> குருத்து: குறைந்தபட்ச ஊதியமில்லை! தொழிற்சங்க உரிமையில்லை!

May 27, 2009

குறைந்தபட்ச ஊதியமில்லை! தொழிற்சங்க உரிமையில்லை!

வேலை நேரத்திற்கு வரம்பில்லை!
குறைந்தபட்ச ஊதியமில்லை!
தொழிற்சங்க உரிமையில்லை!
உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்!


வழக்கறிஞர் தோழர் சி.பாலன், கர்நாடக உயர்நீதி மன்றம், பெங்களூர்.

கடந்த ஜனவரி 25ம் தேதியன்று அம்பத்தூரில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் இணைந்து ‘முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” ஒன்றை சிறப்பாக நடத்தினார்கள். அதில் காலை அமர்வில்.. மேலே குறிப்பிட்ட தலைப்பில் வழக்கறிஞர் தோழர் பாலன் அருமையானதொரு சிறப்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சிகளைத் தொகுத்து, இப்பொழுது எம்.பி. 3 வடிவில் ரூ. 30 க்கு டிவிடி வெளியிட்டிருக்கிறார்கள். அவருடைய உரையில்... சம்பளம் என்றால் என்னென்ன அம்சங்கள் அடங்கியது. அமைப்புச் சார்ந்த தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள், அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பின்மை, ஒப்பந்தகாரர்கள் என்றால் யார்?, தொழிலாளர் நலனில் அரசின் போக்கு, போராட்ட அனுபங்கள் என அரிய தகவல்கள் இருந்தன.

அதை பலருடன் பகிர்ந்து கொள்ளலாமே என தோன்றியது. சம்பந்தப்பட்ட அமைப்பின் அனுமதியுடன் பதிவிடுகிறேன். என்ன தான் எழுத்தில் பதிவிட்டாலும், இந்த உரையை அவர் குரலில் கேட்கவேண்டும். உரை வீச்சில் இருந்த கோபம், எழுச்சி நம்மை தொற்றிக்கொள்ளக்கூடியது. நம்மை இயங்க வைக்க கூடியது.

அவருடைய உரை 1 மணி நேரம் என்பதால்... மூன்று, நான்கு பதிவுகளாக இடலாம் என்றிருக்கிறேன்.

நன்றி : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் சகோதர அமைப்புகளுக்கு.

****

தோழர்களே!

உழைப்பின் பலன், உழைப்பாளன் பெறவேண்டும் என்பது உழைப்பாளனின் உரிமை. இது யாரோ கொடுக்கும் நீதியுமல்ல! தானமும் அல்ல! தொழிலாளர்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு, தொழிலாளியின் உரிமைகள் சில சட்டமாக்கப்பட்டன. வரையறுக்கப்பட்டன. தொழிற்சங்கம் வைத்துக்கொள்ளும் சட்டம், தொழிற் தகராறு சட்டம், தொழிற்சாலை சட்டம், ஊதிய சட்டம் என பல சட்டங்கள் போடப்பட்டடன.

ஊதியம் என்றால் என்ன?

ஊதியம் என்றால் அடிப்படை சம்பளம், பஞ்சப்படி, சிப்ட் படி, கல்விபடி, கேண்டின்படி, மருத்துவபடி, இந்த படிகள் எல்லாம் சேர்ந்தது தான் சம்பளம். 7 லிருந்து 10 அம்சங்கள் கொண்டது தான் சம்பளம்.

இந்த சம்பளத்தை தான், அமைப்பு சார்ந்த தொழிலாளர்களான வங்கி ஊழியர்கள், இன்சூரன்ஸ் ஊழியர்கள், மத்திய மாநில ஊழியர்கள் ரூ. 8000 லிருந்து ரூ. 10,000, ரூ. 15000, ரூ. 25,000 என சம்பளம் பெறுகிறார்கள். இவையெல்லாம் போராடி பெற்ற ஊதியம்.

ஊதியத்தை பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

நமது அரசியல் சாசன சட்டப்படி, ஷரத்து 43, ஷர. 39 படி தொழிலாளர்கள் வாழ்வதற்காக நாட்டின் வளங்கள் பகிர்ந்து அளிக்கப்படும். ஷர. 43 – வாழ்வதற்கான ஊதியம், வாழ்வதற்கான சூழல், இது நம்முடைய அரசியல் சாசன சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஜெர்மனியில்... உற்பத்தியில் ஈடுபடும் ஒரு தொழிலாளிக்கு கொடுக்கப்படும் ஊதியம் ஒரு மணி நேர உழைப்புக்கு 32 டாலர்.
(இந்திய பண மதிப்பில்) ரூ. 1600. 8 மணி நேர உழைப்பு. ஒரு மாத ஊதியம் ரூ. 3,84,000.

ஜப்பானில்... ஒரு மணி நேரத்திற்கு ரூ. 24 டாலர். மாத ஊதியம் ரூ. 2 லட்சத்துக்கு மேல்.

அமெரிக்காவில் – ஒரு மணி நேரத்திற்கு ரூ. 17 டாலர். மாத ஊதியம் ரூ. 2,07,000

நமது நாட்டிலும் இப்படி வரையறுக்கப்பட்டுள்ள ஊதியம் எத்தனை பேருக்கு கிடைக்கிறது?

தொழிலாளர் நலச்சட்டத்தால் வரையறுக்கப்பட்ட ஊதியம்

1980ம் ஆண்டு - 20% தொழிலாளர்களுக்கு
1990ம் ஆண்டு - 10% தொழிலாளர்களுக்கு
2005ம் ஆண்டு – 5% தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் சலுகைகள் பெறாத தொழிலாளர்களின் எண்ணிக்கை

1990ம் ஆண்டில் – 29 கோடி தொழிலாளர்கள்.
2000ம் ஆண்டில் – 37.5 கோடி தொழிலாளர்கள்

இந்த நாட்டில் மொத்தம் உள்ள (2005ம் ஆண்டு கணக்கின் படி) 45 கோடியே 97 லட்சம் தொழிலாளர்களின் எண்ணிக்கையில்...இந்த சட்டங்கள் சலுகைகள் எல்லாம் அமைப்பு சார்ந்த தொழில் 2 கோடியே 60 லட்சம் பேருக்கு மட்டும் தான். மீதமுள்ள 43 கோடியே 30 லட்சம் தொழிளார்களுக்கு ஊதிய சலுகைகள் இல்லை. சட்ட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, வாழவதற்கான ஊதியம் என எதுவுமே இல்லை.

நான் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவன். அங்கு
அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 18 லட்சம்.
அமைப்பு சாராத தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 18 லட்சம் பேர்.

தமிழகத்திலும் இந்த நிலைமை தான் இருக்கும். சில லட்சம் தொழிலாளர்களுக்கு அனைத்து சலுகைகளும். கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு சலுகைகளே இல்லை. இது தான் இந்த நாட்டின் எதார்த்த நிலை.

யாரிந்த அமைப்பு சாராத தொழிலாளர்கள்?

- அடுத்த பதிவில் தொடரும்.

6 பின்னூட்டங்கள்:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு தோழரே

குருத்து said...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஞானசேகரன்.

Anonymous said...

good post

Anonymous said...

நல்ல பதிவு. ஒப்பந்த தொழிலாளர்கள் பற்றி வேறு ஏதும் கட்டுரைகள் இருந்தால், இணைக்கலாமே!

ak said...

அய்யா உங்கள் முகநூல் முகவரி தரலாமே

குருத்து said...

நணபர் AK அவர்களுக்கு,


நான் முகநூலில் இயங்கவில்லை. சந்தேகம் அல்லது விவாதிக்க என்னை தொடர்புகொள்ள கேட்கிறீர்களா? அல்லது தொடர்ச்சியாக கட்டுரைகளை படிக்க கேட்கிறீர்களா?