> குருத்து: அமைப்பு சாரா தொழிலாளியின் அவல நிலை!

May 28, 2009

அமைப்பு சாரா தொழிலாளியின் அவல நிலை!

- வழக்கறிஞர் பாலன், உயர்நீதி மன்றம், பெங்களூர்.

குறிப்பு : கடந்த ஜனவரி 25ம் தேதியன்று அம்பத்தூரில் முதலாளித்துவ பயங்கரவாத மாநாடு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பால் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் பேசிய உரையை, சம்பந்தப்பட்ட அமைப்பின் அனுமதியுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
*****
யாரிந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள்? ஏனெனிந்த நிலைமை? அவர்கள் எந்தெந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?

ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற கான்டிராக்ட் கலாச்சாரம் இந்த நாட்டில் கொண்டுவரப்பட்டது. கான்டிராக்ட் முறை என்றால் என்ன? வெள்ளைக்காரன் ஆட்சி செய்யும் பொழுது, கங்காணிமுறை என்றிருந்தது. பர்மா, இலங்கை, பினாங்க்கு தோட்ட தொழிலில், காடுகளில் வேலை செய்ய தமிழ்நாட்டிலிருந்தும், கேரளாவிலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் ஆட்களை கொண்டு சென்றார்கள். அந்த முறைக்கு பெயர் தான் கங்காணி முறை.

சுதந்திரத்திற்கு பிறகு சிறுக சிறுக ஒப்பந்த தொழிலாளர்களை மத்திய, மாநில அரசு துறைகளிலும், மற்றும் பெல், லிக்னெட் கார்ப்பரேசன், உர நிறுவனம், எண்ணெய் நிறுவனங்களில் நியமிக்க தொடங்கினார்கள். அரசு என்பது ஒரு முன்மாதிரி வேலைதருபவராக (Model Employer) நடந்து கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால், அரசே இங்கு ஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்தி தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுகிறது.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி ரூ. 3000. நிரந்தர தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலி ரு. 12,000. நான்கில் ஒரு பங்கு தான் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி.

ஒப்பந்த தொழிலாளியின் முதலாளி யார்?

ஒப்பந்த தொழிலாளி வேலை செய்யும் இடம் பொதுத்துறை நிறுவனம். தொழிலாளியிடம் வேலை வாங்குபவன் பொதுத்துறையை சேர்ந்த மேனேஜர்ஸ், ஆபிஸர்ஸ். அந்த தொழிலாளி அந்த துறையில் உற்பத்தி பிரிவில்.. வெல்டராக (Welder) வேலை செய்வான்.

அவனருகிலேயே அதே வேலை, வேலையின் அளவு செய்யும் நிரந்தர தொழிலாளிக்கு சம்பளம் ரூ. 12,000. ஒப்பந்த தொழிலாளிக்கு சம்பளம் ரூ. 3000 மட்டும்.

நிரந்தர தொழிலாளிக்கு

போக்குவரத்து படி உண்டு
கேன்டின் வசதி உண்டு
வீட்டு வசதி உண்டு
பிள்ளைகளுக்கு கல்வி வசதி உண்டு
சங்கம், சங்க அலுவலகம் அனுமதி உண்டு
ஸ்டாண்டிங் ஆர்டர் உண்டு.

இதில் எந்த சலுகையும் ஒப்பந்த தொழிலாளிக்கு கிடையாது. ஒப்பந்த தொழிலாளியை எப்பொழுது வேண்டுமென்றால் பணியில் அமர்த்தலாம். வேண்டாம் என்றால் தூக்கியெறியலாம்.

சமூக பாதுகாப்பும், சட்ட பாதுகாப்பும், வாழ்வதற்கு போதிய ஊதியமும் இல்லாமல் வாழ்பவன் ஒப்பந்த தொழிலாளி.

ஒப்பந்த தொழிலாளி தொழிலாளிக்கான உரிமையை கூட கேட்க முடியாது. சங்கமாக சேரக்கூடாது. அப்படியே சங்கமாக சேர்ந்தாலும் நிர்வாகம் அச்சங்கத்தை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதில்லை.

ஒப்பந்த தொழிலாளி கூலி உயர்வு கேட்டால்... நிர்வாகம் “நீ என்னுடைய தொழிலாளி அல்ல” என்பான். கான்டிராக்டரிடம் போய் கேட்டால், நிர்வாகம் என்ன குடுக்கிறானோ அதை தான் உன்னிடம் கொடுக்கிறேன். கூடுதலாய் வேண்டுமென்றால், நிர்வாகத்தைப் போய்க்கேள் என்பான். இங்கே கேட்டால் அங்கே கேள்! அங்கு கேட்டால் இங்கே கேள்! என்கிறான்.

கான்டிராக்ட் முறை என்பதே அரசு தெரிந்தே செய்யும் மோசடி. யாரை மோசடி செய்கிறது இந்த அரசு? பாகிஸ்தானியனையோ, இலங்கைகாரனையோ அல்ல! இந்த நாட்டின் குடிமகன்களை மோசடி செய்கிறான். இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லக்கூடிய அரசு வஞ்சிக்கிறது.

ஒப்பந்த தொழிலாளர்கள் தரப்படும் கூலி எவ்வளவு? அதைக் கொண்டு அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?

மீதி அடுத்த பதிவில் தொடரும்.

****

பின்குறிப்பு : கடந்த ஜனவரி 25-ம் தேதியன்று, சென்னனயில் நடந்த முதலாளித்துவ பயங்கரவாத மாநாட்டில் வழக்கறிஞர் தோழர் பாலன் பேசிய உரையின் இரண்டாவது பகுதி. முதல் பகுதியைப் படிக்க... கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

உரையின் முதல் பகுதி

****

மேலும் சில குறிப்புகள்

வழக்கறிஞர் பாலன் சொல்வது பல பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களைப் பற்றி சொல்கிறார். ஆனால், தனியார் துறை நிறுவனங்களில் தான் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும், பாலன் அவர்கள் சொல்வதை விட அவலங்களும் நிரம்பியது. அவருடைய உரையின் பின்பாதியில் அதை பற்றியும் விவரிக்கிறார். தொடந்து படித்து வாருங்கள். நன்றி.

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சோதனை