ​ ஏற்கெனவே இருந்த தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

பொற்கொல்லர் நலவாரியத்தின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த வேண்டும்.​ சிறு நகைத் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்.​ இந் நடவடிக்கைகளை எடுத்தால்,​​ ஓரளவு இத் தொழிலில் ஈடுபடுகிறவர்களைப்​ பாது​காக்​க​லாம்.

​ அறிவியலின் வளர்ச்சியை வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்தாலும்,​​ நமது கலையையும்,​​ கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்கு உண்டு.​ நகைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அவர்களோடு நின்றுவிடும் எனக் கருதிவிட முடியாது.​ அவர்கள் இன்று பாதிக்கப்படுகிறார்கள் என்றால்,​​ அந்தப் பாதிப்பு நாளை மற்ற தொழிலுக்கு வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


- நன்றி : கே. வாசுதேவன், தினமணி, 23/07/2010

July 21, 2010

ஏழாம் நாளிலும் மார்ச்சுவரியில் காத்திருந்த ஜிதேந்தர்!


அரசு மருத்துவமனை. மனிதர்களின் அழுகுரல்களால் மார்ச்சுவரி சூழப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த பொழுது, உடலில் புதிதான அதிர்வுகள் எழுவதை உணர்ந்தேன். இப்படியே திரும்பி போய்விடலாமா என நினைத்தேன். பார்த்தே ஆக வேண்டும்.

அருகே நெருங்கிய போழுது, அந்த இளம் உடல் குளிரில் நன்றாக விரைத்து கிடந்தது. முதல்நாள் பார்த்ததை விட, இன்று வித்தியாசமானதாக இருந்தது. உறவினர்கள் யாரும் வராததாலும், உரிய ஆவணங்கள் தரப்படாததாலும்.... ஆறாம் நாளிலும் மார்ச்சுவரிலேயே இருந்தது.

****

வழக்கமான வேலைகளில் மூழ்கியிருந்தேன். நுண்பகல் வேளை. என் முதலாளியிடமிருந்து அந்த அவசர அழைப்பு வந்தது. செய்தி சொன்னதும், அதிர்ச்சியாய் இருந்தது. நான் இந்த நிறுவனத்தில் வேலை சேர்ந்ததில் இருந்து, பல தொழிலாளர்களின் கைவிரல்கள், கை துண்டித்திருப்பதை எல்லாம் பார்த்திருக்கிறேன். கண் போனதை பார்த்திருக்கிறேன். முதன்முறையாக உயிர் போயிருக்கிறது. உடனே அந்த நிறுவனத்திற்கு போய் ஆக வேண்டிய வேலைகளை போய் பாருங்கள்! என்றார். உடனடியாக விரைந்தேன்.

****

அந்த தொழிற்சாலையில் இருபது, முப்பது பேர் குழுமியிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் இறுக்கம் பரவிகிடந்தது. கூட்டம் விலக்கி உள்ளே நுழைந்து பார்த்தேன். இருபது வயது இளைஞன் ஒருவனை அவசரம், அவசரமாக காரில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மின்சார ஷாக்கினால், உடல் நிறம் மாறியிருந்தது. உடலில் உயிரே இல்லை. இருப்பினும் மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்கள். அவர் ஏற்கனவே இறந்து போனதாக மருத்துவர் உறுதிப்படுத்திய தகவல் இருபது நிமிடத்தில் வந்தது.

அந்த தொழிற்சாலை துவங்கி 7 ஆண்டுகள் தான் ஆகியிருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த வேலை செய்து கொண்டிருந்த மூவர் பல இரும்பு தகடுகள் சரிந்து விழுந்து இறந்து போனார்கள். இப்பொழுது மீண்டும் ஒரு விபத்து. அந்த தொழிற்சாலை எனக்கு இப்பொழுது கொலைக்களம் போல காட்சியளித்தது.

****

இந்த விபத்து குறித்து... நிறுவனங்களுக்காக இருக்ககூடிய அரசு தரப்பு ஆய்வாளர் அறிக்கையை பின்வருமாறு எழுதினார்.

"எந்தவித சுயபாதுகாப்பு சாதனமும் (Hand Gloves, Safety shoes and Googles) அணியாமலும், தகுந்த மேற்பார்வையாளரின் மேற்பார்வை இன்றியும் ஈடுபட்டதால்...இந்த மரண விபத்து ஏற்பட்டது. இந்த தொழிலாளி வட இந்தியாவை சேர்ந்தவர். போதிய தமிழறிவு இல்லாதவர். இது போன்ற தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் பொழுது, அவருக்கு போதிய தமிழறிவு
மற்றும் தொழிற்பயிற்சி இல்லாத காரணத்தினால் இம்மரண விபத்து ஏற்பட்டது. தற்காலிக மின் இணைப்பு பெற்று பணி மேற்கொள்ளும் காலங்களில் மின் இணைப்பைச் சார்ந்த ஸ்விட்ச் போர்டு, பிளக் மற்றும் ஒயர் இவை யாவும் ISO சான்றிதழ் உள்ளனவா, சரியாக பொருத்தப்பட்டுள்ளவையா தகுந்த installation செய்யப்பட்டுள்ளதா என்று அறியாமல் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இம்மரண விபத்து ஏற்பட்டுள்ளது. இம்மரண விபத்து மேற்காணும் பிரிவு 41வது விதி 61 & F யின் படி கடும் முரண்பாடாகும்"

*****

இறந்தவரின் பெயர் : ஜிதேந்தர் மோட் வயது : 20

முகவரி : , சுனேலா, இராம்நகர், கட்ராம்பூர் போஸ்ட், தியேரியா ஜில்லா, உத்திரப்பிரதேசம்.

***

ஜிதேந்தரை சேர்த்துவிட்ட ஒப்பந்தக்காரர் மூலமாக ஊருக்கு தகவல் அனுப்பியும், உடனடியாக பதில் ஏதும் இல்லை. இறந்தவருக்கு அப்பா இல்லை. மூன்று அண்ணன்கள். மூவரும் ஹரியானா, குஜராத், டெல்லி என தொலைதூரங்களில் வேலை செய்கின்றனர். தொடர்பு கொள்ளவே இரண்டு நாள்களாகிவிட்டது என பதில் சொன்னார்கள். ஊரில் இருப்பதோ, அம்மாவும், அண்ணனின் குடும்பங்கள் மட்டுமே.

****

தொடர்ச்சியாக முயற்சி செய்து, ஐந்தாம் நாள் உரிய ஆவணங்கள் தபாலில் வந்து சேர்ந்தன. அந்த குடும்ப ரேசன் அட்டையை பார்த்ததும்... மனம் கனத்துப் போனது






கமலா தேவி - தாயார் - வயது 60

சந்தோஷ்குமார் - மகன் - வய்து 30
மீனாகுமாரரி - மருமகள் - வ்யது 24
பிகாஸ் - மகன் - வயது 7
பிஜி - மகன் - வயது 3

ராஜ்குமார் - மகன் - வயது 25
தேவி - மருமகள் - வயது 22
நரேஸ் - மகன் - வயது 3
சமியா - மகள் - வய்து 1

தர்மேந்திரர் குமார் - மகன் - வயது 23
அலோகா - மருமகள் - வயது 21
ஆதித்தா - மகன் - வயது 2
மாதுரி - மகள் - வயது 1

ஜிதேந்தர் மோட் - மகன் வயது - 20

அல்கா - மகள் - வயது 15
கிரண் - மகள் - வயது - 12

மூன்று அண்ணன்கள், அண்ணன்களின் குடும்பங்கள், இரு தங்கைகள் என சொந்தங்கள் சூழ, குடும்ப அட்டையில் மத்தியில் இருந்தார். 15பேர் கொண்ட பெரிய குடும்பம் இருந்தும், ஆறு நாள் ஆகியும் ஒருவர் கூட வந்து சேரவில்லை. அனாதையாக மார்ச்சுவரியில் ஜிதேந்தர் மார்ச்சுவரியில் கிடக்கிறார்.

****

ஏழாம் நாள். மூத்த அண்ணன் மட்டும் டெல்லியிலிருந்து, ரயிலில் வந்து சேர்ந்தார். அப்படியே கையோடு அழைத்துப் போய், உடலைப் பெற்று, மின் தகனத்தில் எரித்தார்கள். இரவு 9 மணி அளவில், அலுவலகம் வந்து சேர்ந்தார்.

கொஞ்ச நேரம் அமைதி. ஏதும் பேச்சில்லை. பிறகு பேச ஆரம்பித்தார். "எவ்வளவு தருகிறீர்கள்?" ஒரு தொகை சொல்லப்பட்டு, அது கொஞ்சம் அதிகப்படுத்தப்பட்டு உடனடியாக தரப்பட்டது. பணம் தந்ததற்காகவும், இனி வேறும் ஏதும் கேட்கமாட்டோம் என உறுதியளித்து எழுதப்பட்டிந்த பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

ஜிதேந்தர் சம்பந்தமான கோப்பு மூடப்பட்டுவிட்டது.

***

சில நாட்கள் கழித்து... வேறு ஒரு தேவைக்காக அந்த கோப்பை திறந்து பார்த்த பொழுது... சில குறிப்புகள் பென்சிலால் ஒரு தாளில் குறிக்கப்பட்டிருந்தன. அவை :

Police cons. 2500
Police Diesel 1000
Po. writter 1500
Po. photo 500
Po. stationery 200

Po. Inspector 40***
Factory Inspector 50***

என பட்டியல் நீண்டு கொண்டு சென்றது.

****

பின்குறிப்பு : இந்த மரணம் நிகழ்ந்து... சில மாதங்களாகிவிட்டன. ஜிதேந்தர் குறித்த நினைவுகளிலிருந்து. என்னால் இன்றும் மீள முடியவில்லை. படித்த பிறகு, உங்களையும் பல மாதங்கள் நிச்சயம் தொந்தரவு செய்வான்.