> குருத்து: பயணம் - கவிதை

January 27, 2015

பயணம் - கவிதைதொலைதூரப் பயணத்திற்கு
பேருந்திற்காய் காத்திருந்தேன்.
சிறிது நேரத்தில்
ஆடி அசைந்து வந்தது.

இடம்பிடிக்க ஆவலாய் மொய்த்தார்கள்.
கொஞ்சம் சிரமப்பட்டு
இடம் பிடித்தாயிற்று!
தேர்வில் வெற்றி பெற்ற
மாணவனின் குதூகலிப்புடன்
என்னை வசதி செய்துகொண்டேன்.

முகத்தில் அறையும் திமிர்காற்று.
கையசைத்து குதூகலிக்கும்
பச்சை வண்ணமரங்கள்.
நினைத்த உருவம் பொருந்திக்கொள்ளும்
வான் மேகங்கள்.
காற்றில் மிதந்து
காதலிக்க வலியுறுத்தும்
ராசாவின் பாட்டு.
பயணங்கள் இனிமையானது!
பாட்டிற்கேற்ப நடனம் ஆடிக்கொண்டே
பயணம் செய்தது பேருந்து.

பின்வந்த நிறுத்தத்தில்
பயணிகள் சிலர் ஏறினார்கள்
அதில் ஒரு வயதான அம்மா
ஏறியதும் கண்களை சுழற்றி
இடம் தேடினார்.
முகத்தில் சிறிது வருத்தம்.
கண்டும் காணாதது போல்
முகங்கள் வேறுபக்கங்கள் திருப்பிக்கொண்டன!

எண்ணம் மாற்ற
பார்வையை வெளியில் தெளித்தேன்.
வெண்மையாய் இருந்த மேகங்கள்
அடர்த்தியாய் பின்னிக்கொண்டன.
வருத்தமுகம் நினைவில் வந்தது.
பார்வையை கீழே தாழ்த்தினேன்.
மரங்கள் உற்சாகமிழந்தது போல்
ஒரு பிரமை.

அந்த அம்மாவிற்கு கால் வலித்திருக்கும்
நேரக் கணக்கிட்டு மனது சொல்லியது!

திரும்பி பார்த்தேன்
சிரமப்பட்டு நின்றுகொண்டிருந்தார்.
உள்ளத்தில் சிறுவலி.
பக்கத்து சீட்டுக்காரருக்கும்
உறுத்தியது போலும்.
அடுத்த பஸ்சில வந்தா என்ன!
செத்தா போயிரும்?’
உறுத்தலை நிறுத்திக்கொண்டார்.

என்ன அவசர வேலையோ?
முடிவெடுத்தேன்.
‘உட்காருங்கம்மா!’ எழுந்துகொண்டேன்.
கண்களில் நன்றியுடன்
அமர்ந்தார்.

மீண்டும்
மேகங்களைப் பார்த்தேன்.
விளையாடிக்கொண்டிருந்தன.
அடர்த்தியாய் வரிசையாய்
நின்ற மரங்களை  கண்டேன்.
காற்றோடு கதை பேசிக்கொண்டிருந்தது!

* 1997ல் எழுதியது! பரணியில் வேறு எதையோ தேடிய பொழுது கண்ணில்பட்டவை!

2 பின்னூட்டங்கள்:

வலிப்போக்கன் - said...

அடுத்த பஸ்சில வந்தா என்ன!
செத்தா போயிரும்?’---செத்தாலும் பரவாயில்லை அடுத்த பஸ் வந்ததால்தான் உண்டு..

yathavan nambi said...வணக்கம் வலைப் பூ நண்பரே!
எனது (புதுவைவேலு), "கவி ஒளியை" YOU TUBE ல் ஓளி ஏற்றி, ஒலிக்கச் செய்த
'சுப்பு தாத்தா' அவர்களுக்கு அன்பு வணக்கம், மிக்க நன்றி!
பாடலை கேட்டு மகிழ வாருங்கள்.

இணைப்பு:

http://youtu.be/KBsMu1m2xaE

.www.subbuthatha72.blogspot.com