> குருத்து: நகைச்சுவை
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

June 26, 2023

Lift prank – சின்ன சின்னதாய் குறும்பு செய்து கலக்குகிறார்கள்!


இந்திவாலா குழு ஒன்று ஒரு லிப்டிற்குள் பயணிக்கும் பொது சனங்களை குறைந்த நேரத்தில் குறும்பு (Prank) செய்கிறார்கள். ஒரு லிப்டிற்குள் என்னென்ன சாத்தியமோ எல்லா வழிகளிலும் முயன்று இருக்கிறார்கள்.


லிப்ட்டிற்கு வரும் அந்த குட்டிப்பெண் தன் கையில் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வைத்திருக்கிறது. தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு எடுத்துக்க சொல்லி தருகிறது. எடுக்கவில்லை என்றால், உங்களை வற்புறுத்துகிறது. அந்த குழுவில் உள்ளவர்கள் சாப்பிடும் பொழுது அமைதியாய் இருக்கும் குழந்தை, நீங்கள் அந்த ஒற்றைச் சிப்ஸை வாயில் போட்டதும் அழ ஆரம்பிக்கிறது. சுற்றி உள்ளவர்கள் “நீங்க நிறைய எடுத்துட்டீங்களா! அதை உடனேயே சாப்பிட்டீங்களா!” என கேள்விகளுக்கு மேல் கேள்விகளை இயல்பாக கேட்கிறார்கள். நீங்கள் திரு திருவென முழிக்கிறீர்கள். அவ்வளவு தான் முடிந்தது.
🙂

நீங்கள் லிப்டிற்குள் இருக்கிறீர்கள். அதே குட்டிப்பெண் உள்ளே நுழைகிறது. அடுத்தடுத்து உள்ளே வருபவர்கள் மிகுந்த மரியாதையுடன் அந்த குட்டிப்பெண்ணுக்கு வணக்கம் வைக்கிறார்கள். யாரோ பெரிய ஆள் என உங்களுக்கு எண்ணம் தோன்றுகிறது. எதுக்குப் பிரச்சனை! நாமளும் ஒரு வணக்கம் வைத்து விடுவோம் என நீங்களும் வணக்கம் வைக்கிறீர்கள். அவர்கள் மெல்ல புன்னகைக்கிறார்கள். அவ்வளவு தான். 🙂

நீங்கள் ஏதும் செய்யாமல் சும்மா லிப்டிற்குள் இருக்கிறீர்கள். ஒரே நேரத்தில் இல்லாமல், அடுத்தடுத்த மாடியில் உள்ளே வருபவர்கள் சம்பந்தமே இல்லாமல் உங்களை முறைத்துப் பார்க்கிறார்கள். உங்களுக்குள் சின்ன பதட்டம் வருகிறது. நம்மளைத் தான் பார்க்கிறார்களா! என திரும்ப திரும்ப சந்தேகமாக பார்க்கிறீர்கள் உங்கள் மாடி வந்ததும், நீங்கள் இறங்கி போய்விடுகிறீர்கள். அவ்வளவு தான். 🙂

குறும்பு (Prank) என சமூக வலைத்தளங்களில் சில தவிர்க்க முடியாமல் கண்ணில்படுகிறது. இவர்கள் குறும்பு செய்கிறேன் என சம்பந்தப்பட்டவர்களையும், பார்க்கும் நம்மையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிடுகிறார்கள்.

வாய்ப்பிருந்தால், யூடியூப்பில் lift prank என தேடிப்பாருங்கள்.

August 30, 2018

லைலாவின் அழகை காண மஜ்னுவின் கண்கள் வேண்டும்

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” படத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. நாயகனுக்கு பின்தலையில் அடிப்பட்டு, ஆழ்மனதில் (!) இருந்த காதலி கூட மறந்து போய், (ஆனால் எட்டாம் வகுப்பில் படிக்கும் பொழுது காதலித்த சாயீரா பானு நினைவில் நிற்பாள்) திருமண வரவேற்பில் தன் அருகில் நிற்கும் நாயகியை ப்பா! யார்டா இந்த பொண்ணு? பேய்மாதிரி இருக்கு!” என சொல்லும் பொழுது, நாயகி முதலில் வருத்தம் கொள்வாள். இரண்டாவதுமுறை, மூன்றாவது முறை சொல்லும் பொழுது, மெலிதாய் கண்கசிவாள். காதல் திருமணம். திருமணத்தில் உடன்பாடு இல்லாத அம்மாவும், அப்பாவும் பிரச்சனை செய்துவிடக்கூடாதே என்பதற்காக, பீறிட்டு வரும் அழுகையை கவனமாய் மறைத்துக்கொள்வாள்.

பல்வேறு களேபரங்களுடன் வரவேற்பு முடிந்து, அடுத்த நாள் திருமணமும் முடிந்து… மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இரவெல்லாம் தூங்கி எழுந்த பிறகு, மறந்த எல்லா நினைவுகளும் மீண்டும் வந்துவிடும். வரவேற்பு, திருமணம் முடிந்ததே அவனுக்கு நினைவுக்கு வராது. நிம்மதி பெருமூச்சுடன், நண்பர்கள் நடந்த அனைத்தையும் விளக்குவார்கள்.

பிறகு வீடு திரும்பும் வழியில், நண்பனின் அந்த சாதாரண செல்பேசியில் உள்ள புகைப்படங்களை பார்த்துக்கொண்டே வருவான். திருமண வரவேற்பில் நிற்கும் நாயகியைப் பார்த்து “இந்த போட்டோல தனம் ரெம்ப அழகா இருக்கில்லா!” என்பான் கண்களில் காதலுடன்!. புன்னகைத்துக்கொண்டே வண்டியை ஓட்டிச்செல்வான் நண்பன்.
எனக்கு நினைவுக்கு வந்தது இந்த வார்த்தைகள் தான்!

"லைலாவின் அழகை காண மஜ்னுவின் கண்கள் வேண்டும்”

June 1, 2018

ஜியானின் ’நல்ல நினைவுகளும்’, மோடியின் நான்காண்டு ’சாதனைகளும்”!


டோரிமான் தொடரில் வருகிற ஜியான் ஒரு முரட்டு பையன். அவன் ஒரு நாள் தெருவில் நடந்து வர, எதிரே வீட்டு நாயொன்று தெருவில் வருகிறது. அவனைப் பார்த்ததும் அவனுடன் ஒட்டிக்கொள்கிறது. சிறிது நேரத்தில் ஜியான் வயதில் ஒரு பெண் அந்த நாயை தேடி வருகிறாள். தங்கள் நாய்க்கு அடைக்கலம் கொடுத்ததற்காக, மிகுந்த ”நன்றி” சொல்கிறாள். ”தங்கள் நாய், நல்லவர்களிடம் மட்டுமே போகும். நீங்கள் நல்லவர்” என பாராட்டு பத்திரமும் தருகிறாள். 

இந்த ‘நல்ல’ நினைவோடு, உற்சாகமாய் விசிலடித்துக்கொண்டே தெருவில் வருகிறான். எதிரே வந்த பையன் கவனமில்லாமல் இவன் மீது மோத இருவரும் தெருவில் உருள்கிறார்கள். ஜியான் எழுந்து, அந்த ‘நல்ல’ நினைவை நினைத்துப் பார்க்கிறான். மோதிய அதிர்ச்சியில் அந்த ‘நல்ல’ நினைவு கலைந்துவிடுகிறது. செம கடுப்பாகி, மோதியவனை துவைத்து எடுக்கிறான்.

***

மோடியின் கடந்த நான்கு ஆண்டு செயல்பாடுகளான பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமுலாக்கம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், நீட்டை அமுல்படுத்தியது என மக்களை இடைவிடாமல் தொடர்ச்சியாய் தாக்கிக்கொண்டு, எப்பொழுதும் பதட்டமாக தான் வைத்திருக்கிறது. மக்கள் முன்பு சேமித்து வைத்திருந்த சில ’நல்ல’ நினைவுகளும் தொலைதூரத்திற்கு காணாமல் போய்விட்டன.

ஜியான் நல்ல வலுவான பையன். அதனால் எதிராளியை துவைத்து எடுத்துவிட்டான். பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் தனித்தனியாக போராடிக்கொண்டிருப்பதால், நம்மால் துவைக்க முடியவில்லை. நாம் எல்லோரும் ஓரணியில் திரண்டு போராடினால், நமக்கும் சாத்தியம் தான்! நமக்கும் நிறைய நல்ல நினைவுகள் நிச்சயமாய் கிடைக்கும்! 

August 29, 2017

கனவு!

 
மண்டையை குடைந்து கொண்டிருக்கும்
ஒரு பிரச்சனைக்கு
இன்று விடிகாலையில் விடை கிடைத்தது!
ஆஹா! அருமை! என்றேன்.
உடனே விழிப்பும் வந்தது!

என்ன பிரச்சனை?
என்ன தீர்வு?  
காலையில் இருந்து யோசிக்கிறேன்.
ஞாபகத்துக்கு வரவேயில்லை! 😇

January 22, 2016

மறந்து போச்சு!

நல்ல தமிழ்படங்கள் பார்த்த நேரம் போக, வேற்றுமொழி படங்களும் பார்ப்பது வழக்கம்! பிற மொழிப்படங்களின் தரத்தை உரசிப் பார்க்க சமீப காலங்களில் IMDB உதவுகிறது.  10க்கு 7 மார்க் வாங்கினால், மினிமம் கேரண்டி கிடைக்கிறது. சில சமயங்களில் சொதப்பவும் செய்கிறது!

அப்படித்தான் நானி நடத்த தெலுங்கு படமான Bhale Bhale Magadivoy (You are a strange man) பார்த்தேன்.  நகைச்சுவை காதல் படம் என வகைப்படுத்தலாம்.

சிறு வயதிலிருந்தே நாயகனுக்கு மறதி ஒரு பெரும் பிரச்சனை.  ஒரு வேலையில் ஈடுபடும் பொழுது, வேறு ஒரு வேலை குறுக்கிட்டால் அதிலேயே மூழ்கிப்போவது!  உதாரணத்துக்கு உங்களுக்கும் சேர்த்து ஒரு படத்துக்கு டிக்கெட் எடுத்துவிட்டு,  வேறு வேலையில் மூழ்கி வராமல் போனால், திரையரங்கு வாயிலில் காத்திருக்கும் உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?

திருமணம் என வரும் பொழுது சிக்கலாகிறது. அவமானப்படுத்தப்படுகிறான்.  இதற்கிடையில் காதலில் விழுகிறான். காதலியிடம் தனது பிரச்சனையை சொல்லாமல், மறைத்து தான் சொதப்பும் பொழுதெல்லாம் கதை சொல்லி தப்பித்து, இறுதியில் மாட்டி, அவனுடைய இயல்பான நல்ல குணத்தால் காதல் கல்யாணத்தில் முடிகிறது!

கொஞ்சம் மிகையாக தெரிந்தாலும், கற்பனையான பிரச்சனையல்ல!  ஒரு நேரத்தில் ஒரு வேலை செய்கிற நபர்களை சந்தித்திருக்கிறேன். இன்னொரு வேலை வந்தால், அதையும் திட்டமிட்டு நகர்த்தாமல், இரண்டு வேலைகளையும் குழப்பிக்கொள்கிற ஆட்கள் இருக்கிறார்கள். மருத்துவரீதியாக இது என்ன பிரச்சனை? எப்படி கையாள்வது என்பதை கொஞ்சம் விளக்கியிருக்கலாம். எதுவும் இல்லை!  நகர்த்தும் காட்சிகளில் கூட அத்தனை புதுமையில்லை.

நீங்கள் இது மாதிரி ஆட்களை பார்த்திருக்கிறீர்களா? தெலுங்கில் நன்றாக ஓடிய படம் என்கிறார்கள்.

July 20, 2015

ஆட்சியில் பங்கும் காங்கிரசு தொண்டனும்!

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இயக்கப்பணி தொடர்பாக வீடு வீடாக, ரயில்களில், பேருந்துகளில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்திருக்கிறேன். மக்களில் நேற்று துவங்கிய கட்சிக்கு கூட தொண்டர்களை சந்தித்திருக்கிறேன். ஆனா பாருங்க இந்த காங்கிரசு தொண்டரை மட்டும் பார்த்ததேயில்லை. சக தோழர்களிடமும் அவ்வப்பொழுது கேட்பதுண்டு. அவர்களும் பார்த்ததேயில்லை என்பார்கள்!

என் வாழ்வில் இரண்டு காங்கிரசுகாரர்கள் கடந்து போயிருக்கிறார்கள். ஒருவர் என் அப்பா. பஞ்சாலை தொழிலாளியான அவர், தன் வாழ்வில் இறுதி ஆண்டுகளில் குடியில் காலம் கழித்தார். அதனால், அவ்வப்பொழுது வேலைக்கு போகமாட்டார். அங்கிருந்த காங்கிரசின் தொழிற்சங்கமான ஐஎன்டியூசி தான் அவ்வப்பொழுது வேலை போகாமல் காப்பாற்றியது. அதற்கு நன்றி பாராட்டும் விதமாக, வீட்டில் ஒரு இந்திரா படத்தை மாட்டி வைத்திருந்தார். மற்றபடி, காங்கிரசின் நடவடிக்கைகளை எப்பொழுதும், எவ்வளவு விமர்சனம் செய்தாலும், எதிர்த்து பேசமாட்டார். மெளனமாக இருப்பார்.

இன்னொரு காங்கிரசுகாரர். 1991ல் அப்பொழுதெல்லாம் ரெம்ப சின்ன பையன் நான். வீட்டு திண்ணையில் என் அப்பாவுடன் தூங்கிகொண்டிருந்தேன். திடீரென பெருங்குரலெடுத்து அழும் சத்தம் கேட்டு எழுந்தேன். பக்கத்து வீட்டில் குடியிருந்த 55 வயது பெரியவர் துக்கம் தாளாமல் விடிய விடிய அழுதார். என்னவென்று கேட்ட பொழுது ராஜீவ் கொல்லப்பட்ட விசயத்தை சொன்னார்கள்.

என் வாழ்வில் நான் சந்தித்த இந்த இரண்டு காங்கிரசுகாரர்களும் செத்துப்போய் 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நிலைமை இப்படி இருக்கும் பொழுது, E.V.K.S இளங்கோவன் எந்த தைரியத்தில் ஆட்சியில் பங்கு கேட்கிறார்? சிரிப்பு சிரிப்பாக தான் வருகிறது! இவரே பங்கு கேட்கும் பொழுது, டாக்டர் அன்புமணிக்கு முதலமைச்சர் ஆசை வருவது எல்லாம் இயல்புதான் போல!
சாத்தியமில்லை தான். இருந்தாலும் சொல்லி வைக்கிறேன். உங்களில் யாராவது காங்கிரசு தொண்டரை பார்த்தால், என்னிடம் தெரிவியுங்கள். வாழ்வில் ஒருமுறையாவது நான் பார்த்துவிடவேண்டும் என ஆவலோடு இருக்கிறேன்.

August 31, 2013

காலையிலேயே பல்பு! :)

பக்கத்து வீட்டிலிருந்து மின்சார போஸ்ட்டுக்கு செல்லும் மின்சார வயர் கொஞ்சம் கொஞ்சம் இறங்கி கொண்டே இருந்தது. பிறகு, கை எட்டும் தூரத்துக்கு வந்துகொண்டே இருந்தது. இந்த பக்கத்து வீட்டுக்காரர் என்ன இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார். மின்சாரம் விசயத்தில் இப்படி அலட்சியமாக இருக்கிறாரே என தோன்றியது. இன்று காலையில் வயர் ரெம்பவும் இறங்கி தலை தட்டும் அளவுக்கு இறங்கிவிட்டது.

அவரைக் கூப்பிட்டு, ”என்ன சார்! இவ்வளவு வயர் இறங்கிருச்சு! இ.பி. காரங்கள கூப்பிட்டு சரி செய்யலாம்ல!” என்றேன்.

”அது உங்க வீட்டு வயர் சார்! தொடக்கத்திலே நானும் அப்படித்தான் நினைச்சேன். அப்புறம் பக்கத்துல் போய் பார்த்தா, உங்க வயரா இருந்தது!” என்றார்.

காலையிலேயே பல்பு!

“எங்க வயர் தெரிஞ்சுவுடனே என்னிடம் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே!” என வழிந்து வந்தேன்.

July 20, 2013

காப்பியடிப்பது ஒரு கலை!

இரண்டாம் வகுப்பு படிக்கும் என் மகள்

"நேத்து என் பிரண்ட் ஜீவிதா என்னைப் பார்த்து காப்பியடிச்சாப்பா!"

"சரி! நீ எவ்வளவு மார்க்? ஜீவிதா எவ்வளவு மார்க்?"

"நான் 6 மார்க். ஜீவிதா 7 (10க்கு)" :)

"உன்னைவிட அதிகமா மார்க் வாங்கியிருக்கு ஜீவிதா! நீ எப்படி காப்பியடிச்சான்னு சொல்ற?"

"மிஸ் ஏதோ தப்பா போட்டுட்டாங்க போலிருக்கு!"

"இனிமே ஜீவிதாவுக்கு காட்டுவியா?"

"அவ தான்ப்பா பார்த்து எழுதுறா! அவ தானே நிறுத்தனும்!"

"ரெண்டு பேரும் நல்லா படிச்சா காப்பியடிக்க வேண்டியதில்லையே! "

"அவளுக்கு வேகமா படிக்க, எழுத வரலப்பா!"

"அப்ப உன் பிரண்டுக்கு எழுத, படிக்க உதவி செய்!"


பின்குறிப்பு : எனக்கு ஆறாம் வகுப்பில் சரவணன்னு ஒரு பிரண்ட் இருந்தான். என் கணக்கு பேப்பரை பார்த்து புல்லா காப்பியடிப்பான். ஆனால், அவனுக்கு இங்கிலீஷ் நல்லா வரும். கொஞ்சம் காட்டுவான். பிறகு காட்டமாட்டான். முதல் ரேங்க் வந்துவிடக்கூடாதுல்ல! அதில கவனமாய் இருப்பான். கப்பி பய!

அதற்கு பிறகு எவனைப் பார்த்தும் காப்பியடிக்கும் பாக்கியம் கிடைக்கவே இல்ல! எல்லாம் நம்மள விட மக்கு பசங்களா நம்ம பக்கத்துல உட்கார்ந்தா எப்படி காப்பியடிக்க!