> குருத்து: உறவு பேணுதல்

May 19, 2026

உறவு பேணுதல்

 


வழக்கமாய் தீபாவளி விடுமுறைக்கு மதுரைக்கு செல்வதுண்டு. நல்ல மழைக்காலம் என்பதால், பார்க்க திட்டமிடும் தோழர்களை பார்க்க முடியாமலே போய்விடுகிறது.

 

இலக்கியாவிற்கு கல்லூரி விடுமுறை காலம் என்பதால், மதுரைக்கு இந்த மாதம் போய் வரலாம் என கிளம்பினோம்.  ரயிலில் தட்கல் உதவியது.

 

நண்பன் வேலுவையும்,  விஜியையும் வீட்டுக்கு போய் பார்த்தோம்.  நம்முடைய காலத்திலேயே பிள்ளைகளின் இழப்பு என்பது எப்பொழுதுமே தாங்க முடியாதது. வேலு தேறிவிட்டார். விஜி தேறிவருகிறார். வேலைக்கு சென்றுவருவதும் நல்ல விசயம்.

 

மணிமேகலை அக்காவையும் போய் பார்த்தோம்.  அவருடைய இளைய மகனுடனும், சகோதரி அவர்களுடனும் இருக்கிறார். அக்காவும் தேறி வருகிறார். இளைய மகன் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவர் சென்னையில் வேலை செய்து வருவதாகவும், விரைவில் திருமணம் இருக்கும் என்றார். மகிழ்ச்சி. கொஞ்சம் முன் கூட்டி சொல்லிவிடுங்கள். நிச்சயம் கலந்துகொள்கிறேன் என்றேன்.

 

வழக்கறிஞர் இராஜேந்திரன் அவர்களுக்கு  ஒரு சின்ன விபத்தில் காலில் சின்ன முறிவு (Minor Crack).  ஆகையால் சில நாட்கள் வீட்டில் தான் ஓய்வில் இருக்கிறார்.  அவரைப் பார்த்து பேசி வந்தோம்.  அவருடைய மகள் மதிக்கு இன்னும் திருமணத்திற்கான முயற்சிகளில் இருக்கிறார்கள். நம்மால் ஆன உதவிகளை செய்வோம்.

 

இன்னும் இரண்டு நண்பர்களை அவர்களுடைய குடும்ப நிகழ்வுகளுக்காக பார்த்தோம்.   ஒரு நண்பருக்கு ஐம்பது வயதில் ஸ்ட்ரோக் வந்து, உடனடியாக மருத்துவம் பார்த்ததில், தப்பித்துவிட்டார்.  ஆனால் பேச்சு குழறுகிறது.   பிசியோதெரபி போய்க்கொண்டிருக்கிறார்.  என்ன பதட்டம் என்றால், மனைவி அரசு பள்ளி ஆசிரியர், மகனும் அதே பள்ளியில் படிக்கிறார். இருவரையும் காலை 7.30க்கு பேருந்துக்கு கொண்டு போய் விடுவதற்குள் அத்தனைப் பதட்டத்தை உண்டாக்கிவிடுகிறார்கள் என்றார்.  இது தவிர வீட்டை கட்டுவதற்கான வங்கி கடனுக்காக கொஞ்சம் வேலைகள் செய்தோம்.  நாட்கள் போதவில்லை.  இன்னும் சிலரை கூட சந்தித்திருக்கலாம். 

 

இப்படி மேலே நண்பர்களையும், தோழர்களையும் பார்க்க போன பொழுது, மகள் இலக்கியாவும் உடனிருந்தது முக்கியமானது. உறவுகளைப் பேணுவதில் நாம் கவனத்துடன் இருக்கவேண்டிய காலமிது. 

 

சொந்தங்களில் இன்னும் நீ என் வீட்டுக்கு வந்தயா? நான் உன் வீட்டுக்கு வருகிறேன்? என்ற வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.  நாம் மேம்பட்ட பண்பாட்டை வைத்திருக்கிறோம் என்பதை நாம் அடுத்த தலைமுறைக்கு நாம் அதை செய்து தான் பழக்க வேண்டியிருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: