> குருத்து: அரசியல்
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

May 5, 2026

விசில் சத்தம்


நேற்று வழக்கமாய் செல்லும் பகுதி டிபன்கடைக்கு சென்ற பொழுது, அந்த கடையை நடத்தும் அந்த அம்மாவிற்கு வயது 50க்கும் மேல். ஊரில் இருந்து அவருடைய அம்மா அழைத்து, ”விஜயை உன் தம்பியை நினைச்சு ஓட்டு போடும்மா!” என பரிந்துரை செய்தார்களாம்.


ஒரு நிறுவனத்தின் லிப்டில் போய் கொண்டிருந்த பொழுது, துடைத்து பெருக்கும் அந்த அம்மாவிற்கு 60 வயதிருக்கும். யாருக்கு ஓட்டு போட்டீங்க! என கேட்டால், ”விசில்” என்றார். ”ஏன்” என கேட்டதற்கு, நான் எப்பொழுதும் உதய சூரியனுக்கு தான் போடுவேன். நிறுவனத்தின் நடுத்தர வயது பெண் முதலாளி விசிலுக்கு வாக்களிக்க சொன்னாராம். அன்று மாலை ஸ்டாலின் தோற்று போன செய்தி கேட்டு மிகவும் வருத்தப்பட்டார்.


அந்த நிறுவனத்தின் நிர்வாகி, 50 வயது கடந்தவர், தேர்தல் முடிவுகள் இனி நடக்க இருக்கும் விளைவுகள் என பேசியே களைத்துப்போனார். அவர் வீட்டில் மொத்தம் நான்கு பேர். இவரும் இவருடைய கணவரும் உதயசூரியனுக்கு வாக்களித்திருக்கிறார்கள். பிள்ளைகள் இருவரும் விசிலுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் (பங்காளி குடும்பங்களைச் சேர்த்தால்)  20 வாக்கு சார். பெரும்பாலும் விசிலுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றார்.


திராவிட கட்சிகள் செய்யும் ஊழல், அவர்களுடைய குறைபாடுகள், மாற்று வேண்டும் என மாற்றி குத்திவிட்டார்கள். அவசரகதியான இந்த மாற்றத்தால் உள்ள இந்தியாவின் அரசியல் நிலை, தமிழ்நாட்டின் நிலை இன்னும் கவலைக்குள்ளாகிவிட்டது என நிச்சயமாய் சொல்லலாம். இதன் எதிரொலிப்புகள் சமூகத்தில் நீண்ட காலத்திற்கு ஒலிக்கும்.


நேற்று மாலை தெருவில் குடியிருக்கும் ஒரு வீட்டில் இருந்து தொடர்ந்து இரண்டு இள வயது பெண்கள் விசிலை வைத்து அடித்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் அமைதியாகி விடுவார்கள் என நினைத்தால், விடவேயில்லையாம். போய் சொன்னாலும் கேட்கவில்லை. அருகில் வயதானவர்கள் இருப்பார்கள். குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். எதைப் பற்றிய கவலையும், அக்கறையும் இல்லமல், சொல்லி வந்த பிறகும் நெடுநேரம் விசில் அடித்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இந்த விசில் சத்தம் (Noise) தொடர்ந்து கேட்க போகிறது.


நேற்றிரவு வீட்டுக்கு போனதும் எப்பொழுதும் 15, 20 நிமிடத்தில் பேசிவிட்டு தூங்கப் போய்விடுவோம். மகள் இலக்கியா இரண்டு மணி நேரம் தேர்தல் முடிவுகள் குறித்த கவலைகளைப பகிர்ந்துகொண்டாள். தன் நண்பர்களின் மனநிலை குறித்து, இன்று அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தைகள் குறித்து, இனி நாம் என்ன செய்யவேண்டும் என்பதை குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.


மக்களின் அரசியல் விழிப்புணர்வு, பண்பாட்டு உணர்வு எந்த அளவிற்கு இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி தான் தலைவர்கள் கிடைப்பார்கள் என்பதில் முழு உடன்பாடு. (இப்பொழுது விஜய் ஜெயித்ததால், இதைச் சொல்லவில்லை. ) நாம் மக்கள் இடத்தில் தொடர்ந்து செயல்படுவது அவசியம். வேறு ஏதும் குறுக்கு வழிகள் இல்லை.

October 22, 2022

பாரசிட்டமாலும் பட்ஜெட்டும்!


பாரசிட்டமாலை ஹோமியோபதி மருத்துவர்கள் வெறுப்பார்கள். காரணம். அது மருந்தே இல்லை. செயற்கையாக உடலில் வியர்வை சுரப்பிகளை உருவாக்குகிறது என்பார்கள். ஜூரம் ஒருவருக்கு வருகிறது என்றால், அது பல காரணங்களால் வரலாம். அதன் ஜூரத்தின் தன்மை பொறுத்து எதனால் வருகிறது என்பதை கண்டறிந்து மருந்தை ஹோமியோபதிகாரர்கள் மருந்தை தருவார்கள். பாரசிட்டமால் என்ற கல்லைத் தூக்கி போட்டு ஜூரத்தை காணாமல் போக செய்தால் கோபம் வரத்தானே செய்யும்.


ஆனால் இந்த மாநிலத்தின் முதல் அமைச்சருக்கே ஜூரம் என்றால், எதனால் வருகிறது என டெஸ்ட்டுகள் மூலம் சோதித்து அறியாமல், தொலைபேசியிலேயே பாரசிட்டமால் கொடுங்க! என டாக்டர் சொன்னார் என்றால், பாரசிட்டமால் மீது ஒரு மரியாதை வருகிறது. 🙂

ஜெ. மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கையை நிறைய விவாதிக்கிறார்கள். இந்த விசாரணை தொட்டு தொட்டு தமிழ்நாட்டை கொள்ளையடித்து ஒளித்து வைத்திருக்கும் பணத்தை, சொத்தை எல்லாம் கைப்பற்றினால் ஐந்து வருடத்திற்கு தமிழ்நாட்டில் வரியே இல்லாமல் பட்ஜெட் போடலாம். இவர்கள் செய்யமாட்டார்கள். சோகம்.

April 26, 2022

இராணுவச் செலவினத்தில் இந்தியா மூன்றாம் இடம்! ஏகாதிபத்திய ரசியாவே ஐந்தாம் இடம் தான்!

 


இராணுவச் செலவினத்தில் இந்தியா மூன்றாம் இடம்! ஏகாதிபத்திய ரசியாவே ஐந்தாம் இடம் தான்!

ஒருபக்கம் கல்வி, மருத்துவம், உணவு என அடிப்படையானவைகளுக்கு எல்லாம் மான்யங்களை வெட்டுகிற இவர்கள்தான், இராணுவம் போன்ற செலவினங்களுக்கு தாராளமாய் செலவழிக்கிறார்கள்.

****

ராணுவத்திற்கான செலவுகள் செய்வதில் அமெரிக்கா முதலிடம். சீனா இரண்டாமிடம். மூன்றாமிடத்தில் இந்தியா என சர்வதேச அமைதி ஆய்வுமையம் அறிவித்துள்ளது. கொரானா தொற்றிய நாடு, லட்சக்கணக்கான மக்களை பறிகொடுத்து கலகலத்த நாடுகள் என உலகம் நினைத்துகொண்டிருக்கிறது.

அமெரிக்கா ஒரு உலக ரவுடி. தன் கெத்துக்கு செலவு செய்யலைன்னா அழிஞ்சுபோவான்.  சீனா வளர்ந்துவரும் ரவுடி. அவன் உலகத்துக்கே பொருட்களை ஏற்றுமதி செய்றான். செலவழிக்கிறான்.

இந்திய ராணுவத்தில் 14 லட்சம் பேர் நிறைந்திருக்கிறார்கள்.  ”ஒழுங்கான சாப்பாடு இல்லை, அடிப்படை வசதி இல்லை” என கறார் விதிகளை எல்லாம் தூரப்போட்டு, காணொளியில் எல்லையிலிருந்து கதறுவது வைரலாகிறது. ”குளிரில் விறைத்துப்போய் நிற்கும் எல்லையோர இராணுவத்தினரை நினைத்துப் பாருங்கள்!” என அடிக்கடி சங்கிகள் கண்ணீர் வடிப்பார்களே! அவர்களின் வாழ்வை எல்லாம் உயர்த்திவிட்டார்களா? என நினைத்தீர்கள் என்றால் நாமெல்லாம் அப்பாவி!

சில அமெரிக்க பத்திரிக்கைகள், சில இந்திய பத்திரிக்கைகள் அவ்வப்பொழுது இந்திய இராணுவத்தின் ஏவுகணைகள், போர்விமானங்களின் நிலையை பக்கத்தில் இருக்கும் சீனாவுடனும், பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு, ஒப்பிட்டு உசுப்பேற்றுகிறார்கள். இராணுவ கொள்முதலில் நன்றாக காசு பார்க்கலாம் என முடிவு செய்து, ஏகாதிப்பத்திய ஆயத உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, கார்ப்பரேட்டுகளையும் கூட்டு சேர்ந்துகொண்டு, வகை தொகையில்லாமல் களவாடுகிறார்கள்.

மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி எட்டு ஆண்டுகளில் பக்கத்து பக்கத்து நாடுகளில் எல்லாம் வம்பிழுத்து நல்லா இருந்த உறவை கூட கெடுத்துதான் வைத்திருக்கிறார்கள்.

ஒருபக்கம் கல்வி, மருத்துவம், உணவு என அடிப்படையானவைகளுக்கு எல்லாம் மான்யங்களை வெட்டுகிற இவர்கள்தான், இராணுவம் போன்ற செலவினங்களுக்கு தாராளமாய் செலவழிக்கிறார்கள். நேரடியாக பாதிக்கப்படும் நாம் தாம் விழிப்புணர்வுடன் இருந்து கேள்வி கேட்கவேண்டும். தொடர்ந்து கேட்போம்.

October 23, 2021

ஏன் வாசிக்கவேண்டும்? ஆர். அபிலாஷ் – புத்தகம் - ஒரு பார்வை.


”கால்கள்” நாவலுக்காக யுவபுரஸ்கார் விருது பெற்றவர். ஆங்கில பேராசிரியராக பணிபுரியும் எழுத்தாளர் அபிலாஷ் கடந்த பத்தாண்டுகளில் வெவ்வெறு சூழலில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம்.

கடந்த சில ஆண்டுகளாக காட்சி படிமங்களின் ஆதிக்கம் வந்த பிறகு, பொதுவாக படிப்பதை விட பார்ப்பது என்பதாக நிலைமை மாறிவிட்டது, பெரும்பாலான இளைய தலைமுறைக்கு படிப்பது என்பது பாடத்திட்டம் தவிர்த்து வேறு எதையும் படிப்பது என்பது மிக மிக குறைந்துவிட்டது.

நானெல்லாம் படிப்பு தவிர பொதுவாக படிப்பது என்பது நான்காவது வகுப்பிலேயே துவங்கிவிட்டேன். தேநீர் வாங்க கடைக்கு போகும் பொழுது, அங்கு தினத்தந்தியில் சிந்துபாத் கதை படிக்க துவங்கி, ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளி திரும்பும் வழியில் ஒரு கடையில் வாடகைக்கு புத்தகம் தருவார்கள். ஒரு புத்தகத்திற்கு 25 பைசா. அங்கு தான் அம்புலிமாமா, பாலமித்ரா, இரும்புக்கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட் என படிக்க துவங்கினேன். பிறகு ஒரு முடிவெட்டும் கடையில் எதைச்சையாக இராஜேஷ்குமார் நாவல் படிக்க துவங்கி, பட்டுக்கோட்டை, சுபா, சுஜாதா, பாலகுமாரன் என படிக்க துவங்கி…. நண்பர்களின் தொடர்பால் கணேசலிங்கன், மாக்சிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய் என துவங்கிவிட்டேன்.

என்னைப் போலவே அல்லாமல், அவர்களது சூழலுக்கேற்ப ஏற்ற இறக்கங்களோடு பொதுவாக வாசிப்பதை பலரும் துவங்கியிருப்பார்கள். இப்பொழுது அப்படி ஒரு பழக்கம் குழந்தைகளிடம் மிக மிக கவனம் கொடுத்தால் மட்டுமே கொண்டுவரமுடியும். முடியாமலும் போகலாம். என் பொண்ணுக்கு படிப்பதை மிகுந்த கவனம் கொடுத்தோம் என சொல்லமுடியாது. ஆனால் எங்களால் இயன்ற அளவு முயன்றோம். பழக்கப்படுத்த முடியவில்லை. ஆனால், உலகப் படங்களை குறிப்பிட்ட வயதில் இருந்தே எங்களுடன் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

ஆக, சமகாலத்தில் ஏன் வாசிக்கவேண்டும்? என்பது பத்திரிக்கைகளில் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் இந்தப் புத்தகம் அதற்கு துணை செய்கிறது.

வாசிப்பு பழக்கம் எவ்வளவு முக்கியம்? வாசித்தால் என்ன கிடைக்கும்? வாசிப்பு குறைந்துள்ளதா? ஆங்கிலத்தில் வாசிப்பது, தத்துவ வாசிப்பை எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது? உளவியல் நூல்களை எங்கிருந்து எப்படி வாசிப்பது? என மொத்தம் 22 தலைப்புகளில் விரிவாக விவாதித்துள்ளார்.

எனக்கு பலருடைய பரிந்துரை பட்டியல் எப்பொழுதும் பொருந்தியதில்லை. அதில் ஆசிரியரும் உடன்படுகிறார். அதை சொல்லும் பொழுது, “புத்தக தேர்வு என்பது நண்பனை, காதலியை தேர்வு செய்வதைப் போன்றது” என்கிறார். உண்மை தான்.

எனது இணையரும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர். இரண்டு பேரும் சேர்ந்து புத்தகம் வாங்கினாலும், எனக்கான ஆர்வமுள்ள புத்தகங்கள் வேறு! அவருடைய ஆர்வமுள்ள புத்தகங்கள் வேறு! எனக்கான புத்தகங்களை குறித்துவைத்துக்கொண்டு வாங்கிவிடுவேன். அவருக்கென சிறப்பு தேர்வுகள் பல சமயங்களில் இருந்ததில்லை. வீட்டில் புத்தகங்களுக்காக ஒரு பீரோ இருக்கிறது. ஒருநாள் திடீரென வந்து “பெரும்பாலான புத்தகங்கள் உங்களுக்கானதாக இருக்கின்றன. என் டேஸ்டுக்கு எதுவும் இல்லை” என அலுத்துக்கொண்டார்.

பாத்ரூமில் புத்தகம் வாசிக்கும் உங்களுக்கு பழக்கம் உண்டா? எனக்கு இருக்கிறது. “பாத்ரூம் வாசிப்புக்கு உகந்து வராத புத்தகங்கள் இலக்கியத் தகுதியற்றவை” என்கிறாராம் அமெரிக்க நாவலாசிரியர் ஹென்ரி மில்லர்.

படிக்காமல் டிஜிட்டல் உலகில் நம் நேரத்தை தொலைக்கிறோமோ? இல்லை என்கிறார் ஆசிரியர். அந்த நேரம் என்பது நண்பர்களுடன் சுற்றுவதற்கு, கதையளப்பதற்கு, தொலைக்காட்சிப் பார்ப்பதற்கு, சொந்தங்களின் வீட்டு சடங்குகளுக்கு போன நேரம் என்கிறார். அந்த நேரத்தை எல்லாம் அபகரித்துவிட்டதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறோம்? பேஸ்புக்கால் வாசிக்க அல்ல, “வாழத்”தான் நேரமில்லாமல் போகிறது!” என்கிறார்.

இப்படி பல விசயங்களை போகிற போக்கில் சொல்லி சொல்கிறார். மற்றபடி, ஏன் வாசிக்கவேண்டும்? என்கிற கேள்விக்கு ஆசிரியர் வேறு வேறு பதில் சொன்னாலும் பொதுவாழ்வில் ஈடுபடுபவருக்கு கீழே உள்ள பதில் பொருத்தமாக இருக்கிறது.

”கம்யூனிஸ்ட்டுகள் மனித குல நாகரீகத்தின் முழுமையையும் கற்கவேண்டும்!

ஒரு கம்யூனிஸ்ட் என்றால் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நூலை மட்டும் படித்திருக்கிறேன் லெனின் படித்திருக்கிறேன் என்பது மட்டும் அல்ல. கம்யூனிஸ்ட் என்பது மனித நாகரீகத்தின் பிரதிநிதி. மனித நாகரீகத்தின் ஆகச் சிறந்த சாதனைகளனைத்தையும் தேடிப் பாதுகாப்பதையும் அதை முன்னெடுத்துச் செல்வதையும் நம்முடையக் கடமையாகக் கொள்ள வேண்டும். நம் மனித நாகரீகம் கண்ட கலைகள் இலக்கியங்கள் அரசியல் ஆய்வு பொருளாதாரம் எல்லாமே ஒரு கம்யூனிஸ்ட்டிற்கு தெரிந்திருக்க வேண்டும். எல்லாம் தெரிந்திருக்க முடியுமா? கஷ்டம்தான் முடியாது. ஆனால் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பணிவு நமக்கு வேண்டும்.

கருத்தியல் ரீதியான செல்வாக்கிற்கு, அடக்குமுறைக்கு ஆட்பட்டு நாம் அடக்கப்பட்டு இருக்கிறோம். அந்தக் கருத்தியல் ரீதியிலான அடக்கு முறை எல்லாக் கோணங்களிலிருந்து நம் மீது வருகிறது. திரைப்படம், தொலைக்காட்சி, நூல்கள், கட்டுரைகள் அல்லது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஆலோசகர்கள், பக்தி, மதம் எல்லாத் திசைகளிலிருந்தும் மக்களைச் சுற்றி அது மொய்க்கிறது. அதற்குள் மக்கள் ஆழ்த்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை வெளியே கொண்டுவர வேண்டுமென்றால் அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அந்த ஆற்றல் வேண்டுமென்றால் கற்க வேண்டும்.

நம்முடைய இலக்கியத்தை நம்முடைய நூல்களை மட்டுமல்ல, எதிரியின் இலக்கியத்தை எதிரியின் நூல்களையும் கூடப் படிக்க வேண்டும். இல்லாத வரையில் போராட முடியாது. புரட்சி முடிந்தவுடன் லெனின் சொல்வார்: “மிக விரைவாக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகளை (Proletarian Intellectuals) நாம் உருவாக்க வேண்டும்”. பாட்டாளி வர்க்கத்தில் அறிவுஜீவிகள் கிடையாது. புரட்சி நடக்கும் பொது ரஷ்யாவில் எழுத்தறிவே 10சதவீதத்திற்கும் கீழே. எதற்காக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகள் வேண்டும்? இல்லையென்றால் முதலாளித்துவ அரசியல்வாதிகளிடம் முதலாளித்துவ தொழில்நுட்ப வல்லுனர்களிடம் அல்லது ஜார் ஆட்சியின் ராணுவ அதிகாரிகளிடம் சரணடைய வேண்டி இருக்கும்.

பாட்டாளி வர்க்க இயக்கமென்பது உலகளவில் இப்படி சாதாரண உழைக்கும் மக்கள், சீனப் புரட்சியிலே சாதாரண விவசாயப் பெண்கள் எல்லாம் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆகி இருக்கிறார்கள். அதற்குரிய தகுதியோடு அவர்கள் சென்றிருக்கிறார்கள். இன்று எதிரிகள் எல்லா அறிவுத் துறையினரையும் கையில் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனிலும் மேலாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மனிதாபிமானமும் அற உணர்ச்சியும் நேர்மையும் இல்லாமல் இப்போது அறிவுஜீவிகள் தங்களை விற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.

நாமும் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காக நம்மை அறிவுபூர்வமாக ஆயுதபாணியாக ஆக்கிக் கொள்ளத் தேவையாக இருக்கிறது.

நம்மையும் நம்முடைய வருங்காலத் தலைமுறையையும் அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு படிக்க வேண்டும் விவாதிக்க வேண்டும் பல்துறை அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் அப்படிப் படிப்பதெல்லாம் ஒரு நோக்கத்திற்காக இருக்க வேண்டும் நடைமுறைக்காக இருக்க வேண்டும் அந்த நடைமுறை சமூக மாற்றத்திற்கு புரட்சிக்காகப் போராடுகின்ற நடைமுறைதான். அந்த நடைமுறைக்காக கற்கவேண்டும்”

- தோழர் மருதையன்.

(ஒரு நீண்ட கட்டுரையிலிருந்து அங்காங்கே வெட்டி இங்கே ஒட்டியிருக்கிறேன். உங்களுக்கு அந்த நீண்ட கட்டுரையின் சுட்டியை பின்னூட்டத்தில் தருகிறேன்.)

மற்றபடி, அபிலாஷ் அவர்களுடைய எழுத்து விரைந்து வாசிக்கும் அளவிற்கு இருக்கிறது. தொடர்ச்சியாக முகநூலில் புழங்குவதால், வெகுஜனத்திற்கு புரியும்படி எழுதுகிறார். ஆகையால், நான்கு நாட்களில் 75%க்கும் மேலாக முடித்துவிட்டேன். கொஞ்சம் இடைவெளி விட்டு, மீதி 25% முடித்துவிட்டேன்.

வாசிக்க வேண்டிய புத்தகம். படியுங்கள்.

#ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
#விலை ரூ. 200

April 23, 2020

'அழகிய' சுவர்கள்!




சென்னை மெட்ரோ நிலைய தூண்களில் சுவரொட்டி ஒட்டி 'அழகை' கெடுக்கிறார்களாம். ஒட்டக்கூடாது என 2017ல் சட்டம் போட்டும் மதிக்கவில்லையாம். ஆகையால் மதிக்காத 10 பேர் மீது போலீசில் புகார் கொடுத்துவிட்டார்கள். 'அழகை' பாதுகாக்க ஒரு படை உருவாக்கிவிட்டார்கள். இரவு 12 மணியிலிருந்து விடிகாலை 4 மணி வரை தூண் தூணாக சுற்றிவருவார்களாம். இன்றைய தினசரிகளில் அறிவித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே சென்னை மாநகராட்சி எழில்மிகு சென்னையை உருவாக்க சபதம் பூண்டு, பல ஆண்டுகளாகிவிட்டன. மேலே சொன்னது போல தடைச் சட்டமும் போட்டுவிட்டார்கள்.

முக்கிய வீதிகளில் உள்ள பல சுவர்களில் தமிழ் மன்னர்களின் 'கொடை வள்ளல்' மற்றும் இன்னபிற சிறப்புகள், தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள்.

சென்னையை 'அழகுப்படுத்துதல்' பற்றியே நாம் தனியாக பேச வேண்டும். இப்பொழுது நான் சொல்ல வருவது வேறு.



சுவர்களை வெறும் சுவர்களாக பார்த்தவர்களா நீங்கள்? எனக்கு அப்படி இல்லை. இந்த சமூகம் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கின்றன? ஏன் இத்தனை கோளாறுகள்? இதை சரி செய்ய முடியாதா? சரி செய்வது என்றால் எப்படி என்று தேடுதலோடு திரிந்து கொண்டிருந்தேன். தேடுதலோடு திரிந்த என்னை, பாதைக்காட்டி அழைத்துச் சென்றது சுவர்கள் தான்.
நான் வாழ்ந்த பகுதியில், பட்டிமன்றமா? வழக்காடு மன்றமா? கலை நிகழ்ச்சியா அல்லது பொதுக்கூட்டமா? எல்லாவற்றையும் எனக்கு தெரிவித்தவை சுவர்கள் தான். தினம் ஒரு நிகழ்ச்சி. இன்றைக்கு ஒரு சரியான அமைப்பை வந்தடைய உதவியவை இந்த 'அசுத்தமான' சுவர்கள் தான்.
சுவர்களை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்?

வாக்கு அரசியல் கட்சிகள். கொள்கை இல்லாது போனதால், தன் தலைவர்களின், தளபதிகளின் மூஞ்சிகளை வரைந்து வைக்கிறார்கள். இன்னும், விளம்பர சுவரொட்டிகள் மற்றும் மாற்று அரசியலை மக்களிடையே கொண்டு செல்லும் ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள்.
இப்படி சுவர்களை தடை செய்வதின் மூலம், யாருக்கு உண்மையிலேயே இழப்பு? வாக்கு அரசியல் கட்சிகள் இப்பொழுது தனித்தனியாகவே தொலைக்காட்சி அலைவரிசையை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அவ்வளவு வசதியில்லை என்றாலும், பத்திரிக்கைகளை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். தன் சரக்குகளை விற்பனை செய்யும் முதலாளிகள் வேறு ஊடகங்களுக்கு எளிதாக நகர்ந்துவிடுவார்கள். பணம் கொஞ்சம் கூடுதலாக செலவழியும். அவ்வளவு தான்.
 
உண்மையில் பாதிப்பு என்பது ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர சக்திகளுக்கு தான்! தனது நிகழ்ச்சி நிரலை பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால், தேசிய நீரோட்டத்தில் கலந்து அவர்களோடு அந்த ஜனநாயக சகதியில் படுத்து உருண்டால் தான், சின்ன செய்திகளை கூட வெளியிடுவார்கள். இல்லையென்றால், இருட்டடிப்பு தான்.

இதனால் தான், அரசு, தன்னைப் பார்த்து கேள்வி எழுப்புகிற, குடைச்சலை தருகிற சுவர்களை, 'அழகிய' ஓவியங்கள் மூலம் தடை செய்கிறது. மக்களை 'அழகு' என்ற சொல்லால் ஏற்க வைக்கிறது.

எதார்த்தத்தில் அரசுக்கு எதிராக எந்த சுவரொட்டியும் பிரிண்ட் பண்ணக்கூடாது என அதன் உரிமையாளர்களை ஏற்கனவே கடுமையாக மிரட்டி வைத்திருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள் சமூக வலைத்தளங்களை சுவர்களாக பயன்படுத்துகிறார்கள்.
அரசுக்கு அதுவும் மண்டையை குடைகிறது. அதனால் சமூக வலைத்தளங்களை மிரட்டுகிறது. கட்டுப்பாடுகள் விதிக்கிறது. தூத்துக்குடியில், காஷ்மீரில் இணயத்தையே சில நாட்கள் தடை செய்கிறது.
சமூக வலைத்தளத்தில் பயனாளர்களின் ஆதாரை இணைக்க சொல்லி, இப்பொழுது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அநேகமாக இப்பொழுது உள்ள நெருக்கடியான காலத்தில் அரசு வெற்றிபெற்றுவிடும்.

சீப்பை எடுத்து ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று போகும் என நினைக்கிறார்கள்.

முகநூலில்....19/10/2019

December 4, 2018

தற்கொலைகளும் வங்கிகள் மீதான நம்பிக்கையின்மையும்!


ஒவ்வொரு வருடமும் தீபாவளி நெருங்கும் வேளையில் பத்திரிகைகளில் சில தற்கொலைகள் கண்ணில் படுகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்பு கொரட்டூர் பகுதியில் அம்மாவும் மகனும் ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பணத்தை வாங்கி, பங்குச்சந்தையில் முதலீடு செய்ததில் 15 லட்சம் வரை நஷ்டமடைந்து விட்டது என இருவரும் தூக்கிலிட்டு இறந்துவிட்டனர். தான் வளர்த்த நாயை கவனிக்க ஆள் இல்லாததால் விசம் வைத்தும் கொன்று விட்டனர்.

இன்று மதுராந்தகம் பகுதியில் சில கோடிகளை வசூல் செய்து தலைமறைவாகிவிட்டனர்.

கடந்தாண்டு மதுரை மாவட்டம் வண்டியூரில் ஏலச்சீட்டு நடத்தி பணத்தை திரும்பக் கொடுக்க முடியாமல் குடும்பத்தில் உள்ள எட்டு பேரும் தற்கொலைக்கு முயன்றதில், வீட்டிலேயே 6 பேர் வரை இறந்துவிட்டனர்.

மக்கள் தங்களுடைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக சிறுக, சிறுக சேமிப்பதற்காக பண்டு, ஏலச்சீட்டு என தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தனி நபர்களை நம்பி பணத்தை கட்டுகின்றனர்.

பணத்தை வாங்கிய அந்த நபர்கள் தெரிந்த சிறுவியாபாரிகளுக்கு, தொழிலாளிகளுக்கு, சிறு தொழில் செய்பவர்களுக்கு பணத்தின் அளவுக்கு தகுந்த மாதிரி இரண்டு சதவிகித வட்டி, மூணு வட்டி, கந்து வட்டி என்ற அளவில் கடன் தருகிறார்கள். அந்தப் பணம் சரியாக திரும்ப வரும் வரைக்கும் பிரச்சினையில்லை. வாங்குகின்ற நபர்கள் இறந்துவிட்டாலோ, ஊரை விட்டு ஓடிவிட்டாலோ, நொடித்துப் போய் விட்டாலோ, தனது ஊதாரித்தனத்தாலோ நெருக்கடியில் சிக்கிவிடுகின்றனர்.

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு அமல்ராஜ் (50) தான் நடத்தும் ஏலச்சீட்டில் ஆட்டோ ஓட்டுனரை சேர்க்கிறார்.

சில மாதங்கள் பணத்தை கட்டுகிறார். ஏலச்சீட்டு பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தில் எடுக்கிறார். அதற்குப் பிறகு தான் கட்டவேண்டிய பணத்தை கட்ட மறுக்கிறார். போலீசிடம் பஞ்சாயத்து போகிறது. சமரசம் பண்ணி விடுகிறார்கள். அதற்குப் பிறகும் பணத்தை தர மறுக்கிறார்.

அமல்ராஜ் பெட்ரோலை வாங்கி கொண்டு போய் சண்டையிடுகிறார். சண்டையின் முடிவில் பணத்தை கொடுத்தவரும் இறந்துவிடுகிறார். பணத்தை வாங்கியவரும் இறந்துவிடுகிறார். கூடுதலாக பணத்தை வாங்கிய அவருடைய துணைவியாரையும் நெருப்பு பற்றி விடுகிறது.
இப்படி பல ஆண்டுகளாக பல பகுதிகளில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதை எப்படி தவிர்க்கலாம்? பெரும்பாலான மக்களுக்கு வங்கி நடவடிக்கைகள் அன்னியமாகத் தான் இருக்கிறது. படிப்பறிவு இல்லாத பெரும்பாலான மக்களுக்கு ஏடிஎம்-ல் பணம் எடுப்பதே மலைப்பாக தான் இருக்கிறது.

கிராமப் பகுதிகளில் வங்கிகளின் தூரம் அதிகம். மேலும் வங்கி தரும் வட்டி விகிதம் குறைவானது என்பதும் ஒரு காரணம்.

சமீபத்தில் உறவினர் ஒருவர் புதிதாக வீடு வாங்கினார். எப்படி இத்தனை லட்சம் என விசாரித்தால்... நெருங்கிய உறவினர்கள் பலரும் நடுத்தரவர்க்க பிரிவினர்கள். வங்கியில் நிரந்தர வைப்பு (Fixed Deposit) வைத்திருந்தார்கள்.

மோடி அரசு நிரந்தர வைப்புகளை எடுக்கவிடாமல் செய்யப்போகிறது என்ற பேச்சு அடிபட்டது. உடனே நிரந்தர வைப்புகளை எடுத்து நெருங்கிய உறவினருக்கு கடனாக கொடுத்து விட்டனர்.

அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளை போலவே எல்லாவற்றுக்கும் சேவை கட்டணத்தை அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். சேவைத்துறை என்ற கண்ணோட்டத்திலிருந்து, வருவாய் ஈட்டும் துறையாக மாறி பலகாலமாகிவிட்டது! எஸ்.பி.ஐ வங்கி சில மாதங்களுக்கு முன்பு சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 5000 இருக்கவேண்டும் என அறிவித்தது. கிராம பகுதிகளுக்கு ரூ. 3000 என அறிவித்தது. இதையே காரணம் காட்டி என்னுடைய சேமிப்பு கணக்கை ரத்து செய்ய விண்ணப்பித்தேன். அதற்கான கட்டணம் ரூ. 625 என்றார்கள். பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக் கட்டுவதற்காக தான் வேலை செய்கிறீர்களா என வங்கி மேலாளரிடம் சண்டையிட்டேன்.

வங்கியில் தகராறு செய்தால் பிற்காலத்தில் வீட்டுக் கடன் தனிநபர் கடன் வாங்க முடியாது என பல நடுத்தர வர்க்கத்தினர் எவ்வளவு கட்டணம் என்றாலும், அமைதியாக கட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள். நீங்கள் தான் சண்டை போடுகிறீர்கள் என்றார் மேலாளர். இறுதியில் வங்கி கணக்கை ரத்து செய்யாமலே மொத்தப் பணத்தையும் தந்தார்கள்.

வங்கிகள் பெருமுதலாளிகளுக்கு கடன்களை அள்ளித் தருகின்றன. அவர்கள் ஒன்று கட்ட மறுக்கிறார்கள். அல்லது நாட்டை விட்டு அரசு பாதுகாப்போடு ஓடிவிடுகிறார்கள். அல்லது அரசே வராக்கடனாக மாற்றிவிடுகிறது அல்லது ரத்து செய்துவிடுகிறது.

வங்கிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பொதுத்துறை வங்கிகளை இணைத்துக்கொண்டே செல்கிறார்கள்.

இப்பொழுது மோடி 59 வினாடிகளில் சிறு தொழில்களுக்கு ஒரு கோடி வரை கடன் என அறிவித்திருக்கிறார். என்ன திட்டத்தில் அறிவித்திருக்கிறார் என தெரியவில்லை. காத்திருந்து பார்க்கலாம்.

September 25, 2018

The Post - பத்திரிக்கை சுதந்திரம்


1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர் செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்க ராணுவத்தினரை சிதறடித்துக் கொண்டிருந்தார்கள்.

உச்சக்கட்ட போர் சமயத்தில் 60 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இறந்தும் காணாமலும் போயினர். அமெரிக்க அரசோ கெத்தாக போரில் முன்னேறி கொண்டிருப்பதாக கதை விட்டுக் கொண்டிருந்தது.

இராணுவ ஆய்வாளர் ஒருவர் உலகுக்கு உண்மையை சொல்ல நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஆதாரம் அளிக்கிறார். இதழில் வெளியானதும் நாடே கொந்தளிக்கிறது. அமெரிக்க அரசு ஆடிப்போய்விடுகிறது!

'நியூயார்க் டைம்ஸ்'க்கு போட்டி பத்திரிக்கையான 'வாஷிங்டன் போஸ்ட்' மேலும் வியட்நாமிய போர் தொடர்பான செய்திகளை தேடுகிறது. கண்டுபிடித்தும் விடுகிறது.

இதற்கிடையில் வாஷிங்டன் போஸ்ட் பொருளாதாரத்தில் தள்ளாடுகிறது. பொதுமக்களிடம் பங்குகளை வெளியிட்டு, தன்னைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்கிறது.

இதே சமயத்தில் நியூயார்க் டைம்ஸில் ஆதாரம் வெளியானதை ஒட்டி, அமெரிக்க அரசு சுதாரித்து மேற்கொண்டு ஆதாரங்களை வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி விடுகிறது.

கிடைத்த ஆதாரங்களை, தடையை மீறி வெளியிட்டால், வாஷிங்டன் போஸ்ட் இதழை இழுத்து மூடவேண்டி இருக்கும். பத்திரிகை ஆசிரியரும், அதன் மேலாண் இயக்குநரும் நிச்சயமாய் கைது செய்யப்படுவார்கள்.

அதனால் பத்திரிக்கையில் வெளியிட மற்ற இயக்குனர்கள் மறுக்கிறார்கள்.

எல்லாவற்றையும் மீறி மக்களுக்கு வாஷிங்டன் போஸ்ட் உண்மையை சொன்னார்களா என்பது முழு நீளக்கதை!
****

இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கு இரண்டு முகங்கள். ஜாஸ், ஜுராசிக் பார்க் , இண்டியனா ஜோன்ஸ் என ஒரு முகம். இன்னொரு முகம் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், அமிஸ்டாட், தி போஸ்ட்.

படத்தில் பத்திரிக்கை ஆசிரியராக வரும் டாம் ஹாங்க்ஸ், முதலாளியாக வரும் மெரில் ஸ்டிரிப் என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சிறந்த திரைப்படம், இயக்குனர், நடிகர், நடிகை, திரைக்கதை, இசை என ஆறு வகைகளில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா உலகம் முழுவதிலும் போர் என்ற பெயரில் பல உயிர்களை கொன்று குவித்துள்ளது. வியட்நாமில் தோற்றுப் போவோம் என தெரிந்தே பல ஆயிரம் தனது சொந்த நாட்டு இளைஞர்களையே பலிகொடுத்தது.

படத்தில் ஒரு இடத்தில் சொல்லப்படும் செய்தி.

ஊடகம் ஆளப்படுகிறவர்களுக்கு தான் சேவை செய்ய வேண்டும். ஆள்பவருக்கு அல்ல!

இந்திய நிலைமைகளில் இதை யோசித்துப் பார்த்தால்... நிலைமை மிக மோசமாக இருக்கிறது. ஊடகங்கள் பச்சையாக மிரட்டப்படுகின்றன. நேர்மையான பத்திரிகையாளர்கள் வேலையில் இருந்து தூக்கி எறியப்படுகிறார்கள். மிக நெருக்கடியான கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

அவசியமான படம்! பாருங்கள்!

June 19, 2018

மோடி நான்காண்டு சாதனைகள் : நம்பிக்கை!

ஒரு வயதான தாய். கணவனை இளம் வயதிலேயே இழந்தவள். அண்ணனின் பராமரிப்பில் வாழ்ந்தாள். அண்ணன் இறந்த பிறகு. அண்ணனின் மகன் தன் வருமானத்தில் தன் குடும்பத்தையே கவனிக்க முடியாத நிலையில்... அத்தை சுமையாகிறாள். தன் வாழ்வை, தன் சாவை தானே பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதை உணர்கிறாள்.

அருகில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்கிறாள். தன் தேவையை சுருக்கிகொண்டு சிறுக சிறுக சேமிக்கிறாள்.

ஒரு மழைநாள் இரவில் மோடி 500, 1000 நோட்டுக்களை செல்லாது என தொலைக்காட்சியில் அறிவிக்கிறார். மருமகன் போய் நிலைமையை விளக்கி சேமித்து வைத்த பணத்தை மாற்றித்தர கேட்கிறார்.

நம்பிக்கையற்ற நிலையில் மருமகன் பொய் சொல்வதாக நினைத்து தர மறுக்கிறார். தன் வாழ்நாளில் செல்லாது என அறிந்ததேயில்லை அந்த தாய். பிரதமரை நம்புகிறார்.

பனி விழும் ஒரு நாளில் அந்த தாய் மரித்துப்போகிறார். அந்த தாயின் சுருக்குப் பையில் 63 - ஐநூறு தாள்களும் அவள் உடலில் உள்ள சுருக்கங்களை விட அதிக சுருக்கங்களோடு இருந்தன.

காலம் கடந்துவிட்டதால்... அந்த பணத்தாள்கள் வெற்றுதாள்களாகிவிட்டன!

இறுதியில் பிரதமரும் அந்த தாயை ஏமாற்றிவிட்டார். நல்லவேளை அந்த உண்மையை அறிய அந்த தாய் உயிரோடு இல்லை! 

#உண்மை சம்பவம்



😢

June 1, 2018

ஜியானின் ’நல்ல நினைவுகளும்’, மோடியின் நான்காண்டு ’சாதனைகளும்”!


டோரிமான் தொடரில் வருகிற ஜியான் ஒரு முரட்டு பையன். அவன் ஒரு நாள் தெருவில் நடந்து வர, எதிரே வீட்டு நாயொன்று தெருவில் வருகிறது. அவனைப் பார்த்ததும் அவனுடன் ஒட்டிக்கொள்கிறது. சிறிது நேரத்தில் ஜியான் வயதில் ஒரு பெண் அந்த நாயை தேடி வருகிறாள். தங்கள் நாய்க்கு அடைக்கலம் கொடுத்ததற்காக, மிகுந்த ”நன்றி” சொல்கிறாள். ”தங்கள் நாய், நல்லவர்களிடம் மட்டுமே போகும். நீங்கள் நல்லவர்” என பாராட்டு பத்திரமும் தருகிறாள். 

இந்த ‘நல்ல’ நினைவோடு, உற்சாகமாய் விசிலடித்துக்கொண்டே தெருவில் வருகிறான். எதிரே வந்த பையன் கவனமில்லாமல் இவன் மீது மோத இருவரும் தெருவில் உருள்கிறார்கள். ஜியான் எழுந்து, அந்த ‘நல்ல’ நினைவை நினைத்துப் பார்க்கிறான். மோதிய அதிர்ச்சியில் அந்த ‘நல்ல’ நினைவு கலைந்துவிடுகிறது. செம கடுப்பாகி, மோதியவனை துவைத்து எடுக்கிறான்.

***

மோடியின் கடந்த நான்கு ஆண்டு செயல்பாடுகளான பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமுலாக்கம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், நீட்டை அமுல்படுத்தியது என மக்களை இடைவிடாமல் தொடர்ச்சியாய் தாக்கிக்கொண்டு, எப்பொழுதும் பதட்டமாக தான் வைத்திருக்கிறது. மக்கள் முன்பு சேமித்து வைத்திருந்த சில ’நல்ல’ நினைவுகளும் தொலைதூரத்திற்கு காணாமல் போய்விட்டன.

ஜியான் நல்ல வலுவான பையன். அதனால் எதிராளியை துவைத்து எடுத்துவிட்டான். பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் தனித்தனியாக போராடிக்கொண்டிருப்பதால், நம்மால் துவைக்க முடியவில்லை. நாம் எல்லோரும் ஓரணியில் திரண்டு போராடினால், நமக்கும் சாத்தியம் தான்! நமக்கும் நிறைய நல்ல நினைவுகள் நிச்சயமாய் கிடைக்கும்! 

November 17, 2017

தீரன் - ஒரு கேள்வி

நெடுஞ்சாலையோரம் உள்ள தனியாக உள்ள வீடுகளில், கொடூரமாக கொலைகள் செய்து, கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல்.

ஒரு டிஎஸ்பி தனது குழுவினருடன் தொடர்ந்து உழைத்து கும்பலை பிடிப்பது தான் கதை.
நேர்த்தியான திரைக்கதை. எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

என் கேள்வி. அந்த கொடூர கும்பல் தற்செயலாக, விசாரணயில் ஈடுபட்டிருக்கும் போலீசு வீட்டிலும் கொலை, கொள்ளை செய்கிறது.
ஒருவர் தன் கடைமையை விடாப்பிடியாக செய்வதற்கு, தன் சொந்த இழப்பு இருந்தால் தான் செய்யமுடியுமா என்ன? படத்தில் செண்டிமெண்டுக்காக இப்படி தொடர்ந்து செய்கிறார்கள்.
பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபடுகிற கதாபாத்திரங்களை கூட தனிப்பட்ட இழப்புகளின் பாதிப்பால் தான் செயல்படுகிறார்கள் என்கிற கருத்தை தொடர்ந்து திரைப்படங்களில் செய்து வருகிறார்கள். உதாரணமாக பல படங்களை சொல்லலாம்.

இப்படி சித்தரிப்பது மிக அபத்தம்!  சமூக ஏற்றத்தாழ்வுகளையும், கோளாறுகளையும்  புரிந்துகொண்டு அதை சரி செய்யும் நோக்கத்தில் பலர் சமூக செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.  அவர்களை எல்லாம் தனிப்பட்ட இழப்புகளினால் தான் இப்படி ஈடுபடுகிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவைக்குமா? இல்லையா?  தொடர்ந்து திரைப்படங்களில் சித்தரிப்பு மூலம் சில விசயங்களை அபத்தமாக புரிந்துகொள்கிறோம் என்பதை படத்திலேயே ஒரு காட்சி வைத்திருப்பார்கள்.

November 7, 2017

சகாயம் சந்தித்த சவால்கள் - ஒரு பார்வை!

ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் லஞ்சம் தவிர்த்து நேர்மையுடன் பணியாற்றியதால்  23 வருடங்களில், 23 முறை வேலை மாற்றல்கள்!

தரமற்ற பெப்சியை ஆய்வு செய்து, பெப்சி நிறுவனத்தை பூட்டு போட்டது; தலைமை செயலர் வரை பதறிப்போய் சகாயத்துக்கு தொலைபேசியில் பேசியது; அரசு எந்த பத்திரிக்கைகளிலும் அந்த செய்தி வெளிவராமல் பார்த்துக்கொண்டது; உடனே வேறு ஊருக்கு தூக்கியடித்தது – இது ஒரு சம்பவம்!

கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பலை கைது செய்ய போய், மாவட்ட ஆட்சியரான சகாயத்தின் மீதே தனக்கு கீழ் உள்ள அலுவலரையே அடித்துவிட்டார் என பொய் வழக்கு போட்டது; சகாயம் சுதாரித்து அதை சாமர்த்தியமாய் எதிர்கொண்டது!- இது ஒரு சம்பவம்!

ஒரு கட்சிக்காரர் வீட்டுவசதிவாரியத்தின் கோடிக்கணக்கான மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறார்.  சகாயம் நடவடிக்கை எடுக்கிறார். உடனே கட்சிக்காரர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை வேறு ஊருக்கு மாற்றுகிறார்.

இப்படி பல சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகிறார். கூடுதலாக, முன்பெல்லாம் அரசு அலுவலர்கள் அடிப்படை தேவைகளுக்கு லஞ்சம் வாங்கியவர்கள் இப்பொழுது கூடுதலான நுகர்வு தேவைகளுக்கு லஞ்சம் வாங்குவதாக சொல்கிறார்.   இப்பொழுது அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் லஞ்சம் வாங்குவதாக அவரே சொல்கிறார்.   இதிலிருந்து நமக்கு புரிவதெல்லாம், அரசும், அரசாங்கமும் லஞ்சத்தில்  ஊறித்திளைக்கிறது.  சகாயம் மாதிரி ஆட்கள் எல்லாம் லட்சத்தில் ஒருவர் என சொல்லிவிடலாம்.

என் 10 ஆண்டு கால அனுபவத்தில் 30 வருங்கால வைப்புநிதி (PF Enforcement officers) அதிகாரிகளை பார்த்திருப்பேன். ஒரு ஆள் கூட கை சுத்தமான ஆள் இல்லை. அதே போல இஎஸ்ஐ 30 அதிகாரிகளில் கை சுத்தமான அதிகாரி ஒருவரை மட்டுமே சந்தித்தேன். அவர் பெயர் துரைராஜ்.  அதே போல விற்பனை வரி துறையில் ஒரு நேர்மையான அதிகாரி கூட பார்த்ததில்லை. இதே போலவே கலால் வரி துறையிலும்!

இந்த அரசை ஆளும் வர்க்கம் .இயக்கிக்கொண்டிருக்கிறது என சொன்னால், அதன் நடைமுறை என்பது, தரகு முதலாளிகளும், நிலச்சுவாந்தாரர்களும் தங்களுக்கான வேலைகளை முடிக்க அரசையும், அரசாங்கத்தையும் லஞ்சத்தின் மூலமாக தான் காரியம் சாதித்துக்கொள்கிறார்கள்.  ஆக உடைமை சமுதாயம் நீடிக்கும் வரைக்கும் லஞ்சம் நீடிக்கும் என்பது தான் யதார்த்தம்.  அதாவது மூக்கு உள்ளவரை சளி இருக்கும் என்பது தான்!

ஆக, சகாயம் தான் நேர்மையான நபர் என்பதை  பக்கத்துக்கு பக்கம் சொல்கிற பொழுதே இந்த அரசும், அரசாங்கமும் மாற்றவே முடியாத அளவிற்கு புரையோடி போய்விட்டதையும், பெரும்பாலான மக்களுக்கு எதிராக நிற்பதையும்தான் நிரூபிக்கிறது.   ஆனால், சகாயமோ இளைஞர்களை அணிதிரட்டி ’மக்கள் பாதை’ என்ற அமைப்பை உருவாக்கி, கடந்த சில ஆண்டுகளாக இந்த இத்துப்போன அரசமைப்பை மாற்றலாம் என நம்பிக்கை தந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இதுதான் பெரிய நகைமுரண்.

மேலும், சகாயத்தின் பெற்றோர்களை அறிமுகப்படுத்தும் பொழுது, உபகாரம் பிள்ளை என குறிப்பிடப்பட்டுள்ளது. சகாயம் சொன்ன மாதிரி “ என்னோட ரோல் மாடல் எங்க சித்தப்பா அருளாந்து பிள்ளை” என எந்தவித தயக்கமில்லாமல் சொல்லியிருக்கிறார். சாதியக்கண்ணோட்டமும் கோளாறு தான்!

ஆனந்தவிகடன் வெளியீட்டிருக்கிறது.  விலை ரூ. 95 பக்கங்கள் : 96

நூலை எழுதிய ஆசிரியர் : கே. ராஜா திருவேங்கடம் (இப்பொழுது சன் தொலைக்காட்சியில் பல பிரபலங்களை பேட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்)