> குருத்து: லாக்டவுன் கதைகள் - 5

May 23, 2020

லாக்டவுன் கதைகள் - 5


900 கிமீ நடை பயணம்
ஏழுமாத கர்ப்பிணி

ஆந்திராவிலிருந்து வடக்கு திசையை நோக்கி செல்லும்
அந்த நீண்ட நெடுஞ்சாலையில்
சாலையோரமாக
எறும்புகளைப் போல சாரை சாரையாக
மக்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

அந்த கூட்டத்தில் ஏழு மாத கர்ப்பிணியான
32 வயதான முஜிபர் ரேணுவும்
தன் கணவனுடன் நடந்துசெல்கிறார்.
எப்படியோ 170 கிமீ நடந்து ஆந்திராவின் எல்லையை
அடைந்துவிட்டார்.

தனது சொந்த ஊரான
சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் சென்றடைய
இன்னும் 700 கிமீ தூரம் செல்லவேண்டியதிருக்கிறது.
2018ல் ஹைதாரபாத்திற்கு தன் கணவனுடன் வந்தார்.

பச்சுபள்ளியில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்தார்கள்.
ஊரடங்கு அறிவித்ததும், வேலை இல்லை.
கையிலிருந்த கொஞ்சம் பணமும்
சிறிது நாட்களிலேயே செலவாகிப்போனது.
கிடைத்த 12 கிலோ அரிசியும், 500 பணமும்
உயிரை தக்க வைப்பதற்கு போதவில்லை.
இனியும் இங்கிருந்தால்
நிலைமை கைமீறிப்போய்விடும்.
பசியில் செத்துப் போவதை விட
ஊருக்கெ கிளம்பிவிடுவது என முடிவெடுத்தார்கள்.

ரயிலுக்கு பல நாட்கள் காத்திருப்பது
சாத்தியமில்லை.
இன்னொரு வாய்ப்பு
நடந்து செல்வது தான்.
நடக்க ஆரம்பித்தார்கள்.

பேரரசரும்
அவர்களுடைய அவையை அலங்கரிக்கும்
மந்திரிகளும் கொஞ்சமாய் வருத்தப்படுகிறார்கள்.
50 நாட்களுக்குப் பிறகு
கூடுதலாக அரிசி தருவதாக அறிவிக்கிறார்கள்.
எங்களால் என்ன செய்யமுடியும்? என
உச்சநீதிமன்றமும் கைகழுவிட்டது.

அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரிக்கிறது.
சாலையெங்கும்
கானல் நீர் கண்ணில்படுகிறது.
அரசுகள் நம்மை காப்பார்கள் என்ற
நம்பிக்கை போய்
பல நாட்களாயிற்று.
தகிக்கும் சாலையில்
குடும்பம் குடும்பமாக
போய்க்கொண்டிருக்கிறார்கள்.

வெட்கை தாங்கமுடியவில்லை என
புலம்பிக்கொண்டே
நாம் தொலைக்காட்சியில்
வேடிக்கைப் பார்க்கிறோம்.

 Source : Times of India, May 13, 2020

 Picture : Mujibur Renu with husband on their way to chhattisgarh

0 பின்னூட்டங்கள்: