> குருத்து: பிடித்த உணவகங்கள்
Showing posts with label பிடித்த உணவகங்கள். Show all posts
Showing posts with label பிடித்த உணவகங்கள். Show all posts

July 10, 2025

முகப்பேர் மேற்கு : அருமையான காலை உணவகம் - ராணி டிபன் சென்டர்


சென்னை மாதிரி பெருநகரங்களில், அவசரகதியில் வாழும் பொழுது, நமது வீட்டு சமையலறைகளைப் பொலவே அதன் நீட்டிப்பாய் அவசர காலங்களில், தேவையான பொழுது பகுதியில் உள்ள நல்ல உணவகங்கள் தான் நம்மை காக்கின்றன.


வீட்டு உணவு போல இருக்கவேண்டும். சுத்தமாக இருக்கவேண்டும். சுவையாக இருக்கவேண்டும். விலை நமக்கு கட்டுப்படியாகவும் இருக்கவேண்டும். இப்படி பல இருக்கவேண்டும். அப்படி பல உணவகங்கள் அமையாவிட்டாலும், சில உணவகங்களாவது அமைவது மிகவும் அவசியம்.


நாங்கள் வசிக்கும் முகப்பேர் மேற்கு பகுதியில் இயங்கும் இராணி டிபன் சென்டர் அப்படி ஒரு உணவகம். ராணியம்மாள் ஒரு முருக பக்தர். ஆகையால் எப்பொழுதும் முருக கடவுளின் பக்தி பாடல்கள் எப்பொழுதும் ஒலிக்கும்.


அம்மா, அப்பா, இளைஞரான மகன் கண்ணன் என மூவரும் நடத்திவருகிறார்கள். காலை ஏழு மணி துவங்கி… 11 மணி வரை நீளும். இட்லி, தோசை, வடை, பொங்கல், பூரி உண்டு.  சுடச்சுட தோசையும், பூரியும் கிடைக்கும். அதற்கு துணையாக, நல்ல சுவையான சாம்பாரும், இரண்டு வகையான சட்னியும், வடை கறியும், பூரிக்கிழங்கும் உண்டு.


வீடு போல கடை என சொல்லும் பொழுது, சுவையாக இருக்கக்கூடிய சில கடைகளில் வீட்டு களேபரங்கள் அங்கும் நிகழும். கண்டுகொள்ள மாட்டார்கள். ஒன்றுக்கு இரண்டுமுறை கேட்கவேண்டும்.  ஆனால் இந்தக் கடையில் மூவரும் நன்றாக வரவேற்பார்கள். நன்றாகவும் கவனித்துக்கொள்வார்கள்.



ஏற்கனவே கடையில் கூட்டம் அள்ளும். பிறகும், ஏன் எழுதுகிறேன் என்றால்… அங்கு சாப்பிட்ட சாப்பாடு தான் காரணம். வேறு என்னவாக இருக்கமுடியும். நல்ல உணவகங்களை இப்படி பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொள்வது அவசியம். அதனால் பகிர்கிறேன்.


இப்போதைக்கு காலை உணவு மட்டும். மதிய உணவு துவங்கவேண்டும் என அவர்களுக்கு விருப்பம் இருக்கிறது. விரைவில் துவங்குவதற்கும், அடுத்தடுத்து முன்னேறுவதற்கும் நாம் வாழ்த்துவோம்.


நன்றி.


- இரா. முனியசாமி


முகவரி :
ராணி டிபன் சென்டர்,
369C, விஜிபி நகர்,
பாரதி சாலை,
முகப்பேர், சென்னை – 600037.
தொலைபேசி 
8056731464
9600441255

October 28, 2022

சாப்பாடு


நேற்று நானும் நண்பரும் சென்னை அண்ணாநகரில் இருந்த சங்கீதா உணவகத்தில் சாப்பிட சென்றிருந்தோம். சங்கீதா சாப்பாடு என ரூ. 155 என இருந்தது. இருவரும் ஆர்டர் செய்தோம்.


எதிரே 40+ல் ஒருவர் அமர்ந்தார். அவரும் அதே சாப்பாடு ஆர்டர் தந்தார். 5 நிமிடத்தில் வந்து சேர்ந்தது. "நெய் கிடைக்குமா?" என்றார். அதற்கு கூடுதல் கட்டணம் ரூ. 25 என்றார்கள். "உடனே வேண்டாம்" என்றார். மனசுக்குள் நெய் இல்லையென்றால், சாப்பிட்ட திருப்தி கிடைக்காது என ஓடியிருக்கும் போல! இரண்டு நிமிடங்களில் "நெய் கொடுங்க‌! நிறைய கொண்டு வாங்க!" என்றார். "அளவு தான் சார்" அடக்கமாய் அவர்.

"கூடுதல் சாம்பார் கொடுங்க!" என வாங்கி நெய் ஊற்றிச் சாப்பிட்டுக் கொண்டே... தன்னை கடந்த பணியாளரிடம் "ஜெயின் சாப்பாடு இங்கு கிடைக்குமா?" என்றார். "இதுவே ஜெயின் சாப்பாடு தான்!" என்றார். சாப்பிட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு கொஞ்சம் குழப்பமாகிவிட்டது.

எதிரில் இருந்தவரிடம் "ஜெயின் சாப்பாடுன்னா என்ன சார்?" என சந்தேகம் கேட்டோம். “காரம் மிக குறைவாக இருக்கும். பூண்டு, வெங்காயம் பயன்படுத்தமாட்டார்கள்” என்றார்.

“அது இருந்தா ஏன் சார்?” என விடாமல் கேட்டோம். "அது ப்ராணத்திற்கு கெட்டது" என்றார்.

"ஜெயின் உணவில் பாசிட்டிவ், நியூட்ரல் நெகட்டிவ் உண்டு" என்றார். எங்களிடம் பேசிக்கொண்டே..."கூடுதலாக பாயாசம், அப்பளம் வேண்டும். அதற்கு கூடுதலாக சார்ஜ் செய்ய மாட்டீர்கள் தானே!" என கேட்டார்.

பணியாளர் இல்லை என்றார். பல உணவகங்களில் கொடுக்கப்படும் இனிப்பு கடனுக்காக கொடுப்பார்கள். கொடுத்ததையே சாப்பிட முடியாத பொழுது.. கூடுதலாக எங்கே கேட்க?" 🙂

ஆனால் அவர்கள் தந்த சேமியா பாயாசம் நல்ல சுவையுடன் இருந்தது. நாமும் கேட்கலாமா என யோசனை வந்தது. உள்ளிருந்து ஒரு குரல் வேண்டாம் எனவும் சொல்லிவிட்டது. மனச்சாட்சி சொன்னால் கேட்டுத்தானே ஆகவேண்டும்.

இப்படி அவரிடம் பேசிக்கொண்டு இருந்ததில் கொஞ்சம் நெருக்கம் ஆகிவிட்டோம். அவர் உரிமையாய்... "எனக்கு தொண்டை சரியில்லை. இந்த தயிரையும், மோரையும் எடுத்து கொள்கிறீர்களா?" என்றார்.

நான் எப்பொழுதும் தயிர் சாப்பிடுவதில்லை. சாப்பிட்டால் இரண்டு நாட்கள் தும்மல்
வந்து என் ப்ராணத்தை சிக்கலாக்கிவிடும். ஆகையால் என் தயிரை நண்பரிடம் ஒப்படைத்து இருந்தேன். அதை சுருங்க சொல்லி, வேண்டாம் என மறுத்தோம். கொடுத்த கெட்டித் தயிரை பயன்படுத்த முடியாத சோகம் அவர் கண்ணில் தெரிந்தது.

கூடுதலாக ரசம் அவர் கேட்டு கொண்டிருந்த பொழுது, நாங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டோம். பணியாளர் "கூடுதலாக சாப்பாடு வாங்கிக்கொள்ளலாம் சார்" என்றார் எங்களிடம்.

போதும் என சொல்லி இருவரும் எழுந்தோம். எதிரில் இருந்தவர் மனதில் குறித்துக்கொண்டிருப்பார். கொடுத்த காசுக்கு திருப்தியாக சாப்பிடுகிற மனுசனிடம் இதை சொல்வது நமது கடமை. "சார் கூடுதலாக சாப்பாடு தருகிறார்களாம்" என்றேன். மகிழ்ச்சியாக தலையாட்டினார்.

March 17, 2020

சரஸ்வதி மெஸ் (வீட்டு சாப்பாடு)

மதுரை மணத்துடன் காலையில் டிபன், மதியம் சாப்பாடு சாப்பிட வேண்டுமென்றால், சரஸ்வதி மெஸ்க்கு ஒருமுறை போய் சாப்பிட்டு பாருங்கள். நல்ல சாப்பாடு. கடை போர்டில் போட்டது போலவே வீட்டு சாப்பாடு போலவே நன்றாக இருக்கும். அந்த பக்கம் சில மாதங்களுக்கு ஒருமுறை போகும் பொழுதெல்லாம் சாப்பிட்டுவிடுவேன்.

சின்ன ஹோட்டல் தான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்தாலே, அதிகப்பட்சம் 8 பேர் தான் உட்கார்ந்து சாப்பிடமுடியும். எட்டுக்கு எட்டு அறையில் சாப்பாடு தயாராகிறது. இன்னொரு எட்டுக்கு எட்டு அறையில் பரிமாறுகிறார்கள். ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் தான் கடையை நடத்துகிறார்கள்.

மதியம் சாப்பாட்டுக்கு சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர் உண்டு. மீன் குழம்பும் உண்டு. ரூ. 60. கூடுதலாக‌ ஆம்லேட் மட்டும் கிடைக்கும்.

பல நாட்கள் இரவு அந்த பக்கம் வரும் பொழுதெல்லாம் கடையை பார்ப்பதுண்டு. கடை மூடியிருக்கும். பிறகு தான் தெரிந்தது. காலை, மதியம் மட்டும் தான் கடை!

கோயம்பேட்டிலிருந்து விருகம்பாக்கம் போக கோயம்பேட்டிலிருந்து பின்பக்கம் சின்மயா நகர் வழியாக ஒரு சாலை உண்டல்லவா! அந்த சாலையில் போனால், ஆற்காடு சாலையை தொடுவதற்கு முன்பே ஒரு மார்க்கெட் ஒன்று இருக்கும். அந்த முதன்மை சாலையிலேயே இருக்கிறது. கருமாரியம்மன் திரையரங்கு அருகே என்றும் சொல்லலாம்.

வாய்ப்பிருப்பவர்கள் போய் சாப்பிட்டு பாருங்கள்! மதுரை மணம் என்பது தான் பிரதானமானது! 

January 4, 2019

சூப்

தேநீர் கடைகள் தெருவிற்கு இரண்டு இருக்கின்றன. சூப், பருத்திப்பால் என மாற்றாக கிடைப்பது சிரமமாக தான் இருக்கின்றன.

மாலை வேளைகளில் அசைவ சூப் கூட சில கடைகளில், உணவகங்களில் கிடைத்துவிடுகின்றன. எனக்கு சில சமையல் பொருட்களில் ஒவ்வாமை இருப்பதால், அசைவ சூப் கடைகளில் குடிப்பதை நிறுத்திவிட்டேன்.

ஒருநாள் கோடம்பாக்கம் லிபர்டி பாலத்திலிருந்து, அம்பேத்கர் சிலைக்கு முன்பாக இடது பக்கம் வரும் வளைவில் ஒரு சூப் கடை இருக்கிறது.

வல்லாரை, மூலிகை, முருங்கை, வாழைத்தண்டு, காய்கறி என 10 வகை சூப்புகளில் தினம் மூன்று வகை என பட்டியலிட்டு விற்பனை செய்கிறார்கள். எனக்கு பிடித்தது மிர்த்தானியா.

சூப்புகளின் சுவை அருமை. உடன் சாப்பிட தரும் சிறு அரிசி முறுக்குகளும் தனிச்சுவை தான். மாலை நாளை நான்கு மணிக்கு மேல் கிடைக்கிறது. எப்பொழுதும் நான்கு, ஐந்து பேர் குடித்துக்கொண்டு இருப்பார்கள். சாண்ட்விச்சுகள் கூட கிடைக்கிறது. ஒருநாளும் நான் சாப்பிட்டதில்லை. இங்கு சூப் சாப்பிட்டால் எனக்கு ஒவ்வாமையும் ஏற்படுவதில்லை. ஒரு சூப்பின் விலை ரூ. 20.

ஒரு குடும்பாக கடையை நடத்தி வருகிறார்கள். ஒருநாள் போயிருந்த பொழுது, சூப் பரிமாறுகிறவரும் சூப் குடித்துக்கொண்டிருந்தார். கேசியர், சூப் ஊற்றித்தருகிறவர் என அந்த கடையில் இருப்பவர்கள் எல்லோரும் ஒருவித இறுக்கத்தோடு தான் இருக்கிறார்கள்.

எனக்கு என்ன பயம்னா அந்த பக்கம் போகும் பொழுதெல்லாம் சூப் அருந்துகிறேன். சூப் பாக்கெட்களிலும் விற்கிறார்கள். அதையும் வாங்கிப்போய் வீட்டில் குடிக்கிறோம். தொடர்ச்சியா இங்க சூப் குடிச்சா நாமளும் அவங்கள போல ஆகிவிடும்னு ஒரே சம்சயமாக இருக்கிறது.