> குருத்து: Stranger Things (2022) Web Series சீசன் 4

June 30, 2022

Stranger Things (2022) Web Series சீசன் 4


1980கால கட்டம். அமெரிக்கா. 500 தலைக்கட்டுகள் கொண்ட கிராமம். நம்மூர் கிராமம் மாதிரி நினைத்துவிடக்கூடாது. சகல வசதிகளும் இருக்க கூடிய கிராமம் தான்.


அங்கு நான்கு பதின்பருவத்து நண்பர்கள். அவர்கள் வயதிற்கேற்ப விளையாடிக்கொண்டு ஜாலியாக இருக்கிறார்கள். அதில் ஒரு பையன் திடீரென காணாமல் போகிறான். உள்ளூரிலேயே காடுகள் இருப்பதால், தன்னார்வலர்களை வரவழைத்து தேடு, தேடு என தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

மக்களுக்கு தெரியாமலேயே எலிகளை சோதனை செய்வது போல, குழந்தைகளை வைத்துக்கொண்டு ஆய்வு செய்கிறார்கள். அதில் சில குழந்தைகளுக்கு (Mutant போல) சில சக்திகள் கிடைக்கின்றன. அதில் ஒரு பெண் குழந்தை அங்கிருந்து தப்பித்துவிடுகிறது.

உள்ளூரில் ஏலியன் ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறது. அந்த பையன் காணாமல் போனதற்கும், வேறு சிலரும் காணாமல் போவதற்கும் அது தான் காரணம். அது யாருக்கும் தெரியாத இடத்தில் ஒளிந்து கொள்கிறது.

அடுத்தடுத்து ஆட்கள் காணாமல் போவதால், ஊர் பதட்டமாகிறது. பையனை தேடும் அம்மா, அண்ணா, இயல்பிலேயே துறுதுறுவென இருக்கும் அந்த பசங்க, விசேச சக்தியுள்ள அந்த பெண், யார் காரணம் என மும்முரமாய் தேடும் அந்த போலீசு அதிகாரி இறுதியில் என்ன ஆனது என்பது தான் மீதி கதை.

****

நான் மேலே சொன்னதை கொஞ்சம் கொஞ்சம் மாற்றி நாலு சீசன் வரை வந்துவிட்டார்கள். ஊரில் நடக்கும் ஆபத்தான காரியங்களுக்கு யார் காரணம் என மூணு நாலு குழுக்கள் வேறு வேறு வழிகளில் தேட துவங்குவதும், பிறகு இறுதியில் எல்லோரும் ஒன்று சேர்ந்து பொது எதிரிக்கு எதிராக ஒன்றாக இணைந்து சண்டை செய்வதும் தான் கதை. இதில் இரண்டாவது சீசனில் இருந்து அமெரிக்காவிற்கு பிடிக்காத ரசியாக்காரர்களை வில்லனாக்கி வைத்திருக்கிறார்கள்.

80ஸ் காலத்து ஆடை, மக்களின் பழக்க வழக்கங்கள், சிறுவர்களின் விளையாட்டு, பதின்பருவத்து காதல், ஊடல் என பார்த்து பார்த்து செய்து, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் திரில்லர், கொஞ்சம் ஏலியன் கலந்து எடுத்து 80ல் சிறுவர்களை இருந்தவர்களை ஈர்த்திருக்கிறார்கள். நடிப்பது பசங்க என்பதால், பசங்களையும் ஈர்த்திருக்கிறார்கள். முதல் சீசனில் பதின்பருவத்து பசங்களாக இருந்தவர்கள் இப்பொழுது கடந்த ஏழு வருடங்களில் இளைஞர்களாக வளர்ந்துவிட்டார்கள். ஏலியனும் சாவப்போவதில்லை. சீசன்களும் முடியப்போவதில்லை. 🙂

நேரம் நிறைய இருப்பவர்கள் பாருங்கள். நெட் பிளிக்சில் தமிழிலும் கிடைக்கிறது. மூன்று சீசன்களின் சுருக்கத்தை நடிகர் பாலாஜி தம் கட்டி வேகமாக சில நிமிடங்களில் பேசியிருக்கிறார். பின்னூட்டத்தில் தருகிறேன். நான் சொன்னது பத்தாது என நினைப்பவர்கள் அதைக் கேட்கலாம்.

0 பின்னூட்டங்கள்: