> குருத்து

December 11, 2014

கறார் லஞ்ச பீட் அதிகாரியும் பாவமான பாயம்மாவும்!

தங்கியிருக்கும் குதியில் கையந்திபவன்கள் வரிசைக் கட்டி இருந்தாலும், பாயம்மாவின் கடை விசேஷமானது.  தோசை, இட்லி, பொங்கல், வடை என எது சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். வடைகறி ரெம்பவே ஸ்பெசல். வடைகறி, சாம்பார் என எல்லாவற்றையும் நாமே எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதை பயன்படுத்திக்கொண்டு, வடைகறியை மொக்குகிறவர்கள் நிறைய. 9.30 மணிக்கு மேலே போனால், வடைகறி கிடைக்காது. ஒரு இட்லி 5 ரூ. தோசை ரூ. 10. விலையும் குறைவு. எப்பொழுதும் கடை பிஸியாக இருக்கும்.

கையேந்தி பவன்கள்
கையேந்தி பவன்கள் 

ஒரே ஒரு பிரச்சனை. பாயம்மா தினமும் கடை போடமாட்டார்.  அவருடைய கணவர் ஒரு ஆஸ்துமா நோயாளி. கூடுதலாக குடியும் சேர, பாயம்மாவிற்கு கடையில் உதவி செய்யவே ரெம்பவும் திணறிப்போவார். கொஞ்ச காலம் அவர்களின் பையன் உதவியாய் இருந்தான். பிறகு, அவன் வேறு வேலைக்கு போய்விட்டான். பாயம்மாவும் ரெம்ப ஆரோக்கியமானவர் இல்லை. அதனால் தொடர்ந்து கடை போடுவது என்பது சிரமம் என்பதால் விட்டு விட்டு போடுவார்.  வீட்டில் சமைக்க முடியாத சில நாட்களில் நேரே பாயம்மா கடைக்கு போய்விட்டு, அவர் கடை போடவில்லை என்றால் தான் வேறு கடைக்கு நகருவேன்.

கடந்த ஒன்றரை மாதங்களாக விட்டு விட்டு போய் பார்த்த பொழுது, பாயம்மா கடையே போடவில்லை. இன்று போயிருந்தேன். ஒரு பீட் காவல் அதிகாரி எதையோ வாங்கிகொண்டு ‘மிடுக்காக’ நகர்ந்தார்.

“என்னாச்சு பாயம்மா? கடையே போடவில்லை” என்று விசாரித்தேன்.

“பாய்க்கு உடம்புக்கு முடியாமல், மருத்துவமனையில் சேர்த்து, இப்பொழுது உடல்நலம் தேறி வீட்டில் இருக்கிறார். வாங்குன கடன் கழுத்தை நெறிக்குதுன்னு கடை போடலாம்னு வந்தேன். கடை திறந்த இரண்டாவது நாளே இவங்க வந்துட்டாங்க! மாசம் 300 ரூ. கொடுக்கனும்னு சொல்றாங்க! நானும் எவ்வளவோ குடும்ப கஷ்டத்தை சொல்லி, கடந்த ஒன்றரை மாதமா கடை போடலைன்னு சொன்னா கூட கேட்கமாட்டேங்கிறாங்க!  இப்படி தெரு ஓரத்தில கடை போடுறது தப்பாம். ஒரு தடவை தப்பு பண்ணினாலும், தப்பு! தப்பு தானாம்! (என்னா ஒரு பீட் தத்துவம்). நாள் முழுக்க கூட கடையை போடு! எங்களுக்கு மாசம் 300ரூ கொடுத்தா போதும்னு சொல்றாங்க!”

பீட் அதிகாரிகள்
பீட் அதிகாரிகள்

“முன்னாடி மெயின் ரோட்டில கடை போட்டிருந்தோம். அதையும் மிரட்டி சந்துக்குள்ள தான் விற்கனும்னு சொல்லிட்டாங்க! அதுலயே விக்கிறது பாதியா குறைஞ்சு போச்சு! இப்ப நான் ஒண்டி ஆளா வந்து கடை போட வேண்டியிருக்கு! தொடர்ச்சியாக கடை போட முடியாததினால், தொடர்ந்து வர்றவங்க வரமாட்டேன்கிறாங்க! அதனால், மாவு ரெம்ப தேங்குது! டேஸ்டா இருக்குதுன்னு தான் நம்ம கடைக்கு வர்றாங்க! அதனால், மத்தவங்க மாதிரி ரேசன் பருப்பையோ, பால்வாடி பருப்பையோ வாங்கி போடாம, தரமான பொருட்களைத்தான் போடுறேன். முன்னைக்கு இப்ப பலசரக்கு சாமான் இரண்டு மடங்கு விலை ஆகி, செலவு ஏகத்துக்கு ஏறிடுச்சு!  இட்லி, தோசைக்கு போய் என்னத்த விலை ஏத்துறதுன்னு மனசே வரல்லை” என தனது துயரங்களை சொல்லிக்கொண்டே போனார்.

சென்னை நகரத்தில் பெருகிவரும் குற்றங்களை குறைப்பதற்காகவும், மக்களுக்கும் காவல் துறைக்குமான ’இடைவெளியை’ குறைக்கிறதுக்கு தான் இவர்கள் என்று பீட் ஆபிசர்களை அறிமுகப்படுத்தும் பொழுது ரெம்ப கெத்தா சொன்னாங்க!

நூத்துக்கணக்கான பைக்குகளை வாங்கி கொடுத்து, மாதத்திற்கு 25 லிட்டர் பெட்ரோலும் மக்களோடு வரிப்பணத்துல வாங்கிக்கொடுத்தா, இந்த ஆபிசர்கள் எல்லாம் கொடுத்த பைக்குகளை வைச்சுகிட்டு, கலக்சன ஜோரா பார்த்து, கல்லா கட்டுதுக! ‘இடைவெளியை’ குறைக்கிறதுன்னா  என்னான்னு இப்பத்தானே புரியுது!

- குருத்து

- வினவு தளத்தில் 10/12/2014 அன்று வெளியானது!

November 23, 2014

புறக்கணிப்பின் ‘வலி’



சமீபத்தில் ‘வலி’ என்றொரு அருமையானதொரு குறும்படம் பார்த்தேன்.  ஒரு உணவகம். ஒரு காபி ஆர்டர் பண்ணி திருநங்கை காத்திருக்கிறார்.  அடுத்தடுத்து அங்கு வரும் ஆண், பெண், காதலர்கள் என எல்லோரும் அவர் அருகே அமர்வதை தவிர்க்கின்றனர். சக மனிதர்களின் புறக்கணிப்பு தந்த வலியால் மனம் உடைந்து அழுகிறார். தேவதை போல வரும் ஒரு பெண் குழந்தை, அவரை சக மனுசியாக பார்த்து சிநேகத்துடன் நடந்துகொள்கிறாள். நெகிழ்ந்து, கண்ணீர் வருவதுடன் படம் முடிகிறது!

படத்தின் இறுதிக்காட்சியில் நானும் அழுதேன். நம்மை போன்ற சக மனுசியான திருநங்கைகளை வீடும், சமூகமும் புறக்கணித்தால் அவர்கள் என்னதான் செய்வார்கள்? சம காலங்களில் திருநங்கை குறித்த நல்லவிதமான புரிதல்கள் ஏற்பட்டு வருவதை பார்க்கிறேன். இந்த படமும் அதற்கு உதவி செய்திருக்கிறது.

படத்தில் திருநங்கையாக நடித்தவர் பிரதீப். எங்கள் நண்பர்கள் குழாமில் அவரும் ஒருவர். ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின் உணர்வுகளை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார்.  படத்தின் இயக்குநர் விக்டரை சந்தித்த பொழுது, “இது ஒரு உண்மைக்கதை.  ஒரு உணவகத்தில், நகர்ந்து போனவர்களில் நானும் ஒருவன். என் செய்கையின் நெருடலில் தான் இந்த படத்தை எடுத்தேன்” என்றார்.

படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

படத்திற்கான சுட்டிக் கீழே!

https://www.youtube.com/watch?v=6WNPf5I6I_w

November 20, 2014

ஒரு விபத்தும் சில ‘எருமைகளும்’!



மாலை 7 மணி.  ஆந்திராவை நோக்கி செல்லும் நீண்ட புறவெளி சாலை(Bypass)-யில் வாகனங்கள் வேகவேகமாய் கடந்து போய்க்கொண்டிருந்தன. ஓரிடத்தில், மனிதர்கள் சிறு கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள்.

ஒரு நாற்பது வயது கனத்த மனிதர் ரத்த வெள்ளத்தில் வானம் வெறித்து கிடந்தார்! கொஞ்சம் தள்ளி ஒரு எருமை கொஞ்சம் காயத்தோடு ஏற்கனவே விழுங்கி இருந்த உணவை மெல்ல அசுவாரசியமாய் மென்று கொண்டிருந்தது! அவர் வந்த பைக் சாலையின் ஓரத்தில் முட்டி கீழே கிடந்தது!
****

புறவெளிச் சாலையின் தடுப்புச் சுவர் ஓரிடத்தில் உடைந்து விழ, சில எருமைகள் சாலையில் ஏறிவிட்டன. வேகமாய் வந்த அவர் இருட்டில் நின்று கொண்டிருந்த மாட்டை கவனிக்காமல் மோதிவிட்டார்.
108 ஆம்புலன்ஸ் வந்து பார்த்து, “இவர் அடிப்பட்ட மனிதர் இல்லை. பிணம்” என சொல்லிவிட்டு சென்றுவிட்டதாம். வீட்டிற்கு தெரிவித்து அவர்கள் வந்துகொண்டிருப்பதாக சொன்னார்கள்.
****

இறந்தவருக்கு இரண்டு பிள்ளைகள் என்றார்கள். இனி அவர்களின் எதிர்காலம்? யோசிக்கும் பொழுது கவலையாய் இருந்தது.
முதல்நாள் இதே சாலையில் ஒரு அவசர வேலை காரணமாக 80 கி.மீ. வேகத்தில் கடந்து சென்றதும் நினைவுக்கு வந்தது! விபத்து நடந்து 10 நிமிடம் தான் ஆனது என்றார்கள். சிறிது நேரத்திற்கு முன்பு தான் ஓரங்கட்டி தொலைபேசியில் 10 நிமிடம் பேசிவிட்டு வந்ததும் நினைவுக்கு வந்தது.
****

மூன்று நாட்கள் கழித்து இன்றும் அதே சாலையில் வந்துகொண்டிருந்தேன். சரிந்து விழுந்த தடுப்புச் சுவரை இன்னும் எழுப்பவில்லை!
இன்னும் சில எருமைகள் வருவதற்கும், சில ‘விபத்துகள்’ நடப்பதற்கும் பொறுப்பாய் விட்டு வைத்திருக்கிறார்கள்.
மனித உயிர்கள் நம் நாட்டில் மலிவானவை!
****

அந்த டோல்கேட்டில் வரி கட்ட வண்டிகள் வரிசையாய் காத்திருந்தன.  கணக்காய் காசு வசூலித்து  கல்லா பெட்டி நிரம்புவதை சில ‘ஆபிசர் எருமைகள்’ ஆர்வமாய் கவனித்துக்கொண்டிருந்தன!
****