> குருத்து: அமெரிக்கா - இணையத்தை முடக்க நினைக்கிறதா?

January 27, 2012

அமெரிக்கா - இணையத்தை முடக்க நினைக்கிறதா?


இந்த மாதம் அமெரிக்க பாராளுமன்றத்தில் இணையம் தொடர்பாக இரு மசோதாக்கள் விவாதிக்கப்பட இருந்தன. ஒன்று சோபா (SOPA), அறிவுசார் சொத்துடைமை காப்புரிமைச் சட்டம், மற்றொன்று பிபா (PIPA) தகவல் திருட்டை தடுக்கும் சட்டம்.

முகநூல், கூகுள், டிவிட்டர் என பிரபல சமூக வலைத்தளங்கள் எல்லாம் தங்கள் வலைத்தளங்களை ஒருநாள் கதவடைப்பு செய்து, மக்கள் ஆதரவுடன் போராடினார்கள். இப்பொழுது அந்த மசோதாக்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் துவக்கம் தான். கட்டற்ற சுதந்திர இணையத்தை முழுவதையும் முடக்குவது தான் அமெரிக்காவின் உள்நோக்கம் என எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முதலில் சட்டத்தின் சாரமான 'காப்புரிமை'யே பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவானது. மக்கள் விரோதமானது. உதாரணமாக, இரத்த புற்று நோயை கட்டுப்படுத்த, தினமும் உட்கொள்ளும் மாத்திரைகள் 4. இந்திய நிறுவனங்களின் விற்பனை விலை ஒன்றுக்கு ரூ. 90. ஒரு நாளைக்கு ரூ. 360/-. மாதம் ரூ. 11,000 ஸ்வீடன் நிறுவனமான நோவார்ட்டிஸ் நிறுவனம் இந்த மருந்திற்கான காப்புரிமை வாங்க முயன்று கொண்டிருக்கிறது. அதன் விற்பனை விலை ஒன்றுக்கு ரூ. 1000. ஒரு நாளைக்கு ரூ. 4000. ஒரு மாதத்திற்கு ஒன்னேகால் லட்சம். இந்தியாவில் ஆண்டுதோறும் ரத்தப்புற்றுநோய்கள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 24000 பேர். காப்புரிமையை அந்த நிறுவனம் பெற்றுவிட்டால், மக்கள் செத்துமடியவேண்டியது தான்.

இதே காப்புரிமையை இணையத்தில் பொருத்தினால், ஒரு திரைப்படத்தின் பாடல்களின் விலை மட்டும் ரூ. 100. டிவிடியிலோ ஒரு புதுபடத்தை ரூ.400 லிருந்து ரூ. 500. என விலை வைக்கிறார்கள். திரையரங்கில் படம் பார்த்தோமென்றால், நுழைவுச்சீட்டின் விலையே நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ. 500 ஆகிவிடுகிறது. மற்ற இதர செலவுகளை கணக்கிட்டால் ரூ. 700-ஐ நெருங்கிவிடும். நடுத்தர வர்க்கமே 4 மாதத்திற்கு ஒரு படம் தான் பார்க்கமுடியும். காப்புரிமை இல்லாதபொழுதே நிறுவனங்களும், பிரபலங்களும் கோடிகளில் கொழிக்கிறார்கள். கருப்புபணத்தில் திளைக்கிறார்கள்.

மற்றொரு கோணத்தில் இந்த விசயத்தை பார்த்தால், சமகாலத்தில் செய்திகளை வழங்கும் ஊடகங்களில் பெரும்பான்மையானவை ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்துகொண்டவை. எழுச்சியோடு ஆயிரக்கணக்கில், லட்சகணக்கில் போராடும் மக்கள் போராட்டங்களை மறைக்கிறார்கள். திரிக்கிறார்கள். இந்த இடத்தை இணையம் இட்டுநிரப்புகிறது. இப்படித்தான், கடந்த ஆண்டில் அமெரிக்கா, மெக்ஸிகோ, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என பல்வேறு நாடுகளில் மக்கள் நிலவுகிற பிற்போக்கு, ஒடுக்குமுறை அரசுக்கு எதிராக எழுச்சியோடு போராடினார்கள். இந்த போராட்டத்தின் வெற்றியை ஏகாதிபத்தியங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது தனிக்கதை. இந்த போராட்டங்களில் எல்லாம் இந்த சமூக தளங்கள் மக்களிடையே தகவல் தொடர்பில் நிறைய பங்காற்றின.

இந்த சமூக தளங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்போ, முற்போக்கு கருத்தோ எல்லாம் பொங்கிவரவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மாறாக, இணையத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவாக, பொதுவுடமைக்கு எதிராக கட்டுரைகள் தான் மலிந்துகிடக்கின்றன. திரைப்படம், பொழுதுபோக்கு அம்சங்கள் தான் நிறைய தேடப்படுகின்றன. பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. படிக்கப்படுகின்றன. 2008ல் கூகிளில் மூன்று கோடிபேர் தேடிப்பார்த்த நடிகை நம்மூர் நமீதா. அதற்காக நமீதா நன்றியெல்லாம் தெரிவித்தார்.ஆக, சமூகத்தில் எத்தனை சதவிகிதம் முற்போக்கு கருத்துக்கள் இருக்கிறதோ, அவ்வளவு தான் இணையத்திலும் இருக்கின்றன.

சமூக மாற்றத்திற்கு ஆதாரமாக விளங்குகிற முற்போக்கு தளங்களை, புரட்சிகர அமைப்புகளின் தளங்களை முடக்குவது தான் இவர்களின் நோக்கம். உதாரணமாக, தமிழில் வெளிவரும் வினவு தளத்தில், மதங்களின் பிற்போக்குத் தன்மைகளை விமர்சித்து கட்டுரைகள் எழுதினால், அடிப்படைவாதிகள் உடனே வினவு தளத்தை முடக்கவேண்டும் என கோபமாக கருத்துசொல்கிறார்கள்.

0 பின்னூட்டங்கள்: