> குருத்து: விமர்சனப் பூர்வமான சிந்தனை – AI யை பயன்படுத்த ஏன் அவசியம்?

May 27, 2026

விமர்சனப் பூர்வமான சிந்தனை – AI யை பயன்படுத்த ஏன் அவசியம்?

 


AI வந்த பிறகு ஒரு சுவாரஸ்யமான மாற்றம் நடந்திருக்கிறது. முன்பு மக்களுக்கு தகவல் கிடைப்பது சிரமமாக இருந்தது. இப்போது தகவல் கிடைப்பது சுலபம்.

 

ஆனால்எந்த தகவல் சரி? எந்த தகவல் பயன்படும்? எந்த தகவல் நமக்கானது? என்பதுதான் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது.  இதுதான் “Critical Thinking” முக்கியமாகும் இடம்.

 

பலர் AI-யை கூகுள் போல பயன்படுத்துகிறார்கள். “ஒரு கடிதம் எழுது.” “ஒரு வணிக திட்டம் கொடு.” “GST பற்றி விளக்கு.” AI உடனே பதில் தரும்.படிக்க நல்லாகவும் இருக்கும். ஆங்கிலமும் அழகாக இருக்கும். பார்த்தவுடன்வாவ்!” என்று தோன்றும்.

 

ஆனால் கொஞ்சம் உள்ளே இறங்கி பார்த்தால் தான் தெரிய வரும்அது உண்மையில் உங்களுக்கான பதிலா? அல்லது உலகத்தில் யாருக்காவது பொருந்தக்கூடிய ஒரு பொதுப் பதிலா?

 

இதில்தான் சிந்தனை தேவைப்படுகிறது. ஒரு அனுபவமுள்ள வரி ஆலோசகர் என்ன செய்வார்? “GST பற்றி சொல்லுஎன்று கேட்க மாட்டார். அதற்கு பதில்,  “Composition Dealer. தமிழ்நாடு. Restaurant business. Online supply இருக்கிறது.  ITC restriction என்ன? Recent clarification ஏதும் உள்ளதா?” என்று குறிப்பாக கேட்பார்.

 

ஏன்? ஏனெனில், சரியான பதில் கிடைப்பதற்கு முன், சரியான கேள்வி கேட்கத் தெரிந்திருக்க வேண்டும். AI-யின் பெரிய பலமும் அதுதான்.
அதன் பெரிய ஆபத்தும் அதுதான்.

 

நீங்கள் தெளிவாக கேட்டால், அது அசத்தலான உதவியாளராக இருக்கும். நீங்கள் குழப்பமாக கேட்டால், அது நம்பிக்கையுடன் குழப்பமான பதில் தரும்.

 

இன்னும் ஒரு முக்கியமான விஷயம்… AI சில நேரங்களில் தெரியாத விஷயத்தைக்கூட தெரியுமென்று சொல்லிவிடும்.

 

வழக்கு சம்பந்தமாக இல்லாததை இருப்பது போல சொல்லும். நோட்டிபிகேசன் எண் தவறாக தரும். ரத்து செய்யப்பட்ட விதியைக்கூட தற்போதைய நடைமுறை போல எழுதிதந்துவிடும். படிக்கும்போது நம்ப வைக்கும். அதுதான் பிரச்சனை.

 

அதனால் தான் அனுபவமுள்ளவர்கள் AI-யிடம் இருந்து பதில் வாங்கிய பிறகும் மீண்டும் சிந்திக்கிறார்கள்.

 

இது தற்போதைய சட்ட நிலையா?” “இதற்கு வேறு விளக்கம் இருக்கிறதா?” “நடைமுறையில் அதிகாரிகள் இதை ஏற்கிறார்களா?”  என்று பார்க்கிறார்கள். அதுதான் மனிதனின் வேலை.

 

AI-க்கு உலக அறிவு இருக்கலாம். ஆனால் உங்கள் ஊரில் அதிகாரி எப்படி நடக்கிறார்  என்பது தெரியாது. உங்கள் வாடிக்கையாளர் மனநிலை தெரியாது. உங்கள் துறையின் நடைமுறை சிக்கல் தெரியாது.

 

அதனால் AI கொடுக்கும் பதில்வரைபடம்மாதிரி. ஆனால் பாதையில் வண்டி ஓட்ட வேண்டியது இன்னும் மனிதர்கள்தான்.

 

சுருக்கமாக சொன்னால்… AI பயன்படுத்த தெரிந்திருப்பது மட்டும் போதாது. சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  ஏனெனில், AI-யின் தரம் பல நேரங்களில் அதன் புத்திசாலித்தனத்தில் இல்லை. அதை பயன்படுத்தும் மனிதரின் சிந்தனையில்தான் இருக்கிறது.


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721



0 பின்னூட்டங்கள்: