> குருத்து

April 2, 2022

Action Hero Biju - ஒரு காட்சி




பவித்ரன் : என் மனைவி என்னோடு பணிக்கு வரும் சனல் என்ற கூட்டாளியுடன் ஓடிப் போய் விட்டாள். அவள் போனதைக் கூட விட்டு விடலாம் என் மகளையும் அல்லவா கொண்டு போய் விட்டாள். என் மகள் இல்லாமல் என்னால் உறங்க முடிவதில்லை சார். அவளுக்கு ஐந்து வயசு. நான் என் மனைவிக்கு எந்தக் குறையும் வச்சதில்லை. அப்படி ஏதும் குறை இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.


போலீஸ் அதிகாரி பிஜு : உன் மனைவி சிந்து உன் மீது எந்தக் குறையும் சொல்லவில்லை ஆனால் உன்னோடு அவள் வாழத் தயாராகவில்லையாம். உன் நண்பனையே அவள் பெரிதும் நேசிக்கிறாள்.

பவித்ரன் : அவள் விருப்பம் அதுவாக இருந்தால் அவள் அவனோடே போகலாம், ஆனால் என் மகள் எனக்கு வேணும்

சிந்து : (போலீஸ் அதிகாரியை நோக்கி) அது சரி வராது சார்

பவித்ரன் : சிந்து ! நீ அவனோடு போவதென்றால் தாராளமாகப் போ ஆனால் என் மகள் எனக்கு வேணும் அவளுக்காக நான் எந்த எல்லை வரை போவேன் என்று எச்சரிக்கிறேன் உன்னை

போலீஸ் அதிகாரி பிஜு :.இங்கே இந்த மாதிரி வாய்ச்சவடால் வேண்டாம் பவித்ரன். நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன். திங்கள் முதல் வெள்ளி வரை தாய் சிந்துவுடனும் சனி, ஞாயிறு தந்தை பவித்ரனுடனும் மகள் இருக்கட்டும்.

பவித்ரன் : எனக்கு அதில் சம்மதம் சார்

சிந்து : அது சரிப்பட்டு வராது சார்

போலீஸ் அதிகாரி பிஜு : என்னைக் கடுமையான ஆள் ஆக்க வேண்டாம் நான் சொன்ன தீர்மானம் பிரகாரம் தான் இது நடக்கணும்

சிந்து : இல்லை சார் என் மகளை விட்டு நான் பிரிய மாட்டேன். பவித்ரன் தன்னுடைய மகளாக எண்ணிக் கொண்டிருக்கும் அவள் அவரின் மகள் அல்ல. சனல் தான் அவளின் உண்மையான தந்தை.

சரி இந்த உரையாடலைப் படித்து விட்டு அப்படியே போய் இங்கே கொடுத்திருக்கும் காணொளியில் 4:59 வது நிமிடத்தைப் பாருங்கள். வெடித்து அழ வேண்டும் போலிருக்கும். அப்படியொரு மனதைக் குதறிப் போடும் காட்சி.
பிள்ளைப் பாசத்தால் ஏங்கும் பவித்ரன் என்ற பாத்திரத்தில் சுராஜ் தோன்றும் காட்சியைப் படம் பார்த்த நாள் முதல் ஏதோ என் உடம்பின் ஒரு செல்லில் ஒட்டியது போல இப்போது அந்தக் காட்சியை நினைத்தாலும் வலிக்கும், நெஞ்செரியும்.

தன் பிள்ளை போன ஆற்றாமை, சரி வாரத்தில் இரண்டு நாளாவது காணப் போகிறோமே என்ற எதிர்பார்ப்பு, அது கை கூடாத சூழலில் எழும் சினம், தன் மகள் தன் மகளல்ல என்று கேட்கும் கணம் உடைந்து விசும்பி விசும்பிக் கரைந்து அந்தப் பிள்ளையை உச்சி மோந்து பரிதவித்து அழுகை, எல்லாமே சூனியமாகிப் போய் விட்ட நிலையில் நடை தளர்ந்து தலையைச் சொறிந்து கொண்டே போகும் அந்தத் தொய்வு

இப்போது சொல்லுங்கள் இதை விட எந்த மாதிரியானதொரு காட்சி இவ்வளவு தூரம் மனதைத் தைக்கும்? இன்னொருவனுடைய அந்த வாழ்வியலின் தோல்வியை நம் தலையில் ஏற்றக் கூடிய இம்மாதிரியான படைப்பைத் தாண்டி எது நிற்கும்?
இந்தா இனிமேல் என் மகள் எமக்குச் சொந்தமானவள் இல்லை என்று தன் ஆயுள் முழுக்கக் கொடுக்க இருக்கும் முத்தங்களைக் கொட்டித் தீர்ப்பானே அப்போது கூடவா அழுகை வரவில்லை?
இந்தக் காட்சி அனுபவத்தை மீளவும் தரிசித்து எழுதுவதற்காக Action Hero Biju படத்தைப் பார்த்தேன். உடம்பை யாரோ அடித்துப் போட்டது போன்று துவண்டு விட்டேன் அப்பேர்ப்பட்டதொரு நடிப்பு சுராஜிடமிருந்து. இதை நடிப்பு என்று எழுதவே மனம் கூசுகின்றது. எழுதும் போதே தளர்ந்து போனேன். அவ்வளவுக்கு ஒரு வலிமையான வலியெழுப்பும் காட்சி இது.
ஒரு வெற்றிகரமான நகைச்சுவை நடிகனால் பின்னர் எப்பேர்ப்பட்ட சாகித்தியங்களையும் காட்ட முடியும் என்பதற்கு நம்மூர் நாகேஷ், வடிவேலு காலம் போல் மலையாளச் சலனச் சித்திர உலகில் எத்தனையோ ஆளுமைகள். அதில் சுராஜ் இந்த மாதிரி ஒரு தேசிய “விருந்தைக்” கொடுத்து விட்டார்.
படப்படிப்பு live recording முறையில் ஒரு படப்படிப்புத் தளத்தில் பதிவு பண்ணப்பட்டது. இந்தக் காட்சியை நடித்து முடித்த சுராஜ் என்னடா யாரும் பேசாமல் இருக்கிறார்களே என்று தனக்குள் கேள்வியெழுப்ப, பிறகு தான் தெரிந்தது. எல்லோரும் உறைந்து போய் சில நிமிடம் இருந்து பின் கரகோஷம் எழுப்பினார்களாம்.
Action Hero Biju சின்னச் சின்னக் குறும் படம் போலக் காவல்துறையில் சட்டம், ஒழுங்கு சம்பந்தப்பட்ட சிக்கல்களைக் கதைகளாகக் கொண்டது. இதை விட நல்ல படங்கள் உண்டு என்றாலும் இந்தக் காட்சி ஒன்றே போதும் கொண்டாட!

கானா பிரபா
22.08.2019


பெட்ரோல், டீசல், எரிவாயு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு – பிஜேபியின் தேர்தல் பரிசு!



பாஜக அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய அரசு கார்ப்பரேட்டுகளை செல்லப்பிள்ளைகளாகவும், பெரும்பான்மை மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் நடத்துகின்றன.

****
ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து சுங்கச்சாவடிகளில் வரிகளை அதிகரிப்பதாக அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள். சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தான் விலையை தீர்மானிக்கிறார்கள். ஒன்றிய அரசுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு, விலை நிர்ணயம் செய்வதில் சம்பந்தமில்லை என்ற பொய்யை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், மாநில தேர்தலோ, ஒன்றிய தேர்தலோ நடக்கும் பொழுதெல்லாம், ஒரே விலையிலேயே விலை நொண்டியடிக்கிறது. ரசியா உக்ரைன் போர் காலத்தில் சர்வதேச அளவில் கச்சா பேரல் விலை ஏறிய பொழுது கூட விலையை அதிகப்படுத்தவில்லை. தேர்தல் முடிந்ததும், இதோ விலையை உயர்த்த துவங்கிவிட்டார்கள்.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் இன்றைய விலை 107.43. இந்தியாவில் அதிகப்பட்ச விலை மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு பகுதியில் ரூ. 119 விற்கிறார்கள். ரூ. 150க்கு கொண்டுவராமல் ஓயமாட்டார்கள் போலிருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையின் உயர்வால் விலைவாசி ஏறிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. இப்பொழுது இன்னும் அதிகப்படுத்திக்கொண்டே செல்கிறார்கள். இப்பொழுது சுங்கச்சாவடி கட்டணங்களையும் அதிகப்படுத்தப்படுவதால், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்னும் ஏறுவதற்கு ஒன்றிய அரசு வழிவகுத்திருக்கிறது. கடந்த ஐந்து மாநில தேர்தல்களில் நான்கில் ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்திருப்பதற்கு மக்களுக்கு ”பரிசாக” கொடுத்திருக்கிறார்கள்.

சுங்கச்சாவடிகளில் கொள்ளை

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறன. தனிநபர்கள் ஓட்டும் பைக்குகளைத் தவிர அனைத்து வண்டிகளுக்களுக்கும் அந்த சாலை வழியாக செல்லும் பொழுதெல்லாம், வரியாக பணம் செலுத்துகிறார்கள். சுங்கச்சாவடிகள் அரசுக்கு பணமழை கொட்டும் மையங்களாக இருக்கின்றன.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 26 சுங்கச் சாவடிகளிலும் மற்றவற்றில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். இதன்படி, ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து ரூ. 5 லிருந்து அதிகப்பட்சம் ரூ. 120 வரை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

தேசிய நெடுஞ்சாலையை போடுகிறோம். பராமரிக்கிறோம் என்று தான் வரியாக வாங்குகிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளை சரியாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை பல தரப்பு சங்கங்களும் தொடர்ச்சியாக புகார் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஒன்றிய அரசிடம் சுங்கவரி அதிகமாக இருக்கிறது என முறையிடும் பொழுதெல்லாம், நல்ல சாலை வேண்டுமென்றால், வரிகளை கட்டித்தான் ஆகவேண்டும் என எகத்தாளமாக பதில் சொல்கிறது. அதே போல சுங்கச்சாவடிகளில் நிறைய நேரம் காத்திருக்கவேண்டியிருக்கிறது. நேரடியாக பணம் வாங்குவதால், சுங்கச்சாவடிகள் ஊழல் செய்கிறார்கள். ஆகையால் ”ஒரே கல்லில் இரண்டு மாங்கா” என வரி செலுத்துவதை “Fast Tag” இணைய வழியில் செலுத்தும் முறையை கொண்டு வந்தார்கள். முன்பு பணமாய் செலுத்தியதற்கும், இணைய வழியில் செலுத்துவதற்குமான வசூல் இடைவெளி பல மடங்கு என ஆர்.டி.ஐ. வழியில் கேள்விகளுக்கு கொடுத்த பதில்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

கோடிகளில் கொட்டும் சுங்க சாவடி மையங்களை பல ரோடு காண்ட்ராக்ட் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு சாதகமாக பயன்படுத்தி கிடைக்கும் இடங்களில் எல்லாம் சுங்கசாவடி மையங்களை உருவாக்கி மக்களிடம் வசூல் செய்கிறார்கள் என மாநிலங்களைவியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒன்றிய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி “சட்டத்திற்கு புறம்பாக சுங்க சாவடி மையங்கள் அமைத்து வசூல் செய்வது தவறு. அரசு சுங்க சாவடி மையங்களிடம் இருந்து வரி வாங்கும் ஒரே காரணத்திற்காக மக்கள் அவதிப்பட வேண்டிய அவசியமில்லை. 60 கிமீ தொலைவிற்கு குறைவாக உள்ள சுங்க சாவடிகள் மூன்று மாதத்திற்குள் மூடப்படும்” என பதிலளித்தார். இது தான் இவர்களின் லட்சணம். ஒரு விதிமுறை உருவாக்கி, அதன்படி நடக்கிறதா என கண்காணிப்பது தான் அரசுக்கு வேலை. அந்த வேலையை செய்வதற்கு தானே மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இதில் நடவடிக்கை எடுப்பதற்கு எதற்கு 90 நாட்கள்?

கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைப்பு : பெரும்பாலான மக்கள் மீது வரிகளுக்கு மேல் வரி

ஒருநாட்டிற்கு வரி தான் எல்லாமும்! வரியை வைத்துக்கொண்டு தான் எல்லா திட்டங்களையும் அமுல்படுத்துகிறது. வரிகளைப் பொறுத்தவரை வருமானத்திற்கு ஏற்றவாறு வசூலிப்பது வருமான வரி என்பது நேரடி வரியை சார்ந்தவை. பெட்ரோல், டீசல், சுங்கச்சாவடி எல்லாம் மறைமுக வரி. மக்கள் மீது அக்கறை கொண்ட அரசென்றால், நேரடி வரியை அதிகப்படுத்தி, மறைமுக வரியை குறைத்து வசூலிக்கும்.

பாஜக அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய அரசு கார்ப்பரேட்டுகளை செல்லப்பிள்ளைகளாகவும், பெரும்பான்மை மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் நடத்துகின்றன. ஒரு இந்திய குடிமகன் பத்து லட்சத்திற்கு மேலாக நம் நாட்டில் லாபம் சம்பாதித்தால், ரூ.100க்கு ரூ. 30 வரியாக செலுத்தவேண்டும். அதுவே கார்ப்பரேட்டாக இருந்தால் ரூ. 25 செலுத்தினால் போதுமானது. இப்பொழுது போடப்பட்ட பட்ஜெட்டில் கார்ப்பரேட்டுகளுக்கு போடப்பட்டிருந்த உப (Surcharge) வரி 12%த்தையும் 5% குறைத்து 7%யாக குறைத்திருக்கிறது.

கொரானா முதல் அலை, இரண்டாம் அலைகளில் தொடர்ச்சியான ஊரடங்கினால் சிறுக சிறுக சேமித்த அத்தனை சேமிப்புகளையும் தொலைத்து நிற்கும் இந்த நெருக்கடியான காலத்திலும், எரிகிற வீட்டில் கிடைத்த வரை லாபம் என பாஜக மோடி அரசு கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறது. “இந்துக்கள், இந்துக்கள்” என பேசிப் பேசி, ஆட்சிக்க்கு வந்த பிஜேபிக்காரர்கள் பெரும்பான்மை ”இந்துக்கள்” மீது எந்தவித கவலையும் இல்லாமல், விலையை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள். இந்த உண்மையை அவர்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும்.

இன்று காலையில் சென்னை அண்ணா ஆர்ச் அருகே ஒரு ஷேர் ஆட்டோ ஓட்டுநர் வழக்கமாக வாங்கும் ரூ15 லிருந்து டீசல் விலை உயர்வால், ரூ. 5 உயர்த்தி ரூ. 20யாக கேட்டிருக்கிறார். இதைச் சொல்லித்தான் கேட்டிருக்கிறார். ஆனால் அந்த பெண் அதெப்படி கூட்டிக்கேட்கலாம் என கடும் கோபத்துடன் பேசிக்கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் சமாதானம் சொல்லி அனுப்பினோம்.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோல் டீசலில் அடித்த கொள்ளை மட்டும் 21 லட்சம் கோடிகள் என்கின்றன பத்திரிக்கைகள். கார்ப்பரேட்டுகளும், மோடி அரசும் இணைந்து தேசத்தை கூட்டுக்கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களிடம் சண்டை போடாமல், அறியாமையால் நமக்குள் நாமே சண்டை போட்டுக்கொள்கிறோம்.

April 1, 2022

வீட்ல விசேஷங்க (1994)


கடற்கரையில் மயங்கி கிடக்கிறாள் இளம்பெண்ணான நாயகி. அவளை ஒரு மருத்துவமனையில் சேர்க்கிறார் நாயகன். ஒருவழியாக நினைவு திரும்பும் பொழுது, அவளுக்கு தன்னைப் பற்றிய பழைய நினைவுகள் சுத்தமாக மறந்துபோயிருக்கின்றன. பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்கிறார்கள். யாரும் வரவில்லை.
 
நாயகன் தன் துணைவியாரை இழந்து, கைக்குழந்தையுடன் இருக்கிறார். அந்த தனியார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நாயகன் தனக்கு செய்த பெரிய உதவியை மனதில் வைத்து, நாயகியிடம் இவர் தான் உன் கணவர் என கொண்டு போய் நிற்க வைக்கிறார்.
 
அந்த பெண்ணும் அவருடன் வீட்டுக்கு போகிறார். அந்த பெண் மெல்ல மெல்ல நாயகனுடன், அவன் குழந்தையுடன் பழகுகிறார். சில பல கலாட்டாக்களுக்கு பிறகு, அவளின் கணவன் இல்லை என தெரிந்த பிறகு, நாயகனையே திருமணம் செய்ய முடிவெடுக்கும் பொழுது, நாயகியை உயிருக்கு உயிராய் காதலித்த காதலன் வந்து முன்வந்து நிற்கிறார். பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
 
****
 
படம் வந்து வெற்றி பெற்று, அனில்கபூர், ஸ்ரீதேவி, நாகர்ஜூன் நடிக்க இந்தியிலும் பாக்யராஜே எடுத்து வெற்றி பெற்றிருக்கிறது. கன்னடத்திலும் எடுத்திருக்கிறார்கள்.
 
என்னைப் பொறுத்தவரையில் பாக்யராஜ் படங்களில் இது ஒரு சுமாரான படம் .தான். நடைமுறைக்கு இல்லாத கொஞ்சம் கற்பனையான கதை தான். காசு இல்லாமல் தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பார்களா? அந்த மருத்துவமனை பார்க்கிறது. எதையும் சட்ட ரீதியாக செய்யாமல், தன் மனப்போக்குக்கு செய்கிற தலைமை மருத்துவர். இதுவும் சாத்தியமில்லாத கற்பனை மருத்துவர். நாயகனின் அம்மா, அப்பா இருந்தால் அவர்களின் வழியே உண்மை வந்துவிடும் என்பதால், அனாதை என்று சொல்லிவிடுகிறார். அக்கம் பக்கத்து வீட்டார்கள் இருந்தால் அவர்களின் வழியே உண்மை வந்துவிடும் என்பதால், தனியே வீடு பார்த்து, வைத்துவிட்டார்.
 
நாயகனுக்கும், நாயகிக்கும் நெருக்கம் உண்டாவதற்கான காட்சிகள் மிகவும் குறைவு. அதனால் அவர்கள் சேர்ந்தே ஆகவேண்டும் என்கிற உணர்வு பார்வையாளனுக்கு வரவேண்டும். அந்த பகுதி கொஞ்சம் பலவீனம் தான்.
பிறகு கேரள சேச்சிகளை இப்படி மோசமாக காட்டியதற்கு கண்டிப்பாக கண்டனம் தெரிவிக்கவேண்டும். இந்தியில் இதை மாற்றியிருக்கிறார்கள். கன்னடத்தில் சேச்சிகளாகவே காண்பித்திருக்கிறார்கள்.
 
கதை குன்னூரில் நடக்கிறது. இவர் கடற்கரையிலிருந்து 9 கிமீ தூரம் தூக்கி வந்து அந்த மருத்துவமனையில் சேர்த்ததாக வசனத்தில் சொல்வார்கள். குன்னூரில் இருந்து குறைந்தது 100 கிமீக்கு பக்கத்தில் கடற்கரையே இல்லை. மலையிலிருந்து குதித்தால் செத்துப்போய்விடுவார்கள் அல்லது போலீசு தான் தூக்கும் என்பதால் இப்படி யோசித்து இருக்கிறார்கள்.
 
இந்த குறைகளை எல்லாம், பாக்யராஜ் தனது திரைக்கதையாலும், நகைச்சுவையாலும் மறைத்து இருப்பது தான் அவருடைய திறமை. அவருடைய திரைப்படத்தில் வழக்கமாய் வருகிற ஆட்களோடு, ஜனகராஜ், நாயகி பிரகதி என பலரும் வருகிறார்கள். இளையராஜா இசைத்திருக்கிறார். அதனால் சில நல்ல பாடல்களும் உண்டு.
 
யூடியூப்பில் இலவசமாக பார்க்க கிடைக்கிறது. நகைச்சுவை விரும்பிகள் பாருங்கள்.