> குருத்து: ஒன்றிய அரசு
Showing posts with label ஒன்றிய அரசு. Show all posts
Showing posts with label ஒன்றிய அரசு. Show all posts

April 14, 2024

தோசை பிரியரும், விபத்தும்!


சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு அம்மா, தோசை குறித்த ஒரு தலைப்பில் விவாதிக்கும் பொழுது தன் மகன் 25 தோசைகளுக்கு மேல் விரும்பி சாப்பிடுவான் என மகிழ்ச்சியாய் பகிர்ந்துகொண்டார். அந்த பையனை அந்த சமயத்தில் இணையத்தில் ட்ரோல் செய்து இருக்கிறார்கள்.


கடந்த வாரம் அந்த பையன் தாம்பரம் மின்சார ரயில் பாதையை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டான். டிரோல் செய்த கண்ணேறு பிரச்சனையால் தான் இப்படி அல்ப ஆயுசில் செத்துப்போய்விட்டான் என சிலர் இரக்கப் பதிவுகள் எழுதியிருக்கிறார்கள். அதை விமர்சித்தும் ஆங்காங்கே பதிவுகளை பார்க்க
முடிந்தது.

சென்னை வந்த புதிதில் இப்படி ரயில்வே பாதைகளை கடந்து செல்பவர்களைப் பார்த்து பதைப்பதைத்து பார்த்திருக்கிறேன்.

என் துணைவியாரின் சொந்தக்கார பெண் குரோம்பேட்டையில் தன் தோழியுடன் ரயில் பாதையைக் கடக்கும் பொழுது திடீரென ரயில் வர… மோதியதில் உடன் வந்த தோழி பலியாக...சொந்தக்காரப் பெண் தன்னுடைய காலை முழுவதும் இழந்தார்.


அதற்கு பிறகு செய்திகளை கூர்ந்து கவனிக்கும் பொழுது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பத்திரிக்கையில் ஒரு குட்டி செய்தியாக மூலையில் வரும். இவ்வளவு நபர்கள் ரயில் பாதையை கடக்கும் பொழுது இறந்துவிட்டார்கள். அதில் அடையாளம் காணப்பட்டவர்கள் இத்தனைப் பேர். காணப்படாதவர்கள் இத்தனைப் பேர் என்ற கூடுதல் குறிப்புகளும் தருவார்கள்.

இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை அநேகமாக 90லிருந்து 100 பேர்வரைஎன பலமுறை பார்த்திருக்கிறேன். இதெல்லாம் தலைநகர், அதை ஒட்டிய பகுதிகளில் மட்டும் தான்! ஆக ஒரு நாளைக்கு ஒரு நபர் என்ற அளவில் இறக்கிறார்கள் என கணக்கு வைக்கலாம்.

இதெல்லாம் ட்ரோல், விதி, கர்மா என கடந்து போய்விட முடியுமா! சென்னை என்பது இரவும் பகலும் உற்பத்தியில் ஈடுபடுகிற தூங்காத் தலைநகரம். இதில் மக்கள் பாதுகாப்பாக ரயில் பாதைகளைக் கடக்கும் வழிகளை இத்தனை ஆண்டுகளில் உருவாக்கியிருக்க வேண்டுமா இல்லையா! அதை ரயில்வே நிர்வாகம் செய்ய தவறியிருக்கிறது.

ஒரு ரயில்வே பாதையை கடப்பதற்கு ஒரு பாலம் கட்டுகிறார்கள். அது 100 படிகள் வைத்து கட்டுகிறார்கள். லிப்ட் கிடையாது. நகரும் படிக்கட்டுகள் இருப்பதில்லை. இதை எப்படி வயதானவர்கள், குழந்தைகள் கடப்பார்கள் என்ற அக்கறையே இல்லை. கடமைக்கு பாலத்தைக் கட்டி கணக்கு காட்டுகிறார்கள். சுத்திப் போவதை விட கொஞ்சம் கவனத்துடன் கடந்துவிடலாம் என கடக்கிறார்கள். விபத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்.

ரயில்வேயில் ஒரு காலகட்டம் வரை சேவை என்கிற மனப்பான்மை இருந்தது. இப்பொழுது எப்படி கல்லாக் கட்டலாம் என லாப வெறி கொண்ட முதலாளித்துவ நிறுவனம் போல மாறிவிட்டது. அதனை பல்வேறு உதாரணங்கள் உண்டு.


முன்பாவது நிலைமை பரவாயில்லை. இப்பொழுது செல்போன்களினால் கவனச்சிதறல் அதிகம் இருக்கிற காலம். ஆக, இன்னும் கவனத்துடன் வசதிகளை செய்து தந்து மனித உயிரிழப்புகளை காக்கவேண்டும். ஆனால் செய்வதில்லை.

ரயில்வேயில் வேலை செய்கிற கார்டுகளுக்கு (Guard) ஒரு தொழிற்சங்கம் உண்டு. அதன் தொழிற்சங்கத் தலைவர் “இப்படி தொடர்ச்சியான விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுப்பதற்கு நிறைய பரிந்துரைகளை கொடுத்திருக்கிறோம். ஆனால், ரயில்வே நிர்வாகம் இதை கண்டுகொள்வதில்லை. ஏதாவது பெரிய இழப்பு ஏற்பட்ட பிறகு தான் ஒவ்வொன்றாக கணக்கில் கொள்கிறார்கள்” என வருத்தப்பட்டு சொன்னார்.
ஆக நாம் விவாதிக்க வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தையும், அதைக் கட்டுப்படுத்துகிற இந்த ஒ ன் றி ய ஆட்சியையும் தான்!
அதைவிட்டுவிட்டு கண்ணேறு, கர்மா, விதி என விவாதித்துக்கொண்டிருந்தால், என்றைக்கும் இந்தப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. மனித உயிரிழப்புகளும் நிற்கப்போவதில்லை!

June 7, 2023

மின்சார கட்டண உயர்வு : ஆண்டுக்கு ஒருமுறை இனி ஷாக் கொடுக்க போகிறார்கள்!


மின்சார வாரியம் ஏகப்பட்ட கடனில் இருக்கிறது. (ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி). கடந்த எட்டு ஆண்டுகளாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தவே இல்லை. ஆகையால், உயர்த்துகிறோம் என கடந்த ஆண்டு உயர்த்தினார்கள்.


ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, கல்வி கட்டண உயர்வு என பல திசைகளிலிருந்தும் தாக்குதல்களை எதிர்கொண்டு திணறிக்கொண்டிருந்த மக்கள், மின்சார கணக்கீட்டை மாதம் இருமுறை கணக்கு எடுப்பதால், ஏகப்பட்ட கட்டணம் வருகிறது. மாதம் மாதம் எடுங்கள் என மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கும் பொழுது தான் இந்த விலை உயர்வையும் அறிவித்து, அதிர்ச்சி தந்தார்கள்.

இப்படி மின்சார கட்டணத்தை உயர்த்தியும், அவர்களுக்கு பெருமளவு வருமானம் வரவில்லையாம். ஆகையால் மின்சார ஒழுங்குமுறை வாரியம் ஆண்டுக்கு ஒருமுறை நுகர்வோர் விலைக் குறியீடு உயர்வின் அடிப்படையில் ஏற்றிக்கொள்ளலாம் என கடந்த ஆண்டே அனுமதி அளித்துவிட்டது. மக்களின் கூலி என்பது வருடம் வருடம் உயர்வதில்லை. ஆனால், ஒருங்குமுறை ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் மக்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அக்கறையும், புரிதலும் இல்லாமல் அறிவித்தார்கள். ”உனக்கென்னப்பா! பைத்தியம். எது வேணா சொல்லுவ!” வசனம் தான் நினைவுக்கு வந்தது.

இப்படித்தான் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கலாம் என ஒன்றிய அரசு மாற்றினார்கள். ஒரு லிட்டர் எண்பது ரூபாய்க்கு இருந்த பெட்ரோலை 103 ரூபாய் வரை விலை ஏற்றி ஒன்றிய அரசும், கார்ப்பரேட்டுகளும் கூட்டுக்கொள்ளையடிக்கிறார்கள். ஆனால் விலை குறையும் பொழுது, கவனமாய் குறைக்க மறந்து போகிறார்கள்.

ஒன்றிய அரசு சுங்கவரி கட்டணத்தை இப்படி ஒரு உத்தரவுக்கு பிறகு தான், ஆண்டுக்கு இருமுறை உயர்த்திக்கொண்டே போகிறார்கள். அதனால், எல்லா போக்குவரத்து கட்டணமும் உயர்ந்து, விலைவாசியும் எகிறிக்கொண்டே போகிறது.

தமிழக அரசும், மின்சார வாரியமும் உயர்வுக்கு சொல்லும் காரணம் மின்சார வாரியம் கடனில் தத்தளிக்கிறது என்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த வாரியம் எப்படி ஒரு லட்சத்து, நாற்பதினாயிரம் கடனாகிப்போனது என்றால், தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகளினால், தனியாரிடம் அநியாய விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்தார்கள். அரசு புதிதாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யக்கூடாது என தடை விதித்தார்கள். அதன் விளைவு தான் மலை போல கடன் சேர்ந்துவிட்டது. இந்த கடனுக்கு பின்னால் உள்ள ஊழலை நேர்மையாக விசாரித்தால், இப்பொழுது உள்ள தமிழக அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளே தான் இருக்கவேண்டும்.

அப்பொழுது நாம் கேட்கத்தவறியதின் விளைவு தான் அவர்கள் (பெருமளவு அதிமுக) ஊழல் செய்து ஏற்றி வைத்த கடன் சுமையை மக்கள் தலையில் சுமத்தப்பார்க்கிறார்கள். இப்படி கடன், நஷ்டம் என சொல்லிக்கொண்டே இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் சில மாநிலங்களில் இருப்பது போல மின்சார வாரியத்தை தனியார் தரகு முதலாளிகளுக்கு நைசாக கை மாற்றிவிடவும் முயலுவார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஜூலை ஒன்றாம் தேதி மின்சார கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்ற உத்தரவுக்கு எதிராக போராடப் போகிறோமா அல்லது கட்டண உயர்வு தரும் ஷாக்கை எதிர்கொள்ளபோகிறோமா என்பதை நாம் தாம் முடிவு செய்ய வேண்டும்.

March 1, 2023

சிலிண்டர் விலை உயர்வு : மக்கள் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றும் மோடி கும்பல்


வீட்டு சமையல் சிலிண்டரின் விலை ரூ. 50 அதிகரிப்பு

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ. 350 அதிகரிப்பு.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து, திரிபுரா என மூன்று மாநிலங்களின் தேர்தலில் முடிவதற்கு காத்திருந்தார்கள். வாக்கு அளித்த மக்களுக்கு பரிசாய் விலையை அதிகரித்து விட்டார்கள்.

மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை சென்னையில் ரூ. 50 அதிகமாகி ரூ 1118.50 என எகிறியிருக்கிறது. தலைநகர் தில்லியில் ரூ. 1103 என தொட்டிருக்கிறது. அதே போல 19.2 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர்களின் விலையையும் அதிகரித்திருக்கிறார்கள். சென்னையில் ஒரு சிலிண்டருக்கு விலை ரூ. 350 அதிகமாகி இப்பொழுது விலை ரூ. 2268 என உச்சத்துக்கு போயிருக்கிறது. தில்லியில் ரூ. 2119க்கு விற்கிறார்கள்.

சமையல் எரிபொருளிலேயே மிகவும் பாதுகாப்பானது எல்பிஜி சிலிண்டர் தான். மக்கள் பயன்படுத்தும் மாற்று எரிபொருட்களான விறகு, எருவாட்டி, மரம் அறுக்கும் தூள் எல்லாமும் கார்பன் உமிழ்வை அதிகம் உண்டாக்குபவை. சமைப்பவர்களின் உடலை மிகவும் தொல்லைக்குள்ளாக்குபவை. வீடுகளில் பெரும்பாலும் பெண்கள் தான் சமைக்கிறார்கள் என்பதால், மாற்று எரிபொருட்களை பயன்படுத்துவதால் இதயம், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உள்ளாகி, ஆண்டுக்கு ஐந்து லட்சம் பெண்கள் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மாற்று எரிபொருட்களின் கார்பன் உமிழ்வு அதிகம் என்பதால், சுற்றுப்புற சூழ்நிலையையும் மிக மோசமாக பாதிக்கிறது.

அதனால் தான் பெண்கள் மீதும், சுற்றுப்புற சூழ்நிலையின் மீது அக்கறை கொண்டவர்கள் போல உஜ்வாலா என்ற திட்டத்தை பந்தாவாக அறிவித்தார்கள். அதில் சில சலுகைகள் கொடுத்து கிராமங்கள் வரைக்கும் சிலிண்டர்களை விநியோகித்தார்கள். இப்பொழுது விலைவாசி உயர்வால் மக்கள் தங்களுக்கு கொடுத்த முதல் சிலிண்டருக்கு பிறகு இரண்டாவது சிலிண்டர் வாங்க முடியாமல் பல லட்சம் பேர் நிறுத்திவிட்டார்கள். சிலிண்டர் கொடுக்கிறோம் என்பதை சொல்லி ஏற்கனவே மண்ணெணெய் கொடுத்ததையும் நிறுத்திவிட்டார்கள். இப்பொழுது மக்களின் நிலை இன்னும் சிக்கலாகிவிட்டது.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கூடியதன் மூலம் தேநீரின் விலை ரூ. 12 லிருந்து ரூ. 15 யாக உயரும். அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் அதிகமாகும்.

இவ்வளவு விலையேற்றத்திற்கும் காரணம் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், சிலிண்டருக்கான மானியங்களை பெரும்பாலும் வெட்டியது தான் காரணம். சிலிண்டருக்கான மானியத்தை வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கிறோம் என நேர்மையின் சிகரமாய் பேசினார்கள். அது இப்பொழுது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் 2018ல் ரூ. 465 என இருந்து மானியம் இப்பொழுது ரூ. 25 என சுருங்கி நிற்கிறது. சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனங்கள் ரூ. 30, 40 என கொடுக்கும் மானியத்தை விட அதிகமாய் புடுங்கிகொள்கிறார்கள்.

ஆக, இந்த ஒன்றிய அரசை ஆளும் மோடி கும்பலுக்கு பெரும்பாலான மக்களை, விலைவாசி உயர்வைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை என்பது தான் இதிலிருந்து பளிச்சென தெரிகிறது. மோடி கும்பலுக்கு கார்ப்பரேட் புரவலர்களான அதானி, அம்பானிகளை வளப்படுத்துவதற்கும், காப்பாற்றுவதற்குமே தங்கள் ஊன், உயிர், சிந்தனை என எல்லாவற்றையும் அர்ப்பணிக்கிறார்கள். நமக்கான நெருக்கடிகளை நாமே எதிர்கொள்ளவேண்டும். சமூக அக்கறை கொண்ட ஜனநாயக சக்திகளுடன் இணைந்து தெருவில் இறங்கி போராடவேண்டும். வேறு குறுக்கு வழிகளில்லை.

February 8, 2023

2023 பட்ஜெட் : வழக்கம் போல கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட் தான்!



நி
தியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை வாசித்ததும், பெரும்பாலான பத்திரிக்கைகள் இது 2024 தேர்தலை ஒட்டி போடப்பட்டுள்ள பட்ஜெட் என தலைப்புச் செய்தியாக எழுதினார்கள். வாக்கு வங்கியை மனதில் கொண்டு தேர்தலுக்காக பெரும்பாலான மக்களின் நலனை ஒட்டி நிறைய திட்டங்களை அறிவித்துவிட்டார்களோ..? இவங்க அந்த அளவுக்கு நல்லவங்க இல்லையேஎன  ஒவ்வொரு திட்டத்தையும் உற்றுப் பார்த்தால்… நம் நம்பிக்கை பொய்த்துவிடவில்லை. வழக்கம் போல வாயிலேயே வடை சுட்டிருக்கிறார்கள்.  இதை ஏன் இந்த ஊடகங்கள் இவ்வளவு பெரிதுப்படுத்துகிறார்கள் என கேள்வி வந்தது. மோடி ஒரு பேட்டியில்… ”தங்களுடைய பலவீனம் என்ன? என பத்திரிக்கையாளர் கேட்கும் பொழுது.. “மீடியாவை கையாள்வதில் தேர்ச்சி இல்லை!” என பதில் சொன்னார்.   இப்பொழுது அந்த பலவீனத்தையும் மோடி களைந்துவிட்டார் என புரிந்துகொள்ள முடிகிறது.


2023 பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் – வருமானம் எவ்வளவு? செலவு எவ்வளவு?

நமது நாட்டின் வருமானத்தையும், செலவுகளையும் ஒரு ரூபாயில் கணக்கிடுவது பறவைப் பார்வையில் பட்ஜெட்டைப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

எந்தெந்த வகையில் வருவாய்  வருகிறது?

கடன்கள்                                 34

கார்ப்பரேட் வரி                      15

வருமான வரி                          15

சுங்கவரி                                  4

மத்திய கலால் வரி                  7        

ஜி.எஸ்.டி                                17

மூலதன வருவாய்                    2

வரிகள் அல்லாத வருவாய்      6


ஆக மொத்தம்                       100

எந்தெந்த வகையில் செலவுகள் செய்கிறோம்?

ஓய்வூதியம்                              4

இதர செலவுகள்                      8

மாநில வரி வருவாய்               18

நிதி ஆணைக்குழு                   9

வட்டி                                       20

மத்தி துறை திட்டம்                17

ராணுவம்                                 8
மானியம்                                 7

மத்திய நிதி உதவி பெறும்

திட்டங்கள்                              9


ஆக மொத்தம்                     100

ஒரு ரூபாய் செலவு செய்கிறோம். வருமானம் போதாமல் 34 பைசா கடன்கள் வாங்கி சமாளிக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய அபாயத்தில் இருக்கிறோம். இப்படி ஒரு குடும்பம் இருந்தால், நாம் என்ன சொல்வோம்? விரைவில் திவாலாகி தெருவுக்கு வந்துவிடும் என்று தானே!  ஏற்கனவே உலக அளவில் சில நாடுகள் திவாலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.  இதில் நாம் எத்தனை கவனத்துடன் செயல்படவேண்டும். ஆனால் அலட்சியத்துடன் செயல்படுகிறார்கள்.

2014ஆம் ஆண்டில் காங்கிரசு கூட்டணி ஆட்சியை விட்டு சென்ற பொழுது.. இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் ரூ.54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்தது. இப்படியும் சொல்லலாம். “சுதந்திரம் பெற்று” 67 ஆண்டுகளில் அவ்வளவு தான் கடன் இருந்தது. ஆனால், மோடி ஆட்சி செய்த எட்டு  ஆண்டுகளிலேயே செப்டம்பர் 2022 வரை ரூ. 147 லட்சம் கோடிகளாக உயர்த்தியுள்ளார்.  இடையில் ஒருமுறை மோடி தனது சிறந்த ஆளுமைத் திறனால்.. வெளிநாட்டு கடன்கள் அனைத்தையும் அடைத்து ஏறக்கட்டிவிட்டார் என சங்கிகள் வழக்கம் போல ஒரு வதந்தியை பரப்பினார்கள்.  பிறகு அப்படியெல்லாம் கடனை அடைக்கவில்லை. ஒரு மடங்காக இருந்த கடனை மூன்று மடங்காக பெருக்கி வைத்திருக்கிறார் என எதிர்க்கட்சியினரும், பத்திரிக்கைகளும் காறித்துப்பினர்.  மோடி கும்பல் வாங்கிக் குவித்த கடனுக்கு தான் ஒரு ரூபாயில் இருபது பைசா வட்டி மட்டுமே கட்டுகிறோம்.

மறைமுக வரிகள் உயர்வு; கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி வரி குறைப்பு

ஒரு நாடு சிறந்த முறையில் நிர்வாகம் செய்கிறது என்றால்… பெரும்பாலான மக்களை பாதிக்கிற அரிசி, பருப்பு, பெட்ரோல், டீசல் என பெரும்பாலான பொருட்களின் மீதான மறைமுக வரியை குறைக்கவேண்டும். அப்பொழுது தான் விலைவாசி குறையும். அதே போல நேரடி வரியை அதிகப்படுத்தவேண்டும்.  இவர்கள் ஏற்கனவே கொடுத்துக்கொண்டிருந்த மானியங்களை வெட்டுவதன் மூலம் மறைமுக வரியை அதிகமாக்கி மக்கள் மீது சுமையை ஏற்றிக்கொண்டே போகிறார்கள்.  கார்ப்பரேட்டுகளுக்கு வரியை குறைப்பதன் மூலம்  அவர்களை செல்லப்பிள்ளைகளாக நடத்துகிறார்கள்.

ஏழை மக்களுக்கான மான்யங்கள் வெகுவாக குறைப்பு

கல்வி, மருத்துவம், விவசாயம் என பெரும்பாலான மக்களுக்கு தரும் மானியங்களை படிப்படியாக குறைத்துக்கொண்டே வருகிறார்கள். கிராமப்புற ஏழை மக்களை உயிர்வாழ வைத்துக்கொண்டிருக்கிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ. 73,000 கோடி ஒதுக்கியிருந்தார்கள்.  இந்த ஆண்டு ரூ.60,000 கோடியாக குறைத்துவிட்டார்கள்.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு பி.எம்.போசன் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ.12,800 கோடி ஒதுக்கினார்கள். ஆனால் இந்த ஆண்டு ரூ.11000 கோடி தான் ஒதுக்கியுள்ளார்கள். உணவு மானியங்களுக்காக கடந்த ஆண்டு ரூ. 2,87,194 கோடி ஒதுக்கியிருந்தார்கள். இந்த ஆண்டு ரூ. 1,97,350 கோடிகளாக குறைத்துள்ளார்கள்.

கடந்த ஆண்டு நாம் வைத்திருந்த ரூ. 100யும் இப்பொழுது நாம் வைத்திருக்கும் ரூ. 100ன் மதிப்பும் சமமில்லை. கடுமையான விலைவாசி உயர்வு,  டாலரின் மதிப்பு உயர்வு, இந்திய பணத்தின் வீழ்ச்சி என பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே இருக்கிறது. இதைத் தான் பணவிக்கம் என்கிறோம். இதன் அடிப்படையில் முதல் ஆண்டு ரூ.100 ஒதுக்கினால், அடுத்த ஆண்டு ரூ. 110 என ஒதுக்கினால் தான் நியாயம்.  மோடி அரசு முதல் ஆண்டை விட, அடுத்த ஆண்டு மான்யங்களை குறைத்துக்கொண்டே போவது என்பது பெரும்பாலான மக்கள் மீது அக்கறை இல்லாமல் தான் இந்த பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்  என்பது உறுதியாகிறது.

ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு எங்கே?

நம் நாட்டில் வேலை வாய்ப்பின்மை பெருகி கொண்டே போகிறது. படித்தவர்களுக்கும் பொருத்தமான வேலையில்லை.  படிக்காதவர்களுக்கும் போதுமான  வேலையுமில்லை. நகர்ப்புறத்தில் 8% வேலையின்மை இருக்கிறது. ஊரகப் பகுதிகளில் 8.3%  வேலையின்மை இருக்கிறது என சிஎம்ஐ ஆய்வு சொல்கிறது. தேர்தலின் பொழுது மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என பந்தாவாக அறிவித்தார்.  அதுவும் மோடி அறிவித்த பொய்களில் ஒன்றாக காற்றில் கரைந்துவிட்டது. ஒன்றிய அரசு நிறுவனங்களிலேயே 10 லட்சம் காலியிடங்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அறிவித்தார்கள்.  ஆனால் நிரப்ப மறுக்கிறார்கள்.

புதிய வருமான வரித் திட்டம்

ஏற்கனவே தனிநபர் வருமான வரி செலுத்துவதில் இரண்டு விதமான திட்டங்கள் இருக்கின்றன. இப்பொழுது புதிய வருமான வரித் திட்டம் ஒன்றை  சாதனை அறிவிப்பு போல செய்திருக்கிறார்கள்.  சேமிப்புக்கோ, சில குறிப்பிட்ட செலவுகளுக்கோ கொடுக்கிற வரிச் சலுகைகள் இல்லாமல்… “சம்பாதி! அப்படியே மொத்தத்தையும் செலவழிச்சுக்கோ” என்கிற ரீதியில் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

சேமிப்பை பொறுத்தவரையில்… மொத்தம் மூன்று வகைகள்.  1. தனிநபர் சேமிப்பு 2. நிறுவனங்களின் சேமிப்பு 3. பொதுத்துறை நிறுவனங்களின் சேமிப்பு.  இதில் நன்றாக இயங்குகிற பொதுத்துறை நிறுவனங்களை கூட வித்து வித்து தின்று செமித்து வருவதால், அதில் சேமிப்பு இல்லாமல் போய்விட்டது. சேமிப்பு இருந்தால் தானே மூலதனமாக உருமாறும்.  ஆனால், பணப்புழக்கத்தை அதிகமாக்க இந்தத் திட்டத்தை கொண்டு வந்ததாக அறிவிக்கிறார்கள்.   பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதற்கு நேர்மறையாக எதையும் உருப்படியாக  இவர்களால் செய்யமுடியவில்லை.  மக்களின் பையில் கையை விட்டு எடுக்கிறார்கள். அவ்வளவு தான்.

மேலும் நமது நாட்டில் இன்றைய நிலவரப்படி 48 கோடிக்கும் மேலாக  பான் கார்டு வைத்திருக்கிறார்கள்.  இதில் தனிநபர் வருமான வரி செலுத்துவர்களின் எண்ணிக்கை என்பது நம் நாட்டில் மொத்தமே 1.4 கோடி தான். இதில் 5 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கையே ஒரு கோடி பேர் இருக்கிறார்கள் என கடந்த ஆண்டு மோடியே புலம்பினார்.  நம் நாட்டில் மக்கள் தொகை 141 கோடி.   அதில் மிக மிக குறைந்த சதவிகித்தை தான் பெரிய சாதனை போல பேசுகிறார்கள்.

விவசாயிகளுக்கு 20 லட்சம் கடன் உதவி

ஒரு வருடம் கடுமையான பனியிலும் மழையிலும் வெயிலிலும் போராடிய விவசாய மக்களுக்கு நிறைய மான்யங்களை அறிவித்துவிட்டார்களா என பார்த்தால், அதிலும் ஒன்றுமேயில்லை.  விவசாயிகளுக்கான பிரதமர் கிஷான் நிதி ஒதுக்கீடு 68 ஆயிரம் கோடியில் இருந்து அறுபதாயிரம் கோடியாக குறைத்திருக்கிறார்கள்.  பெரிய சாதனையாக 20 லட்சம் கடன் உதவி என பெருமை பீத்துகிறார்கள். வங்கிகளை விவசாயிகளுக்கு கடனை கொடுக்க சொல்வதெல்லாம் ஒரு சாதனையில் வருமா? காலக்கொடுமை.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையின் விளைவாக கடந்த 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் எந்த நகர்வுமின்றி கிடப்பில் போட்டனர். தொடர்ச்சியான நினைவூட்டலுக்கு பிறகு மருத்துவமனைக்கு 2018ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. 2019ல் மோடி அடிக்கல் நாட்டினார்.  இன்னும் அடிப்படை கட்டுமானம் கூட எழுப்பப்படவில்லை! வெறும் செங்கல் சுற்றுச் சுவருடன் வெற்று மைதானம் பல் இளிக்கிறது!

மதுரையில் எய்ம்ஸ் அறிவிப்புக்கு பிறகு, அடுத்தடுத்தகட்டமாக அறிவிக்கப்பட்ட குஜராத், ஜார்க்கண்ட், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் எய்ம்ஸ் கட்டுமானங்களும்  நிறைவடைந்து செயல்பாட்டிற்கே வந்து விட்டன. மதுரை எய்ம்ஸ் திட்டம் மட்டுமே கடந்த 4 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் அங்கமாக தமிழ்நாட்டை பாஜக அரசு கருதுகிறதா? இல்லையா? எனச் சந்தேகம் வலுக்கிறது.

பட்ஜெட் அறிவிப்புகளும், அதன் உண்மைத் தன்மைகளும்!

சமீபத்தில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்த ஒரு இளைஞரிடம் பட்ஜெட் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பொழுது.. அவர் ஒரு கேள்வியை கேட்டார்.  “ஒவ்வொரு திட்டத்திற்கு இவ்வளவு, இவ்வளவு என பட்ஜெட் என அறிவிக்கிறார்கள். வருமானத்திலும், செலவுகளிலும் நடைமுறையில் நிறைய மாற்றங்களும் வரும்.  எவ்வளவு திட்டமிட்டோம். உண்மையில் எவ்வளவு வருமானம் வந்தது, எவ்வளவு செலவழித்தோம் என  கணக்கை வருட இறுதியில் அறிவிக்கவேண்டும் அல்லவா! அது தானே சரியான முறை!” என்றார். நியாயமான கேள்வி.

நம் தெருவில் உள்ள சின்ன கோவிலில் திருவிழாக்கென வீட்டுக்கு இவ்வளவு வரி என வசூலிப்பார்கள். செலவு செய்வார்கள். திருவிழா முடிந்த பிறகு,  ஒரு சிலேட்டில் இவ்வளவு வரி வசூலித்தோம்.  இவ்வளவு செலவு செய்தோம். கையிருப்பு இவ்வளவு அல்லது கடன் இவ்வளவு என நேர்மையாக எழுதிப்போடுவார்கள்.   அந்த எளிய நேர்மை இந்தியாவை ஆள்கிறவர்களுக்கு எப்பொழுதுமே இருந்ததேயில்லை. நாடாளுமன்றத்தில் யாராவது ஒரு குறிப்பாக ஒரு திட்டம் குறித்து கேள்வி கேட்டால் மட்டும், குறிப்பான பதிலை சொல்வார்கள். அவ்வளவு தான்.

இந்தியாவை சூறையாடும் கார்ப்பரேட் காவி கும்பல்

இப்படி பட்ஜெட்டில் எந்த திட்டத்தை எடுத்துக்கொண்டு விவாதித்தாலும், பெரும்பாலான மக்களுக்கு பாதகமாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு பார்த்து பார்த்து கவனமாய் செய்கிற ஆட்களாக தான் மோடி கும்பல் ஆட்சி செய்கிறது.  அதானி அத்தனை அயோக்கியத்தனங்களும் செய்து தான் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார் என்பதும்,  இப்பொழுது அதானியின் ராஜ்யம் சரிந்து விழுவதையும் சங்கிகளால் பொறுக்க முடியவில்லை. ”நம்மாட்களில் ஒருவர் மேலே வருவது பிடிக்காமல் சதி செய்கிறார்கள்” என சங்கிகள் பொருமுகிறார்கள்.  திட்டித்தீர்க்கிறார்கள்.   கதறி அழுகிறார்கள். ”நம்மாட்கள்” என பெரும்பான்மை மக்களை சங்கிகள் எப்பொழுதும் கருதுவதில்லை. கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யவே தாங்கள் பிறந்திருக்கிறோம் என்பதாக அவர்கள் சிந்தனை, செயல்களுமாக இருக்கிறது.

சமூக ஏற்றத்தாழ்வுகள் முன்பை விட அதிகரித்து இருக்கிறது. வாழ்வதற்கு அடிப்படையாக தேவைப்படும் அத்தனை பொருட்களின் கடுமையான விலைவாசி உயர்வால் பெரும்பாலான மக்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள். இந்த நாட்டில் சிறிய, நடுத்தர முதலாளிகள் கூட தொழில் செய்ய முடியாமல், திணறி வருகிறார்கள்.  கார்ப்பரேட்டுகளும், காவி கும்பல்களும் இந்தியாவை சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பளிச்சென புரிந்துகொள்ள முடிகிறது.  இலங்கையை போல, பாகிஸ்தானை போல எல்லாம் கையை மீறி போவதற்குள் மக்கள் விழித்துக்கொள்ளவேண்டும்.

October 28, 2022

ரயில் : மாணவர்களின் சாகசங்களும் பலிகளும்!



நான் வேலை விசயமாக வழக்கமாக செல்லும் ஒரு நிறுவனத்தில் இருந்து நேற்று தகவல் சொன்னார்கள். அங்கு வேலை செய்த இருபத்தியொரு வயது இளைஞர் தன் நண்பர்களுடன் கடற்கரைக்கு போய்விட்டு திரும்பும் பொழுது, ரயிலில் சாகசம் செய்திருக்கிறார். அடிபட்டு உடனே இறந்துவிட்டாராம். அந்த இளைஞரிடம் பேசியிருக்கிறேன். நல்ல உற்சாகமான இளைஞர். பெரிய இழப்பு தான்.


ஒரு வாரத்திற்கு முன்பு முகநூலில் ஒரு காணொளி பார்த்தேன். ஒரு இளைஞர் வேகமாக செல்லும் ரயிலில் வெளியே காலை நீட்டி ஏதோ சாகசம் செய்கிறார். அடுத்து வந்த ரயில் கம்பத்தை அவர் கவனிக்கவில்லை. அதில் பலமாக மோதி அடிபட்டு கீழே விழுகிறார். கண்டிப்பாக இறந்திருக்க வாய்ப்பு அதிகம். அடி அப்படி!

இரண்டு நாட்களுக்கு முன்பு, கொரட்டூர் ரயில் நிலையத்தில் ரயிலேறும் பொழுது, என்னுடன் ஒரு ரயில்வே போலீசும் ஏறினார். அங்கிருந்தவர்களை நோட்டம் விட்டார். ஐம்பது வயதுத்தக்க ஒருவர் “இவங்க இரண்டு பேர் தான் சார்” என்றார். அவர்கள் இருவரும் பள்ளி மாணவர்கள். பள்ளி யூனிபார்மில் இருந்தார்கள். இருவரையும் அழைத்துக்கொண்டு அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்கினார். மிரட்டி அனுப்புவாரா? பெற்றோருக்கு தெரிவித்து வரவழைப்பார்களா? வழக்கு போடுவார்களா? தெரியவில்லை.

இளைய தலைமுறை யூடியூப் பார்த்து, பல சாசகங்களை ரயிலில் செய்கிற செய்திகள் அடிக்கடி வருகின்றன. அதே போல அடிப்பட்டு பலியான செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு காலாண்டும் ரயில்வே சென்னை மின்சார ரயில்களில் அடிபட்டு இறந்தவர்களின் பட்டியலை வெளியிடும். இப்படி சாகசம் செய்தவர்கள், தண்டவாளம் கடக்கும் பொழுது அடிப்பட்டு இறந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் என அந்த பட்டியல் நீளும். 90 நாட்களுக்கு 90 பேர் சராசரியாக இறப்பார்கள் என்பது தான் இதில் கவனிக்கத்தக்கது.

இப்படி ரயிலில் சாகசம் செய்வது போலவே, பேருந்துகளிலும் சாகசம் செய்வது நடந்துகொண்டு தான் இருக்கிறது. பலியாகிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இப்பொழுது பல பேருந்துகளில் தானியங்கி கதவு போட்டு மூடிவிடுகிறார்கள். இப்படி மூடிவிடும் பொழுது சாகசம் செய்ய வாய்ப்பில்லை. இதை ஏன் போக்குவரத்து கழகம் இத்தனை ஆண்டுகள் கழித்து நடைமுறைப்படுத்துகிறது என்பது ஆச்சர்யமாக இருந்தது.

மின்சார ரயில்களில் செய்கிற சாகசம் மெட்ரோ ரயிலில் இல்லை தானே! ஏனென்றால், அங்கு கதவுகள் தாழிடப்படுகின்றன. அப்படி என்றால், மின்சார ரயில்களிலும் தானியங்கி கதவுகள் போட்டு மூடிவிடலாம் தானே? ஏன் தாமதப்படுத்துகிறார்கள்? விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவோ வளர்ந்துவிட்டது. செய்வதற்கு தான் அக்கறையில்லை.

ரயில்வே கார்டுகளின் தொழிற்சங்க தலைவர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ரயில் விபத்துக்களை எப்படி தவிர்ப்பது என நிறைய பரிந்துரைகளை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் ”வந்த பின் தான் காப்போம்” என்பது போல, ஒவ்வொரு பெரிய விபத்து நடந்து, பல உயிரிழப்புகளுக்கு பிறகு தான் எங்களது பரிந்துரைகளில் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்துகிறார்கள் என நொந்துகொண்டார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ரயில்வே துறையில் தனியார்மயத்தை விரைவுப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். சேவை என்கிற கண்ணோட்டம் காணாமல் போய், வியாபாரம், லாபம், மேலும் லாபம் என்கிற கண்ணோட்டம் தான் எஞ்சும். மக்கள் மீது எல்லாம் அக்கறை கொள்ள வாய்ப்பேயில்லை.

இளைஞர்களின் சாசகத்தை எப்படி பார்ப்பது? இளமைக்காலம் என்பது துடிப்பான காலம். எதையாவது உற்சாகமாக செய்ய தூண்டும் வயது அது. அவர்களுடன் கலந்துரையாடவேண்டும். அவர்களை ஆரோக்கியமான, சமூக அக்கறை கொண்ட செயல்களில் ஈடுபடுத்தப்படவேண்டும். அதற்கு ஆரோக்கியமான முற்போக்கு மாணவர் அமைப்புகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இயங்கவேண்டும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அரசியலை காயடித்துவிட்டார்கள். எல்லா மாணவர் அமைப்புகளையும் தடை செய்து வைத்திருக்கிறார்கள். விளைவு. அவர்களின் துடிப்பான இளமைக் காலம் என்பது இப்படி அபாயங்களில் போய் மாட்டி தங்கள் உயிரை பலிகொடுக்கிறார்கள்.

மாணவ சமூகம் தான் வருங்கால சமூகம். அவர்கள் சரியான வழியில் கொண்டு வழிநடத்தப்படவேண்டும். அதற்கு மாணவர் அமைப்புகள் உற்சாகமாய் செயல்பட வைப்பதற்கான வேலைகளை செய்யவேண்டும்.

September 24, 2022

ஸ்விக்கி ஊழியர்களின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்!



லட்சக்கணக்கில் வேலை செய்யும் இந்த தொழிலாளர்கள் கிக் பொருளாதாரத்தில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். இவ்வளவு பேருடைய வாழ்க்கையையும் தொழிலாளர் நலச்சட்டங்கள் வழியாக பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசு வேடிக்கைப் பார்க்கிறது.

****

கடந்த திங்கள்கிழமை துவங்கி தலைநகர் சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் தங்களது ஊதியம் கடுமையாக குறைக்கப்படுவதை எதிர்த்து போராடிவருகின்றனர். இந்த ஊதிய குறைப்பை மற்ற மாவட்டங்களுக்கும் ஸ்விக்கி அடுத்தடுத்து அமுல்படுத்தும் என்பதால், மற்ற மாவட்டங்களிலும் உள்ள ஸ்விக்கி ஊழியர்கள் போராட துவங்கியுள்ளனர்.

பைக், செல்போன், ஸ்விக்கி ஆப்பில் வரும் இங்கிலீசை வாசிக்க தெரியும் அளவிற்கு படிப்பு இருந்தால் வேலைக்கு ஆட்களை எடுத்துக்கொள்கிறார்கள். தொழிலாளர்களுக்கென எந்தவித அலுவலகமும் இல்லை. தெருவோரம் உள்ள மரத்தடிகளில் காத்திருக்கிறார்கள். வாடிக்கையாளரிடமிருந்து ஆர்டர் வந்ததும், வில்லிருந்து கிளம்பும் அம்பு போல கிளம்புகிறார்கள். ஆர்டர் அனுப்பியதும் 30 நிமிடங்களுக்குள் விநியோகிக்கவேண்டும் என்பது விதியாக இருக்கிறது. இதில் சூடாக (Hot), குளிர்ச்சியாக (Cool), காரமாக (Spicy), கூடுதலாக சட்னி, சாம்பார் வேண்டும் என வாடிக்கையாளர்களின் கூடுதல் கட்டளைகளும் உண்டு.

உணவகத்தில் எத்தனை கூட்டம் இருந்தாலும், அங்கு வேகப்படுத்தி வாங்கிக்கொண்டு போய், வாடிக்கையாளர் இடத்தை வேகமாக அடைந்து விநியோகிக்கிறார்கள். இதில் உணவகங்களில் தாமதம், சில்லறை தட்டுப்பாடு, சாப்பாடு பொருளை ஒவ்வொன்றாக பொறுமையாக சோதிப்பது, மனிதர்களை கையாள்வது போல இல்லாமல் ஒரு எந்திரத்தை கையாள்வது போல நடத்துவது என பல பிரச்சனைகளை தினந்தோறும் எதிர்கொள்கிறார்கள். தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரிய பிரச்சனை. இப்படி எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு தான் வேலைகளை செய்துவருகிறார்கள்.

இந்த நிலையில் தான் ஸ்விக்கி தன் ஊழியர்களுக்கு தரும் ஊதியத்தை ஏதோவொரு காரணம் சொல்லி குறைத்துக்கொண்டே செல்கிறது. இப்பொழுது நடக்கும் போராட்டம் ஏன் என்பதை ஊழியர்களே விளக்குகிறார்கள்.
ஊதியம் கணக்கிடும் முறை என்பது….

1. ஆர்டர் கட்டணம். (ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை ஆர்டர்கள் எடுக்கிறார்களோ, அதற்கு தகுந்த கட்டணம் தருகிறார்கள்.

2. பெட்ரோல் அலவன்ஸ் (ஒரு ஆர்டர் என்பது 3 லிருந்து 4 கிமீ தூரம். கூடுதலாக 6,7 கி.மீ என போகும் பொழுது கொடுக்கப்படும் தொகை)

3. ஊக்கத்தொகை (Incentives) (ஒவ்வொரு நாளும் ஒரு இலக்கு வைக்கிறார்கள். அதை அடைந்தால் தொகை, வாரத்திற்கு இவ்வளவு என இலக்கு அதை அடைந்தால், ஒரு தொகை என தரப்படுவது.)

4. சர்சார்ஜ் தொகை (மழைக்காலங்களில், உணவகத்தில் மிக பிசியான சமயங்களில் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வாங்குவதில் இருந்து தருவது)
காத்திருப்பு கட்டணம் (Waiting Charges) (உணவகத்தில் காத்திருக்கும் நேரத்திற்காக தரும் தொகை)

மாதாந்திர சம்பளம் என எந்த ஊழியருக்கும் தரப்படுவதில்லை. இந்த ஐந்து வகைகளில் தான் கணக்கிட்டு சம்பளமாய் தருகிறார்கள்.

இப்பொழுது ஸ்விக்கி செய்திருக்கிற மாற்றம் என்னவென்றால்…

ஒரு தொழிலாளி மூன்று சிப்டுகளில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இப்பொழுது அதை ஐந்து அடுக்குகளாக மாற்றிவிட்டார்கள்.

ஒரு தொழிலாளி 11 மணிக்கு ஸ்விக்கி ஆப்பை உள்ளே நுழைந்தால் (Log in) இரவு 11 மணி வரை, 12 மணி நேரம் வேலை செய்தால், அவர்கள் ஒரு நாளைக்கான இலக்கை அடைந்துவிட முடியும். ஆனால், கட்டணத்தை குறைத்ததன் மூலம் காலை 6 மணிக்கு உள்ளே நுழைந்தால், இரவு 11 மணி வரை வேலை செய்தால் தான் பழைய ஊதியத்தை அடைய முடிகிற அளவிற்கு கொண்டுவந்துவிட்டார்கள். இடையே மதியம் 3 மணிக்கு மேல் ஆர்டர் குறையும் பொழுது, வீட்டிற்கு போய் ஓய்வு எடுக்கமுடியும். இப்பொழுது அப்படி போகமுடியாத படிக்கு செய்கிறார்கள் என புகார் கூறுகிறார்கள்.

முன்பு ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளிக்கு 25 டெலிவரி தருவார்கள். இப்பொழுது அதை 10 ஆர்டர்களாக குறைத்துவிட்டார்கள். வருகிற ஆர்டர்களை தங்களோடு ஒப்பந்தம் போட்டு இருக்கிற ரேபிடோ (Rapido) போன்ற மற்ற நிறுவனங்களுக்கு தருகிறார்கள். நாங்கள் ஆர்டருக்காக காத்திருக்கும் பொழுது, இப்படி குறைப்பது நியாயமில்லை. என்கிறார்கள்.

முன்பு ஒரு ஆர்டருக்காக ஒரு உணவகத்துக்கு செல்லும் தூரம், அங்கிருந்து வாடிக்கையாளரை அடையும் தூரம் இரண்டையும் கணக்கிட்டு பணம் கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது உணவகத்திற்கு செல்லும் தூரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டோம் என தெரிவிக்கிறார்கள்.

முன்பு வாரம் முழுவதும் வேலை செய்து இலக்கை அடைந்தால், ஊக்கத்தொகையாக ரூ. 1200 தருவார்கள். இப்பொழுது அந்த ஊக்கத்தொகை இல்லை என சொல்கிறார்கள்.

இது தவிர ஒரு ஆர்டரை உணவகத்தில் இருந்து வாடிக்கையாளருக்கு தரும் பொழுது, அந்த வாடிக்கையாளர் அந்த தொழிலாளி செய்த சேவையை மதிப்பிட்டு மதிப்பெண்கள் (Stars) தருகிறார்கள். சில வாடிக்கையாளர்கள் அதை குறைத்து தரும் பொழுது அவர்களுக்கு வாரந்திர ஊக்கத்தொகையை கடுமையாக வெட்டுகிறார்கள். வாடிக்கையாளர்கள் தரும் மதிப்பெண்களை ஸ்விக்கி நிறுவனம் மட்டுமே பார்க்கமுடியும். தொழிலாளியால் காணமுடியாது. இதை வைத்துக்கொண்டு ஸ்விக்கி தங்களது தரும் தொகையை பெரிய அளவில் வெட்டுகிறார்கள் என்கிறார்கள்.

வாடிக்கையாளர்களுக்கு அரை மணி நேரத்தில் உணவை சென்று சேர்க்கவேண்டும் என ஸ்விக்கி ஊழியர்கள் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாய் செல்லும் பொழுது, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதற்கு எல்லாம் ஸ்விக்கி பொறுப்பு ஏற்பதில்லை. ஒரு தொழிலாளருக்குரிய அடிப்படையாக தரவேண்டிய இ.எஸ்.ஐ, பி.எப் இரண்டையும் தருவதில்லை.

லட்சக்கணக்கில் வேலை செய்யும் இந்த தொழிலாளர்கள் கிக் பொருளாதாரத்தில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். இவ்வளவு பேருடைய வாழ்க்கையையும் தொழிலாளர் நலச்சட்டங்கள் வழியாக பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசு வேடிக்கைப் பார்க்கிறது. மாநில அரசும் வேடிக்கை பார்க்க கூடாது. விரைந்து அந்த தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

அவர்களுடைய கடுமையான உழைப்புக்கும், பெறும் குறைவான ஊதியத்திற்கும் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருந்தாலும், ஸ்விக்கி நிறுவனத்திடம் பழைய ஊதிய முறையை அமுல்படுத்து! என என்று தான் கேட்கிறார்கள். அவர்களுடைய நியாயமான கோரிக்கையை மதிக்காமல், ஸ்விக்கி நிறுவனம் ”வேலை செய்தால் செய்! இல்லையெனில் கிளம்பு!” என்கிற ரீதியில் பேசுவதாய் தகவல்கள் வருகிறது.. இது கண்டிக்கத்தக்கது. ஸ்விக்கி ஊழியர்களின் சேவையை பெறும் பொது சமூகமும் ஸ்விக்கியின் இந்த அராஜகப்போக்கை கண்டிக்கவேண்டும். இல்லையெனில், ஸ்விக்கி உண்டாக்கும் ஊதிய நெருக்கடி என்பது தொழிலாளர்களுக்கும், சேவையை பெறும் மக்களுக்குமான உறவை சிக்கலாக்கும்.

இப்பொழுது மட்டுமில்லாமல், ஸ்விக்கி ஊழியர்கள் கடந்த காலத்திலும் ஊதியம் குறித்து போராடியிருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது ஒரு முன்னேற்றம். தாங்கள் ஒரு சங்கமாக இருக்கிறோம். முன்பு போல எங்களை ஏமாற்ற முடியாது. இந்தமுறை நாங்கள் எங்கள் உரிமைகளை பெற்றேத் தீருவோம் என உறுதியாய் சொல்கிறார்கள்.

தலைநகர் சென்னையில் மட்டும் 9 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் தான் கொரானாவால் ஊரடங்கு அமுலில் இருந்த பொழுது, மக்களுக்கு பசித்த பொழுது துணிந்து வந்து சேவை செய்தார்கள். அவர்கள் முன்பும் மக்களுக்காக தெருக்களில் தான் நின்றார்கள். இப்பொழுது போராடும் பொழுதும் தெருவில் இறங்கி தான் போராடுகிறார்கள். சிவில் சமூகம் தான் அவர்களின் நியாயமான கோரிக்கையை ஆதரிக்கவேண்டும். குரல் கொடுக்கவேண்டும்.

September 7, 2022

கர்நாடகம் : கல்வித்துறையின் ஊழலில் திளைக்கும் பிஜேபி!


பிஜேபி தன்னை ஊழலுக்கு எதிரான கட்சி என்று பொதுவெளியில் விளம்பரம் செய்கிறது. ஆனால் உண்மை நிலையோ வேறு. பிஜேபி ஆட்சி செய்யும் அத்துனை மாநிலங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.


பிரதமர் மோடி ஊழல் குறித்து பல்வேறு மேடைகளில் முழங்குகிறார். சொந்த கட்சிகாரர்கள் மீது ஊரே காறித்துப்பினாலும் அமைதி காக்கிறார்.
***

கர்நாடகாவில் கல்வித்துறையில் லஞ்சம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி கர்நாடகாவைச் சேர்ந்த 13000 தனியார் பள்ளிகள் ஒன்றிணைந்து இரண்டு சங்கங்கள் சார்பாக பிரதமர் மோடிக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

கர்நாடகாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில், முறையான விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதில்லை. அதோடு புதிய கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் பெருமளவில் லஞ்சம், ஊழல் நடக்கிறது.

இது தொடர்பாக கல்வியமைச்சார் பி.சி நாகேஷ் மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் பலமுறை புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து, தனியார் பள்ளிகளில் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைகளையும் ஆளும் பிஜேபி செய்துவருகிறது எனவும் புகார் எழுந்து இருக்கிறது.

ஏற்கனவே கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் “கர்நாடகாவில் அரசின் திட்ட பணிகளை ஒதுக்கீடு செய்வதற்காக அமைச்சர்கள் 40% கமிசன் கேட்கிறார்கள். இது சம்பந்தமாக முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என மோடிக்கு புகார் கடிதம் அனுப்பினார்கள். இதே ஆண்டு மார்ச் மாதம் பிஜேபியை சார்ந்த ஒரு ஒப்பந்ததாரர் “4 கோடிக்கு சாலை பணிகள் செய்தேன். அந்த தொகையை விடுவிப்பதற்கு அமைச்சர் 40% கமிஷன் கேட்டார்” என மனம் நொந்து தற்கொலை செய்தது நினைவுக்கு வருகிறது.

கர்நாடகாவில் நிலைமை இப்படியிருக்க… பிரதமர் மோடியோ ”அரசின் நடைமுறையில் இருந்து ஊழல் வெறியேறவேண்டும். ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான நம்பிக்கையை ஏற்படுத்துவதில் கடந்த ஏழு ஆண்டுகளில் அரசு வெற்றியடைந்துள்ளது” என 2021ல் பேசினார். கடந்த ’சுதந்திர’ தின உரையிலும் ஊழல் குறித்து உரக்க முழங்கினார். கர்நாடகாவில் பிஜேபி செய்யும் ஊழல்கள் நாளும் சந்தி சிரிக்கிறது.

August 15, 2022

75வது ”சுதந்திர” தினம் : சில குறிப்புகள்


ஒரு பக்கம் கொரானா துரத்தியது.

இன்னொரு பக்கம் அரசு
வேடிக்கைப் பார்த்தே கொன்றது.

’சுதந்திர’ தினக்கொண்டாட்டங்களில்
அரசு பரபரவென இருக்கிறது.
சீழ்ப்பிடித்த புண்களை
மறைக்கப் பார்க்கிறது.

அவர்கள் வசதியாய் மறந்து போகலாம்.
நாம் மறக்ககூடாது.
நினைவுப்படுத்திக்கொண்டே இருப்போம்.

ராம்கிர்பால். 65 வயது.
மும்பை துவங்கி
உத்திரபிரதேச காசிலாபாத் வரை
1600
கிமீ தூரம் நடந்தே கடந்தார்.
பிறந்த மண்ணை தொட்டதும்
கீழே விழுந்துவிட்டார்.
சோதித்ததில் செத்துவிட்டார்.

ஆசிப். 22 வயது.
கேரளாவில் செங்கல்சூளை தொழிலாளி.
வேலையும் இல்லை; சோறுமில்லை.
ஊருக்குப்போக வழியும் இல்லை.
தன்னைத்தானே கொன்றுவிட்டான்.
மேற்குவங்கம் முர்ஷிடாபாத் வரை
2900
கிமீ ஆம்புலன்சில் சொந்த ஊரை அடைந்தான்.
ஊர்க்காரர்கள் வசூலித்து
1,30,000
கொடுத்தார்கள்.

 அந்த குட்டிப்பெண் ஜோதி

’பெருமைமிகு’ தலைநகர் தில்லியில்
ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.
காலில் அடிப்பட்ட அப்பாவை வைத்து
1200
கிமீ பயணித்து
பீகாரின் தர்பாங்காவை
ஏழே நாளில் வந்தடைந்தாள்.

அம்ரித் 24 வயது இளைஞன்.
மோடியின் பெருமைமிகு குஜராத்தில் இருந்து
யோகி ஆதித்யநாத்தின் உத்திரப்பிரதேசம்
பஸ்தி மாவட்டம் வரை
1460
கிமீ பயணிக்கவேண்டும்.
மத்திய பிரதேசம் அடைந்த பொழுது
சோர்வானான்.
கோவிட்டுக்கு பயந்து
வழியிலேயே இறக்கிவிடப்பட்டனர்.
நண்பனின் தோளில்
அரை மயக்கத்தில் சாய்ந்திருந்த படம்
வைரலான பொழுது
அம்ரித் இறந்துவிட்டான்.

சாலையில் சென்றால்
போலீசு உதைத்தார்கள்.
முகாம்களில் வதைத்தார்கள்.
கஞ்சியோ, சாவோ
சொந்த ஊரில் என
தண்டவாளங்களிலே நடந்தார்கள்.
சோர்வான பொழுது தூங்கினார்கள்.
கோவிட் சிறப்பு ரயில்
எல்லோரையும்
நிரந்தர நித்திரையில் ஆழ்த்திவிட்டது.

இவையெல்லாம்
பல லட்சக்கணக்கான துயர கதைகளில்
ஊடகங்களில் வெளிவந்தவை.

பேரரசரும் அவரது சகாக்களும்
வேடிக்கைப் பார்த்தே கொன்றார்கள்.
மன்னர்கள் அமைதி காத்தார்கள்.
”
நடப்பவர்களை
தடுத்து நிறுத்தவா முடியும்?” என
மைலார்டுகளின் குரல் எதிரொலித்தது.

அவர்கள் வசதியாய் மறந்து போகலாம்.
நாம் மறக்ககூடாது.
நினைவுப்படுத்திக்கொண்டே இருப்போம்.

கொரானாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்தார்கள்.
நின்று கொல்லும் அரசுக்கு?