> குருத்து

January 31, 2012

கூடங்குளம் அணு உலையை இழுத்துமூடு! ‍ சிறு வெளியீடு!


மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலைவைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்துமூடு!

"மக்களின் உயிருக்கு உலைவைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்துமூடு!"என கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்கள் தொடர்போராட்டங்களை கடந்த 5 மாதங்களாக நடத்திவருகிறார்கள். பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும் வந்திருந்து, போராட்டங்களுக்கு வலுசேர்க்கிறார்கள். வெற்றிகரமாக தமிழகம் தழுவிய போராட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது.

போராடுகிற மக்களுக்கு அணு உலை ஏற்படுத்தும் கொடிய நோய்கள், வாழ்வாதாரப் பிரச்சனைகள் தான் போய் சேர்ந்திருக்கிறது. அணு சக்தி, அணு உலை ஒப்பந்தங்கள் எல்லாம் அடிமை ஒப்பந்தங்கள் என்ற அரசியல் முக்கியத்துவத்தையும் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பொழுது, இன்னும் போராட்டம் வலுப்படும்.

அரசும், காங்கிரசும், இந்துத்துவவெறியர்களும் இந்த போராட்டத்தை குலைப்பதற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து இந்த அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை வெற்றிபெற ஒன்றிணைவோம்!

அதற்கு இந்த சிறுவெளியீடு பயன்படும். படியுங்கள். பரப்புங்கள்.

விலை: ரூ. 5

பக்கங்கள் : 16

தமிழக உழைக்கும் மக்களே!

இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும்
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!

பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்து பொய்யும் புரட்டும் பேசி
பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
பாமர மக்களின் உயிரைக் காவு கொடுக்கும்
அணு விஞ்ஞானிகளின் உண்மை உருவத்தைத் தோலுரிப்போம்!

அணு மின்சாரத்தை விட மலிவான், ஆபத்தில்லாத,
சுற்றுச்சூழலை நாசமாக்காத காற்றாலை, கடலலை,
சூரிய ஒளி மின்நிலையங்களை அமைக்கப்போராடுவோம்!

தங்கள் நாடுகளில் அணு உலைகளை மூடும்
ஏகாதிபத்திய முதலாளிகளிடம்
எட்டு லட்சம் கோடிக்கு அணு உலை வாங்க‌
ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு.
இது தான் தேசத்துரோகம்!

பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
இந்திய மக்களை பலியிடாதே!

'வளர்ச்சி ‍வேலைவாய்ப்பு வல்லரசு' என்று ஆசை காட்டி
தேசத்துரோக, மக்கள் விரோத சதியில் ஈடுப்பட்டிருக்கும்
காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!
தனியார்மயம், தாரளமயம், உலகமயம் ‍
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

வெளியீடு :

மக்கள் கலை இலக்கிய கழகம் விவசாயிகள் விடுதலை முன்னணி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி பெண்கள் விடுதலை முன்னணி
நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை - 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
பேச : 044-28412367

கூடங்குளம் ‍- அணுஉலை போராட்டக்குழுவினர் மீது தாக்குதல்!


இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கூடங்குளம் அணுஉலை பிரச்சினை குறித்து நடுவண் குழுவுடன் போராட்டக்குழு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக கூடங்குளம் போராட்டக் குழு நிர்வாகிகளுடன் இடிந்தகரையைச் சேர்ந்த 50-க்கு மேற்பட பெண்களும் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்திருந்தனர். அப்பொழுது அங்கிருந்த இந்து முன்னணி காலிகள் மற்றும் காங்கிரசு காலிகள் தாக்குதல் நடத்தினர். பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தையை புறக்கணித்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாக்குதலை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மக்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். தாக்குதலை கண்டித்து, கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மக்கள் போராட்டங்களை துவங்கியுள்ளனர். வியாபாரிகள் கடை அடைத்துள்ளார்கள். மீனவர்களும் போராடத்துவங்கியுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலைவைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு" என மக்கள் தொடர்ந்து ஐந்து மாதத்திற்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நம்முடைய ஆதரவை தரவேண்டியது நமது கடமை.

ஆகையால், தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ள அனைவரும் கண்டனங்களை பதிவு செய்வோம்!

January 27, 2012

அமெரிக்கா - இணையத்தை முடக்க நினைக்கிறதா?


இந்த மாதம் அமெரிக்க பாராளுமன்றத்தில் இணையம் தொடர்பாக இரு மசோதாக்கள் விவாதிக்கப்பட இருந்தன. ஒன்று சோபா (SOPA), அறிவுசார் சொத்துடைமை காப்புரிமைச் சட்டம், மற்றொன்று பிபா (PIPA) தகவல் திருட்டை தடுக்கும் சட்டம்.

முகநூல், கூகுள், டிவிட்டர் என பிரபல சமூக வலைத்தளங்கள் எல்லாம் தங்கள் வலைத்தளங்களை ஒருநாள் கதவடைப்பு செய்து, மக்கள் ஆதரவுடன் போராடினார்கள். இப்பொழுது அந்த மசோதாக்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் துவக்கம் தான். கட்டற்ற சுதந்திர இணையத்தை முழுவதையும் முடக்குவது தான் அமெரிக்காவின் உள்நோக்கம் என எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முதலில் சட்டத்தின் சாரமான 'காப்புரிமை'யே பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவானது. மக்கள் விரோதமானது. உதாரணமாக, இரத்த புற்று நோயை கட்டுப்படுத்த, தினமும் உட்கொள்ளும் மாத்திரைகள் 4. இந்திய நிறுவனங்களின் விற்பனை விலை ஒன்றுக்கு ரூ. 90. ஒரு நாளைக்கு ரூ. 360/-. மாதம் ரூ. 11,000 ஸ்வீடன் நிறுவனமான நோவார்ட்டிஸ் நிறுவனம் இந்த மருந்திற்கான காப்புரிமை வாங்க முயன்று கொண்டிருக்கிறது. அதன் விற்பனை விலை ஒன்றுக்கு ரூ. 1000. ஒரு நாளைக்கு ரூ. 4000. ஒரு மாதத்திற்கு ஒன்னேகால் லட்சம். இந்தியாவில் ஆண்டுதோறும் ரத்தப்புற்றுநோய்கள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 24000 பேர். காப்புரிமையை அந்த நிறுவனம் பெற்றுவிட்டால், மக்கள் செத்துமடியவேண்டியது தான்.

இதே காப்புரிமையை இணையத்தில் பொருத்தினால், ஒரு திரைப்படத்தின் பாடல்களின் விலை மட்டும் ரூ. 100. டிவிடியிலோ ஒரு புதுபடத்தை ரூ.400 லிருந்து ரூ. 500. என விலை வைக்கிறார்கள். திரையரங்கில் படம் பார்த்தோமென்றால், நுழைவுச்சீட்டின் விலையே நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ. 500 ஆகிவிடுகிறது. மற்ற இதர செலவுகளை கணக்கிட்டால் ரூ. 700-ஐ நெருங்கிவிடும். நடுத்தர வர்க்கமே 4 மாதத்திற்கு ஒரு படம் தான் பார்க்கமுடியும். காப்புரிமை இல்லாதபொழுதே நிறுவனங்களும், பிரபலங்களும் கோடிகளில் கொழிக்கிறார்கள். கருப்புபணத்தில் திளைக்கிறார்கள்.

மற்றொரு கோணத்தில் இந்த விசயத்தை பார்த்தால், சமகாலத்தில் செய்திகளை வழங்கும் ஊடகங்களில் பெரும்பான்மையானவை ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்துகொண்டவை. எழுச்சியோடு ஆயிரக்கணக்கில், லட்சகணக்கில் போராடும் மக்கள் போராட்டங்களை மறைக்கிறார்கள். திரிக்கிறார்கள். இந்த இடத்தை இணையம் இட்டுநிரப்புகிறது. இப்படித்தான், கடந்த ஆண்டில் அமெரிக்கா, மெக்ஸிகோ, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என பல்வேறு நாடுகளில் மக்கள் நிலவுகிற பிற்போக்கு, ஒடுக்குமுறை அரசுக்கு எதிராக எழுச்சியோடு போராடினார்கள். இந்த போராட்டத்தின் வெற்றியை ஏகாதிபத்தியங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது தனிக்கதை. இந்த போராட்டங்களில் எல்லாம் இந்த சமூக தளங்கள் மக்களிடையே தகவல் தொடர்பில் நிறைய பங்காற்றின.

இந்த சமூக தளங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்போ, முற்போக்கு கருத்தோ எல்லாம் பொங்கிவரவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மாறாக, இணையத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவாக, பொதுவுடமைக்கு எதிராக கட்டுரைகள் தான் மலிந்துகிடக்கின்றன. திரைப்படம், பொழுதுபோக்கு அம்சங்கள் தான் நிறைய தேடப்படுகின்றன. பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. படிக்கப்படுகின்றன. 2008ல் கூகிளில் மூன்று கோடிபேர் தேடிப்பார்த்த நடிகை நம்மூர் நமீதா. அதற்காக நமீதா நன்றியெல்லாம் தெரிவித்தார்.ஆக, சமூகத்தில் எத்தனை சதவிகிதம் முற்போக்கு கருத்துக்கள் இருக்கிறதோ, அவ்வளவு தான் இணையத்திலும் இருக்கின்றன.

சமூக மாற்றத்திற்கு ஆதாரமாக விளங்குகிற முற்போக்கு தளங்களை, புரட்சிகர அமைப்புகளின் தளங்களை முடக்குவது தான் இவர்களின் நோக்கம். உதாரணமாக, தமிழில் வெளிவரும் வினவு தளத்தில், மதங்களின் பிற்போக்குத் தன்மைகளை விமர்சித்து கட்டுரைகள் எழுதினால், அடிப்படைவாதிகள் உடனே வினவு தளத்தை முடக்கவேண்டும் என கோபமாக கருத்துசொல்கிறார்கள்.