> குருத்து

June 30, 2022

Stranger Things (2022) Web Series சீசன் 4


1980கால கட்டம். அமெரிக்கா. 500 தலைக்கட்டுகள் கொண்ட கிராமம். நம்மூர் கிராமம் மாதிரி நினைத்துவிடக்கூடாது. சகல வசதிகளும் இருக்க கூடிய கிராமம் தான்.


அங்கு நான்கு பதின்பருவத்து நண்பர்கள். அவர்கள் வயதிற்கேற்ப விளையாடிக்கொண்டு ஜாலியாக இருக்கிறார்கள். அதில் ஒரு பையன் திடீரென காணாமல் போகிறான். உள்ளூரிலேயே காடுகள் இருப்பதால், தன்னார்வலர்களை வரவழைத்து தேடு, தேடு என தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

மக்களுக்கு தெரியாமலேயே எலிகளை சோதனை செய்வது போல, குழந்தைகளை வைத்துக்கொண்டு ஆய்வு செய்கிறார்கள். அதில் சில குழந்தைகளுக்கு (Mutant போல) சில சக்திகள் கிடைக்கின்றன. அதில் ஒரு பெண் குழந்தை அங்கிருந்து தப்பித்துவிடுகிறது.

உள்ளூரில் ஏலியன் ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறது. அந்த பையன் காணாமல் போனதற்கும், வேறு சிலரும் காணாமல் போவதற்கும் அது தான் காரணம். அது யாருக்கும் தெரியாத இடத்தில் ஒளிந்து கொள்கிறது.

அடுத்தடுத்து ஆட்கள் காணாமல் போவதால், ஊர் பதட்டமாகிறது. பையனை தேடும் அம்மா, அண்ணா, இயல்பிலேயே துறுதுறுவென இருக்கும் அந்த பசங்க, விசேச சக்தியுள்ள அந்த பெண், யார் காரணம் என மும்முரமாய் தேடும் அந்த போலீசு அதிகாரி இறுதியில் என்ன ஆனது என்பது தான் மீதி கதை.

****

நான் மேலே சொன்னதை கொஞ்சம் கொஞ்சம் மாற்றி நாலு சீசன் வரை வந்துவிட்டார்கள். ஊரில் நடக்கும் ஆபத்தான காரியங்களுக்கு யார் காரணம் என மூணு நாலு குழுக்கள் வேறு வேறு வழிகளில் தேட துவங்குவதும், பிறகு இறுதியில் எல்லோரும் ஒன்று சேர்ந்து பொது எதிரிக்கு எதிராக ஒன்றாக இணைந்து சண்டை செய்வதும் தான் கதை. இதில் இரண்டாவது சீசனில் இருந்து அமெரிக்காவிற்கு பிடிக்காத ரசியாக்காரர்களை வில்லனாக்கி வைத்திருக்கிறார்கள்.

80ஸ் காலத்து ஆடை, மக்களின் பழக்க வழக்கங்கள், சிறுவர்களின் விளையாட்டு, பதின்பருவத்து காதல், ஊடல் என பார்த்து பார்த்து செய்து, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் திரில்லர், கொஞ்சம் ஏலியன் கலந்து எடுத்து 80ல் சிறுவர்களை இருந்தவர்களை ஈர்த்திருக்கிறார்கள். நடிப்பது பசங்க என்பதால், பசங்களையும் ஈர்த்திருக்கிறார்கள். முதல் சீசனில் பதின்பருவத்து பசங்களாக இருந்தவர்கள் இப்பொழுது கடந்த ஏழு வருடங்களில் இளைஞர்களாக வளர்ந்துவிட்டார்கள். ஏலியனும் சாவப்போவதில்லை. சீசன்களும் முடியப்போவதில்லை. 🙂

நேரம் நிறைய இருப்பவர்கள் பாருங்கள். நெட் பிளிக்சில் தமிழிலும் கிடைக்கிறது. மூன்று சீசன்களின் சுருக்கத்தை நடிகர் பாலாஜி தம் கட்டி வேகமாக சில நிமிடங்களில் பேசியிருக்கிறார். பின்னூட்டத்தில் தருகிறேன். நான் சொன்னது பத்தாது என நினைப்பவர்கள் அதைக் கேட்கலாம்.

சார்லி (2022) தமிழ்


நாயகன் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்கிறான். அவனது சிறுவயதில் மோசமான கார் விபத்தில் அம்மா, அப்பா, தங்கை மூவரையும் இழந்து, தனியாளாக அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறான். குடும்பத்தை மொத்தமாக தொலைத்ததில் அவனுக்குள் வெறுப்பு சுரந்துகொண்டே இருக்கிறது. சுற்றி இருக்கும் மனிதர்களிடம் அந்த வெறுப்பை உமிழ்ந்துகொண்டே இருக்கிறான்.


இந்த சமயத்தில், எங்கிருந்தோ வந்த ஒரு நாய் அவன் வாழும் குடியிருப்பு பகுதிக்கு வருகிறது. இவனிடம் மெல்ல மெல்ல நெருங்குகிறது. மெல்ல மெல்ல அவனுக்குள் மாற்றங்கள் நிகழ்கின்றன. அவனுக்கு மிகவும் பிடித்த நாயகன் சார்லி என்பதால், சார்லி என அழைக்க துவங்குகிறான்.

நாயை ஆட்கொல்லி நோய் ஒன்று தாக்குகிறது. அவனால் அதை தாங்கிகொள்ள முடியாமல் திணறுகிறான். பிறகு அவனும் அந்த நாயும் என்ன ஆனார்கள் என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
***

நாய்க்கும் மனிதனுக்குமான உறவு என்பது மிக நீண்ட காலம் என்கிறது வரலாறு. மனிதன் தன்னுடன் வேட்டையாடினால் நாய்க்கும் பங்குண்டு என நாயை பழக்க ஆரம்பித்திருக்கிறான். வேட்டை எல்லாம் ஒழிந்த பிறகு கூட, வீட்டு விலங்காய் நாய் தொடர்ந்து இருக்கிறது. விசுவாசத்தில் நாயை மிஞ்ச எதுவுமில்லை என்கிறார்கள். தொடர்ந்து நாய் குறித்த செய்திகளும், கதைகளும் உலகை சுற்றி வந்து கொண்டே இருக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு கதை தான் இந்த படமும். நாயகனும், நாயும் இரண்டு பேர் தான் மொத்த திரையையும் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். இடையிடையே வேறு சிலரும் வந்து போகிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை நன்றாக காண்பித்திருக்கிறார்கள்.

நாய்களின் உலகம் மிகப்பெரியதாக இருக்கிறது. வீட்டில் ஏதும் நாய்கள் வளர்க்காததால் எனக்கு எந்த அறிவும் இல்லை. ஒருமுறை வீட்டில் நாய் வளர்க்கலாம் என அம்மாவிடம் சின்ன வயதில் கேட்ட பொழுது, “வீட்டில் உள்ள நாய்களையே (எங்களை) வளர்க்க முடியவில்லை. இதில் வாயில்லா ஜீவனையும் வளர்த்து கஷ்டப்படுத்துனுமா!” என சொன்னது நினைவுக்கு வருகிறது.

இப்பொழுது அக்கா வீட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார்கள். பிள்ளைகளில் ஒன்றாக தான் வளர்க்கிறார்கள். ஊருக்கு போனால், “மாமா”டா! என என்னை சொல்லி நெருக்கத்தை உண்டாக்குவார்.

படத்தில் அந்த ஆட்கொல்லி நோய்க்கு ஒரு காரணம் சொல்வார்கள். அதை தெளிவாகவே சொல்லவில்லை. Inbreed என போகிற போக்கில் லேசாக சொல்வார்கள். அது என்னவென்று தேடினால், ஒரு தாயின் மக்களை இணைத்து புதிய குட்டிகளை உருவாக்குவது என்பது கடுமையாக நோய்களை உருவாக்குகிறது என்கிறார்கள். இதை ஏன் செய்கிறார்கள்? என்றால், நாய் வணிகம் என்பது பெரிய சந்தையாக வளர்ந்து நிற்கிறது. ஆகையால் எல்லா கோளாறுகளையும் இதிலும் கொண்டு வந்துவிட்டார்கள்.

அடிப்படையில் இது ஒரு கன்னடப்படம். அதை தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். நெருக்கமான காட்சிகளில் எல்லாம் தமிழில் வாயசைக்கிறார்கள். ஒரு சில இடங்களில் கொஞ்சம் வாயசைப்பு வேறு மாதிரி இருக்கிறது.. துணைப் பாத்திரங்கள் தமிழ் முகங்களாய் இல்லை. சில காட்சிகள் பாபி சிம்ஹா வருகிறார். அப்படியே ரஜினியின் மேனரிசம். மொத்தத்தில் ஒரு தமிழ் படம் பார்க்கிற உணர்வை கொண்டு வந்தது பெரிய விசயம் தான்.

கன்னடப்படங்களில் இப்படி படங்கள் சமீப காலமாக வருவது உற்சாகமளிக்கிறது. தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான் தமிழில் வாங்கி வெளியிட்டிருக்கிறார். திரையரங்குகளில் படம் வெளியாகியிருக்கிறது. அவசியம் பாருங்கள்.

June 29, 2022

எப்பொழுதும் மாணவனாய் இரு


நேற்று ஐம்பதை கடந்த என் சீனியரைப் போய் பார்த்தேன்.


சீனியர் : "ஜி.எஸ்.டியில் (GST) பிஎச்டி பண்ணலாமான்னு சிந்திக்கிறேன்."

நான் : "கண்டிப்பா படிங்க சார். தொழிலுக்கு பயன்படும்."

சீனியர் : "இன்னொரு சீனியரிடம் பேசினேன்". (அவர் பெயரைச் சொன்னார். அவர் 70 தை கடந்தவர்). நான் பி.எச்.டி படிக்கப்போறேன்னு சொன்னதும் அவரும் என் கூட சேர்ந்து படிக்கிறேன்னு உற்சாகமாக‌ சொல்லிட்டார். இப்படி இப்படி செய்யலாம்னு அடுத்தடுத்து நீண்ட நேரம் பேச ஆரம்பித்துவிட்டார்.

நான் : "அருமை சார். உங்களுக்கு நல்ல கம்பெனி. இது சம்பந்தமா என்ன வேலைன்னாலும் சொல்லுங்க! நான் வந்து செய்றேன்" என்றேன்.

அவரிடம் பேசிவிட்டு வீட்டுக்கு வரும் வழியில், எங்கள் வீடு அருகே இருந்த நடனப் பள்ளி கண்ணில்பட்டது. எனக்கு கூட நடனம் முறையா கத்துக்கனும்னு நிறைய ஆசை. சேரலாமான்னு சீரியசா யோசிச்சுகிட்டு இருக்கிறேன்.

டிஸ்கி : இது காமெடி பதிவல்ல! பாசிட்டிவான பதிவு.