> குருத்து

March 12, 2023

The Woman king (2022) கருப்பின மக்களின் வரலாற்று சண்டைப் படம்



1800களில் கதை நகர்கிறது. ஆப்பிரிக்காவில் ஒரு மன்னன் செல்வத்துக்கு ஆசைப்பட்டு தன் சொந்த நாட்டு மக்களையே அடிமைப்படுத்தி, காலனியாதிக்கவாதிகளுக்கு விற்றுக்கொண்டிருக்கிறான்.


ஆப்பிரிக்காவின் இன்னொரு பகுதியான தகோமாவில் இன்னொரு இனக்குழுத் தலைவனாக இருப்பவன், நம் நாட்டு மக்களையே இப்படி அடிமைப்படுத்தி, அடிமைகளாக விற்பது தவறு என்கிறான். அவனை எதிர்த்து நிற்கிறான். அவனிடம் பெண்கள் மட்டுமே பங்களிக்கிற அகோஜி (Agojie) என வலுவான படை இருக்கிறது. அந்த பெண்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. ஆண்களோடு இணைவதுமில்லை. தம் மண்ணைக் காக்க தன் உயிரையும் தருவதற்கு கடுமையான பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

அடிமைகளை ஏற்றுமதி செய்கிற மன்னனிடம் காலனியாதிக்கவாதிகளின் சகவாசத்தால் நவீன ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகள் இருப்பதால், தகோமா மன்னனை மிரட்டிக்கொண்டே இருக்கிறான். கப்பமும் வாங்கிக்கொள்கிறான்.

அவன் எந்த நிமிடத்திலும் தகோமாவின் மன்னனை வீழ்த்தி எல்லோரையும் அடிமைப்படுத்தும் அபாயம் இருக்கிறது. பிறகு என்ன ஆனது? என்பதை உணர்வுப்பூர்வமாகவும், போர் காட்சிகளுடனும் முடித்திருக்கிறார்கள்.

***

உண்மை வரலாறு சம்பவங்கள் கொண்ட படம் என்கிறார்கள். அமெரிக்க மண்ணே இப்படி ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்ட கருப்பின மக்களால் தான் பண்பட்டது. ஆனால் இன்றைக்கும் கருப்பின மக்கள் மீது இன வெறுப்பு காட்டுவதெல்லாம் அயோக்கியத்தனம். இதெல்லாம் அமெரிக்காவில் நடப்பது.

ஆப்பிரிக்க மண்ணில் என்ன நடந்தது என்பதை கொஞ்சம் கோடிட்டு காட்டியிருக்கிறார்கள். எந்த அளவுக்கு வரலாற்றை எடுத்துக்கொண்டார்கள் என்பது ஆராயப்படவேண்டிய விசயம். ஆனால், படம் வெற்றி பெறவேண்டும் என்பதால், கொஞ்சம் கமர்சியல் தன்மையுடன் எடுக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.

படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்கள், தொழில்நுட்ப ஆட்கள், இயக்குநர் என பெரும்பாலும் பெண்கள் பங்களிப்பு என்பது சிறப்பு. நன்றாக நடித்திருக்கிறார்கள்.

ஜீ5, அமேசான் தளத்தில் இருப்பதாக இணையம் சொல்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

March 11, 2023

GSTPS - பொதுக்குழு குறித்து!

 



GSTPS பொதுக்குழு கூட்டத்தில் கிடைத்த சில அனுபவ பகிர்வுகள் 


சொசைட்டியின் செயல்பாடுகள்


நமது சொசைட்டி துவங்கி சில மாதங்களிலேயே ஆட்கொல்லி கொரானா உலகையே முடக்கிவைத்தது. இந்தியாவும் ஊரடங்கு அறிவித்தது. இந்த புதிய சூழ்நிலை. கடந்த சில பத்தாண்டுகளில் நாடும், மக்களும் எதிர்கொள்ளாதது.  20 நாட்கள் கடந்தன. நாம் இணைய வழி ஜூம் கூட்டங்களை ஏற்பாடு செய்து, வரிசையாக கூட்டங்கள் நடத்த ஆரம்பித்துவிட்டோம்.  கொரானாவிற்கு முந்தைய காலத்தில் மாதத்தில் ஒரு கூட்டம் என்றால், கொரானாவிற்கு பிறகு மாதம் நான்கு கூட்டங்களாக நடத்தியது பாராட்டத்தக்கது. கால நிலைமைகளுக்கேற்ப மாற்றிக்கொள்ளாத உயிரினங்கள் உலகில் நீடிப்பதில்லை என உயிரினங்களின் அறிவியல் நமக்கு போதிக்கிறது. அதுபோல தான் அமைப்பும் . புதிய நிலைமைகளுக்கு ஏற்ப சொசைட்டியின் செயல்பாடுகளும் உடனே மாறியது.  நமது தலைவர் கொரானா காலத்தில் அயல்நாட்டில் மாட்டிக்கொண்டார். இந்திய நேரத்திற்கு தன்னை தகவமைத்துக்கொண்டு, தொடர்ச்சியாக கூட்டங்களை ஒருங்கிணைத்தார்.  இந்த சொசைட்டி எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கும் என்பதற்கு இரண்டு நல்ல உதாரணங்கள்.



நிதி


ஒரு அமைப்பு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு நிதி எப்பொழுதும் அவசியம். ஒரு மனிதர் தனிப்பட்ட முறையில் செலவாளியாக இருக்கலாம். ஆனால் சொசைட்டி உறுப்பினர்களுடன் பெறப்படும் கட்டணம், நன்கொடையாக பெறப்படும் பணம் என்பது பொதுப்பணம். அதை கையாளும் பொழுது மிகவும் பொறுப்பாக கையாளவேண்டும்.  அதை நிர்வாகிகள் நன்றாக புரிந்துவைத்திருக்கிறார்கள்.  அதனால் தான் ஒவ்வொரு செலவு செய்யப்படும் பொழுது கவனமாக இருக்கிறார்கள்.  (இருந்தாலும் இன்னொரு கீசெயினும் கொடுத்திருக்கலாம்.  ) அதனால் தான் நிதியை சேகரித்து பாதுகாப்பாக வங்கியில் வைத்திருக்கிறார்கள்.


பல அமைப்புகளில் தனது உறுப்பினர்களின் நலன்களுக்காக சிந்திக்கும் பொழுதும், செயல்படும் பொழுதும் அதை அமுல்படுத்த நிதி பற்றாக்குறை தான் கைகளை கட்டிப்போடும்.  இப்பொழுது நமது அமைப்பில் வருடாந்திர சந்தா என்பது மட்டும் பெறப்படுகிறது. சொசைட்டியில் பல்வேறு நிலைகளில், பல்வேறு வருமான அளவிலும் இருக்கிறார்கள்.  சொசைட்டி லாபம் ஈட்டுவதற்காக அல்ல! பொதுநலன் அடிப்படையிலான சேவையை முன்னிட்டு நிறுவப்பட்டது. அதனால தான் சொசைட்டியின் அடிப்படை செலவுகளை எதிர்கொள்வதற்காக குறைவான தொகையை தீர்மானித்து சந்தா என்ற பெயரில் வாங்குகிறார்கள்.  ஒரு சொசைட்டியின் இருப்பு, அதன் வளர்ச்சியின் பங்கில் பல நிர்வாகிகள், உறுப்பினர்கள் எல்லோரும் எந்தவித சன்மானமும் பெறாமல் உழைக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.  ஆகையால் கூடுதல் வருமானம் ஈட்டுபவர்கள் கூடுதல் நன்கொடை கொடுப்பதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும்.  ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவராயிருந்தால், போனஸ் என வாங்கும் பொழுது, சொசைட்டிக்கு ஒரு தொகையை தரலாம் என சிந்திக்கவேண்டும். கொடுக்கவேண்டும்.


சமீபத்தில் நம்மை விட்டு பிரிந்த நமது உறுப்பினர் சந்திரசேகர் அவர்கள் நேரிடையாக கூட்டம் நடக்கும் பொழுதெல்லாம், தலைவர் செந்தமிழ்செல்வன் சாரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக தருவார் என தலைவர் பகிர்ந்து கொண்ட பொழுது, நெகிழ்வாக இருந்தது. பலருடைய நலன்களுக்காக உழைக்கும் ஒரு அமைப்புக்கு நிதி எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்திருந்தால் தான் அவர் தொடர்ந்து கொடுத்திருக்கிறார்.   அவரிடமிருந்து அந்த நல்ல பண்பை நாம் எடுத்துக்கொள்வோம்.


உறுப்பினர்களின் எண்ணிக்கை


ஒரு அமைப்புக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் பிரதானமானது.  எவ்வளவுக்கு நாம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு சொசைட்டிக்கு நல்லது.  இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வேலையை நிர்வாகிகள் பார்த்துக்கொள்வார்கள் என சிந்திப்பது அல்லது அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பது இரண்டுமே தவறு.


ஒவ்வொரு உறுப்பினரும் தனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என இந்த சொசைட்டி செயல்பாடுகள் யாருக்கு கிடைத்தால் பயன்பெறுவார்களோ அவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை உறுப்பினராக்கும் வேலையை செய்யும் ஒரு பணியை செய்வது அவசியமானது. தனது துறை சார்ந்த அறிவுக்காக எப்பொழுதும் தேடுதலோடு இருப்பவர்களுக்கு ஒருமுறை சொன்னாலே, சொசைட்டியில் இணைந்துவிடுவார்கள். நமது உறுப்பினர் Godwin Joe அப்படித்தான் நம்மோடு இணைந்தார். சிலருக்கு தொடர்ச்சியாக நமது கூட்ட நிகழ்வுகளை தொடர்ச்சியாக அனுப்புவதன் மூலம், ஒரு சில கூட்டங்கள் கலந்துகொண்ட பிறகு உறுப்பினராக முன்வருவார்கள். அதற்கும் சிலர் உதாரணங்களாக இருக்கிறார்கள்.


ஐந்து பேரிடம் தொடர்ச்சியாக பேசினால், ஒருவர் உறுப்பினராகிவிடுவார் என்பது தான் கடந்த கால அனுபவமாக இருக்கிறது.  ஆகையால் ஒவ்வொரு உறுப்பினரும் நம்மைச் சுற்றி உள்ளவர்களை மனதில் வைத்து அவர்களிடம் பேசுவதின் மூலம், சொசைட்டியின் செயல்பாடுகளை பகிர்ந்துகொண்டால் உறுப்பினர்களாவார்கள்.


நமது சொசைட்டியின் அனுபவமே கடந்த ஆண்டு இருந்தவர்கள் சிலர் அவர்களுடைய சொந்த காரணங்களால் விலகியிருக்கிறார்கள். நிர்வாகிகள் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நட்புடன் பேசியதில் அதை உறுதியும் செய்திருக்கிறார்கள். ஆக சிலர் விலகுவது இயல்பு தான். எப்பொழுதும் ஒரு அமைப்பு உற்சாகத்துடன் இயங்கவேண்டும் என்றால், புதியவர்கள் உள்ளே வந்துகொண்டே இருக்கவேண்டும். அப்பொழுது தான் ஏற்கனவே இயங்கும் பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் உற்சாகம் வரும். இல்லையெனில் பார்த்த முகத்தையே பார்ப்பது சோர்வையே தரும். 


அதே போல, ஒரு பேச்சாளர் ஒரு உரைக்காக பல மணி நேரங்கள் படிக்கிறார். நிர்வாகிகளுடன் விவாதிக்கிறார். உறுப்பினர்களுக்கு மனதில் எளிதாக பதியவேண்டும் என்பதற்காக வண்ணமயமாக PPT தயாரிக்கிறார். அவர் வகுப்பு எடுக்கும் பொழுது, நமது உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சரி பாதிபேர் தான் கலந்துகொள்கிறார்கள். அதற்கு குடும்ப நெருக்கடி, வேலை நெருக்கடி, உடல்நிலை என காரணங்களை முறையாக தெரிவிக்கிறார்கள்.  குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் பொழுது அவர் நிச்சயம் சோர்வடைவார். இதற்காகவும் நாம் உறுப்பினர்களை அதிகப்படுத்துவது அவசிய தேவையாகிறது.


இன்னும் சில நல்ல விசயங்களை இன்றைய கூட்டத்தில் பகிர்ந்துகொண்டோம்.  அதை நாளை பேசுவோம்.

நன்றி.

March 8, 2023

சக்தி (எ) இனியனுக்கு அஞ்சலி!


கடந்த ஞாயிறு (05/03/2023) மதியம் மூன்று மணியளவில் ”நண்பன் சக்தி (எ) இனியன் இறந்துவிட்டான்” என்ற அதிர்ச்சியான செய்தியை நண்பர் தெரிவித்தார்.


கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்டது. ஆகையால் தொடர்ச்சியாய் டயலிசஸ் செய்யவேண்டும் என சொல்லிய பொழுதே, இனியனின் பாதி ஜீவன் போய்விட்டதாக உணர்ந்தேன்.

சக்தி என்னுடைய இருபது வயதில் அறிமுகமானான். இந்த சமூகம் ஏன் இத்தனை கோளாறுகளுடன் இருக்கிறது? அதை சரி செய்ய என்ன செய்யவேண்டும் என்ற தேடல் கொண்ட என்னைப் போன்ற இளைஞர்கள் பல திசைகளிலிருந்து உதயம் கல்வி மையத்தில் ஒன்றாய் சேர்ந்தோம். மனோகரன் அவர்கள் அதன் முதல்வராய் இருந்தார்.

அவரும் அவருடைய நண்பர்களும் அறிவுச்சுடர் நடுவம் என்ற அமைப்பை நடத்திவந்தார்கள். சமூக மாற்றம் குறித்து விவாதிக்கும் களமாய் அது இருந்தது. கல்லூரியில் படிப்பவர்கள், வேலை தேடுபவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதன் தொடர் பங்கேற்பாளர்களாய் இருந்தார்கள். அங்கு வாரம் வாரம் ஞாயிறு மாலை ஒரு தலைப்பில் தயாரித்து அதன் உறுப்பினர்கள் பேசுவார்கள் அல்லது வெளியில் இருந்து சிறப்பு அழைப்பாளர்கள் வந்து கலந்துரையாடிவிட்டு செல்வார்கள். வெளியில் இருந்து பேச வருபவர்களுக்கு தகுதி பெரிய ஆள் என்பதெல்லாம் இல்லை. சமூக மாற்றத்திற்காக ஏதாவது பங்காற்றியவர்களைத் தான் அங்கு பேச அழைத்தோம். அதன்படி தோழர்கள் கோ. கேசவன், தியாகு, தொ. பரமசிவன் என பல ஆளுமைகள் அங்கு வந்து பேசியிருக்கிறார்கள்.

வார வார நிகழ்வுகளில், ஆண்டு விழாக்களில் இனியன்

• கவிதை வாசித்திருக்கிறான். மேலோட்டமாக இருக்காது. எடுத்துக்கொண்ட தலைப்பில் உணர்வுப்பூர்வமாகவும், ஆழமாகவும் எழுதுவான்.

• இனிமையாக பாடல் பாடுவான். ஏதாவது திரைப்பாடலை, கிராமிய பாடலின் மெட்டை எடுத்துக்கொண்டு சொந்த முறையில் அருமையாக பாடல் எழுதுவான்.

• நளினமாக நடனம் ஆடுவான். வேலுவும், இனியனும் ஆடத்தெரிந்தவர்களுக்கு எல்லாம் நடனமும் சொல்லித்தருவார்கள்.

• தேர்ந்த நடிகன் அவன். நாடகங்களில் அத்தனை அருமையாய் நடிப்பான்.

• நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவன். அவன் இருக்கும் இடம் எப்பொழுது கலகலப்பாக இருக்கும்.

• ஒரு குறிப்பிட்ட தலைப்பில் படித்து, நன்றாக தயாரித்து அருமையாக உரை ஆற்றுவான். இப்படி எல்லாவற்றிலும் ஆல்ரவுண்டராய் இருந்தவன் அவன்.

முல்லைப் பெரியார் அணையை பாதுகாப்போம் என தொடர் பிரச்சார இயக்கத்தில் தெரு நாடகங்களில் நடித்திருக்கிறான். கிராமிய, முற்போக்கான, புரட்சிகரமான பாடல்களுக்கு பல பொது மேடைகளில் ஆடியிருக்கிறான்.

இத்தனையும் செய்த இனியன், நான் சந்திக்கும் பொழுது +2 முடித்துவிட்டு கொத்தனராக வேலை செய்துகொண்டிருந்தான் என்பது ஆச்சர்யம். மிலிட்டரில் வேலை செய்து ஓய்வு பெற்ற வயதான அப்பா, அம்மா, அவனின் சகோதரியின் இரண்டு பிள்ளைகள் என மொத்தக் குடும்பத்தையும் அவன் தாங்கிக்கொண்டு இருந்தான்.

தமிழின் மீது அவனுக்கு மாறாத காதல் இருந்தது. அதனால் தான் சக்தி என்ற பெயரை சொல்லாமல், இனியன் என தன்னை அனைவரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டான். அன்றிலிருந்து இனியன் ஆனான். கடுமையான கொத்தனார் வேலைக்கு போய்க்கொண்டே தபால் வழியில் பிஏ தமிழ் இலக்கியம் படித்து. முடித்தான்.

பிறகு வழக்குரைஞர் படிக்க நுழைவுத் தேர்வு எழுதினான். அப்பா மிலிட்டரிகாரர் என்பதால் அந்த கோட்டா உதவி செய்தது. சட்டப்படிப்பை வெற்றிகரமாக படித்து முடித்து வழக்குரைஞர் ஆனான். படிக்கும் காலத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியில் உறுப்பினராக இருந்து அரசியல் வேலைகளை முன்னெடுத்தான்.

வாழ்க்கை எல்லோரையும் வேறு வேறு திசைகள் நோக்கி தள்ளப்பட்டோம். இடைவெளிகள் உருவாகிவிட்டது.

காதல் திருமணம் செய்தான். இரண்டு பிள்ளைகள் பிறந்தன. வழக்கறிஞர் தொழில் செய்தான். எல்லாம் நல்லவிதமாய் போய்க்கொண்டிருந்த பொழுது… அவன் மொத்த ஆளுமையையும் சிதைக்கும் குடியைத் தேர்ந்தெடுத்தான்.

ஒரு ஆண்டு விழாவில் ஆல் ரவுண்டராய் எல்லாவற்றிலும் கலந்துகொள்வான். அடுத்த ஆண்டு எதிலுமே கலந்துகொள்ளாமல் அமைதியாய் ஒதுங்கி நிற்பான். என்னவென்று கேட்டாலும், மவுனம் காப்பான். எல்லாவற்றிலும் ஆழம் தேடுபவன் குடியிலும் ஆழம் தேடி விழுந்துவிட்டான். அங்கு தொடங்கியது அவனின் வீழ்ச்சி. அதற்கு பிறகு அவனைப் பற்றி கேள்விப்படுகிற செய்திகள் வருத்தமாய் இருந்தன.

கடந்த மாதம் அண்ணன் மகனுக்கு திருமணம் என்ற பொழுது, சில நண்பர்களை அழைத்திருந்தேன். அண்ணன் மகன் போய் பத்திரிக்கை வைத்து அழைத்தான். நானும் உடல்நலம் விசாரித்து பேசினேன். அவன் உடலில் இருந்த பலவீனம் குரலில் தென்படவேயில்லை. பழைய ஆளாய் உற்சாகமாய் தான் பேசினான். திருமணத்திற்கு வருவதாய் தெரிவித்தான்.

கடந்த வாரத்தில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அரசு ராசாசி மருத்துவமனையில் அவன் உயிர் பிரிந்தது என்ற செய்தி கேட்ட பொழுது, பெரிய வருத்தம் எழுந்தது.

அவன் கீழிருந்து தன் முயற்சியில் எழுந்து வந்தவன். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டியவன். இன்னமும் சமூகத்திற்கு நன்றாக உழைத்திருக்க கூடியவன். ஒரு மனிதனிடமிருந்து நல்ல அம்சங்களை கற்றுக்கொள்வோம். அவனை வீழ்த்திய அம்சங்களில் கூட படிப்பினையாய் பெற்றுக்கொள்வோம்.

போய் வா நண்பா!
உனக்கு எங்களது அஞ்சலி!
இந்த மண்ணில் வாழும் வரை
உன் நினைவுகள் சூழ வாழ்ந்திருப்போம்!

பின்குறிப்பு : இனியனின் அழகான புகைப்படத்தை கொஞ்சம் மங்கலாக்கித்தான் தந்திருக்கிறேன்.