> குருத்து: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி – இனி!

March 26, 2009

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி – இனி!


பி.எப் (வருங்கால வைப்பு நிதி) பற்றி நீண்ட நாட்களுக்கு பிறகு, உங்களோடு பகிர்ந்து கொள்ள ஒரு தகவல்.

20 தொழிலாளர்கள் இருந்தால் தான், ஒரு நிறுவனம் பி.எப். திட்டத்தில் சேர முடியும். அந்த விதியை பி.எப். தளர்த்தி 10 பேராக விரைவில் மாற இருக்கிறது. இதனால், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதன் பின்னணி என்ன என்பதை இந்த பதிவில் விளக்க முயற்சிக்கிறேன்.

இதுவரை...

பி.எப். விதி

ஒரு நிறுவனம் தொடங்கி, என்றைக்கு 20 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்களோ, அன்றிலிருந்து பி.எப். திட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்.

(இனி, முதல்வர் கருணாநிதி மாதிரி கேள்வி-பதில் வடிவத்தில் உரையாடலாம். வழ வழ என இழுக்காமல் புரிய வைக்க இந்த வடிவம் பயன்படுகிறது)

கேள்வி : எங்கள் நிறுவனத்தில் 20 பேருக்கு மேலேயே வேலை செய்கிறோம். ஆனால், பி.எப். இல்லையே?

பதில் : பி.எப். திட்டத்தில் சேர்ந்தால், தொழிலாளர்களுக்கு பலன் உண்டு. ஆனால், முதலாளிகளுக்கு வருத்தம் தான் உண்டு. ஏனெனில், அவர்களுடைய லாப விகிதம் கொஞ்சம் குறைந்துவிடும் என்பதால், முதலாளிகள் விரும்புவதில்லை.

கேள்வி : அரசோ, பி.எப். நிறுவனமோ இதை கண்காணிக்காதா?

பதில் : அந்த நிறுவனத்தின் வருடாந்திர கணக்கை தாக்கல் செய்ததை பி.எப். நிறுவனம் வாங்கி சோதித்தால், உண்மை தெரிந்துவிடும். ஆனால், அதை பி.எப். நிறுவனம் செய்யவேண்டுமே! முதலாளிகளை பாதிக்கும் என்பதால், அப்படியெல்லாம் செய்வதில்லை. விதிவிலக்குகள் உண்டு.

தொழிலாளியாக இருந்து கொண்டு, நீங்கள் ஒன்று செய்யலாம். உங்கள் பெயர் போட்டு, (பிரச்சனை என்றால்... பெயரிடாமாலோ) பி.எப். நிறுவனத்துக்கு இது குறித்து கடிதம் எழுதினால், ஒரு பி.எப். அதிகாரி வந்து நிறுவனத்திற்கு வந்து சோதித்து, பி.எப். திட்டத்தில் சேர்த்துவிடுவார்.

கேள்வி : எந்த முகவரிக்கு கடிதம் எழுத வேண்டும்?

பதில் : ஊருக்கு ஊரு மாறுபடும். வலையில் தேடிப்பாருங்கள். இல்லையெனில், எனக்கு பின்னூட்டம் இடுங்கள். நான் தருகிறேன்.

கேள்வி : எங்கள் அலுவலகத்தில் பி.எப். திட்டம் இருக்கிறது. நான் வேலைக்கு சேர்ந்து 1 வருடம் கழித்து தான் என்னை சேர்க்கமுடியும் என சொல்லி, சேர்த்தார்கள். இது உண்மையா?

பதில் : பி.எப். விதி சொல்வது என்னவென்றால், ஒரு தொழிலாளி வேலைக்கு சேர்ந்த நாள் முதலே, அவரை திட்டத்தில் சேர்த்துவிட வேண்டும். அப்படியானால், உங்களுக்கு கொடுத்த சம்பளத்தை என்ன செய்வார்கள்? உங்கள் முதலாளி/நிறுவனம் சம்பளத்தை கணக்கில் காட்டாது.

கேள்வி : அதென்ன 20 பேர் வேலை செய்ய வேண்டும் என்ற விதி?

பதில் : நீங்கள் சொல்வது சரி! இந்த விதி மிக அபத்தமானது தான். இதற்கு, பி.எப். நிறுவனம் சொல்கிற பதில். அவர்களால், எல்லா நிறுவனங்களையும் கண்காணிக்க முடியாததால், இந்த விதியாம்.

அடப்பாவிகளா! உங்களால் கண்காணிக்க முடியவில்லை என்ற ஒரு காரணத்தால், கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தின் பலன்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட வேண்டுமா?

இப்பொழுது பி.எப் நிறுவனம் ஒரு நிறுவனத்தில் 20 பேர் வேலை செய்ய வேண்டும் என்ற விதியை தளர்த்தி, 10 பேராக மாற்ற இருக்கிறது. இதற்கான முன்வரைவை எழுதி, அரசுக்கு பி.எப். நிறுவனம் எழுதி கேட்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் இதற்கான அனுமதி கிடைத்தவுடன், இந்த திட்டம் அமுலுக்கு வர இருக்கிறது.

கேள்வி : தொழிலாளர்கள் மீது உள்ள அக்கறை காரணமாகவா இந்த விதி தளர்த்தப்படுகிறது?

பதில் : அப்படியெல்லாம் ஒரு புடலங்காயும் கிடையாது. பி.எப். நிறுவனத்தில் பல அதிகாரிகளுக்கு, பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்கவே இல்லையாம். இந்தியாவில் தொழில்கள் அழிந்து கொண்டே வருகிறது அல்லவா!

அதனால், அதிகாரிகள் ஜாடியில் கல்லைப்போட்டு தண்ணி குடித்த காக்கா போல் சிந்தித்து, இந்த விதியை தளர்த்துவதற்கு பரிந்துரைத்துள்ளார்கள்.

இது அமுலுக்கு வந்தால், இப்பொழுது உள்ள நிறுவனங்கள் போல், 5 மடங்கு பெருகும். புதிய அலுவலங்கள், புதிய வேலைகள் உருவாகி, இப்பொழுது உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வரும். அதற்காக தான். “நெல்லுக்கு பாய்வது புல்லுக்கும் பாயும்.” இதில் ‘நெல்’ தொழிலாளர்கள் என நினைத்தால், நீங்கள் அப்பாவி.

பின்குறிப்பு : இதையெல்லாம், நானாய் சிந்தித்து, இட்டுக்கட்டி சொல்லவில்லை மக்களே! இரண்டு பி.எப். அதிகாரிகளே பகிர்ந்து கொண்ட விசயம் தான் இது! மற்றபடி, இந்த திட்டத்தை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் பொழுது, தொழிலாளர்களுக்காக சிந்தித்து இந்த மாபெரும் புரட்சிகர திட்டத்தை கொண்டு வந்ததாக கதைவிடுவார்கள். மயங்காதீர்கள்.

11 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சோதனை

Anonymous said...

நீங்கள் சொல்கிற படி, என்னையெல்லாம் 6 மாதம் கழித்து தான், இந்த திட்டத்தில் சேர்த்தார்கள்.

குமார்

பால்வெளி said...

உபயோகமான தகவல்.. ஆனால் பி.எப். கட்டாத நிறுவனத்தைப் பற்றி மொட்டை கடுதாசி எழுதினா உடனே பி. எப். அதிகாரி வந்து சோதித்து "பி. எப். திட்டத்தில் சேர்த்து விடுவார்" என்று ரொம்பவும் அப்பாவியாக, உறுதியாக எழுதியிருக்கிறீர்களே.. நிறைய இடத்துல அந்த மாசத்துக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வருமானத்திற்கு ஏற்பாடு செஞ்சுட்டு அதிகாரி கிளம்புறதுதானே நடக்கும்.. ரொம்பவும் தான் நக்கல் உங்களுக்கு!...

அன்புடன்,

பால்வெளி.

குருத்து said...

//ஆனால் பி.எப். கட்டாத நிறுவனத்தைப் பற்றி மொட்டை கடுதாசி எழுதினா உடனே பி. எப். அதிகாரி வந்து சோதித்து "பி. எப். திட்டத்தில் சேர்த்து விடுவார்" என்று ரொம்பவும் அப்பாவியாக, உறுதியாக எழுதியிருக்கிறீர்களே.. நிறைய இடத்துல அந்த மாசத்துக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வருமானத்திற்கு ஏற்பாடு செஞ்சுட்டு அதிகாரி கிளம்புறதுதானே நடக்கும்.. //

பால்வெளி அவர்களுக்கு,

ஒரு நிறுவனம் பி.எப். நிறுவனத்திடம் எவ்வளவு காலம் வேண்டுமென்றாலும் டபாய்க்கலாம். ஆனால், ஒரு கடிதம் எழுதினால், அது அசிஸ்டென்ட் பி.எப். கமிசனரின் அல்லது கமிசனரின் பார்வைக்கோ போய்விடும். உடனே, அந்த கடிதத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு, இன்ஸ்பெக்சனுக்கு உத்தரவிடுவார். பி.எப். என்போர்ஸ்மென்ட் அதிகாரி சோதிக்க செல்வார்.

நீங்கள் சொல்வது, அவர் குறைந்த ஆட்களே இருப்பதாக ரிப்போர்ட்டில் எழுதினால் , அடுத்த கடிதம் போனால், அவருக்கு வேலையில் நெருக்கடி ஏற்பட்டுவிடும். அரசு அதிகாரிகள் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். ஆனால், தன் வேலைக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.

பிறகு, திட்டத்தில் சேர்க்காமல் போனால், அந்த ஒருமுறை தான் லஞ்சம் தேறும். சேர்த்துவிட்டால், ஒரு வருடத்திற்கு ஒருமுறை லஞ்சமாக ஒரு தொகை தேறும்.

பி.எப். அதிகாரி எதை தேர்வு செய்வார்? குறுகிய கால பணமா? நீண்ட கால பணமா?

பால்வெளி said...

விளக்கத்துக்கு நன்றி..

ஆனால் பி.எப். திட்டத்தில் சேர்த்து விட்டால் ஒவ்வொரு முறியும் லஞ்சம் என்கிறீர்களே.. அதுதான் விளங்கவில்லை. நிறுவனம் விதிப்படி கட்ட ஆரம்பித்த பின்னும் எப்படி அதிகாரி நெருக்கடி தர முடியும். அதையும் விளக்கினால் நல்லது...

பால்வெளி.

குருத்து said...

//ஆனால் பி.எப். திட்டத்தில் சேர்த்து விட்டால் ஒவ்வொரு முறையும் லஞ்சம் என்கிறீர்களே.. அதுதான் விளங்கவில்லை. நிறுவனம் விதிப்படி கட்ட ஆரம்பித்த பின்னும் எப்படி அதிகாரி நெருக்கடி தர முடியும். அதையும் விளக்கினால் நல்லது...//

பால்வெளி அவர்களுக்கு,

பி.எப். திட்டத்தில் சேர்ந்த பிறகு, எப்படி தொடர்ச்சியாக லஞ்சம்?

அது முதலாளிகள் செய்யும் தவறுகளினால், அதிகாரிகளுக்கு கிடைப்பது.

முதலில் பி.எப் என்றால் ஒரு அறிமுகம்... எனக்கு தரக்கூடிய சம்பளம் ரூ. 8000 என வைத்துக்கொள்ளுங்கள். அதில் பேசிக் மற்றும் பஞ்சப்படிக்கு மட்டும் பி.எப். கட்டினால் பொதும். அப்படியானால், என் சம்பளத்திற்கு, ரூ. 4000 (Basic + DA) எனக் கணக்கிட்டால், பி.எப்க்கு கட்ட வேண்டிய தொகை என்னிடம் பிடித்தம் 12% 480, முதலாளி அவர் பங்குக்கு 12% ரூ. 480 சேர்த்து ரூ. 960-ஐ என் கணக்கில் கட்டவேண்டும்.

செய்யும் தவறுகள் :

ரூ. 480 சேர்த்து கட்டுவது என்பது முதலாளிக்கு கசப்பான விசயம். அதனால், தன்னிடம் வேலை செய்யும் எல்லோருக்கும் பி.எப். கட்டாமல், சிலருக்கு மட்டும் கட்டுவார்கள்.

சில முதலாளிகள் தொழிலாளர்களிடமிருந்து பி.எப். பிடித்துவிட்டு, பி.எப்க்கு கட்டாமல், அந்த பணத்தை பிசினஸ் ரொட்டசேனுக்கு விட்டுவிடுவார்கள்.

ஆகையால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை வழமையாக பரிசோதிக்க பி.எப். அதிகாரி வருவார். உண்மையெல்லாம் தோண்டி, துருவ கூடாது என்பதற்காக அளிப்பது தான் "அன்பளிப்பு".

எல்லா முதலாளிகளும் இப்படியா இருக்கிறார்கள் என நீங்கள் கேட்டீர்கள் என்றால்...ஆம்! 99% அப்படித்தான் இருக்கிறார்கள். அதனால், தான் அவர்கள் முதலாளிகளாகவும் இருக்கிறார்கள்.

Anonymous said...

good post

Anonymous said...

//ஆம்! 99% அப்படித்தான் இருக்கிறார்கள். அதனால், தான் அவர்கள் முதலாளிகளாகவும் இருக்கிறார்கள்.//

It is true.

போராட்டம் said...

அவசியமான பதிவு... எளிமையாகவும், சிறப்பாகவும் விளக்கியுள்ளீர்கள்.

Anonymous said...

nalla pathivu. vazhthukal. thotachiyaka ethai partri ezhuthavum.

Anonymous said...

migavum nalla seithigal.. enaku oru EPF kuritha thagaval thokuppinai anuppa iyaluma...