> குருத்து: சார்லி (2022) தமிழ்

June 30, 2022

சார்லி (2022) தமிழ்


நாயகன் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்கிறான். அவனது சிறுவயதில் மோசமான கார் விபத்தில் அம்மா, அப்பா, தங்கை மூவரையும் இழந்து, தனியாளாக அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறான். குடும்பத்தை மொத்தமாக தொலைத்ததில் அவனுக்குள் வெறுப்பு சுரந்துகொண்டே இருக்கிறது. சுற்றி இருக்கும் மனிதர்களிடம் அந்த வெறுப்பை உமிழ்ந்துகொண்டே இருக்கிறான்.


இந்த சமயத்தில், எங்கிருந்தோ வந்த ஒரு நாய் அவன் வாழும் குடியிருப்பு பகுதிக்கு வருகிறது. இவனிடம் மெல்ல மெல்ல நெருங்குகிறது. மெல்ல மெல்ல அவனுக்குள் மாற்றங்கள் நிகழ்கின்றன. அவனுக்கு மிகவும் பிடித்த நாயகன் சார்லி என்பதால், சார்லி என அழைக்க துவங்குகிறான்.

நாயை ஆட்கொல்லி நோய் ஒன்று தாக்குகிறது. அவனால் அதை தாங்கிகொள்ள முடியாமல் திணறுகிறான். பிறகு அவனும் அந்த நாயும் என்ன ஆனார்கள் என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
***

நாய்க்கும் மனிதனுக்குமான உறவு என்பது மிக நீண்ட காலம் என்கிறது வரலாறு. மனிதன் தன்னுடன் வேட்டையாடினால் நாய்க்கும் பங்குண்டு என நாயை பழக்க ஆரம்பித்திருக்கிறான். வேட்டை எல்லாம் ஒழிந்த பிறகு கூட, வீட்டு விலங்காய் நாய் தொடர்ந்து இருக்கிறது. விசுவாசத்தில் நாயை மிஞ்ச எதுவுமில்லை என்கிறார்கள். தொடர்ந்து நாய் குறித்த செய்திகளும், கதைகளும் உலகை சுற்றி வந்து கொண்டே இருக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு கதை தான் இந்த படமும். நாயகனும், நாயும் இரண்டு பேர் தான் மொத்த திரையையும் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். இடையிடையே வேறு சிலரும் வந்து போகிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை நன்றாக காண்பித்திருக்கிறார்கள்.

நாய்களின் உலகம் மிகப்பெரியதாக இருக்கிறது. வீட்டில் ஏதும் நாய்கள் வளர்க்காததால் எனக்கு எந்த அறிவும் இல்லை. ஒருமுறை வீட்டில் நாய் வளர்க்கலாம் என அம்மாவிடம் சின்ன வயதில் கேட்ட பொழுது, “வீட்டில் உள்ள நாய்களையே (எங்களை) வளர்க்க முடியவில்லை. இதில் வாயில்லா ஜீவனையும் வளர்த்து கஷ்டப்படுத்துனுமா!” என சொன்னது நினைவுக்கு வருகிறது.

இப்பொழுது அக்கா வீட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார்கள். பிள்ளைகளில் ஒன்றாக தான் வளர்க்கிறார்கள். ஊருக்கு போனால், “மாமா”டா! என என்னை சொல்லி நெருக்கத்தை உண்டாக்குவார்.

படத்தில் அந்த ஆட்கொல்லி நோய்க்கு ஒரு காரணம் சொல்வார்கள். அதை தெளிவாகவே சொல்லவில்லை. Inbreed என போகிற போக்கில் லேசாக சொல்வார்கள். அது என்னவென்று தேடினால், ஒரு தாயின் மக்களை இணைத்து புதிய குட்டிகளை உருவாக்குவது என்பது கடுமையாக நோய்களை உருவாக்குகிறது என்கிறார்கள். இதை ஏன் செய்கிறார்கள்? என்றால், நாய் வணிகம் என்பது பெரிய சந்தையாக வளர்ந்து நிற்கிறது. ஆகையால் எல்லா கோளாறுகளையும் இதிலும் கொண்டு வந்துவிட்டார்கள்.

அடிப்படையில் இது ஒரு கன்னடப்படம். அதை தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். நெருக்கமான காட்சிகளில் எல்லாம் தமிழில் வாயசைக்கிறார்கள். ஒரு சில இடங்களில் கொஞ்சம் வாயசைப்பு வேறு மாதிரி இருக்கிறது.. துணைப் பாத்திரங்கள் தமிழ் முகங்களாய் இல்லை. சில காட்சிகள் பாபி சிம்ஹா வருகிறார். அப்படியே ரஜினியின் மேனரிசம். மொத்தத்தில் ஒரு தமிழ் படம் பார்க்கிற உணர்வை கொண்டு வந்தது பெரிய விசயம் தான்.

கன்னடப்படங்களில் இப்படி படங்கள் சமீப காலமாக வருவது உற்சாகமளிக்கிறது. தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான் தமிழில் வாங்கி வெளியிட்டிருக்கிறார். திரையரங்குகளில் படம் வெளியாகியிருக்கிறது. அவசியம் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: