நேற்று நானும் நண்பரும் சென்னை அண்ணாநகரில் இருந்த சங்கீதா உணவகத்தில் சாப்பிட சென்றிருந்தோம். சங்கீதா சாப்பாடு என ரூ. 155 என இருந்தது. இருவரும் ஆர்டர் செய்தோம்.
எதிரே 40+ல் ஒருவர் அமர்ந்தார். அவரும் அதே சாப்பாடு ஆர்டர் தந்தார். 5 நிமிடத்தில் வந்து சேர்ந்தது. "நெய் கிடைக்குமா?" என்றார். அதற்கு கூடுதல் கட்டணம் ரூ. 25 என்றார்கள். "உடனே வேண்டாம்" என்றார். மனசுக்குள் நெய் இல்லையென்றால், சாப்பிட்ட திருப்தி கிடைக்காது என ஓடியிருக்கும் போல! இரண்டு நிமிடங்களில் "நெய் கொடுங்க! நிறைய கொண்டு வாங்க!" என்றார். "அளவு தான் சார்" அடக்கமாய் அவர்.
"கூடுதல் சாம்பார் கொடுங்க!" என வாங்கி நெய் ஊற்றிச் சாப்பிட்டுக் கொண்டே... தன்னை கடந்த பணியாளரிடம் "ஜெயின் சாப்பாடு இங்கு கிடைக்குமா?" என்றார். "இதுவே ஜெயின் சாப்பாடு தான்!" என்றார். சாப்பிட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு கொஞ்சம் குழப்பமாகிவிட்டது.
எதிரில் இருந்தவரிடம் "ஜெயின் சாப்பாடுன்னா என்ன சார்?" என சந்தேகம் கேட்டோம். “காரம் மிக குறைவாக இருக்கும். பூண்டு, வெங்காயம் பயன்படுத்தமாட்டார்கள்” என்றார்.
“அது இருந்தா ஏன் சார்?” என விடாமல் கேட்டோம். "அது ப்ராணத்திற்கு கெட்டது" என்றார்.
"ஜெயின் உணவில் பாசிட்டிவ், நியூட்ரல் நெகட்டிவ் உண்டு" என்றார். எங்களிடம் பேசிக்கொண்டே..."கூடுதலாக பாயாசம், அப்பளம் வேண்டும். அதற்கு கூடுதலாக சார்ஜ் செய்ய மாட்டீர்கள் தானே!" என கேட்டார்.
பணியாளர் இல்லை என்றார். பல உணவகங்களில் கொடுக்கப்படும் இனிப்பு கடனுக்காக கொடுப்பார்கள். கொடுத்ததையே சாப்பிட முடியாத பொழுது.. கூடுதலாக எங்கே கேட்க?"
ஆனால் அவர்கள் தந்த சேமியா பாயாசம் நல்ல சுவையுடன் இருந்தது. நாமும் கேட்கலாமா என யோசனை வந்தது. உள்ளிருந்து ஒரு குரல் வேண்டாம் எனவும் சொல்லிவிட்டது. மனச்சாட்சி சொன்னால் கேட்டுத்தானே ஆகவேண்டும்.
இப்படி அவரிடம் பேசிக்கொண்டு இருந்ததில் கொஞ்சம் நெருக்கம் ஆகிவிட்டோம். அவர் உரிமையாய்... "எனக்கு தொண்டை சரியில்லை. இந்த தயிரையும், மோரையும் எடுத்து கொள்கிறீர்களா?" என்றார்.
நான் எப்பொழுதும் தயிர் சாப்பிடுவதில்லை. சாப்பிட்டால் இரண்டு நாட்கள் தும்மல்
வந்து என் ப்ராணத்தை சிக்கலாக்கிவிடும். ஆகையால் என் தயிரை நண்பரிடம் ஒப்படைத்து இருந்தேன். அதை சுருங்க சொல்லி, வேண்டாம் என மறுத்தோம். கொடுத்த கெட்டித் தயிரை பயன்படுத்த முடியாத சோகம் அவர் கண்ணில் தெரிந்தது.
கூடுதலாக ரசம் அவர் கேட்டு கொண்டிருந்த பொழுது, நாங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டோம். பணியாளர் "கூடுதலாக சாப்பாடு வாங்கிக்கொள்ளலாம் சார்" என்றார் எங்களிடம்.
போதும் என சொல்லி இருவரும் எழுந்தோம். எதிரில் இருந்தவர் மனதில் குறித்துக்கொண்டிருப்பார். கொடுத்த காசுக்கு திருப்தியாக சாப்பிடுகிற மனுசனிடம் இதை சொல்வது நமது கடமை. "சார் கூடுதலாக சாப்பாடு தருகிறார்களாம்" என்றேன். மகிழ்ச்சியாக தலையாட்டினார்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment