> குருத்து: ஊடகம்
Showing posts with label ஊடகம். Show all posts
Showing posts with label ஊடகம். Show all posts

July 30, 2014

சுவாரசியமான வாசகர் கடிதங்கள்!

படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே வாசகர் கடிதங்களும் அவ்வப்பொழுது எழுதி வந்திருக்கிறேன். பலரும் தங்கள் பெயர் பத்திரிக்கைகளில் வந்தால் போதும் என, ‘சூப்பர்’ ‘அசத்திட்டீங்க!’ என சுருக்கமாய் எழுதுகிறார்கள். அதில் என்ன பலன் இருக்கிறது? நான் எழுதிய சில வாசகர் கடிதங்களும் சில அனுபவங்களும் சுவாரசியமானவை!

ஒருமுறை திண்டுக்கல்லில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது, ஒரு மாலை இதழில் பல பட்டங்களை தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்ட ஒரு பெண் பேராசிரியர், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் விழாவிற்கான சிறப்பிதழில் அம்மன் புகழ் பாடியிருந்தார். கோபம் வந்து, ”ஒரு பேராசிரியர் இப்படி அம்மன் புகழ் பாடலாமா?” என கடிதம் எழுதினேன். கடிதம் எழுதி 15வது நாளில் அந்த பேராசிரியர் “உங்களை மாதிரி முற்போக்கான இளைஞர்கள் தான் நாட்டுக்குத் தேவை” என்கிற சாரத்தில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். தலையில் அடித்துக்கொண்டேன்.

சில காலம் காலை வேளையில், கோடை பண்பலை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்களின் ஒலிபரப்பின் எல்லை பெரியது என்பதால், எல்லோருரையும் பேசவைக்கவேண்டும் என்ற திட்டத்தில் இன்று இந்த மாவட்டத்துகாரர்கள் பேசவும், பெண்கள் மட்டும் பேசவும் என கோட்டா முறையை பயன்படுத்தி வந்தார்கள். அவர்கள் கேட்கும் எந்த பாடலையும் ஒலிபரப்புவார்கள். விடுமுறை என்பதால், ஞாயிறு மட்டும் குழந்தைகளுக்கு! ஆனால், அவர்கள் ஏதாவது குத்தாட்ட பாடலை கேட்டுவிட்டால், இந்த பாடலை ”குழந்தைகள் நீங்கள் இம்மாதிரி பாடலை கேட்க கூடாது” என அறிவுரை சொல்லி, பண்பலைகாரர்களே “நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே’ என்ற ரேஞ்சுக்கு ஒரு பாடலை ஒலிபரப்புவார்கள்.  வந்தது கோபம்.  வாரம் முழுவதும், அண்ணன், மாமா, சித்தி, தாத்தா எல்லோரும் குத்தாட்ட பாடல்கள், ஆபாச பாடல்கள் கேட்டால் ஒலிபரப்புவீர்கள்! குழந்தைகள் கேட்டால் போடமாட்டீர்கள்! இது என்ன நியாயம்?” என்று எழுதினேன்.  அடுத்த வாரத்திலிருந்து, எல்லோருக்கும் நல்ல பாடல் போடுவீர்கள் என்று தானே முடிவெடுத்திருப்பார்கள்! என நினைக்கிறீர்கள். ம்ஹூம்! குழந்தைகளும் எந்த பாடல் கேட்டாலும் ஒலிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்! நொந்தே போனேன்!

சொந்த ஊரில் புதிய கலாச்சார வாசகன் நான்.  அவ்வப்பொழுது கடிதங்கள் எழுதிக்கொண்டிருப்பேன்.  அப்படியே சென்னைக்கு வந்த சமயம், வாசகர் கடிதம் ஒன்றை எழுதி போட்டேன். இதழிலிருந்து நேரே என்னைத் தேடி வந்துவிட்டார்கள். எங்கெங்கோ அலைபாய்ந்து கொண்டிருந்த வாழ்க்கை, அப்பொழுது தான் சரியான திசையில் பயணப்பட துவங்கியது! இன்று வரை பயணித்துக்கொண்டிருக்கிறேன்!

எழுதி அனுப்பிய வாசகர் கடிதங்களை விட, எழுத நினைத்த வாசகர் கடிதங்கள் அதிகம்!  எழுதி அனுப்பாமல் விட்ட கடிதங்களும் கூட உண்டு!

இப்படிதான் ‘ஆட்டோகிராப்’ படம் பார்த்துவிட்டு, நாயகன் தன் வாழ்வில் கடந்த வந்த பெண்களை எல்லாம் சந்திக்கும் பொழுது, தான் உயிருக்குயிராக காதலித்த பெண் விதவையாக இருப்பாள். அதையும் இரண்டு சொட்டு கண்ணீரில் கடந்துவிடுவான். வந்தது கோபம். ”அவளைத்தானடா நீ கல்யாணம் முடிக்கவேண்டும்!” என நாலுபக்கம் கடிதம் எழுதி, முகவரி இல்லாததால், அனுப்பமுடியாமல் போய்விட்டது!


கால ஓட்டத்தில் செல்பேசியால் கடிதங்கள் அரிதாகி வருகின்றன! அன்றொருநாள் என் எட்டு வயது மகளுக்கு கடிதம் பற்றி விளக்கம் கொடுத்துகொண்டிருந்தேன். என்னதான் செல்பேசியில் மணிக்கணக்கில் பேசினாலும், கடிதம் இன்னும் மனதுக்கு நெருக்கமாகத்தான் இருக்கிறது!

April 15, 2013

சன் டிவி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!


February 28, 2013

'மானாட மயிலாட' ஆபாச கூத்தை உடனே நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்!

இன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம்

சன் - கலைஞர் - விஜய் டிவி போன்ற விசபாம்புகளே!
காமவெறியைத் தூண்டும் ஆபாச குத்தாட்டங்களையும்
விளம்பரங்களையும் உடனே நிறுத்து!

பாலியல் வன்முறையைத் தூண்டும்
"மானாட மயிலாட" ஆபாசக் கூத்தை உடனே நிறுத்தக் கோரி

கலைஞர் தொலைக்காட்சி முன்பு

ஆர்ப்பாட்டம்


பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை
தொடர்புக்கு – 9841658457







முற்போக்கு பெண்கள் அமைப்பினர் (அமைப்பு பெயர் சரியாக நினைவில்லை) பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் தீபா தியேட்டருக்குள் உள்ளே புகுந்து ஆபாச படத்தின் திரைச்சுருளை எடுத்து வந்து தெருவில் எரித்தார்கள். அந்த சமயத்தில் பெரிதாக பேசப்பட்டது.

அதற்கு பிறகு வீச்சாக தமிழ்நாட்டில் திரைப்பட, ஊடக ஆபாசத்தை கண்டித்து பெரிய போராட்டங்களும் எழவில்லை. புரட்சிகர இயக்கத்தில் பெண்கள் அமைப்பு பலமாக இல்லாததும் ஒரு காரணம்.

இப்பொழுது நாடு முழுவதும் நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தாக்குதல் ஒரு பொது விவாதத்திற்கு வந்திருக்கிறது.  பெண்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதலை தனிப்பட்ட குற்றமாக (crime) பார்க்கும் பார்வை பலருக்கும் இருக்கிறது. அதனால், தூக்கில் போட வேண்டும், உறுப்புகளை வெட்ட வேண்டும் என பேசுகின்றனர்.

இப்படி கண்ணோட்டம் இருப்பதாலேயே, பலரும் பாலியல் மன வக்கிரங்களை தூண்டும் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளையும், பெண்ணை எளிதில் சோரம் போகும் இழிபிறவிகளாக காட்டும் விளம்பரங்களையும் கண்டிப்பதில்லை. எதிர்த்து போராடுவதில்லை.

பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பினரும், அதன் தோழமை அமைப்பினர்களும் தமிழகம் தழுவிய அளவில் கடந்த இரண்டு மாதங்களாக பெண்கள் மீதான பாலியல் வன்முறையை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது. இந்த போராட்டம் பற்றி நாடு முழுவதும் பரவவேண்டும். இந்த ஆபாச நிகழ்ச்சிகள் எல்லாமும் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

போராடும் தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.