> குருத்து

July 20, 2015

ஆட்சியில் பங்கும் காங்கிரசு தொண்டனும்!

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இயக்கப்பணி தொடர்பாக வீடு வீடாக, ரயில்களில், பேருந்துகளில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்திருக்கிறேன். மக்களில் நேற்று துவங்கிய கட்சிக்கு கூட தொண்டர்களை சந்தித்திருக்கிறேன். ஆனா பாருங்க இந்த காங்கிரசு தொண்டரை மட்டும் பார்த்ததேயில்லை. சக தோழர்களிடமும் அவ்வப்பொழுது கேட்பதுண்டு. அவர்களும் பார்த்ததேயில்லை என்பார்கள்!

என் வாழ்வில் இரண்டு காங்கிரசுகாரர்கள் கடந்து போயிருக்கிறார்கள். ஒருவர் என் அப்பா. பஞ்சாலை தொழிலாளியான அவர், தன் வாழ்வில் இறுதி ஆண்டுகளில் குடியில் காலம் கழித்தார். அதனால், அவ்வப்பொழுது வேலைக்கு போகமாட்டார். அங்கிருந்த காங்கிரசின் தொழிற்சங்கமான ஐஎன்டியூசி தான் அவ்வப்பொழுது வேலை போகாமல் காப்பாற்றியது. அதற்கு நன்றி பாராட்டும் விதமாக, வீட்டில் ஒரு இந்திரா படத்தை மாட்டி வைத்திருந்தார். மற்றபடி, காங்கிரசின் நடவடிக்கைகளை எப்பொழுதும், எவ்வளவு விமர்சனம் செய்தாலும், எதிர்த்து பேசமாட்டார். மெளனமாக இருப்பார்.

இன்னொரு காங்கிரசுகாரர். 1991ல் அப்பொழுதெல்லாம் ரெம்ப சின்ன பையன் நான். வீட்டு திண்ணையில் என் அப்பாவுடன் தூங்கிகொண்டிருந்தேன். திடீரென பெருங்குரலெடுத்து அழும் சத்தம் கேட்டு எழுந்தேன். பக்கத்து வீட்டில் குடியிருந்த 55 வயது பெரியவர் துக்கம் தாளாமல் விடிய விடிய அழுதார். என்னவென்று கேட்ட பொழுது ராஜீவ் கொல்லப்பட்ட விசயத்தை சொன்னார்கள்.

என் வாழ்வில் நான் சந்தித்த இந்த இரண்டு காங்கிரசுகாரர்களும் செத்துப்போய் 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நிலைமை இப்படி இருக்கும் பொழுது, E.V.K.S இளங்கோவன் எந்த தைரியத்தில் ஆட்சியில் பங்கு கேட்கிறார்? சிரிப்பு சிரிப்பாக தான் வருகிறது! இவரே பங்கு கேட்கும் பொழுது, டாக்டர் அன்புமணிக்கு முதலமைச்சர் ஆசை வருவது எல்லாம் இயல்புதான் போல!
சாத்தியமில்லை தான். இருந்தாலும் சொல்லி வைக்கிறேன். உங்களில் யாராவது காங்கிரசு தொண்டரை பார்த்தால், என்னிடம் தெரிவியுங்கள். வாழ்வில் ஒருமுறையாவது நான் பார்த்துவிடவேண்டும் என ஆவலோடு இருக்கிறேன்.

June 22, 2015

யோகாவும் ஆர்.எஸ்.எஸ்.யும்!

மோடி அரசின் கோரிக்கையை ஐ.நா. அங்கீகரித்து ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினம் என அறிவித்து இருக்கிறது. யோகாவை கல்லாக் கட்டும், கார்ப்பரேட் சாமியார்கள் எல்லாம் பம்பரம் போல சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். வாழைப்பழத்திற்குள் மருந்தை வைத்து மாடுகளுக்கு தருவார்கள். அதுபோல இந்துத்துவவாதிகள் யோகாவிற்குள் இந்துத்துவ கருத்துக்களை வைத்து தந்துகொண்டிருக்கிறார்கள். இனியும் தருவார்கள்.

வீட்டிற்கு அருகில் உள்ள பார்க்கில் காலையில் இரண்டே இரண்டு ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவரின் வாரிசுகள் ஏதோதோ புரியாத சமஸ்கிருத மந்திரங்களை சொல்லி, தரையில் எதையும் விரிக்காமல் மண் தரையிலேயே உருண்டு புரண்டு உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பார்கள். இன்று யோகா தினத்தை சாக்காக வைத்து 20 பேரை திரட்டியிருந்தார்கள்.

நான் யோகா எதிர்ப்பாளன் எல்லாம் கிடையாது. கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக யோகா வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5.30 முதல் 6.30 வரை போய்க்கொண்டிருக்கிறேன். ஆஸ்துமா தொந்தரவு இருந்தபடியால், மூச்சுப்பயிற்சிக்காகவும், உடற்பயிற்சிக்காகவும் துவக்கத்தில் போனேன். 1 வருடத்தில் ஹோமியோபதி மருந்தினாலும், யோகாவின் உதவியினாலும், உணவுக் கட்டுப்பாட்டினாலும் ஆஸ்துமாவிலிருந்து விடுதலை பெற்றேன். இருப்பினும், மரபு வழியாக வந்த நோய் என்பதால், அதன் வேர் இன்னும் உடலில் இருப்பதால், தொடர்ந்து யோகாவை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

யோகா செய்வதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கமுடியும். ஏதேனும் ஒரு நோயில் சிரமப்பட்டுக்கொண்டிப்பவர்கள் யோகாவை தொடரும் பட்சத்தில் அதை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளமுடியும். யோகா நல்லது என நல்லெண்ணத்தில் வருபவர்கள் வெகு சீக்கிரத்தில் நின்றுவிடுவார்கள். நாலுநாள், 10 நாள், 30 நாள், 6 மாதம் என நின்று போனவர்கள் அதிகம். பகுதியில் நான்கு வருடங்களில் பாதிபேரை யோகாவை வைத்தே பழக்கமாகியுள்ளேன்.

திருமணத்தில் ஐயர் ஓதுவது போல யோகா வாத்தியார்கள் அதன் செய்முறையில் புரியாத சமஸ்கிருத மந்திரங்களை சொல்வார்கள். மாணவர்களும் சொல்வார்கள். ஒருமுறை அர்த்தம் கேட்டபொழுது, இதெல்லாம் சொன்னால் ரெம்ப நல்லது என்றார். அர்த்தம் தெரியவில்லை என புரிந்துகொண்டேன். நான் மந்திரங்களை சொல்வதில்லை. அவர்களும் ஏன் சொல்லவில்லை என கேள்வியும் கேட்பதில்லை. இந்த நான்கு வருடங்களில் 7 வாத்தியார்கள் மாறியிருக்கிறார்கள். ஒரு சிலர் வகுப்பு முடிகிற தருவாயில், இந்துத்துவ கருத்துக்களை நைச்சியமாக பேசுவார்கள். நான் அதில் கேள்வி எழுப்புவதின் மூலம் அவர்களை இடைமறித்திருக்கிறேன். இப்பொழுது உள்ள வாத்தியார் கருத்துக்கள் பேசுவதில்லை. தொல்லையும் இல்லை. தொடருகிறேன்.

நான் யோகா சேரும் பொழுது ரூ. 350 இருந்தது. இப்பொழுது ரூ.600 வாங்குகிறார்கள். விசாரித்த பொழுது, பல இடங்களில் யோகாவை வைத்து நிறைய கல்லாக் கட்டுகிறார்கள் என தெரிய வந்தது. உடல் உழைப்பு செய்கிறவர்கள் வருவதில்லை என சொல்ல தேவையில்லை. உடல் உழைப்பிலிருந்து பிரிந்த நடுத்தர வர்க்கம் தான் பெரும்பாலும் யோகாவை நாடுகிறார்கள்.

நடுத்தரவர்க்கத்தில் பலர் தான் மோடி அப்படி, இப்படி என இல்லாத பில்டப் எல்லாம் கொடுத்தார்கள்.  அதனால் தான் மோடி அரசு யோகாவிற்கு ஒரு அமைச்சரவையை உருவாக்கி சுறு சுறுப்பாக வேலை செய்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் என் செல்பேசிக்கு யோகா நல்லது என நாலைந்து குறுஞ்செய்திகளை அரசு அனுப்பி வைத்திருக்கிறது!

ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு ஆள் பிடிக்க அவர்களுக்கு கோயில், கும்பாபிசேகம், கலவரம் என பலவற்றில் இப்பொழுது யோகாவும் சேர்ந்துள்ளது. யோகா நல்லது என நல்லெண்ணத்தில் வருபவர்களை ஆர்.எஸ். எஸ். சிறிது சிறிதாக தன் இந்துத்துவ வெறிக்கருத்துக்களை திணிக்கும். நாம் தாம் கவனமாய் இருக்கவேண்டும்!

April 15, 2015

மாணவர்களுடன் ஒரு பயணம்!




இரவு பதினொருமணி. மதுரை இரயில் நிலையம். எல்லா ரயில்களும் வந்து போய், பரப்பரப்பு எல்லாம் அடங்கி ஓய்வெடுக்க ஆரம்பித்திருந்தது.  அந்த அமைதியை கலைத்து, ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வர, ஆங்காங்கே இருட்டில் அமர்ந்திருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக முதல் நடைமேடையில் ஒன்றுகூட ஆரம்பித்தார்கள்.


பண்டிகைநாள் என்பதால் பேருந்துக்காக  செய்த எல்லா முயற்சிகளும் வீணாய் போக, வீட்டுக்கு போய்விடலாம் என நினைத்தேன். முதலாளியின் கடுகடு முகம் நினைவுக்கு வந்து சென்னைக்கு செல்லும் கடைசி வண்டியான அனந்தபுரியை பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில், வேர்க்க விறுவிறுக்க நடைமேடையை வந்தடைந்தேன்.


சில விநாடிகளுக்குள் அந்த நீண்ட ரயில் அமைதியை கலைத்து, பெரிய சத்தத்தோடு வந்து நின்றது. முன்பதிவு செய்யப்படாத (Unreserve) காம்பார்ட்மெண்டிற்கு சென்று பார்த்தால், திக்கென்றிருந்தது. வாசல்வரை நின்று கொண்டிருந்தார்கள். இது கடைசிபெட்டி. முன்னால் இருக்கும் இதேபோல இன்னொரு பெட்டிக்கு போகலாம் தான். ஆனால், அதற்கு நேரம் இல்லை. ஒருவேளை இதைவிட அதிகமாய் கூட்டம் இருக்ககூடிய அபாயமும் உண்டு. ரிஸ்க் வேண்டாம் என ஏறிக்கொண்டேன். 200 பேர்வரை அந்த காம்பார்ட்மெண்டில் நிச்சயம் இருந்தார்கள். புதிதாய் ஏறியவர்கள் உட்கார இடம் தேடினார்கள். உள்ளே ஒரே கூச்சலும் குழப்பமாய் இருந்தது.

அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்கி உள்ளே நோட்டம் பார்த்த பொழுது, உள்ளே சிலர் படுத்து நன்றாக தூங்கி கொண்டு வந்தனர். 4 பேர் உட்கார வேண்டிய இடத்தில் இருவர் கால் நீட்டி உட்கார்ந்திருந்தனர். என்ன செய்யலாம்? ஒன்றும் செய்யமுடியாது.  வாயிலோரம் நின்றுகொண்டு கையில் இருந்த நாவலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

திண்டுக்கல்லை அடையும் பொழுது, நடுநிசியாகிவிட்டது. அங்கும் சிலர் ஏறினர். அதில், நான்கு கல்லூரி மாணவர்களும் இருந்தார்கள். ஏறும்பொழுது, கலகலவென பேசிக்கொண்டே ஏறினார்கள். அந்த காம்பார்ட்மெண்டின் நிலைபுரிய அவர்களுக்கு  பத்து நிமிடங்கள் கூட ஆகவில்லை. அவர்களுக்குள் பேசிக்கொண்டு, விறுவிறுவென மக்களை விலக்கி, காம்பார்ட்மெண்டிற்குள் உள்ளே நுழைந்து, ஒரு மாணவன் கட்டளைகள் தர, மற்றவர்கள் அமுல்படுத்த என பரபரவென செயல்பட்டார்கள்.

தொந்தியும் தொப்பையுமாய் குறட்டைவிட்டு படுத்து தூங்கிக்கொண்டு இருந்தவர்களை எழுப்பி, அன்பாய் கேட்டுக்கொண்டு உட்கார வைத்தனர். சத்தம் போட்டவர்களை சத்தத்தால் அடக்கினார்கள். நின்றுகொண்டிருந்த பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருந்ததால், மாணவர்கள் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழியில்லை.


இடம் ஒதுக்கி தந்ததில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் முன்னுரிமை தந்தார்கள். அரை மணி நேரம் ஒழுங்குபடுத்தியதில் சிரமப்பட்டு நின்றுக்கொண்டிருந்த  சகலருக்கும் உட்கார இடம் கிடைத்துவிட்டது.  இடம் பறிபோனவர்கள் புலம்பியதோடு அந்த மாணவர்களை திட்டியும் தீர்த்தார்கள். இடம் கிடைத்தவர்களோ மாணவர்களின் செயல்பாடுகளை வியந்து பேச ஆரம்பித்தார்கள். மாணவர்கள் தங்களுக்கு வாசலோரம் கிடைத்த கொஞ்சூண்டு இடத்தில் அமர்ந்து காலாட்டிக்கொண்டே ஜாலியாக பேச ஆரம்பித்துவிட்டனர். அவர்களோடு சேர்ந்து மக்களை ஒழுங்குப்படுத்தியதில் எனக்கும் கூட ஒரு இடம் கிடைத்தது.  அங்கு உட்கார மனசில்லாமல் நானும் அந்த மாணவர்களோடு வாசலை ஒட்டி அமர்ந்துகொண்டேன்.

இடையில் ஒரு நிறுத்தத்தில் தொழிலாளி பீடிக்குடித்தார் என இருப்பதை பிடுங்க, ரயில்வே போலீசு முயற்சி செய்ய, பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் பைசா தராமல், பேசியே தொழிலாளியை மீட்டு வந்தார்கள்.

அடுத்து ஒரு மணி நேரத்தில், வந்த நிறுத்தத்தில் மக்கள் சிலர் ஏற வந்த பொழுது, "இவ்வளவு பேருக்கு இடம் இல்லை. வண்டி நீளம் என்பதால், நடப்பதற்கு சிரமப்படும் வயதானவர்கள் மட்டும் ஏறிக்கொள்ளுங்கள். இந்த ஸ்டேசனில் நிறைய நேரம் வண்டி நிற்கும். ஆகையால், மற்றவர்கள் முன்பெட்டிக்கு சென்றுவிடுங்கள்" என அறிவுறுத்தினார்கள். அவர்களின் பேச்சை மறுக்காமல், நிலைமையை புரிந்து கொண்டு, மீதிபேர் முன்பெட்டிக்கு நகர்ந்தார்கள். ஏறிய சிலருக்கும், பொறுப்பாய் இடம் தேடி, அவர்களையும் அமர வைத்தார்கள். தன்னுள்ளே நடக்கும் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்து, புன்னகைத்தப்படி அந்த ரயில் இருட்டைக் கிழித்துக்கொண்டு வேகமாக போய்க்கொண்டிருந்தது.


இதற்கிடையில், சமீபத்தில் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த வயதான அம்மா நடக்கும் வழியில் அமர்ந்திருந்ததால், போகிற, வருகிறவர்களின் செருப்பு கால் மிதிபட்டு வலியால் அழுததைப்  பார்த்த மாணவர்கள், அந்தம்மாவை பாதையை விட்டு விலகி அமர வைக்க முயற்சி செய்தார்கள். ம்ஹூம். இடம் இல்லை. எல்லோருக்கும் கேட்கிற மாதிரி, 'இனி இந்த இடத்தை கடக்கிறவர்கள் யாரும் செருப்பணிந்து செல்லக்கூடாது' என சத்தமாக அறிவித்தார்கள். அங்கேயே இருபது நிமிடங்கள் வரை இருந்து, மக்கள் அமுல்படுத்துகிறார்களா என உறுதிப்படுத்தினார்கள். அருகில் இருந்தவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு,  திரும்பவும் தங்கள் இடத்திற்கு வந்து, விட்டதிலிருந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

சென்னைக்கான தூரம் குறைந்ததால், பயணிகள் ஏறுவது நின்று போனது. சிலர் இறங்கி கொண்டும் இருந்தார்கள்.    

‘பிறவித் தலைவர்கள்’ அவர்கள் என் மனதைக் கவர்ந்து கொண்டார்கள். பேச்சுக் கொடுத்ததில், எல்லோரும் இரண்டாமாண்டு கல்லூரி படித்துக் கொண்டிருப்பதாக சொன்னார்கள்.  ’எப்படி இந்த யோசனை?’ என கேட்டதற்கு, ”எல்லோரும் நம்ம சனங்க. இதுதான் சரின்னு எடுத்துச் சொன்னா கேட்டுக்க போறாங்க!” என்றனர்.

மாணவர்கள் என்றால் பொது மக்களுக்கு இடையூறு செய்வார்கள், பெண்களை கேலி செய்வார்கள், பொறுக்கிகள், குடும்ப நிலையை உணராதவர்கள் என்பதெல்லாம் பொதுப்புத்தியில் உறைந்து போன விசயங்கள்.

அந்த உறைந்து போன கருத்துக்கு இந்த அனுபவம் ஒரு அழகிய கவிதை அடி.

- குருத்து