> குருத்து: ஊர்சுற்றல்
Showing posts with label ஊர்சுற்றல். Show all posts
Showing posts with label ஊர்சுற்றல். Show all posts

April 30, 2026

லால்பாக் பொட்டனிக்கல் கார்டன் – பெரு நகரத்தின் நடுவே பெரிய பூங்கா

 


ஒரு ஆள் பழைய சிந்தனை கொண்டவராய் இருந்தால், என்னப்பா ஹைதர் காலத்து ஆளாக இருக்கிறாயே?! என்பார்கள்.   உண்மையில், இந்த லால் பாக் திப்புச் சுல்தானின் அப்பா ஹைதர் அலியால் 1760ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. திப்புச் சுல்தான் இன்னும் விரிவுப்படுத்தியிருக்கிறார்.

 

நகரத்தின் மையத்தில் 240 ஏக்கரில் பரந்து விரிந்து நிற்கிறது இந்த பூங்கா.  வெளிநாடுகளில் இருந்து விதவிதமான மரங்கள், செடிகளை பார்த்து பார்த்து வரவழைத்து கவனமாய் வளத்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் சிவப்பு மலர்களை நிறைய வளர்த்ததால், சிவப்பு தோட்டம் (Lal bagh) என பெயர் காரணமாகியிருக்கிறது.

 





265 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட பெரிய வரலாறு தான்.   அதனால் பெரிய, மிகப்பெரிய மரங்கள் இருக்கின்றன. 250 வருட  ஒரு இலவம் பஞ்சு மரம் (silk tree) ஒன்று இருக்கிறது. மரமாய் இருந்து, கால ஓட்டத்தில் மில்லியன் ஆண்டுகள் கடந்து அது இப்பொழுது பாறையாய் இருக்கிறது. வேறிடத்தில் இருந்து இந்த இடத்திற்கு கொண்டு வந்து பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.   நல்ல விசயம்.


 

ஒரு ஏரி உள்ளே இருக்கிறது. அதன் அருகில் செயற்கையாய், மணிக்கு ஒருமுறை 1 முதல் 1.15. 2 முதல் 2.15 என்ற கணக்கில் கால் மணி நேரம் அருவி போல ஒன்றை செயற்கையாய் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  கண்ணாடி மாளிகை இருக்கிறது.  இதில் குடியரசு தினத்திலும், சுதந்திர தினத்திலும் சிறப்பாக மலர் கண்காட்சி நடத்துகிறார்கள்.

 

தமிழ் புத்தாண்டு தினத்தில் உள்ளே போயிருந்தோம்.   குடும்பம் குடும்பமாய் ஒரே விதமான ஆட்கள் அவர்களுடைய வண்ணம், பெரிய சிவப்பு பொட்டு வைத்துக்கொண்டு என ஆயிரக்கணக்கில் வந்துகொண்டே இருந்தார்கள். அசாம் மக்களாக இருப்பார்கள், அவர்களுக்கு இது விசேச நாள் என நண்பர் கணித்தார்.  ஆனால் பேட்டரி கார் ஓட்டியவர் இவர்கள் நேபாளத்துக்காரர்கள். அவர்களுக்கு இன்று புத்தாண்டு என எங்கள் குழப்பத்தை தெளிவுப்படுத்தினார். மகிழ்ச்சி.

 

விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகம்.  வார நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்கிறார்கள். ஆகையால் நாட்களை திட்டமிட்டு செல்லுங்கள்.

 

உள்ளே நுழைய கட்டணமாய் பெரியவர்களுக்கு ரூ. 50, சிறியவர்களுக்கு ரூ. 25 என்றும் விசேச நாட்களில் இன்னும் கூடுதல் விலை விற்கிறார்கள்.


 

மைசூரில் நகரத்துக்கு உள்ளேயே ஒரு விலங்கியல் பூங்கா ஒன்றை நடத்தியது ஆச்சர்யம் தந்தது. நிறைய விலங்குகளும் உற்சாகமாய் வலம் வந்தன.  பர பரவென இயங்கும் ஒரு மெட்ரோ நகரத்துக்கு மத்தியில் 250 ஏக்கரில் லால் பாக் பூங்கா மட்டும் மெதுவாக சுவாசிக்க செய்கிறது எனலாம்.

 

-        -  இரா. முனியசாமி

-         14/04/2026

September 25, 2025

பாலருவி – புதிய மாற்றங்கள்


வருடம் தோறும் அண்ணன் குடும்பம், இன்னும் சில சொந்தங்களுடன் குற்றாலம் செல்வது வழக்கம். சில சமயங்களில் அருவிகளில் அதிகம் நீர்வரத்து இருந்தாலோ, மிக குறைவான நீர் வரத்து இருந்தாலோ, திட்டமிட்ட பயணத்தை குலைத்துப் போட்டுவிடும்.


இப்படித்தான் கடந்த மாதம் திட்டமிட்ட நாட்களில் அதிகம் நீர் கொட்டி ரத்து செய்யவேண்டியதாகிவிட்டது. நண்பர்கள் இருவருடனும் கடந்த ஞாயிறிலிருந்து மூன்று நாட்கள் குற்றாலத்தில் தான் இருந்தோம்.


பேரரருவியிலும், ஐந்தருவியிலும் குளிக்கும் அளவிற்கு குறைவாகவே நீர்வரத்து இருந்தது. மற்றவை இன்னும் சுமார். குற்றாலத்தில் எப்பொழுதும் மக்களை கூட்டம் கூட்டமாக பார்த்துவிட்டு, இப்பொழுது குறைவான ஆட்களை பார்க்கும் பொழுது வித்தியாசமாக இருந்தது.


இரண்டாம் நாள் பாலருவிக்கு சென்றோம். குற்றாலத்தில் இருந்து செங்கோட்டை (6 கிமீ – கட்டணம் ரூ. 10) பேருந்தில் சென்றோம். மீண்டும் கேரளா பேருந்து ஏறி, தென்காசி மாவட்டத்தின் எல்லையான புளியரையை தாண்டினால், கேரளாவின் ஆர்யங்காவிற்குள் கொஞ்சம் உயரமான சாலைகளில் போகும் பொழுது, குளிர்ச்சியை நன்றாகவே உணரமுடிகிறது.


பாலருவியின் வாயிலில் இறங்கினோம். (18 கி.மீ – கட்டணம் ரூ. 36) காலை 9.30 மணிக்கு சென்றுவிட்டோம். திங்கள்கிழமை வார நாள் என்பதால், மிக மிக குறைவாக கூட்டம் இருந்தது.

ஒரு நபருக்கு ரூ. 70 வசூலிக்கிறார்கள். ஏர்டெல் நெட் வொர்க் சுத்தமாக வரவில்லை. அவர்களே வைபை நமக்கு தருகிறார்கள். காட்டிற்குள் நான்கு கிமீ தூரத்தை அவர்களே பேருந்து வைத்து அழைத்து செல்கிறார்கள்.


அவர்கள் இறக்கிவிட்ட இடத்தில் இருந்து அதற்கு பிறகு அருவையைத் தொட ஒரு கிமீ நடந்து செல்லவேண்டும். முன்பு இதன் பாதை நிறைய ஈரத்துடன், மேடும் பள்ளமுமாய் இருந்ததை இப்பொழுது பதப்படுத்தி, நடந்த செல்ல வசதி ஏற்படுத்தியிருக்கிறார்கள்.


அருவியை அடையும் பொழுது அதன் சத்தம் மட்டும் தனியாக கேட்கிறது. சீசன் காலத்தில் நேரடியாக குளிக்க முடியாத அளவிற்கு தண்ணீர் விழும் பொழுது, அதன் வழியில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும், குட்டி அருவிகளில் நாம் குளிக்கலாம். இப்பொழுது செப்டம்பர் என்பதால், நேரடியாக அருவி கொட்டும் இடத்திலேயே ஆண்கள் குளிக்க அனுமதிக்கிறார்கள்.

மக்கள் கூட்டமும் குறைவு. ஆகையால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அருவியோடு மல்லுக்கட்டி குளியல் போட்டோம்.


மீண்டும் அவர்களுடைய பேருந்து இடத்திற்கு வந்தால், குளித்ததற்கு இதமாக, அவர்களே தேநீர், கொழுக்கட்டை, பழம்பொரி, முட்டைப் போண்டா சுடச்சுட விற்கிறார்கள். விலையும் கட்டுப்படியானதாக இருக்கிறது.

பிறகு மீண்டும் வாயிலுக்கு வந்து, கேரள பேருந்தில் ஏறி செங்கோட்டை வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து குற்றாலம் வந்து சேர்ந்தோம்.

நல்ல அனுபவம்.

July 30, 2023

அகத்தியர் அருவி


குற்றாலத்தில் இருந்து 40 கிமீ. திருநெல்வேலியில் இருந்து கணக்கிட்டால்...42 கிமீ.


அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கிறது இந்த அருவி. இந்தப் பகுதி வனச்சரகத்தின் எல்லைக்குட்பட்டது. ஆகையால் உள்ளே நுழையும் பொழுதே, வனச் சரக காவலர்கள் வண்டியைச் சோதித்து தான் அனுமதிக்கிறார்கள். பிளாஸ்டிக் குப்பைகளை போடாதீர்கள் என சொல்லி அனுப்புகிறார்கள். ஒரு ஆளுக்கு 30 என வசூலிக்கிறார்கள். வண்டிக் கட்டணம் தனி.

அருவி 25 அடி உயரத்தில் இருந்து அருமையாய் விழுகிறது. பொதுவாக அருவிகள் எல்லாமே குறிப்பிட்ட மாதங்கள் தான் விழும். வருடம் முழுவதும் வற்றாத தாமிரபரணியின் அருவி என்பதால்... வருடம் முழுவதும் விழும் என்பது இதன் சிறப்பாக இருக்கிறது.

குற்றால அருவிகளில் நல்ல குளிர்ச்சி இருக்கும். சீசன் காலத்தில் குளிக்கும் பொழுது பெரும்பாலோருக்கு நடுக்கம் இருக்காது. சிலருக்கு நடுக்கம் கொடுக்கும். ஆனால், இந்த அருவியில் குளிப்பதற்கு தேவையான அளவு குளிர்ச்சி இருப்பது சிறப்பு.

ஆண்டு முழுவதும் நீர் விழும் என்பதால் கூட்டமும் அளவாகவே இருக்கும். இன்றைக்கு காலை 11 மணியில் நாங்கள் போன பொழுது குறைவான கூட்டமே இருந்தது. நிறைய நேரம் குளித்தோம்.

குழப்பம்


தென்காசியில் ரயியில் ஏறியதும் ஒரு பஞ்சாயத்து. இருவர் இருவராக அமர்ந்திருக்க இருவரிடமும் குழப்பம்.


ஒருவர் 49, 52 படுக்கைகள் எங்களுடையது என்கிறார். இன்னொருவரும் இது எங்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்கிறார்கள்.

நால்வரும் வயதானவர்கள். ஆகையால் நால்வரிடமும் ஏக குழப்பம்.

ஒருவர் "அதெப்படி? ரயில்வேயில் ஏதோ கோளாறு. டிக்கெட் பரிசோதகரிடம் பேசிக்கொள்ளலாம்" என்கிறார்.

இதற்கு மேல் நாம நுழைஞ்சு மக்களுக்கு உதவுலைன்னா தப்பா போயிரும்!

"ரயில்வேயில் வேறு வேறு கோளாறுகள் இருந்தாலும்... இப்படிப்பட்ட கோளாறுகள் வருவதில்லை" என்றேன்.

ஒருவரிடமிருந்த டிக்கெட்டை வாங்கி.. ரயில் எண், தேதி, இருக்கைகளை சரிப்பார்த்தேன். எல்லாம் சரியாக இருந்தன.

"அப்ப அவர் வைத்திருக்கும் டிக்கெட்டில் தான் கோளாறுக்கு வாய்ப்பு" என்றேன்.

அவரே தன் டிக்கெட்டை சரி செய்துவிட்டு....

"எனக்கு இன்றைக்கு மாலை 5 மணிக்கு, சிலம்பு எக்ஸ்பிரஸ். நாங்க ஒரு பெரிய டீமாக குற்றாலம் வந்தோம். நானாக பொதிகை ரயில் என நினைத்துக்கொண்டேன்" என்றார்.

அவ்வளவு தான் பஞ்சாயத்து முடிஞ்சுப் போச்சு!

15 ஆண்டுக்கு முன்பு, பாண்டியனில் ஏறி, இதே மாதிரி உட்கார்ந்து, இன்னொருவரை பதட்டமாக்கி, பிறகு ஒரு மணி நேரத்துக்குப் பிறகான வண்டி என சரிப்பார்த்து, மன்னிப்பு கேட்டு, சரியான வண்டிக்கு வந்துவிட்டேன்.
🙂

பாலருவி



தமிழகத்தில் அருவிகளுக்கு பெயர் பெற்றது குற்றாலம்.

குற்றாலத்தில் இருந்து 25கிமீ செங்கோட்டை வழியாக போனால் கேரளாவைத் தொட்டு, கொல்லம் மாவட்டத்தில் ஆரியங்காவில் உள்ள பாலருவியை அடைந்து விடலாம்.

பாலருவி என நுழைவு வாயிலை கடந்ததும், அங்கே பசுமையான பரந்த இடம் இருக்கிறது. பயணிகள் வந்த சிறிதும், பெரிதுமான கார்கள், பேருந்துகள் நின்றுகொண்டுருக்கின்றன.

காட்டுக்குள்ளே நான்கு கிமீ போனால் தான் அருவியை அடைய முடியும்.

காடு என்பதால், காட்டு விலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்பதால், நாம் கொண்டு செல்லும் எந்த வண்டியையும் உள்ளே அனுமதிப்பதில்லை. நடந்து செல்லவும் அனுமதியில்லை.

கேரள அரசு 50 இருக்கைகள் கொண்ட பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 10 நிமிடங்கள் பயணிக்கிறோம்.


பெரியவர்களுக்கு போக, வர ரூ.70 வசூலிக்கிறார்கள். குழந்தைகள், மாணவர்களுக்கு கொஞ்சம் குறைவான கட்டணம் வசூலிக்கிறார்கள்.

காலை 8 மணிக்கு துவங்கும் இந்த பேருந்து பயணத்தை மாலை நான்கு மணிக்கு முடித்துக்கொள்கிறார்கள். ஐந்து மணிக்கு அங்கிருந்து மக்களை கிளப்பிவிடுகிறார்கள்.

அருவி என்றாலே சீசனில் தான் தண்ணீர் விழும். வார நாட்களில் மிதமான கூட்டம், வார இறுதிகளில் நல்ல கூட்டமும் இருக்கிறது. கூட்டத்திற்கேற்றவாறு காத்திருக்கும்படி ஆகிவிடுகிறது.

உள்ளே கொண்டு போய், இறக்கிவிட்டால்... நானூறு மீட்டர் நடந்து சென்றால்... பாலருவியை அடைந்துவிடுகிறோம்.

300 மீட்டர் உயரத்தில் இருந்து பாலை ஊற்றியது போல அருவி அழகாய் கொட்டுகிறது. அதனால் தான் பாலருவி.

நேரடியாக அருவி விழும் இடத்தில் குளிக்க ஏற்பாடு இல்லை. கீழே விழும் நீர் இரண்டு வழிகளில் பிரிந்து விழுகிறது. ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கம் என பிரிந்து குளிப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

பாதை கொஞ்ச தூரம் தான். ஆனால் எளிது அல்ல! வயதானவர்கள், நோயுற்றவர்கள் அந்த பாதை வழியாக கடந்து அருவியில் குளிப்பது சிரமம்.

நாங்கள் இன்று போயிருந்த பொழுது, கேரளா என்றாலும்... பெரும்பாலும் தமிழர்கள் தான் வந்திருந்தார்கள். வண்டிகளின் பதிவெண்களே சாட்சியாய் நிற்கின்றன.

சாப்பிட கடைகள் ஏதும் இல்லை. டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஐஸ் கிரீம் விற்கிறார்கள். விலை அளவாகத்தான் இருக்கிறது.

உள்ளே அருவிக்கு பக்கத்தில் தேநீர், பஜ்ஜி, முட்டைப் போண்டாவும் அளவான விலைகளில் கிடைக்கிறது.

நல்ல குளிர்ச்சியான பகுதி. நல்ல அருவி. நல்ல குளியல். நிச்சயம் போய்வரலாம்.

October 9, 2022

இராஜஸ்தான் பயணம்


மதுரையில் சில வழக்கறிஞர் தோழர்களின் முன்னெடுப்பில் 'குறிஞ்சி கூடல்' என்ற பெயரில், கீழடி துவங்கி பல சின்ன சின்ன பயணங்களை கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக மேற்கொண்டிருக்கிறார்கள்.


அதே போல இந்திய அளவில் நான்கு மாநிலங்களுக்கு பெரிய பயணங்களும் செய்திருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியில் இராஜஸ்தானில் வரலாற்று தடயங்களை காண ஒரு குழுவாக பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார்கள்.

பயணங்களில் ஆர்வம் இருந்தாலும், யாரோடு இணைந்து பயணிப்பது என்ற தயக்கமும், தொடர்ச்சியாக சில நாட்கள் விடுப்பும், கொஞ்சம் கூடுதல் பணமும் எப்பொழுதும் பற்றாக்குறை தான்.

தோழர்கள் ஏற்பாடு செய்கிற பயணம் என்பதால், இந்த பயணத்தில் சந்தோசமாய் நானும் இணைந்துவிட்டேன். அடுத்த பயணத்தில் குடும்பத்தோடு போகலாம் என முடிவு செய்திருக்கிறோம்.

இதோ அந்த நாளும் வந்துவிட்டது. நேற்று மாலை சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பும் ஜெய்ப்பூர் விரைவு வண்டியில் கிளம்பிவிட்டோம்.

இன்னும் ஒரு வாரத்திற்கு இராஜஸ்தான் தான் நம்ம ஊர். அசோக் கெலாட் தான் நம்ம முதல்வர். மார்வாடி நம்ம மொழி. :)

August 8, 2022

குற்றாலமும் பாலருவியும்


கொரானா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றால அருவிகளில் தடை என்பதால், குளிக்க முடியவில்லை. இந்த முறை ஜூனில் அருவிகளில் தண்ணீர் குறைவாக இருந்தது. ஆடி பிறந்ததும் அருமையாக தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

மதுரையில் இருந்து அண்ணன் குடும்பமும், சென்னையிலிருந்து எங்க குடும்பமும் குற்றாலத்திற்கு வந்து சேர்ந்தோம்.

வழக்கமாக மூன்று நாட்களில் ஒரு நாள் திருநெல்வேலி அகஸ்தியர் அருவியிலும், தாமிரபணியிலும் குளித்துவிட்டு வருவோம். இந்தமுறை அருவிக்கு அருகே கட்டுமான வேலைகள் வேலை நடைபெறுவதால், ஒரு குறிப்பிட்ட தேதி வரை அனுமதியில்லை என அரசு அறிவித்துவிட்டது.

ஆகையால், இந்த முறை குற்றாலத்தில் இருந்து 25 கிமீ தூரத்தில் இருக்கும் பாலருவி போகலாம் என முடிவெடுத்தோம். பாலருவி கேரளாவிற்குள் இருக்கிறது. கடந்த வருடங்களிலேயே போகலாம் என யோசித்தோம். மதுரையில் இருந்து வரும் வேனுக்கு கேரளா பர்மிட் இல்லை என சொன்னதால் போகாமல் இருந்தோம். இப்பொழுது பர்மிட் வாங்கிய படியால், அந்த சிக்கல் இல்லை.

செங்கோட்டையை தாண்டி கொஞ்சம் மலைப்பாதை ஏற துவங்கியதுமே சிலு சிலுவென காத்தும், குளுமையும்
அருமையாக
இருந்தது. பாலருவியின் முகப்பிற்கு போய்விட்டோம்.

அங்கிருந்து கேரளா அரசு உள்ளே அருவியை அடைய பேருந்துகள் ஏற்பாடு செய்திருக்கிறது. 10 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்கள் பயணம். தலைக்கு ரூ. 60 என வசூலிக்கிறார்கள். நீண்ட நேரம் காத்திருக்காமல் நிறைய பேருந்துகள் வந்தும் போயும் கொண்டே இருக்கின்றன.

உள்ளே போய் இறக்கிவிட்ட பிறகு சில நிமிடங்கள் நாம் நடக்கவேண்டும். தூரத்தில் இருந்தே அருவி ஆர்ப்பரித்து விழும் சத்தம் கேட்கிறோம். நல்ல உயரத்தில் இருந்து விழுகிறது. அங்கு நம்மால் நேரடியாக குளிக்க வாய்ப்பில்லை. விழும் தண்ணீர் இரண்டு வழிகளில் பிரிந்து வருகிறது. அதில் ஆண்கள், பெண்கள் என பிரித்துவிடுகிறார்கள்.

நாங்கள் மதியத்திற்கு மேல் போயிருந்ததால் நிறைய கூட்டம் இல்லை. அவசரம் இல்லாமல் குளிக்கு முடிந்தது. மீண்டும் வண்டி ஏறி எங்கள் வண்டி இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

குற்றாலம் போகிறவர்கள் பாலருவியையும் பார்த்து வாருங்கள். நல்ல அனுபவம்.

April 9, 2022

கோவைக் குற்றாலம் : சில்லென ஒரு குளியல்


மார்ச் முதல் வாரம். வெயில் எத்தனை அடித்தாலும், கோவை குற்றாலம் என அழைக்கப்படுகிற சிறுவாணி அருவியின் குளிர்ச்சியை குறைக்கவே முடியவில்லை. அத்தனை குளிர்ச்சியாக இருந்தது. எந்த அருவியிலும் இத்தனை குளிர்ச்சியை நான் உணர்ந்ததில்லை. அருவி நீர் அத்தனை சுவையாக இருக்கிறதே எனக் கேட்டால், உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் என ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.


காவிரியாற்றின் துணை நதியான பவானி ஆற்றின் ஒரு கிளை ஆறாக உள்ளது சிறுவாணி. கோவையின் ஒரு சுற்றுலாத்தலமாகவும், இயற்கை சூழலோடும், அமைதியான இடமாகவும் உள்ளது சிறுவாணி.

கொரனா பாதிப்பால் குற்றாலத்தைப் போலவே இங்கும் மக்களை அனுமதிக்கவில்லையாம். பிறகு கடந்த டிசம்பரில் தான் வரம்பிட்டு மக்களை அனுப்பியிருக்கிறார்கள். இப்பொழுது கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.

கோவையிலிருந்து 37 கி.மீ தூரத்தில் இருக்கிறது. பேருந்து வசதிகள் உள்ளது. அருவி உள்ள பகுதி காடு என்பதால், நம் கொண்டு அனைத்து பொருட்களையும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். யானைகள் நடமாட்டம் உள்ள ஒரு குறிப்பிட்ட தொலைவை, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைப் வாங்கி கொண்டு வேனில் ஏற்றிக்கொண்டு போய், இறக்கிவிடுகிறார்கள். அருவி இதோ கொஞ்ச தூரம் தான்! இந்த வந்துருச்சு! இந்தா வந்திருச்சு என சொல்லி சொல்லியே அருவியை அடைந்துவிடுகிறோம்.

இயற்கையான அருவி எல்லாம் மிகுந்த உயரத்தில் இருந்து விழுகிறது. ஆகையால், நம்மை போல சுற்றுலாக்காரர்கள் குளிப்பதற்கு வசதியாக அருவியை போல அடுத்தடுத்து உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள். அதில் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக உற்சாகமாய் குளிக்கிறார்கள். குடிநீரை சிக்கல் பண்ணக்கூடாது என சோப், சீயக்காய், ஷாம்பூவை எல்லாம் அனுமதிப்பதில்லை. நல்லது தான்.

சிறுவாணி ஆறு தான் கோவை மக்களுக்கு குடிநீர் பெரிய ஆதாரம் என்கிறார்கள். அருவிக்கு மேலே சிறுவாணி அணை இருக்கிறதாம். அணையை பிரட்டிஷ் காலத்தில் கட்டியிருக்கிறார்கள். பிறகு பலப்படுத்தியிருக்கிறார்கள். அங்கு செல்ல வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெறவேண்டுமாம்.

அருகாமையிலுள்ள பிற சுற்றுலாத்தளங்கள் என பரம்பிக்குளம், ஆழியார், சோலையார், பாலார் மற்றும் ஆனமலை வனச்சரகம் இருப்பதாக சொல்கிறார்கள். அடுத்து வரும் பொழுது அங்கு செல்லலாம் என ஆறுதல் சொல்லிக்கொண்டே கிளம்பிவிட்டோம்.

நான் எடுத்த சில புகைப்படங்களுடன், இணையத்தில் கிடைத்தப் புகைப்படங்களும்!

August 2, 2018

குற்றாலம்


வெயிலும் சாரல்மழையும்
மாறி மாறி பொழிகின்றன.
குரங்குகள் தங்கள் சுற்றம் சூழ
வலம் வருகின்றன!


எத்தனை மனிதர்கள்
கூட்டம் கூட்டமாய் வந்தாலும்
அத்தனை மனிதர்களையும்
அருவி ஆசிர்வதிக்கிறது!

எத்தனை மன அழுத்தங்களை
சுமந்து வந்தாலும்
அத்தனையையும்
கரைத்துவிடுகிறது!

 - முதன்மை அருவி இப்பொழுது!

July 21, 2016

வயநாடு வரை போயிருந்தோம்!

சென்னையில் அடிக்கிற அக்னி நட்சத்திர வெயிலிருந்து மூன்று நாட்கள் தப்பிக்கலாம் என மலையும் மலைசார்ந்த இடமான கேரளாவின் வடபகுதியான வயநாடு வரை போய்வந்தோம்! கோழிக்கோடு வரை ரயில் பயணம். அங்கிருந்து பேருந்தில் மலைப்பயணம். வயநாட்டின் ஒருபகுதியான சுல்தான் பத்தேரியில் உள்ள ஹோட்டலில் தங்கினோம்.
குருவா டிவீப்

காலை 9 மணியளவில் முதல் ஆளாய் போய்சேர்ந்தோம்.   இயற்கை சூழலோடு இந்த ஆற்றுப்படுகை தீவுத்திட்டு கபினி ஆற்றில் அமைந்துள்ளது. 13 யானைகள் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்ததால், யாரையும் அனுமதிக்கவில்லை. காத்திருந்த ஒருமணிநேர வேளையில் கல்லால் அடித்து தித்திக்கும் நாவல் பழங்களை சாப்பிட்டோம். மிதகுகள் மூலம் கபினியை கடக்க உதவுகிறார்கள். ஒரு கிலோமீட்டர்வரை காட்டுக்குள் அனுமதி. போன யானைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயமிருந்ததுஉள்ளே குளுகுளு என ஓடும் கபினியாற்றில் நிறைய நேரம் குளித்தோம். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டேயிருந்தார்கள்.
பாணசுரசாகர் அணை

கபினியின் துணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கரைத்தடுப்புஅணை. திரைப்படங்களில் யாரையாவது கடத்திக்கொண்டு போவார்களே, அப்படி ஒரு வேகமாக செல்லக்கூடிய இன்ஜின் போட்டில் சுற்றிலும் பசுமையான மலைகளுக்கு மத்தியில்அதோ அந்த பறவை போல வாழவேண்டும்! இதோ இந்தஅலைகள் போல ஆடவேண்டும்என்ற பாட்டை கோரசாகப் பாடி, சாகச பயணம் செய்தோம்.   என்ன கொஞ்சம் காசுதான் அதிகம்! 6 பேருக்கு ரூ. 750 வசூலிக்கிறார்கள்.

அடுத்து, அணையின் அருகேயே இருந்த கர்லேட் ஏரியின் மேலே கம்பிகளின் வழியே  இடுப்பில் பெல்ட் போட்டு அந்தரத்தில் பயணித்த பொழுது கொஞ்சம் பதட்டமாகவும், சந்தோசமாகவும்தான் இருந்தது!
முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்

சுல்தான் பத்தேரியிலிருந்து 14 கி.மீ தூரத்தில் இருக்கிறது. கேரளாவில் முத்தங்கா, கர்நாடகத்தில் பந்திப்பூர், தமிழகத்தில் முதுமலை சரணாலயம் என மூன்று மாநிலத்திலும் மூன்று பெயர்களில் கோடைகாலத்திலும் பசுமையாக பரந்து நிற்கிறது ஒரேகாடு. காலை 7மணி முதல் 10மணிவரை. மாலை 3லிருந்து 5 மணிவரை காட்டுக்குள் அழைத்துசெல்கிறார்கள். 40ஜீப்கள் தான் காலையில் அனுமதி. மாலையிலும் கோட்டா தான். ஆகையால், காலை 7மணிக்கே போனால், 20பேர் நமக்கு முன்னால் வரிசையில் நிற்கிறார்கள். 16 கிமீ காட்டிற்குள் ஜீப்பில் பயணித்தபொழுதுமூன்று வெவ்வேறு இடங்களில் மான்கள் கூட்டம், 200 மீட்டர் தள்ளி எதையோ தின்றுகொண்டிருந்த  ஒத்த யானை, தயங்கி, தயங்கி காட்டுப்பாதையை கடந்து சென்ற காட்டெருமையை பார்த்தோம். 23புலிகள், 810 யானைகள் என பெரும்பட்டியலை ஓட்டுநர் சொல்லிக்கொண்டே போகும்பொழுது, பகீரென்று இருந்தது.  
அருவிகள்

மேற்குமலை தொடர்ச்சியில் மீன் முட்டி விழும் மீனுமுட்டி அருவி, சூச்சிப்பாறை அருவி என இன்னும் சில அருவிகள் இருந்தாலும், ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து மழை விழத்துவங்கும் பொழுதுதான் அருவிகள் உயிர்பெறுகின்றனமே மாதத்தில் போனதால் நாங்கள் அருவிகளை இழந்தோம்.
செம்பரா சிகரம்

வயநாடு மாவட்டத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறதுஇதன் உச்சியை தொட்டுவர ஒருநாள் டிரெக்கிங் போவது அவசியம். மூன்றுநாள் திட்டத்தில் ஒரு முழுநாளை ஒதுக்கமுடியாததால் போகவில்லை.
உணவு

எங்கு போனாலும் அங்கு வாழும் மக்களிடம் கேட்டாலே நல்ல ஹோட்டல் எதுவென சரியாக கைகாட்டிவிடுகிறார்கள். சென்னையை விட குறைவான விலையில் சுவையான டிபன் கிடைத்தது. மூன்று நாளும் மதிய வேளையில் கேரளத்தின் சுவையான பிரியாணியை வெவ்வேறு இடங்களில் சாப்பிட்டோம்.
நான் ரெம்ப சாப்ட். ரெம்ப அன்பானவாஎன அறிமுகப்படுத்திக்கொண்டு நீச்சல்குளத்தில் உற்சாகமாய் முங்கு நீச்சலடித்து, தெருவில் பழக்கப்படுத்திய யானை போனாலும், “நாங்க யானைப் பார்த்திட்டோம்என ஊரே கேட்கும்படி கத்தி, ‘என்லக்கில் தான் எல்லோரும் மான்கள், யானைகள் எல்லாம் பார்த்தீங்கஎன பயணம் முழுவதும் கலகலக்க வைத்த ஆறுவயது பூவரசி தான் எங்கள் பயணத்தை உற்சாகமாய் வழிநடத்திய குட்டித்தேவதை.
ஊர்வந்து சேர்ந்த அடுத்தநாள் காய்கறி வாங்க சென்றபொழுது, , தென்காசிகாரரான பாய், ’குற்றாலத்தில் சீசன் இப்பவே தொடங்கிருச்சு. அருவிகளில் தண்ணீர் விழுகிறதுஎன்று சொன்னதும் குற்றாலசாரல் மனதில் அடிக்க ஆரம்பித்தது.  யாரெல்லாம் குற்றாலம் வருகிறீர்கள்? :)