> குருத்து

May 23, 2020

லாக்டவுன் கதைகள் - 5


900 கிமீ நடை பயணம்
ஏழுமாத கர்ப்பிணி

ஆந்திராவிலிருந்து வடக்கு திசையை நோக்கி செல்லும்
அந்த நீண்ட நெடுஞ்சாலையில்
சாலையோரமாக
எறும்புகளைப் போல சாரை சாரையாக
மக்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

அந்த கூட்டத்தில் ஏழு மாத கர்ப்பிணியான
32 வயதான முஜிபர் ரேணுவும்
தன் கணவனுடன் நடந்துசெல்கிறார்.
எப்படியோ 170 கிமீ நடந்து ஆந்திராவின் எல்லையை
அடைந்துவிட்டார்.

தனது சொந்த ஊரான
சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் சென்றடைய
இன்னும் 700 கிமீ தூரம் செல்லவேண்டியதிருக்கிறது.
2018ல் ஹைதாரபாத்திற்கு தன் கணவனுடன் வந்தார்.

பச்சுபள்ளியில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்தார்கள்.
ஊரடங்கு அறிவித்ததும், வேலை இல்லை.
கையிலிருந்த கொஞ்சம் பணமும்
சிறிது நாட்களிலேயே செலவாகிப்போனது.
கிடைத்த 12 கிலோ அரிசியும், 500 பணமும்
உயிரை தக்க வைப்பதற்கு போதவில்லை.
இனியும் இங்கிருந்தால்
நிலைமை கைமீறிப்போய்விடும்.
பசியில் செத்துப் போவதை விட
ஊருக்கெ கிளம்பிவிடுவது என முடிவெடுத்தார்கள்.

ரயிலுக்கு பல நாட்கள் காத்திருப்பது
சாத்தியமில்லை.
இன்னொரு வாய்ப்பு
நடந்து செல்வது தான்.
நடக்க ஆரம்பித்தார்கள்.

பேரரசரும்
அவர்களுடைய அவையை அலங்கரிக்கும்
மந்திரிகளும் கொஞ்சமாய் வருத்தப்படுகிறார்கள்.
50 நாட்களுக்குப் பிறகு
கூடுதலாக அரிசி தருவதாக அறிவிக்கிறார்கள்.
எங்களால் என்ன செய்யமுடியும்? என
உச்சநீதிமன்றமும் கைகழுவிட்டது.

அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரிக்கிறது.
சாலையெங்கும்
கானல் நீர் கண்ணில்படுகிறது.
அரசுகள் நம்மை காப்பார்கள் என்ற
நம்பிக்கை போய்
பல நாட்களாயிற்று.
தகிக்கும் சாலையில்
குடும்பம் குடும்பமாக
போய்க்கொண்டிருக்கிறார்கள்.

வெட்கை தாங்கமுடியவில்லை என
புலம்பிக்கொண்டே
நாம் தொலைக்காட்சியில்
வேடிக்கைப் பார்க்கிறோம்.

 Source : Times of India, May 13, 2020

 Picture : Mujibur Renu with husband on their way to chhattisgarh

லாக்டவுன் கதைகள் - 4

ரயிலில் சொந்த ஊருக்கு
செல்ல ஆசைப்பட்டான்.
உயிரற்று ஆம்புலன்சில்
சென்றடைந்தான்.


ஆசிப் இக்பால் மண்டல். வயது 22.
எர்ணாகுளம் மாவட்டம் கொடநாடு பகுதி.
செங்கல்சூளையில் வேலை.
ஊரடங்கால் சூளை மூடப்பட்டது.
செய்த வேலைக்கு
கூலியும் தரவில்லை.

ஊருக்கு செல்லலாம் என்றால்
ரயில் இல்லை. பேருந்து இல்லை.
நடந்தே செல்லலாம் என்றால்
மேற்குவங்கம் முர்ஷிடாபாத் வரை
செல்ல வேண்டிய தூரம் 2900 கிமீ.
தயங்க வைத்தது.

கையிலிருந்த சொற்ப பணமும்
கரைய ஆரம்பித்தது.
ஊருக்கு சென்றுவிட்டால்
மீண்டும் ஒரு போதும் திரும்பகூடாது என
முடிவெடுத்தான்.

இரண்டு முறை
ரயிலில் செல்ல விண்ணப்பித்தும்
ரத்தானது.
இனி ஒரு போதும்
வீட்டிற்கு போக முடியாது என நம்பத்துவங்கினான்.
பதட்டமும், பயமும் அதிகமானது.
மோடியின் ராஜ்ஜியத்தில் இருந்து
விடுதலை பெற்றார்.

உயிரோடு அனுமதிக்காத அரசு
உயிரற்று ஆம்புலன்சில் 2900 கி.மீ
செல்ல அனுமதித்தது!
செலவு ரூ.1,30,000.
சொந்த ஊர்காரார்கள் வசூலித்து
பணத்தைக் கொடுத்தார்கள்.

”எல்லாம் முடிந்துவிட்டது” என
பண்ணை விவசாயியான தந்தை கலங்கினார்.
மூத்த மகனை இழந்த செய்தி
கேள்விப்பட்டதிலிருந்து
அம்மா பலமுறை மயங்கி விழுந்தார்.

பணக்காரர்கள்
உலகத்தில் எங்கிருந்தாலும்
பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்பிவிடுகிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளிகளுக்கு
சொந்த ஊர் செல்வது கூட
கனவாகத்தான் இருக்கிறது!

Source : The Wire (13/05/30)

Photo : Asif's father, brother and mother

https://thewire.in/rights/migrant-bengal-suicide-trains

லாக்டவுன் கதைகள் 3



 
திருப்பூர்.
முகமதுயூனுஸ்
ஆட்டோ நிலையத்தில்
அமர்ந்திருந்தார்.
25 மதிக்கத்தக்க பெண்
”இந்த செல்போனை வைத்துக்கொள்ளுங்கள்.
100 ரூ. அடமானமாக தாருங்கள்” என்றார்.


விசாரித்தால்…
“ஊரடங்கால் தன் கணவனுக்கு
வேலை இல்லை.
இரண்டு குழந்தைகளுக்கும்
பால் வாங்க கூட காசு இல்லை”
என கண்ணீருடன் தன் கதை சொன்னார்.

செல்போனை
அவரிடமே தந்து
தன்னிடமிருந்த 60ரூயை
செலவுக்கு தந்தார்.

தான் அறிந்த பெண்
போலீசு அதிகாரிக்கு தகவல் தந்து
அத்தியாவசிய பொருட்களையும்
வாங்கித்தந்தார்.

- மே3 தினத்தந்தி நாளிதழில்.