> குருத்து

December 18, 2021

Aranyak – திரில்லான வெப் சீரிஸ்


இமாச்சல் பிரதேசத்தில் ஒரு மலையடிவாரத்தில் உள்ள சிறுநகரம் அது! வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளும் வருகிற பகுதி. துவக்கத்திலேயே ஒரு வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் காட்டிற்குள் தூக்கில் தொங்குகிறாள்.


19 ஆண்டுகளுக்கு முன்பு 9 இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, காட்டிற்குள் இதே போல தொங்கவிடப்பட்டிருக்கிறார்கள். சொல்லிவைத்தாற் போல எல்லோருடைய கழுத்திலும் சிறுத்தையின் கீறல் அழுத்தமாக பதிந்திருக்கிறது. இதை செய்வது ஒரு சிறுத்தை மனிதன் என ஊர் மக்களிடத்தில் ஒரு கதை நிலவுகிறது.

நாயகி உள்ளூரில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். கணவரோடு பிணக்கில் இருக்கிறார். மூத்தப் பெண்ணுக்கு நல்ல கல்லூரி கிடைக்கவேண்டும் என்பதற்காக வீட்டை கவனித்துக்கொள்ள ஒரு வருடம் விடுப்பில் செல்ல முடிவெடுக்கிறார். அவரை விடுவிக்க நாயகன் இன்ஸ்பெக்டராக வந்து சேர்கிறார். இந்த சமயத்தில் இந்த மர்ம கொலை நடக்கிறது. தன் திறமையை நிரூபிக்க ஒரு நல்வாய்ப்பு இது என கருதுகிறார். ஆகையால், விடுப்பை ரத்து செய்துவிட்டு, நாயகனும், நாயகியும் இணைந்து விசாரணையை துவங்குகிறார்கள்.

உள்ளூரில் ”இராஜவம்சத்தில்” வந்த ஒரு எம்பிக்கும், அமைச்சராக உள்ள பெண்மணிக்கும் அரசியல் ரீதியாக பகை இருக்கிறது. ”இராஜவம்ச” எம்பி ஒரு பப் நடத்துகிறார். அங்கு எல்லா வித போதை பொருட்களும் சரளமாக கிடைக்கிறது.

படத்தில் வருகிற அத்தனை கதாப்பாத்திரங்களும் ஏதோ விதத்தில் இந்த கொலையில் குறுக்க மறுக்க வந்து போகிறவர்களாக இருக்கிறார்கள். அதனால் பலரும் சந்தேக வலையில் இருக்கிறார்கள்.

இறுதியில் இந்த கொலையை செய்தது யார் என கண்டுப்பிடித்தார்களா என்பதை திரில்லராக சொல்லி முடித்திருக்கிறார்கள்.

***

இந்த வெப்சீரிஸ் ஒரு எபிசோடில் 8 அத்தியாயங்களாக வெளிவந்திருக்கிறது. மொத்தம் 5.30 மணி நேரம். கொலை நடந்து, விசாரணை துவங்கி, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இறுதி இரண்டு அத்தியாயங்களில் எல்லா புதிர்களையும் அவிழ்க்கிறார்கள். நான் பார்த்த சில வெப் சீரிஸ்களில் ஒரு நாடகம் போல இழுக்கிற தன்மை இருந்திருக்கிறது. ஆனால் இந்த சீரிஸ் துவக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவும், திரில்லாகவும் கொண்டு சென்ற சீரிஸ் என்பேன்.

இந்த மாதிரி கொலை விசாரணை கதைகளில் பலரையும் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வருவார்கள். ஆனால் அந்த புதிர்களை அவிழ்க்கும் பொழுது, பலரையும் டம்மியாக்கிவிடுவார்கள். அப்படி செய்யாமல், எல்லோருக்குமே கதையில் கவனமாக இடம் தந்து இருக்கிறார்கள் என்பது சிறப்பு.

ஒவ்வொரு மனிதனுக்கும் ரகசியம் இருக்கிறது என்பார்கள். உண்மை தான். இவர்கள் ஆடும் அதிகார, ஆணாதிக்க விளையாட்டுகளில் ஒரு அப்பாவி இளம்பெண் பலியாவது தான் சமூக அவலம்.

நாயகியாக ஆளவந்தான் நாயகி ரவீனா டான்டன் தன் வேலைக்கும், குடும்பத்திற்கும் இடையே அல்லாடுகிற ஒரு கதாப்பாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார். கஹானி படத்தில் நாயகிக்கு உதவும் போலீஸ் பாத்திரத்தில் வரும் Parambarata Chatterjee இதிலும் இன்ஸ்பெக்டராக அருமையாக செய்திருக்கிறார். மற்ற பாத்திரங்களாக வருபவர்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வசனமும் சிறப்பு. ஒரு இடத்தில் ”ஒருவன் என்ன நல்லா படிச்சாலும் அறிவாளியாக தான் முடியுமே தவிர, ஒரு நல்ல மனிதனாக முடியாது” என்பார். திரில்லர் கதை என்பதால், அதிலேயே கொண்டு செல்லாமல், உணர்வுபூர்வமாகவும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் செய்யும் பொழுது, ”ஜெய் ஹிந்த்” என சொல்கிறார்கள். இன்னொரு படத்திலும் இதே மாதிரி பார்த்தேன். ஆச்சர்யமாக இருந்தது. எந்தந்த மாநிலங்களில் இந்த நடைமுறை இருக்கிறது என தெரிந்தால் சொல்லுங்கள். நானும் தேடுகிறேன்.

நெட் பிளிக்சில் இருக்கிறது. தமிழ் ஆடியோவும் இருப்பது சிறப்பு. நிச்சயம் பாருங்கள்.

December 16, 2021

PK (2014) இந்தி


நம்ம பூமியை ஆய்வு செய்ய வேற்று கிரகத்திலிருந்து நாயகன் வருகிறார். வந்த உடனேயே தனது கிரகத்தை தொடர்பு கொள்ள வைத்திருக்கும் ரிமோட் டாலரை ஒரு திருடனிடம் பறிகொடுக்கிறார். அதன் துணை இல்லாமல் தன் கிரகத்தை தொடர்புகொள்ள முடியாது. ஆகையால், தேட துவங்குகிறார்.


தேடும் பொழுது “ஆண்டவன் தான்யா உனக்கு உதவவேண்டும்” என பலரும் சொல்ல, எல்லா கடவுள்களையும் கும்பிட துவங்குகிறார். ஆனால் கிடைத்தபாடில்லை. நாயகி ஒரு செய்தி தொலைக்காட்சியில் பணிபுரிகிறார். இவருடைய நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு, விசாரித்து உதவ முன்வருகிறார்.


அந்த ரிமோட் ஒரு கார்ப்பரேட் சாமியாரிடம் சிக்கி இருப்பது தெரியவருகிறது. அந்த சாமியார் “அது சிவனிடமிருந்து கிடைத்தது” என மக்களிடம் அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார். அதை மீட்டார்களா? தனது சொந்த கிரகத்துக்கு போனாரா என்பதை பல கலாட்டாக்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
******

முன்னாபாய் எம்பிபிஎஸ் (தமிழில் வசூல் ராஜா எம்பிபிஎஸ்), 3 இடியட்ஸ் (தமிழில் நண்பன்) படங்களின் இயக்குநர் இராஜ்குமார் ஹிரானி தான் இந்தப்படத்தையும் எடுத்திருக்கிறார். அவர் எடுத்தது சில படங்கள் என்றாலும் பல விருதுகளை பெற்றுள்ளன. பல மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளன.

ஒரு ஏலியன் மனிதன் கதாப்பாத்திரத்தை வைத்து திரில்லர், ஆக்சன் என பல படங்களை எடுத்து கல்லாக் கட்டிக்கொண்டிருக்கும் பொழுது, சமூக அக்கறையுடன் சமூகத்தில் உள்ள அம்சங்களை குறிப்பாக மதம் சம்பந்தப்பட்ட விசயங்களை விவாதித்தது அருமையான விசயம்.

எல்லா கடவுள்களையும் நெக்குறுகி வேண்டினாலும், அவருடைய வேண்டுதல் நிறைவேறாதது போல... இந்த நாட்டில் பல கோடிக்கணக்கான மக்கள் விதவிதமான கடவுள்களை வேண்டினாலும், அவர்களுடைய பிரார்த்தனைகள் எல்லாம் காற்றில் எழுதியது போல கரைந்து போய்விடுகின்றன. சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் போல தங்களுடைய வேண்டுதல்களை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

படத்தின் துவக்கத்தில் ”பாகிஸ்தானி முஸ்லீம் என தெரிந்தும் அமைதியாகிவிட்டீர்களே!” என்பார் நாயகியிடம்! இதோ மாநாடு படத்திலும் நாயகன் கேட்கிறார். “முசுலீம்னு தெரிஞ்சிருந்தா பேசியிருக்க மாட்டீங்க! அப்படித்தானே!” என்பார். இரண்டு படங்களுக்கான கால இடைவெளி ஏழு வருடம் தான். ஆனால், இந்த இடைவெளி இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு பெரிதாக ஆக்கப்பட்டிருக்கிறது! துயரம்.

ஏலியனாகவே வாழ்ந்திருக்கும் அமீர்கான், கெளரவ வேடத்தில் வரும் சஞ்சய் தத், நாயகி அனுஷ்கா சர்மா, சமீபத்தில் இறந்த சுஷாந்த் என எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அருமையான படம். வந்த புதிதிலேயே பார்த்து கல கலவென சிரிக்க வைத்தும், சிந்திக்கவும் வைத்தப்படம். யூடியூப்பில் தமிழில் சப் டைட்டிலுடன் இலவசமாக இருக்கிறது. கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்.

The Girl on the Train (2021) இந்தி - திரில்லர்


லண்டனில் நடக்கிற கதைக்களம். நாயகி ஒரு வழக்கறிஞர். ஒரு மாபியாவிற்கு எதிராக வழக்காடுகிறார். வழக்கிலிருந்து விலக அவர்கள் மிரட்டுகிறார்கள். நம்மால் அவர்களை எதிர்கொள்ள முடியாது டாக்டர் கணவர் பயப்படுகிறார். இருந்தும் வழக்காடி ஜெயிக்கிறார்.


கோபமான மாபியா கும்பல் ஏற்படுத்திய விபத்தில் நாயகிக்கு கரு கலைகிறது. இந்த துக்கத்திலிருந்து வெளிவர குடிக்கு அடிமையாகிறார். கூடுதலாக நடந்தவைகளை மறந்து போகிற அம்னீசியாவும் தாக்க... பிரச்சனைகள் அதிகரிக்க கணவர் விவாகரத்து வாங்குகிறார்.

தினமும் ரயிலில் செல்லும் வழக்கம் நாயகிக்கு இருக்கிறது. அவர்கள் வாழ்ந்த வீட்டில் நாயகனுடன் இன்னொரு பெண் இணைந்து வாழ்வதை பார்க்கும் நாயகிக்கு கோபம் கோபமாய் வருகிறது. அடுத்து வரும் நாட்களில் அந்த பெண் கொலை செய்யப்படுகிறாள்.

நாயகி ஏற்கனவே குடி நோயாளி. அம்னீஷியாவும் இருக்க, அந்த கொலைப்பழி நாயகி மேல் விழுகிறது. அந்த கொலையை யார் செய்தது? எதற்காக கொலை செய்தார்கள் என்பதை சில திருப்பங்ககளுடன் முக்கால்வாசி படத்தில் சொல்லி முடிக்கிறார்கள்.
***

பிரிட்டனில் நாவலாக எழுதப்பட்டு, வெற்றி பெற்று, அதனால் ஈர்க்கப்பட்டு ஹாலிவுட்டில் இதே பெயரில் 2016ல் படமாக்கியிருக்கிறார்கள். அங்கு வெற்றி பெற்று, இந்தியில் ரீமேக் செய்திருக்கிறார்கள். நாவல் படித்தவர்களுக்கு இங்கிலீஷ் படம் கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது என்கிறார்கள். இந்தியில் அதைவிட சுமாராக எடுத்து வைத்திருக்கிறார்கள்.

இங்கிலீஷ் படத்தில் இருந்து இந்தியில் கொஞ்சம் கதையை மாற்றி அமைத்திருக்கிறார்கள் என யூகிக்கிறேன். துவக்க கதை கொஞ்சம் குழப்பமாய் இருக்கிறது. நாயகனுக்கு ஒரு மனைவி இருக்கிறாள். அவளை விட்டுவிட்டு நாயகி வாழ்ந்த வீட்டில் இருந்த அப்பாவி பெண் மீது ஏன் கோபம் கொள்ளவேண்டும். லாஜிக்கே இல்லை.

நெட்பிளிக்கில் தமிழ் ஆடியோவுடன் இருந்ததால், பார்த்தேன். வாய்ப்பு இருக்கிறவர்கள் இங்கிலீசில் வெளிவந்த படத்தைப் பாருங்கள். இந்தியில் மிகவும் சுமார்.