> குருத்து: அஞ்சலி
Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

November 15, 2025

பிரியத்துக்குரிய தோழரும் எங்களின் மூத்த அண்ணனுமான இரமேஷ்குமார் அவர்களுக்கு அஞ்சலி


இன்றைக்கு (15/11/2025) மாலை மதுரையில் இருந்து நண்பன் வேலு அழைத்து..  இரமேஷ்குமார் அவர்களுக்கு குறைந்த ரத்த அழுத்தத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை போகும் வழியில் உயிர் பிரிந்துவிட்டதாகவும், இழப்பின் பிரிவு தாங்க முடியாது விசும்பலுடன் தெரிவித்தார்.

 

சிறிது நேரத்தில் சக்தியின் துணைவியார் உமாவும் அதே தகவலை ரூபனிடம் பேசி உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார். அவருடைய குரலிலும் வலி தெரிந்தது.

 

எங்களுக்கெல்லாம் அவர் அப்படித்தான். அத்தனை வாஞ்சையுடனும் அன்புடனும் எங்களிடம் பழகியவர். அதிர்ந்து பேசாதவர். சமூக கோளாறுகளை பேசும் பொழுது தான் கோபப்பட்டு பேசியதை பார்த்திருக்கிறேன்.

 

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் தோழமை உறவு. சமூகத்தில் உள்ள கோளாறுகளுக்கு என்ன காரணம் பதினேழு வயதில் தேடிக்கொண்டிருந்த பொழுது, அறிவுச் சுடர் மையம் அறிமுகமானது. அதன் வழியாக அறிமுகமானவர் தோழர் இரமேஷ்குமார் அவர்கள்.

 

ரயில்வேயில் சீனியர் அலுவலராக அப்பொழுது பணியாற்றிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஞாயிறும் மாலை வேளையில் பல்வேறு சமூக தலைப்புகளில் விவாதிக்கும் பொழுது அவரும் எங்களோடு இணைந்து இருப்பார்.

 


பயணங்களின் மீது அத்தனை பிரியம் அவருக்கு. அவரிடம் இருந்து  எங்களிடம் அது வாழ்நாள் முழுவதும் ஒட்டிக்கொண்டது எனலாம்.  தோழர் உமா – சக்தி தம்பதியினரின் மகள் திருமணத்திற்கு அவருடன் ரயிலில் பயணித்தது இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது.

 

அவருக்கு புத்தகங்களின் மீது அத்தனை காதல் இருந்தது.  பரிசாக எல்லோருக்கும் புத்தகம் வழங்கும் பழக்கம் இருந்தது.  அவர் வீட்டில் ஒரு நூலகமே வைத்திருந்தார்.  உரிமையோடு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து படிப்போம்.  

 

புத்தகங்களுக்காக ஒரு பதிப்பகம் துவங்கவேண்டும். புத்தக கடை ஒன்றை உருவாக்கவேண்டும் என ஒரு சில ஆண்டுகள் நிறைய முயன்றார்.   அவருடைய இயல்பில் அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை.

 

அது போலவே நல்ல தமிழில் இயல்பாக பேசுவதையும், அழகு தமிழில் ஆங்கில கலப்பு இல்லாமல் எழுதுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.   எத்தனை இளையவர் என்றாலும், அய்யா என பேசுவதை இயல்பாக்கி வைத்திருந்தார்.  எப்பொழுது போனில் அழைத்தாலும், ”வணக்கம்” என சொல்வதை வழக்கமாய் வைத்திருந்தார்.

 

யோசித்துப் பார்த்தால் பல நல்ல பண்புகளை அவரிடம் இருந்து கற்றிருக்கிறோம் என புரிகிறது.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மாடியில் ஏணியில் இருந்து தவறி விழுந்ததில் இருந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டது எனலாம்.  அதற்கு பிறகு அவரிடம் போனில் பேசுவது மிகவும் குறைந்து போய்விட்டது.

 

2024ல் - கதிர் ஷாலினி சென்னையில் நடைபெற்ற பொழுது, நண்பர்கள் பலரும் கலந்துகொண்டோம்.  மகிழ்வாக நினைவாக இருந்தது.

 

கடந்த செப்டம்பரில்  சென்னைக்கு வந்திருந்த பொழுது அவருடைய துணைவியாரான மணிமேகலை அவர்களுக்கு (எங்களுக்கு எல்லாம் அக்கா) உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  நேரில் போய் பார்த்த பொழுது, ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்தேன்.  மூத்த மகன் கதிரின் ( ஷாலினி) துணைவியாருக்கு விரைவில் குழந்தை பிறக்க போகும் செய்தியைப் சந்தோசமாய் பகிர்ந்துகொண்டார்.

 

சில நாட்களிலேயே கதிருக்கு குழந்தை பிறந்த செய்தியை மகிழ்ச்சியுடன் போனில் பகிர்ந்தார். “சார்! நீங்க தாத்தாவாகிவிட்டீர்கள்” என்றேன் சிரித்துக்கொண்டே.  “நான் தாத்தான்னா நீயும் தாத்தா!தான்” என்றார். எங்களை விட வயதில் மூத்தவராக  இருந்தாலும், எங்களை விட மனதளவில் இளமை ததும்புவராக தான் இருந்தார்.

 

60+ வயதில் அவரை இழப்போம் என எங்களது நண்பர்களில் யாருமே நினைக்கவில்லை.

 

இரமேஷ்குமார் சாரை இழந்து மணிமேகலை அக்கா எப்படி இருப்பார் என வருத்தம் மேலிடுகிறது. கதிர் – ஷாலினி, வண்ணநிலவன் என அனைவருக்கும் எங்களது ஆறுதல்கள்.

 

நன்றாக நினைவிருக்கிறது. கடிதங்களில், கட்டுரைகளில் இறுதியாக “எந்நாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்” என எழுதி.. ஒரு குட்டி யானை துள்ளலோடு அசைந்தாடி செல்வது போல படம் வரைந்து கையெழுத்திடுவார்.  அது அவரைப் பற்றிய உருவகம் எங்களது மனதிலும்!

 

போய் வாருங்கள் இரமேஷ்குமார் சார்!  எங்களது நினைவுகளில் எப்பொழுதும் வற்றாத இளமையுடன் தங்கியிருப்பீர்கள்!!

 

தோழமையுடன்…

 

-         இரா. முனியசாமி

February 16, 2025

ஆசிரியர் சுதா அவர்களுக்கு அஞ்சலி!


சென்னை வந்த புதிதில் தோழர் ஜவஹர் அவர்களின் ”தோழமை” குடும்பத்தில் திருமதி சுதா அவர்களும் ஒருவர்.   சந்திப்புகளில் மிகவும் அன்பாக பேசக்கூடியவர்.  மிகவும் அமைதியானவரும் கூட.


பிறகு தோழர்கள் எங்காவது விசேசங்களில் சந்திக்கும் பொழுது, சுதா அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் சந்திப்பதுண்டு.  நலம் விசாரித்துக்கொள்வதுண்டு.

 

ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்தார். பள்ளியில் பி.எப்., இ.எஸ்.ஐ குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவரோ, அவர் பள்ளியில் இருந்தோ அழைத்து சந்தேகம் கேட்பார்கள். பலமுறை பதிலளித்திருக்கிறேன்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏதும் அழைப்பு இல்லை.  கடந்த ஓராண்டில் புற்று நோய் அவரை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டிருந்திருக்கிறது என பிறகு தான் தெரியவந்தது.


இடையில் மருத்துவமனையில்  இருக்கும் பொழுது தகவல் சொன்னார்கள்.   மீண்டுவந்துவிடுவார் என நம்பினோம்.  போய் பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது இன்று மதியம் இறந்துவிட்டார் என தகவல் சொன்னதும் அதிர்ந்து போனோம்.

 

கொரானா காலத்தில் நிறைய பேரை இறந்தோம். இப்பொழுது புற்று நோய், மாரடைப்பு என அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

 

53 வயது தான் என்பது மனம் ஆறமாட்டேன் என்கிறது.   அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினரான திரு. முருகன், மகள் ஜனனிக்கும் எங்களது ஆறுதல்.

 

வில்லிவாக்கத்தில் அவருடைய இல்லத்தில், இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. நானும் துணைவியாரும் அஞ்சலி செலுத்திவந்தோம்.

 

”தோழமை” குடும்ப தோழர்கள், அப்ரோச் தோழர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். அவர் துவக்க காலத்தில் அப்ரோச் மையத்தின் நிர்வாக குழுவில் அவரும் சில ஆண்டுகள் பயணித்திருக்கிறார் என இன்று தான் தெரிந்தது.


சமூகம் ஒரு நல்ல ஆசிரியரை இழந்து இருக்கிறது.

ஆசிரியர் சுதா அவர்களுக்கு அஞ்சலி!

 

-         சாக்ரடீஸ்


January 28, 2025

கிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி!


70 வயதானவர். கணக்காளர். நேற்று மாலையில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையிலேயே இறந்து போனார். அவருக்கு அஞ்சலி. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்கள்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தில் கணக்காளராக இருந்த பொழுது அறிமுகமானார். பிறகு இன்னொரு நிறுவனத்தில் இணைந்த பொழுது, அந்த நிறுவனத்தில் பி.எப். இ.எஸ்.ஐ ஆலோசகராக என்னை அறிமுகப்படுத்தினார்.

எட்டு ஆண்டுகளாக அந்த அலுவலகம் சென்று வந்த பொழுது, மிகவும் நெருக்கமாகிவிட்டார். திருநெல்வேலிகாரர். துவக்க காலத்தில் ஊரில் மக்களுக்கு மாத, வார இதழ்களை வாடகைக்கு கொடுத்து வாங்கியிருக்கிறார். ஒரு பார்சல் நிறுவனத்தில் கணக்காளர். ஒரு சமயத்தில் ஆட்டோ கூட ஓட்டியிருக்கிறார்.

நான்கு பையன்கள். சென்னை தாம்பரம் அருகே குடியிருந்த பொழுது, பகுதியில் ஒரு வீட்டில் ஒரு திருட்டு நடக்கும் பொழுது, எதைச்சையாக பார்த்துவிட்ட மூத்தப் பையனை, ஒருநாள் காத்திருந்து வீடு புகுந்து வெட்டி கொன்றுவிட்டார்கள். இது நடந்து பல ஆண்டுகளுக்கு பிறகும், இதைச் சொன்ன பொழுது நேற்று நடந்தது போல சொல்லி அழுதார். புத்திர சோகம் மிகவும் வாட்டக்கூடியது. அந்த கொலைக்கு நீதி கிடைத்திருந்தாலாவது அவருக்கு ஒரு ஆறுதல் கிடைத்திருக்கும். கடைசி வரை கிடைக்கவில்லை.

வறுமை. பல காலம் அவரது குடும்பத்தை வாட்டியிருக்கிறது. தொடர்ந்து போராடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் கொஞ்ச காலம் வாடகைக்கு எடுத்து ஆட்டோ ஓட்டியிருக்கிறார். பிறகு பிள்ளைகள் வளர்ந்த பிறகு பொருளாதார நிலையில் ஓரளவு தேறி வந்துவிட்டார்கள்.

ஒரு உறவினர் போல குடும்ப விசயங்களை பகிர்ந்துகொள்வார். கொரானா காலம் வரைக்கும், 66 வயது வரைக்கும் வேலைப் பார்த்தார். கை நடுக்கம் வந்துவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக தான் ஓய்வில் இருந்தார். மகன்கள் வீடு வாங்கியதை, பேரன் பிறந்த விசயத்தை எல்லாம் சந்தோசமாக பகிர்ந்துகொண்டார். போய் பார்த்து வந்தேன்.

திமுக அனுதாபி. குறிப்பாக கலைஞர் கருணாநிதியின் மீது அத்தனை பிரியம். அந்த பிரியம் உதயநிதி வரைக்கும் இருந்தது ஆச்சர்யம். திமுககாரர்கள் நடத்தும் யூடியூப் சானல் செய்திகளை தினமும் எனக்கு அனுப்பி வந்தார். திமுக செய்யும் பிழைகளை சொல்லும் பொழுது மற்றவர்களிடம் வாதம் செய்யும் பொழுது முரட்டு ஆளாகவே நடந்துகொள்வார். நான் சொல்லும் பொழுது கொஞ்சம் கேட்டுக்கொள்வார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இதயம் கொஞ்சம் இயங்க மக்கர் செய்ததை, வாயுத் தொல்லை என புரிந்துகொண்டார். பெரும் மருத்துவ செலவுகள் அப்படி நம்மை நினைக்க வைப்பது தான் பெரிய வாதை.

நேற்றைய முதல் நாள் மருத்துவமனையில் சேர்ந்து, மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்த பொழுதே, நேற்று அடைப்பின் ஆழத்தை பார்க்க ஆஞ்சியோ செய்யும் பொழுது பெரியளவில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார்.

நேற்றிரவே வீட்டுக்கு போய் பார்த்தேன். கண்ணாடி பெட்டிக்குள் தூங்குவதாக தான் தெரிந்தது. இன்று காலையில் சீனியர் வில்லியப்பன் அவர்களோடு போய் மாலை போட்டு அஞ்சலி செய்து வந்தோம் ஆறுதல் சொல்லிவந்தோம்.

கிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி.

March 8, 2023

சக்தி (எ) இனியனுக்கு அஞ்சலி!


கடந்த ஞாயிறு (05/03/2023) மதியம் மூன்று மணியளவில் ”நண்பன் சக்தி (எ) இனியன் இறந்துவிட்டான்” என்ற அதிர்ச்சியான செய்தியை நண்பர் தெரிவித்தார்.


கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்டது. ஆகையால் தொடர்ச்சியாய் டயலிசஸ் செய்யவேண்டும் என சொல்லிய பொழுதே, இனியனின் பாதி ஜீவன் போய்விட்டதாக உணர்ந்தேன்.

சக்தி என்னுடைய இருபது வயதில் அறிமுகமானான். இந்த சமூகம் ஏன் இத்தனை கோளாறுகளுடன் இருக்கிறது? அதை சரி செய்ய என்ன செய்யவேண்டும் என்ற தேடல் கொண்ட என்னைப் போன்ற இளைஞர்கள் பல திசைகளிலிருந்து உதயம் கல்வி மையத்தில் ஒன்றாய் சேர்ந்தோம். மனோகரன் அவர்கள் அதன் முதல்வராய் இருந்தார்.

அவரும் அவருடைய நண்பர்களும் அறிவுச்சுடர் நடுவம் என்ற அமைப்பை நடத்திவந்தார்கள். சமூக மாற்றம் குறித்து விவாதிக்கும் களமாய் அது இருந்தது. கல்லூரியில் படிப்பவர்கள், வேலை தேடுபவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதன் தொடர் பங்கேற்பாளர்களாய் இருந்தார்கள். அங்கு வாரம் வாரம் ஞாயிறு மாலை ஒரு தலைப்பில் தயாரித்து அதன் உறுப்பினர்கள் பேசுவார்கள் அல்லது வெளியில் இருந்து சிறப்பு அழைப்பாளர்கள் வந்து கலந்துரையாடிவிட்டு செல்வார்கள். வெளியில் இருந்து பேச வருபவர்களுக்கு தகுதி பெரிய ஆள் என்பதெல்லாம் இல்லை. சமூக மாற்றத்திற்காக ஏதாவது பங்காற்றியவர்களைத் தான் அங்கு பேச அழைத்தோம். அதன்படி தோழர்கள் கோ. கேசவன், தியாகு, தொ. பரமசிவன் என பல ஆளுமைகள் அங்கு வந்து பேசியிருக்கிறார்கள்.

வார வார நிகழ்வுகளில், ஆண்டு விழாக்களில் இனியன்

• கவிதை வாசித்திருக்கிறான். மேலோட்டமாக இருக்காது. எடுத்துக்கொண்ட தலைப்பில் உணர்வுப்பூர்வமாகவும், ஆழமாகவும் எழுதுவான்.

• இனிமையாக பாடல் பாடுவான். ஏதாவது திரைப்பாடலை, கிராமிய பாடலின் மெட்டை எடுத்துக்கொண்டு சொந்த முறையில் அருமையாக பாடல் எழுதுவான்.

• நளினமாக நடனம் ஆடுவான். வேலுவும், இனியனும் ஆடத்தெரிந்தவர்களுக்கு எல்லாம் நடனமும் சொல்லித்தருவார்கள்.

• தேர்ந்த நடிகன் அவன். நாடகங்களில் அத்தனை அருமையாய் நடிப்பான்.

• நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவன். அவன் இருக்கும் இடம் எப்பொழுது கலகலப்பாக இருக்கும்.

• ஒரு குறிப்பிட்ட தலைப்பில் படித்து, நன்றாக தயாரித்து அருமையாக உரை ஆற்றுவான். இப்படி எல்லாவற்றிலும் ஆல்ரவுண்டராய் இருந்தவன் அவன்.

முல்லைப் பெரியார் அணையை பாதுகாப்போம் என தொடர் பிரச்சார இயக்கத்தில் தெரு நாடகங்களில் நடித்திருக்கிறான். கிராமிய, முற்போக்கான, புரட்சிகரமான பாடல்களுக்கு பல பொது மேடைகளில் ஆடியிருக்கிறான்.

இத்தனையும் செய்த இனியன், நான் சந்திக்கும் பொழுது +2 முடித்துவிட்டு கொத்தனராக வேலை செய்துகொண்டிருந்தான் என்பது ஆச்சர்யம். மிலிட்டரில் வேலை செய்து ஓய்வு பெற்ற வயதான அப்பா, அம்மா, அவனின் சகோதரியின் இரண்டு பிள்ளைகள் என மொத்தக் குடும்பத்தையும் அவன் தாங்கிக்கொண்டு இருந்தான்.

தமிழின் மீது அவனுக்கு மாறாத காதல் இருந்தது. அதனால் தான் சக்தி என்ற பெயரை சொல்லாமல், இனியன் என தன்னை அனைவரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டான். அன்றிலிருந்து இனியன் ஆனான். கடுமையான கொத்தனார் வேலைக்கு போய்க்கொண்டே தபால் வழியில் பிஏ தமிழ் இலக்கியம் படித்து. முடித்தான்.

பிறகு வழக்குரைஞர் படிக்க நுழைவுத் தேர்வு எழுதினான். அப்பா மிலிட்டரிகாரர் என்பதால் அந்த கோட்டா உதவி செய்தது. சட்டப்படிப்பை வெற்றிகரமாக படித்து முடித்து வழக்குரைஞர் ஆனான். படிக்கும் காலத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியில் உறுப்பினராக இருந்து அரசியல் வேலைகளை முன்னெடுத்தான்.

வாழ்க்கை எல்லோரையும் வேறு வேறு திசைகள் நோக்கி தள்ளப்பட்டோம். இடைவெளிகள் உருவாகிவிட்டது.

காதல் திருமணம் செய்தான். இரண்டு பிள்ளைகள் பிறந்தன. வழக்கறிஞர் தொழில் செய்தான். எல்லாம் நல்லவிதமாய் போய்க்கொண்டிருந்த பொழுது… அவன் மொத்த ஆளுமையையும் சிதைக்கும் குடியைத் தேர்ந்தெடுத்தான்.

ஒரு ஆண்டு விழாவில் ஆல் ரவுண்டராய் எல்லாவற்றிலும் கலந்துகொள்வான். அடுத்த ஆண்டு எதிலுமே கலந்துகொள்ளாமல் அமைதியாய் ஒதுங்கி நிற்பான். என்னவென்று கேட்டாலும், மவுனம் காப்பான். எல்லாவற்றிலும் ஆழம் தேடுபவன் குடியிலும் ஆழம் தேடி விழுந்துவிட்டான். அங்கு தொடங்கியது அவனின் வீழ்ச்சி. அதற்கு பிறகு அவனைப் பற்றி கேள்விப்படுகிற செய்திகள் வருத்தமாய் இருந்தன.

கடந்த மாதம் அண்ணன் மகனுக்கு திருமணம் என்ற பொழுது, சில நண்பர்களை அழைத்திருந்தேன். அண்ணன் மகன் போய் பத்திரிக்கை வைத்து அழைத்தான். நானும் உடல்நலம் விசாரித்து பேசினேன். அவன் உடலில் இருந்த பலவீனம் குரலில் தென்படவேயில்லை. பழைய ஆளாய் உற்சாகமாய் தான் பேசினான். திருமணத்திற்கு வருவதாய் தெரிவித்தான்.

கடந்த வாரத்தில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அரசு ராசாசி மருத்துவமனையில் அவன் உயிர் பிரிந்தது என்ற செய்தி கேட்ட பொழுது, பெரிய வருத்தம் எழுந்தது.

அவன் கீழிருந்து தன் முயற்சியில் எழுந்து வந்தவன். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டியவன். இன்னமும் சமூகத்திற்கு நன்றாக உழைத்திருக்க கூடியவன். ஒரு மனிதனிடமிருந்து நல்ல அம்சங்களை கற்றுக்கொள்வோம். அவனை வீழ்த்திய அம்சங்களில் கூட படிப்பினையாய் பெற்றுக்கொள்வோம்.

போய் வா நண்பா!
உனக்கு எங்களது அஞ்சலி!
இந்த மண்ணில் வாழும் வரை
உன் நினைவுகள் சூழ வாழ்ந்திருப்போம்!

பின்குறிப்பு : இனியனின் அழகான புகைப்படத்தை கொஞ்சம் மங்கலாக்கித்தான் தந்திருக்கிறேன்.

March 13, 2022

விஜி அம்மாவிற்கு அஞ்சலி!



கடந்த வாரம் மதுரையிலிருந்து தோழர் இராஜேந்திரன் தொலைபேசியில் அழைத்தார். திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியை நடத்திவரும் தோழர் தங்கராசு அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி உடல்நலமில்லாமல் கடந்த பொங்கலை ஒட்டி, இறந்த தகவலை சொன்ன பொழுது, அதிர்ந்து போனேன். அன்பானவர்கள், நம்முடைய பிரியத்துக்குரியமானவர்கள் எல்லோரும் பல ஆண்டுகள் வாழ்வார்கள் என அப்பாவியாய் நம்புகிறோம். ஆனால், காலம் கருணையற்றதாக இருக்கிறது. அப்படி அனுமதிப்பதில்லை.


திருப்பூரில் இருந்த அந்த ஒரு ஆண்டு நினைவுகள் மெலெழும்புகின்றன. ஆண்டுகள் பல கடந்ததால். திருப்பூர் நகரத்தின் நினைவுகள் என் நினைவில் இருந்து, மெல்ல மெல்ல மங்கிவருகின்றன. ஆனால், தாய்த்தமிழ் பள்ளியின் நினைவுகளும், அங்கு பழகிய மனிதர்கள் மட்டும் இன்னும் நினைவில் பசுமையாக இருக்கிறார்கள். விஜியம்மா இன்னும் பசுமையாக இருக்கிறார்.

1998ல் இளநிலை வணிகவியல் படித்துவிட்டு, மதுரையில் ஏதும் பொருத்தமான வேலை அமையாமல் வேலை தேடிக்கொண்டிருந்த காலம். வெளியூர் போகலாமா? தலைநகருக்கு போகலாமா? என யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, தோழர் இராஜேந்திரன் திருப்பூரில் தாய்த்தமிழ்ப் பள்ளி நடத்தி வரும் தோழர் தங்கராசு இருக்கிறார் என நம்பிக்கை தந்தார்.

தமிழகம் தழுவிய அளவில் ஆங்காங்கே தமிழ் மீதான பற்றால், தாய்த்தமிழ் பள்ளிகள் துவங்கப்பட்டு கொண்டிருந்த நேரம். திருப்பூரில் சிறப்பாக நடத்திவருகிறார்கள் என தோழர்கள் வழியாக கேள்விப்பட்டிருந்தேன். சுபயோகம், சுப தினம் என்றெல்லாம் எதுவும் பார்க்காமல், ஒரு விடிகாலையில் அங்கு போய் சேர்ந்தேன்.

தோழர் தங்கராசு, விஜி அம்மா, ஜீவா, தமிழினி என அளவான, அழகான குடும்பம். அந்த குடும்பத்தின் உறுப்பினராக என்னையும் ஒருவனாக எளிதில் ஏற்றுக்கொண்டார்கள். தோழர் தங்கராசு தொழிலாளியாக இருந்து, சிபிஐ அமைப்பில் தொழிற்சங்க செயற்பாட்டாளராக இருந்து தான் பிறகு தான் பள்ளி ஆரம்பித்தார் என கேள்விப்பட்டிருந்தேன்.

அந்த ஓராண்டில் அருகில் இருந்து பள்ளியை பார்த்ததில், தாய்த்தமிழ் பள்ளியை ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளியின் மீது அளவில்லா பற்றுக்கொண்டவர்கள், தமிழ் பற்றாளர்கள் என பலரும் அந்த பள்ளியை ஊர் கூடி தேர் இழுப்பது போல இழுத்து சென்றார்கள் என்றால், தங்கராசு குடும்பம் அதன் அச்சாணியாய் இருந்தார்கள் என்பேன். காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை பள்ளியை நடத்துவதிலும், அதன் வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதிலும், உழைப்பிலும் முதன்மையானவராய் இருந்தாலும், எல்லா ஆசிரியர்களும் சம்பளம் பெற்றுக்கொண்ட பிறகு தான் ஊதியமாய் பெற்றதை வைத்துத்தான் குடும்பத்தை நடத்தினார். அதே போல தான் விஜி அம்மாவும்! வீட்டில் தேவையான வேலைகளை எல்லாம் செய்துவிட்டு, பள்ளியில் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பணியையும் செய்து வந்தார்.

அந்த வீட்டில், அவர்களோடு வாழ்ந்ததால், உணவு, மருத்துவம் என அடிப்படைத் தேவைகளுக்கு கூட அந்த குடும்பத்தில் பற்றாக்குறை இருப்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. சில நூறு பிள்ளைகள் படிக்கும் பள்ளியை இயக்குவது என்பது எளிதான பணியல்ல! ஆனால், எடுத்துக்கொண்ட பணி பெரிது என்பதால், வறுமையை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். தமிழினி சிறியவள். அதே பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள். ஜீவா கல்லூரியில் நுழையும் பதின்ம வயதில் இருந்தான். ஒரு குடும்பத்து தலைவன் தான் கொண்ட கொள்கைக்காக கடினமான பாதையை தேர்ந்தெடுக்கலாம். குடும்பத்து உறுப்பினர்கள் அந்த வழியை ஏற்றுக்கொண்டார்கள் என்றால் அந்த மனிதன் தன் குடும்பத்தையும் அதன் வழியில் பண்படுத்தியிருக்கிறான் அல்லது அந்த குடும்ப உறுப்பினர்கள் பண்பட்டு இருக்கிறார்கள் என்று தான் புரிந்துகொள்கிறேன்.

தங்கராசு தோழர் ஆழ்கடலை போல அமைதியானவர். எல்லா துன்பங்களையும், நெருக்கடிகளையும் தனக்குள்ளேயே ஒளித்து வைத்துக்கொள்வார். தேவைக்கு மட்டும் பேசுவார். விஜி அம்மா அவருக்கு நேர் எதிர். கலகலப்பானவர். மதுரையில் தூக்கத்திலிருந்து எழுப்புவதை “உசுப்புவது” என்போம். அதை ஒருமுறை நான் சொன்னதும், விஜி அம்மா விழுந்து விழுந்து சிரித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. வெள்ளந்தியான மனுசிகளால் மட்டுமே அப்படி சிரிக்கமுடியும். திருப்பூர் வட்டார தமிழில், என் பெயரை வித்தியாசமாக அழைப்பது இன்னும் காதில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.

நான் அங்கிருந்த காலத்தில், பள்ளி கூரை கட்டிடமாக இருந்தது. அதன் பிறகு, கட்டிடத்திற்கு மாறியது. இப்பொழுதும் தோழர் தங்கராசு குடும்பம் பள்ளிக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டு உழைக்கிறார்கள். அப்பொழுது இருந்த நிதி பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளுடன் தான் பள்ளி இப்பொழுதும் பயணிக்கிறது என்பதை தோழர்கள் வழியாக கேள்விப்படுகிறேன். இவை எல்லாம் தங்கராசு தோழருக்கு இத்தனை ஆண்டுகளாய் நீடிப்பதால், வழக்கமான ஒன்றாக பழகி போயிருக்கலாம். ஆனால், விஜி அம்மா இவ்வளவு காலமும் அவருக்கு உறுதுணையாக இருந்துவந்திருக்கிறார். இப்பொழுது விஜி அம்மா இல்லை எனும் பொழுது, தோழர் தங்கராசு தோழருக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்பது திகைப்பாக இருக்கிறது.,

மாயக்கதைகளில் வருவது போல ஒரு பறவைக்குள் உயிரை ஒளித்து வைத்திருப்பதாக சொல்வார்கள்! அது போல பள்ளிக் கட்டிடத்தின் உறுதியில், பிள்ளைகளின் தமிழில், வளர்ச்சியில் விஜி அம்மாவின் உயிரும் கலந்திருக்கிறது. இன்றைக்கும் ஒரு பட்டாம்பூச்சியை போல அந்த பள்ளியைத் தான் சுற்றி வந்துகொண்டிருப்பார். நம்மை எல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருப்பார்.

அவரை இழந்து வாடும் தோழர் தங்கராசு குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

June 19, 2021

தோழர் ஜவஹர்


90களில் விகடன் குழுமத்தில் இருந்து வெளிவந்த ஜூனியர் போஸ்ட் எனக்கு ரெம்ப பிடிக்கும். நான் அட்டை டூ அட்டை விரைவாக படித்துவிட்டு, அரசால் இயக்கப்படும் பகுதி நூலகத்தில் வாசகர்கள் படிக்க தானமாக தந்துவிடுவேன். அடுத்த வாரம் அந்த இதழை மாற்ற போகும் பொழுது, படித்து படித்து கந்தலாய் மாறியிருக்கும். அதற்கு முக்கிய காரணம் அந்த காலத்தில் அதன் துணை ஆசிரியராய் இருந்த தோழர் ஜவஹர் தான்!


90களின் இறுதிகளில் அவர் மதுரை வந்த பொழுது, நண்பர்களுடன் நானும் அறிமுகமானேன். அக்கவுண்ட்ஸ் வேலை ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்தாலும், வேறு வேலைக்கு மாறலாமா என குழப்பத்தில் சுற்றிக்கொண்டிருந்த பொழுது, நான் எழுதிய இரண்டு கட்டுரைகளை படித்து பாராட்டி, ”சென்னைக்கு வாருங்கள்! பத்திரிக்கைகளில் முயற்சி செய்யலாம்” என உற்சாகப்படுத்தினார்.

கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு மேலாக சென்னையில் இருந்தேன். அந்த காலத்தில் ’தோழமை’ குடும்பத்தில் என்னையும் ஒரு ஆளாய் சேர்த்தார். திடீரென எனக்கு நிறைய சொந்தங்கள் கிடைத்துவிட்ட சந்தோசம். சென்னையில் பல பகுதிகளில் தோழர்கள் இருந்தார்கள். இராமசாமி, மஞ்சுளா, குட்டி பையன் இனியன், கிருஷ்ணவேணி, மணிவண்ணன் குடும்பம் என்ற தோழர்களின் பட்டியல் பெரியது. டார்வின், பாலு எல்லாம் பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களும் அவர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டார்கள். துவக்கத்தில் ஒரு நாள் தப்பித்தவறி வேறொரு நண்பரை சொல்லாமல் கொள்ளாமல், சென்னை காந்தி சிலை அருகே தோழமை சந்திப்புக்கு அழைத்துச் சென்றேன். எல்லோரையும் அப்படி சேர்த்துக்கொள்ளமுடியாது என தனியே அழைத்து விளக்கினார். என் மீதான அவர் அன்பு அன்று புரிந்தது.

இந்த எட்டு மாத காலமும், தோழருடன் நிறைய சுற்றமுடிந்தது. பத்திரிக்கையாளன் செய்யவெண்டும் என சில அடிப்படைகளை கற்றுத்தந்தார். அடிக்கடி தொலைபேசி செய்து, அதுவரை வாழ்ந்த வாழ்வில் அவருடைய வீட்டு தொலைபேசி எண் மட்டுமே எனக்கு மனப்பாடமாக இருந்தது. சின்னக்குத்தூசி அவர்களுடைய அறைக்கு வாரம் வாரம் வரும் பொழுது, என்னையும் வரச்சொல்வார். ஆஜராகிவிடுவேன். அவர் வீட்டில் பொருளாதாரம் அரசியல் என வகுப்பு நடந்தால், தவறாமல் கலந்துகொள்வேன். என்ன சந்தேகம் என்றாலும் அவரிடம் கேட்கமுடியும். அதைப் பற்றி தெளிவாக விளக்குவார்.

நான் பத்திரிக்க வேலைக்காக சென்னை வந்த சமயத்தில், பத்திரிக்கைகளில் வேலை செய்த பலருக்கும் வேலை போனது. ஆகையால் பத்திரிக்கையில் வேலை என்பது மிக சிரமமாக இருந்தது. உழைத்தால் தான் சாப்பாடு என்ற நிலை எனக்கு. தாக்குப்பிடிக்க முடியவில்லை. மீண்டும் ஊருக்கே சென்றுவிடலாம் என முடிவெடுத்தேன். மதுரையை சுத்தின ஆள் மதுரையை தான் சுத்துவான் என்று ஒரு பழமொழி உண்டு. அதில் எனக்கு பெரிய வருத்தமில்லை. தோழரை பிரிகிற வருத்தம் மட்டுமே பெரிதாக இருந்தது.

முகநூலில்... 29/05/2021

தோழர் ஜவஹருக்கு அஞ்சலி!


நேற்று காலையில் எழுந்து வாட்சப் பார்த்ததும், தோழர் ஜவஹர் இறந்த செய்தி நம்ப முடியாததாக இருந்தது. அந்த செய்தியை பிரமைப் பிடித்தது போல பார்த்துக்கொண்டே இருந்தேன். எந்த வேலையும் ஓடவில்லை. கொரானா நம்மை ஒன்றும் செய்தது என மக்கள் நம்புவது போல, கொரானா தன்னை எதுவும் செய்யாது என அவர் எங்களை நம்ப வைத்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ”எதுவும் அபாயகரமான அறிகுறிகள் இல்லை. வீட்டிற்கு மீண்டும் திரும்பி வந்துவிடுவேன்” என சொல்லியிருந்தார். நாங்கள் முழுதாய் நம்பினோம்.


முதல் அலையில் பூர்ணம் அம்மாளின் இழப்பு பேரிழப்பாக இருந்தது. இரண்டாவது அலையில் தோழர் ஜவஹரின் இழப்பு இன்னும் பேரிழப்பாக இருந்தது.

ஈபதிவு செய்து நானும் மகாவும் பெசண்ட் நகர் இடுகாட்டில் வேனில் இருந்த தோழரை பார்த்தப் பொழுது உணர்ச்சிப் பெருக்கில் கண்களில் கண்ணீர் நிறைத்தது. எப்பொழுதும் உற்சாகமாய் “என்னப்பு? எப்படி இருக்கீங்க?” அன்புடன் விசாரிக்கும் தோழர் அமைதியாக படுத்திருந்தார்.

தோழர்கள் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்கள். அஞ்சலி செலுத்தினார்கள். அவரை மின் தகனத்தில் வைப்பதற்கு உள்ளே எடுத்து செல்லும் பொழுது, அதைப் பார்க்கும் தைரியம் எனக்கில்லை. அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டோம்.

அங்கிருந்து கிளம்பிய பிறகு, தோழரைப் பற்றிய நினைவுகள் மெல்ல மெல்ல எழுகின்றன.

எழுதுவேன்….

October 25, 2020

இராஜலெட்சுமி அம்மாவுக்கு அஞ்சலி!

 


எனது இணையரின் அக்கா மாமியார் அவர். உறவுமுறையில் தான் மாமியார், அத்தை எல்லாம். அவரை அந்த குடும்பத்து மனிதர்கள் எல்லோரும் ஆத்தா என்று தான் அழைப்பார்கள்.

அவருக்கு நிறைய ஆண்பிள்ளைகள். சில பெண்பிள்ளைகள். அவர்களில் சில ஆசிரியர்கள், வங்கி மேலாளர், கன்சல்டன்ட் என தொழில்ரீதியில் இருந்தாலும், பழகும் மனிதர்களை மிகவும் மரியாதையுடனும், அன்புடனும் பழககூடியவர்கள்.
குடும்பத்தில் ஒருவிழா என்றால், அந்த குடும்பத்து மனிதர்கள் எல்லாம் ஒன்று கூடினாலே மண்டபம் நிறைந்துவிடும். அவ்வளவு சொந்தங்கள். உறவுகள்.
மகாவோட கணவர் என அண்ணி என்னை அவரிடம் அறிமுகப்படுத்திய பொழுது, என்னிடம் மிகவும் அக்கறையுடனும், அன்புடனும் பேசி "தூரத்து" சொந்தமாய் இருந்த என்னை மிகவும் நெருங்கிய சொந்தமாய் என்னை மாற்றிவிட்டார்.
அம்மாவுக்கு நல்ல நினைவாற்றல். சில மாதங்கள், ஒரு சில வருடங்கள் கழித்து, ஏதேனும் குடும்ப விழாவில் மீண்டும் பார்த்தால், அடையாளம் கண்டுகொண்டு, நாம் முதலில் பேசவேண்டும் என்றெல்லாம் நினைக்கவேமாட்டார். நம்மை அடையாளம் கண்டு, அவரே அழைத்து பேசுவார். அன்புடன் பேசி, இடைப்பட்ட அந்த காலத்தை காணாமல் போகசெய்துவிடுவார். அவருடைய வாரிசுகள், வாரிசுகளின் வாரிசுகள் எப்படி
அருமையாக
உறவு பேணுகிறார்கள் என்பது அம்மாவிடம் பேசிய பொழுது புரிந்தது.
சமீப காலங்களில் அம்மாவை குடும்ப விழாக்களில் காணமுடியவில்லை. விசாரித்தால், முதுமை காரணமாக நடக்க இயலவில்லை என்றார்கள். வருத்தமாகவும், கவலையாகவும் இருந்தது.
இன்று மாலை இராஜலெட்சுமி அம்மா காலமாகிவிட்டார் என செய்தி சொன்ன பொழுது, கலங்கித்தான் போனேன்.
நாங்கள் ஐந்து பிள்ளைகள். எங்கள் அம்மாவை எங்க சின்ன அக்கா மட்டும் ஆத்தா! என அழைப்பார். அம்மாவை விட, ஆத்தா இன்னும் நெருக்கமாக உணரமுடிகிறது.
அந்த பெரிய குடும்பம் இன்று ஆத்தா இல்லாமல் கலங்கி, அவரை இறுதியாய் காண எல்லா திசைகளில் இருந்தும் கும்பகோணம் விரைகிறார்கள். நானும் அவர்களோடு பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.
ஆத்தா தனது வாழ்நாளில் நிறைய வயர்பின்னல்கள் செய்து தனது சொந்தங்களுக்கும், உறவுகளுக்கும் செய்து தருவார்.
அப்படி எங்களுக்கும் ஒன்று செய்து தந்தார். ஆண்டுகள் பல கடந்தும் கடிதங்களையும், ரசீதுகளையும் சேகரித்து, எங்கள் வீட்டில் ஒன்றாய் இருந்துவருகிறது. இனி அது ஆத்தாவின் நினைவுகளை தந்துகொண்டே இருக்கும்.

அஞ்சலி!

 


ஜவஹர் தோழரின் இணையரும், முன்னாள் பேராசிரியருமான பூரணம் அம்மா இன்று காலையில் கொரோனா தொற்றால் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் இருக்கிறோம்.
****
அம்மா இறந்து விட்டார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக மூச்சுவிடுவது கடினமாகி இன்று காலையில் இறந்தார்.
கொரோனா இறப்பு எனவே உடலை நம்மிடம் தர மாட்டார்கள். மருத்துவமனையில் இருந்து அப்படியே கொண்டுசென்று அடக்கம் செய்யப் போகிறார்கள். அப்பா உடன் செல்கிறார். வெங்கடேஸ்வரா மருத்துவமனை நந்தனம்.