> குருத்து

May 31, 2009

ஒப்பந்த தொழிலாளியைப் பாதுகாக்க சட்டம் இல்லை! தீர்வு?

இந்த பதிவில்....

//ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்க பாராளுமன்றத்தில் தீர்வு இல்லை. சுதந்திரம் வந்ததா சொல்றான்! 60 ஆண்டு காலமாக 12 தேர்தல். பல பிரதம மந்திரிகள். பல தொழிலாளர் மந்திரிகள், ஆனால், ஒப்பந்த தொழிலாளியை பாதுகாக்க இதுவரை விவாதமும் நடத்தவுமில்லை. சட்டமும் இல்லை. சமூக நீதியோ, சட்ட பாதுகாப்போ இல்லை.//

//தீர்வு தான் என்ன?

சங்கமாக சேர்! சங்கத்தை வலுப்படுத்து! போராடு! சண்டையிடு!
அடி! (கைத்தட்டல்)

- வழக்கறிஞர் பாலன், உயர்நீதி மன்றம், பெங்களூர்.

*****

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தரப்படும் கூலி எவ்வளவு? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?

ஒப்பந்த தொழில் செய்யும் நகரச் சுத்தி தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ. 63. ஹெச்.ஏ.எல். ல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ. 118 கூலி. BSNL – ல் வெலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ. 30 கூலி. இந்த கூலியை பெற்று, எந்த மாதிரி வாழ்க்கை நடத்த முடியும்?

அவர்கள் எங்கு வாழ்கிறார்கள்?

சென்னை, பெங்களுர், மும்பை, கல்கத்தா போன்ற இடங்களில் குடிசைப் பகுதியில் வீடு வேண்டும் என்றால் கூட ரூ. 1500 கூலி. போக்குவரத்து, பிள்ளைகளுக்கு கல்வி செலவு, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழக்கூடிய தொழிலாளர்கள்.

இவர்கள் சங்கமாக திரள முடியாது. சங்கமாக திரண்டால் உடனே நிர்வாகம் வேலை நீக்கம் செய்துவிடும்.

வேலை நீக்கம் செய்தால்... நீதிமன்றத்துக்கு போகணும். தொழிலாளர் துறைக்கு கன்சுலேசன் போடணும். எல்லாம் சரி! எங்கே சட்டம்? ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டம் எங்கே? ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டம் இதுவரைக்கும் வரவில்லை. Contract workers regulation and abolition act என்று இருக்கிறது. பல்லே இல்லாதது. கடிக்காது.

சட்டம் எங்கே? சட்டம் இல்லை. கன்சுலேசன் போட்டால்.. ஒண்ணும் பண்ண முடியாது சார்! நீங்க அப்படியே அட்ஜட்ஸ் பண்ணிகிட்டு போங்க! என நம்மிடம் சொல்கிறான்.
டிஸ்பூட் எழுப்பி நிர்வாகத்துக்கு (Management) நோட்டீஸ் அனுப்பினால், கன்சுலேசன் அதிகாரி முன்பு அவன் வருவதில்லை. எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறான்.

நிரந்தர தொழிலாளிக்கு தான் சங்கம் இருக்கிறது. அதை அங்கீகரிச்சுருக்கோம். காண்டிராக்ட் தொழிலாளர் சங்கம் என்ற சங்கமே கிடையாது. அதனால நாங்க வர்றதில்ல! என்கிறான்.

கன்சுலேசன் ஆபீசர் சொல்கிறார் “ஒண்ணும் பண்ண முடியாது?” நிர்வாகத்தின் மேலே நடவடிக்கை எடுக்கிறதுக்கு எங்கே சட்டம்?

சரி! பெயிலுர் அறிக்கையை தில்லிக்கு அனுப்பு! தில்லிக்கு போய் ‘பஞ்சப்படி கொடு’ என ஒரு கன்சுலேசன். ‘போனஸ் கொடு’ என ஒரு கன்சுலேசன். அங்கிருந்து பல காலம் கழித்து நமக்கு பதில் வருகிறது.
உங்களுக்கு
பஞ்சப்படி இல்லை.
போனசு இல்லை.
குறைந்தபட்ச ஊதியம் இல்லை
வேலை நேரம் இல்லை


“ரிஜக்ட்டடு” (Rejected)

அதுக்கு மேலே நீதிமன்றத்துக்கு போக முடியாது. ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்க பாராளுமன்றத்தில் தீர்வு இல்லை. சட்டம் இல்லை. சுதந்திரம் வந்ததா சொல்றான்! 60 ஆண்டு காலாமாக 12 தேர்தல். பல பிரதம மந்திரிகள். பல தொழிலாளர் மந்திரிகள், நிதி அமைச்சர்கள், எம்பிக்கள். ஆனால், ஒப்பந்த தொழிலாளியை பாதுகாக்க இதுவரை விவாதமும் நடத்தவுமில்லை. சட்டமும் இல்லை. அதனால் பாராளுமன்றத்தின் மூலமாக இந்த தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. சமூக நீதியோ, சட்ட பாதுகாப்போ இல்லை.
சட்டம் இல்லை.
சட்டம் இருந்தால் தான் நீதிமன்றம்
(சட்டம், நீதிமன்றம் இருந்தாலே, நிர்வாகம் மதிக்கமாட்டான்.) இரண்டும் இல்லையென்றால், நிர்வாகத்தினரிடமும் போகமுடியாது. எங்கே போவது?

தீர்வு தான் என்ன?

சங்கமாக சேர்! சங்கத்தை வலுப்படுத்து! போராடு! சண்டையிடு!
அடி! (கைத்தட்டல்)
நிர்வாகத்தின் கேட்டை மூடு! நிர்வாகத்தினர் எவனும் கார்ல போக கூடாது. காரை வழிமறி! எச்சரிக்கை கொடு!
உதை! (கைத்தட்டல்)
அடித்தால் திருப்படியடி!
போலீசு தாக்கினால் திருப்பித் தாக்கு! (கைத்தட்டல்)

தனிமனித தீவிரவாதத்தை சொல்லவில்லை. உன்னுடைய உரிமை. நீ உழைக்கிறாய். உனக்கு சம வேலைக்கு சமகூலி கொடு.

நான் டிரைவர். அவனும் டிரைவர்.
நான் கணிப்பொறியில் வேலை செய்பவன்.
அவனும் கணிப்பொறியில் வேலை செய்பவன்.
நான் பெயிண்டர். அவனும் பெயிண்டர்.

அவனுக்கு 20000 சம்பளம். எனக்கு ரூ. 2000 சம்பளம். சம வேலைக்கு சம கூலி கொடு. இதைத்தான் இந்திய அரசியல் சாசன சட்டம் சொல்கிறது. சட்டத்தின் ஷரத்துப் படி தான் நான் கேட்கிறேன். என்னை வஞ்சிப்பவன் யார்? ஒரு முதலாளி. அவன் நிர்வாகி. சட்டத்தை மீறுபவன் அவன். நானல்ல!

நமக்கு நடைமுறை அனுபவங்கள் இருக்கிறது. ஒரு மத்திய தொழிற்சாலையில்....

... மீதி அடுத்த பதிவில் தொடரும்.

****

பின்குறிப்பு : கடந்த ஜனவரி 25-ம் தேதியன்று, சென்னனயில் நடந்த முதலாளித்துவ பயங்கரவாத மாநாட்டில் வழக்கறிஞர் தோழர் பாலன் பேசிய உரையின் மூன்றாவது பகுதி இது. முதல் பகுதியைப் படிக்க... கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

உரையின் முதல் பகுதி

உரையின் இரண்டாவது பகுதி
****

நன்றி : மாநாட்டின் உரைகளை தொகுத்து, எம்பி3 வடிவில்...டிவிடி-யை ரூ. 30க்கு வெளியிட்டிருக்கிறார்கள். வாங்கி கேளுங்கள். புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் அனுமதியுடன் இங்கு பதிவிடுகிறேன்.

May 30, 2009

‘அண்ணன்’ அழகிரி அமைச்சர் அழகிரி ஆகிவிட்டார்!


முதலில் நமது வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம். மதுரையில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இனிப்புகள் வழங்கப்படுகின்றன. மதுரை அமர்க்களப்படுகிறதாம்.

மதுரையை ‘கூடல் மாநகரம்’. கோவில் மாநகரம்’ என்றும், அந்த மண்ணை அன்னை மீனாட்சி ஆள்கிறாள் என்பார்கள். அதெல்லாம் பக்தியில் திளைப்பவர்களும், அரசியல் வாடை சிறிதும் இல்லாத பாமர ஜனங்கள் சொல்வது. மதுரையை ‘அண்ணன்’ ஆள ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன.


அதனால் தான் தேர்தலில் ஜெயித்து, மந்திரி பதவி கிடைத்ததும், ‘அண்ணனின்’ அன்பு தம்பிகள் மதுரையை ‘அழகிரியார் மாவட்டமாக’ அறிவித்து போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.

பிரதமரும், சோனியாவும் ‘திறமையான’ ஆட்களுக்கு தான் மந்திரி பதவி கொடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ! ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரிக்கு கச்சிதமாய் பொருந்தும். கேபினட் மந்திரி பதவி இப்பொழுது தந்ததற்காக வாழ்த்துக்களை சொல்வதை விட, தாமதமாய் தந்ததற்காக நாம் கண்டனம் தான் தெரிவிக்க வேண்டும்.

ஓட்டு சீட்டு அரசியலுக்கு எப்பேர்ப்பட்ட திறமையானவர் ‘அண்ணன்’ அழகிரி. காண்டிராக்டா? கட்ட பஞ்சாயத்தா? அடிதடியா? கொலையா? தேர்தலில் ஜெயிக்க வேண்டுமா? – இப்படி வார்த்தைகளில் ‘அண்ணன்’ அழகிரியின் அருமை பெருமைகளை விளக்குவது அவரை சிறுமைப்படுத்துவதாகும். மதுரையில் அவரின்றி ஓர் அணுவும் அசையாது. அவ்வளவு தான். எதிர்கட்சிகள் இன்றைக்கும் அவரை ‘ரவுடி’ என்று தான் அழைக்கின்றனர்.

“அழகிரிக்கு சொத்து பிரச்சனையில்லை. அதிகாரத்தை நிறைய ருசித்தவர் (!). ஆகவே, ஓட்டு சீட்டு அரசியல்வாதிக்கே உரிய முதிர்ச்சி பெற்று, திருந்திவிடுவார்’ – என தினமணி தலையங்கம் எழுதுகிறது.

திருமாவளவன் முன்பு தேர்தல் புறக்கணிப்பில் இருக்கும் பொழுது “வாய் வழியாக அமிர்தமே உள்ளே போனாலும், வெளியே வரும் பொழுது .வி.....யாக வரும்”. அது போல தான், எவ்வளவு நல்லவராக இருந்தாலும் இந்த சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் பங்கேற்றால் கழிசடையாக தான் உருமாறிப்போவார்” என்றார்.

‘அண்ணன்’ அழகிரியோ உள்ளே போகும் பொழுதே, வி....யாக தான் உள்ளே போகிறார். தினமணி நம்பட்டும்.

அண்ணனுக்கு கேபினட், தம்பிக்கு துணை முதல்வர். மற்றவர்களுக்கும் உரிய, உயரிய பதவிகள். இனி, கருணாநிதி தன் மீளாத் தூக்கத்தை நிம்மதியாக துவங்குவார்.

ஆனால், நிம்மதியை காவு கேட்கும் டிராகுலாக்களை மக்கள் தான் எப்படி சமாளிக்க போகிறார்களோ!

May 28, 2009

அமைப்பு சாரா தொழிலாளியின் அவல நிலை!

- வழக்கறிஞர் பாலன், உயர்நீதி மன்றம், பெங்களூர்.

குறிப்பு : கடந்த ஜனவரி 25ம் தேதியன்று அம்பத்தூரில் முதலாளித்துவ பயங்கரவாத மாநாடு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பால் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் பேசிய உரையை, சம்பந்தப்பட்ட அமைப்பின் அனுமதியுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
*****
யாரிந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள்? ஏனெனிந்த நிலைமை? அவர்கள் எந்தெந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற கான்டிராக்ட் கலாச்சாரம் இந்த நாட்டில் கொண்டுவரப்பட்டது. கான்டிராக்ட் முறை என்றால் என்ன? வெள்ளைக்காரன் ஆட்சி செய்யும் பொழுது, கங்காணிமுறை என்றிருந்தது. பர்மா, இலங்கை, பினாங்க்கு தோட்ட தொழிலில், காடுகளில் வேலை செய்ய தமிழ்நாட்டிலிருந்தும், கேரளாவிலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் ஆட்களை கொண்டு சென்றார்கள். அந்த முறைக்கு பெயர் தான் கங்காணி முறை.

சுதந்திரத்திற்கு பிறகு சிறுக சிறுக ஒப்பந்த தொழிலாளர்களை மத்திய, மாநில அரசு துறைகளிலும், மற்றும் பெல், லிக்னெட் கார்ப்பரேசன், உர நிறுவனம், எண்ணெய் நிறுவனங்களில் நியமிக்க தொடங்கினார்கள். அரசு என்பது ஒரு முன்மாதிரி வேலைதருபவராக (Model Employer) நடந்து கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால், அரசே இங்கு ஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்தி தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுகிறது.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி ரூ. 3000. நிரந்தர தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலி ரு. 12,000. நான்கில் ஒரு பங்கு தான் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி.

ஒப்பந்த தொழிலாளியின் முதலாளி யார்?

ஒப்பந்த தொழிலாளி வேலை செய்யும் இடம் பொதுத்துறை நிறுவனம். தொழிலாளியிடம் வேலை வாங்குபவன் பொதுத்துறையை சேர்ந்த மேனேஜர்ஸ், ஆபிஸர்ஸ். அந்த தொழிலாளி அந்த துறையில் உற்பத்தி பிரிவில்.. வெல்டராக (Welder) வேலை செய்வான்.

அவனருகிலேயே அதே வேலை, வேலையின் அளவு செய்யும் நிரந்தர தொழிலாளிக்கு சம்பளம் ரூ. 12,000. ஒப்பந்த தொழிலாளிக்கு சம்பளம் ரூ. 3000 மட்டும்.

நிரந்தர தொழிலாளிக்கு

போக்குவரத்து படி உண்டு
கேன்டின் வசதி உண்டு
வீட்டு வசதி உண்டு
பிள்ளைகளுக்கு கல்வி வசதி உண்டு
சங்கம், சங்க அலுவலகம் அனுமதி உண்டு
ஸ்டாண்டிங் ஆர்டர் உண்டு.

இதில் எந்த சலுகையும் ஒப்பந்த தொழிலாளிக்கு கிடையாது. ஒப்பந்த தொழிலாளியை எப்பொழுது வேண்டுமென்றால் பணியில் அமர்த்தலாம். வேண்டாம் என்றால் தூக்கியெறியலாம்.

சமூக பாதுகாப்பும், சட்ட பாதுகாப்பும், வாழ்வதற்கு போதிய ஊதியமும் இல்லாமல் வாழ்பவன் ஒப்பந்த தொழிலாளி.

ஒப்பந்த தொழிலாளி தொழிலாளிக்கான உரிமையை கூட கேட்க முடியாது. சங்கமாக சேரக்கூடாது. அப்படியே சங்கமாக சேர்ந்தாலும் நிர்வாகம் அச்சங்கத்தை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதில்லை.

ஒப்பந்த தொழிலாளி கூலி உயர்வு கேட்டால்... நிர்வாகம் “நீ என்னுடைய தொழிலாளி அல்ல” என்பான். கான்டிராக்டரிடம் போய் கேட்டால், நிர்வாகம் என்ன குடுக்கிறானோ அதை தான் உன்னிடம் கொடுக்கிறேன். கூடுதலாய் வேண்டுமென்றால், நிர்வாகத்தைப் போய்க்கேள் என்பான். இங்கே கேட்டால் அங்கே கேள்! அங்கு கேட்டால் இங்கே கேள்! என்கிறான்.

கான்டிராக்ட் முறை என்பதே அரசு தெரிந்தே செய்யும் மோசடி. யாரை மோசடி செய்கிறது இந்த அரசு? பாகிஸ்தானியனையோ, இலங்கைகாரனையோ அல்ல! இந்த நாட்டின் குடிமகன்களை மோசடி செய்கிறான். இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லக்கூடிய அரசு வஞ்சிக்கிறது.

ஒப்பந்த தொழிலாளர்கள் தரப்படும் கூலி எவ்வளவு? அதைக் கொண்டு அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?

மீதி அடுத்த பதிவில் தொடரும்.

****

பின்குறிப்பு : கடந்த ஜனவரி 25-ம் தேதியன்று, சென்னனயில் நடந்த முதலாளித்துவ பயங்கரவாத மாநாட்டில் வழக்கறிஞர் தோழர் பாலன் பேசிய உரையின் இரண்டாவது பகுதி. முதல் பகுதியைப் படிக்க... கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

உரையின் முதல் பகுதி

****

மேலும் சில குறிப்புகள்

வழக்கறிஞர் பாலன் சொல்வது பல பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களைப் பற்றி சொல்கிறார். ஆனால், தனியார் துறை நிறுவனங்களில் தான் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும், பாலன் அவர்கள் சொல்வதை விட அவலங்களும் நிரம்பியது. அவருடைய உரையின் பின்பாதியில் அதை பற்றியும் விவரிக்கிறார். தொடந்து படித்து வாருங்கள். நன்றி.