பவித்ரன் : என் மனைவி என்னோடு பணிக்கு வரும் சனல் என்ற கூட்டாளியுடன் ஓடிப் போய் விட்டாள். அவள் போனதைக் கூட விட்டு விடலாம் என் மகளையும் அல்லவா கொண்டு போய் விட்டாள். என் மகள் இல்லாமல் என்னால் உறங்க முடிவதில்லை சார். அவளுக்கு ஐந்து வயசு. நான் என் மனைவிக்கு எந்தக் குறையும் வச்சதில்லை. அப்படி ஏதும் குறை இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.
போலீஸ் அதிகாரி பிஜு : உன் மனைவி சிந்து உன் மீது எந்தக் குறையும் சொல்லவில்லை ஆனால் உன்னோடு அவள் வாழத் தயாராகவில்லையாம். உன் நண்பனையே அவள் பெரிதும் நேசிக்கிறாள்.
பவித்ரன் : அவள் விருப்பம் அதுவாக இருந்தால் அவள் அவனோடே போகலாம், ஆனால் என் மகள் எனக்கு வேணும்
சிந்து : (போலீஸ் அதிகாரியை நோக்கி) அது சரி வராது சார்
பவித்ரன் : சிந்து ! நீ அவனோடு போவதென்றால் தாராளமாகப் போ ஆனால் என் மகள் எனக்கு வேணும் அவளுக்காக நான் எந்த எல்லை வரை போவேன் என்று எச்சரிக்கிறேன் உன்னை
போலீஸ் அதிகாரி பிஜு :.இங்கே இந்த மாதிரி வாய்ச்சவடால் வேண்டாம் பவித்ரன். நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன். திங்கள் முதல் வெள்ளி வரை தாய் சிந்துவுடனும் சனி, ஞாயிறு தந்தை பவித்ரனுடனும் மகள் இருக்கட்டும்.
பவித்ரன் : எனக்கு அதில் சம்மதம் சார்
சிந்து : அது சரிப்பட்டு வராது சார்
போலீஸ் அதிகாரி பிஜு : என்னைக் கடுமையான ஆள் ஆக்க வேண்டாம் நான் சொன்ன தீர்மானம் பிரகாரம் தான் இது நடக்கணும்
சிந்து : இல்லை சார் என் மகளை விட்டு நான் பிரிய மாட்டேன். பவித்ரன் தன்னுடைய மகளாக எண்ணிக் கொண்டிருக்கும் அவள் அவரின் மகள் அல்ல. சனல் தான் அவளின் உண்மையான தந்தை.
சரி இந்த உரையாடலைப் படித்து விட்டு அப்படியே போய் இங்கே கொடுத்திருக்கும் காணொளியில் 4:59 வது நிமிடத்தைப் பாருங்கள். வெடித்து அழ வேண்டும் போலிருக்கும். அப்படியொரு மனதைக் குதறிப் போடும் காட்சி.
பிள்ளைப் பாசத்தால் ஏங்கும் பவித்ரன் என்ற பாத்திரத்தில் சுராஜ் தோன்றும் காட்சியைப் படம் பார்த்த நாள் முதல் ஏதோ என் உடம்பின் ஒரு செல்லில் ஒட்டியது போல இப்போது அந்தக் காட்சியை நினைத்தாலும் வலிக்கும், நெஞ்செரியும்.
தன் பிள்ளை போன ஆற்றாமை, சரி வாரத்தில் இரண்டு நாளாவது காணப் போகிறோமே என்ற எதிர்பார்ப்பு, அது கை கூடாத சூழலில் எழும் சினம், தன் மகள் தன் மகளல்ல என்று கேட்கும் கணம் உடைந்து விசும்பி விசும்பிக் கரைந்து அந்தப் பிள்ளையை உச்சி மோந்து பரிதவித்து அழுகை, எல்லாமே சூனியமாகிப் போய் விட்ட நிலையில் நடை தளர்ந்து தலையைச் சொறிந்து கொண்டே போகும் அந்தத் தொய்வு
இப்போது சொல்லுங்கள் இதை விட எந்த மாதிரியானதொரு காட்சி இவ்வளவு தூரம் மனதைத் தைக்கும்? இன்னொருவனுடைய அந்த வாழ்வியலின் தோல்வியை நம் தலையில் ஏற்றக் கூடிய இம்மாதிரியான படைப்பைத் தாண்டி எது நிற்கும்?
இந்தா இனிமேல் என் மகள் எமக்குச் சொந்தமானவள் இல்லை என்று தன் ஆயுள் முழுக்கக் கொடுக்க இருக்கும் முத்தங்களைக் கொட்டித் தீர்ப்பானே அப்போது கூடவா அழுகை வரவில்லை?
இந்தக் காட்சி அனுபவத்தை மீளவும் தரிசித்து எழுதுவதற்காக Action Hero Biju படத்தைப் பார்த்தேன். உடம்பை யாரோ அடித்துப் போட்டது போன்று துவண்டு விட்டேன் அப்பேர்ப்பட்டதொரு நடிப்பு சுராஜிடமிருந்து. இதை நடிப்பு என்று எழுதவே மனம் கூசுகின்றது. எழுதும் போதே தளர்ந்து போனேன். அவ்வளவுக்கு ஒரு வலிமையான வலியெழுப்பும் காட்சி இது.
ஒரு வெற்றிகரமான நகைச்சுவை நடிகனால் பின்னர் எப்பேர்ப்பட்ட சாகித்தியங்களையும் காட்ட முடியும் என்பதற்கு நம்மூர் நாகேஷ், வடிவேலு காலம் போல் மலையாளச் சலனச் சித்திர உலகில் எத்தனையோ ஆளுமைகள். அதில் சுராஜ் இந்த மாதிரி ஒரு தேசிய “விருந்தைக்” கொடுத்து விட்டார்.
படப்படிப்பு live recording முறையில் ஒரு படப்படிப்புத் தளத்தில் பதிவு பண்ணப்பட்டது. இந்தக் காட்சியை நடித்து முடித்த சுராஜ் என்னடா யாரும் பேசாமல் இருக்கிறார்களே என்று தனக்குள் கேள்வியெழுப்ப, பிறகு தான் தெரிந்தது. எல்லோரும் உறைந்து போய் சில நிமிடம் இருந்து பின் கரகோஷம் எழுப்பினார்களாம்.
Action Hero Biju சின்னச் சின்னக் குறும் படம் போலக் காவல்துறையில் சட்டம், ஒழுங்கு சம்பந்தப்பட்ட சிக்கல்களைக் கதைகளாகக் கொண்டது. இதை விட நல்ல படங்கள் உண்டு என்றாலும் இந்தக் காட்சி ஒன்றே போதும் கொண்டாட!
கானா பிரபா
22.08.2019
0 பின்னூட்டங்கள்:
Post a Comment