> குருத்து

February 23, 2015

அம்மா சுட்ட தோசை!



·       
  அம்மாவிற்கு பிடித்தது இட்லி.
ஐந்து குழந்தைகளுக்கு தோசை சுட்டால்
நேரம் என்ன ஆவது என்பார்.

·         பிடிவாதத்தால் தோசைகளும் கிடைக்கும்.
பல நேரங்களில் ‘அடி’தோசை தான் கிடைக்கும்.

·         வளர்ந்த பிறகு தான் தெரிந்தது.
கனமான கல்தோசையை தான்
தோசை என பலகாலம் ஏமாற்றியிருக்கிறார் என!

·         வளர்ந்த நாட்களில்
மெல்லிசா ஏன் சுட்டுத்தரவில்லை என்றால்,
’பசங்களுக்கு பசி அடங்காதுடா! என்பார் அன்புடன்.

·         உட்கார வைத்து விதவிதமாய் மணக்க மணக்க
சுட்டு பரிமாறலாம் என்றால்
காலம் இருவருக்கும் ஐநூறு கி.மீட்டர்
தூரம் வைத்திருக்கிறது.

·         எத்தனை விதமாய் சுட்டாலும்,
அம்மா தரும் கனமான தோசைக்கும், சாம்பருக்கும் தான்
சுவை அதிகம் இருக்கிறது.

January 27, 2015

பயணம் - கவிதை



தொலைதூரப் பயணத்திற்கு
பேருந்திற்காய் காத்திருந்தேன்.
சிறிது நேரத்தில்
ஆடி அசைந்து வந்தது.

இடம்பிடிக்க ஆவலாய் மொய்த்தார்கள்.
கொஞ்சம் சிரமப்பட்டு
இடம் பிடித்தாயிற்று!
தேர்வில் வெற்றி பெற்ற
மாணவனின் குதூகலிப்புடன்
என்னை வசதி செய்துகொண்டேன்.

முகத்தில் அறையும் திமிர்காற்று.
கையசைத்து குதூகலிக்கும்
பச்சை வண்ணமரங்கள்.
நினைத்த உருவம் பொருந்திக்கொள்ளும்
வான் மேகங்கள்.
காற்றில் மிதந்து
காதலிக்க வலியுறுத்தும்
ராசாவின் பாட்டு.
பயணங்கள் இனிமையானது!
பாட்டிற்கேற்ப நடனம் ஆடிக்கொண்டே
பயணம் செய்தது பேருந்து.

பின்வந்த நிறுத்தத்தில்
பயணிகள் சிலர் ஏறினார்கள்
அதில் ஒரு வயதான அம்மா
ஏறியதும் கண்களை சுழற்றி
இடம் தேடினார்.
முகத்தில் சிறிது வருத்தம்.
கண்டும் காணாதது போல்
முகங்கள் வேறுபக்கங்கள் திருப்பிக்கொண்டன!

எண்ணம் மாற்ற
பார்வையை வெளியில் தெளித்தேன்.
வெண்மையாய் இருந்த மேகங்கள்
அடர்த்தியாய் பின்னிக்கொண்டன.
வருத்தமுகம் நினைவில் வந்தது.
பார்வையை கீழே தாழ்த்தினேன்.
மரங்கள் உற்சாகமிழந்தது போல்
ஒரு பிரமை.

அந்த அம்மாவிற்கு கால் வலித்திருக்கும்
நேரக் கணக்கிட்டு மனது சொல்லியது!

திரும்பி பார்த்தேன்
சிரமப்பட்டு நின்றுகொண்டிருந்தார்.
உள்ளத்தில் சிறுவலி.
பக்கத்து சீட்டுக்காரருக்கும்
உறுத்தியது போலும்.
அடுத்த பஸ்சில வந்தா என்ன!
செத்தா போயிரும்?’
உறுத்தலை நிறுத்திக்கொண்டார்.

என்ன அவசர வேலையோ?
முடிவெடுத்தேன்.
‘உட்காருங்கம்மா!’ எழுந்துகொண்டேன்.
கண்களில் நன்றியுடன்
அமர்ந்தார்.

மீண்டும்
மேகங்களைப் பார்த்தேன்.
விளையாடிக்கொண்டிருந்தன.
அடர்த்தியாய் வரிசையாய்
நின்ற மரங்களை  கண்டேன்.
காற்றோடு கதை பேசிக்கொண்டிருந்தது!

* 1997ல் எழுதியது! பரணியில் வேறு எதையோ தேடிய பொழுது கண்ணில்பட்டவை!

January 15, 2015

வாழ்க்கை

பரமபதமாகி விட்டது
வாழ்க்கை

கவனமாய்
மெல்ல மெல்ல
நகர்கிறேன்

கிடைத்த சிறு ஏணியில்
உற்சாகமாய்
மேலே ஏறுகிறேன்

நகரும் பாதையில்
ஏணியை விட
பெரிய பாம்பு கொத்தி
துவங்கிய புள்ளியிலேயே
துவண்டு விழுகிறேன்

வயதுகள் கடக்கின்றன
பொறுப்புகள் பெருகுகின்றன
சுமைகள் அழுத்துகின்றன

மீண்டும் நகர்கிறேன்
நம்பிக்கையுடன்

தூரத்தில் சில
ஏணிகள் தென்படுகின்றன

தெரிந்தும் வசதியாய்
மறந்துவிடுகிறேன்
தூரத்தில் தெரியும்
ஏணியைவிட பெரிதான
சில பாம்புகளை