> குருத்து: பாலருவி – புதிய மாற்றங்கள்

September 25, 2025

பாலருவி – புதிய மாற்றங்கள்


வருடம் தோறும் அண்ணன் குடும்பம், இன்னும் சில சொந்தங்களுடன் குற்றாலம் செல்வது வழக்கம். சில சமயங்களில் அருவிகளில் அதிகம் நீர்வரத்து இருந்தாலோ, மிக குறைவான நீர் வரத்து இருந்தாலோ, திட்டமிட்ட பயணத்தை குலைத்துப் போட்டுவிடும்.


இப்படித்தான் கடந்த மாதம் திட்டமிட்ட நாட்களில் அதிகம் நீர் கொட்டி ரத்து செய்யவேண்டியதாகிவிட்டது. நண்பர்கள் இருவருடனும் கடந்த ஞாயிறிலிருந்து மூன்று நாட்கள் குற்றாலத்தில் தான் இருந்தோம்.


பேரரருவியிலும், ஐந்தருவியிலும் குளிக்கும் அளவிற்கு குறைவாகவே நீர்வரத்து இருந்தது. மற்றவை இன்னும் சுமார். குற்றாலத்தில் எப்பொழுதும் மக்களை கூட்டம் கூட்டமாக பார்த்துவிட்டு, இப்பொழுது குறைவான ஆட்களை பார்க்கும் பொழுது வித்தியாசமாக இருந்தது.


இரண்டாம் நாள் பாலருவிக்கு சென்றோம். குற்றாலத்தில் இருந்து செங்கோட்டை (6 கிமீ – கட்டணம் ரூ. 10) பேருந்தில் சென்றோம். மீண்டும் கேரளா பேருந்து ஏறி, தென்காசி மாவட்டத்தின் எல்லையான புளியரையை தாண்டினால், கேரளாவின் ஆர்யங்காவிற்குள் கொஞ்சம் உயரமான சாலைகளில் போகும் பொழுது, குளிர்ச்சியை நன்றாகவே உணரமுடிகிறது.


பாலருவியின் வாயிலில் இறங்கினோம். (18 கி.மீ – கட்டணம் ரூ. 36) காலை 9.30 மணிக்கு சென்றுவிட்டோம். திங்கள்கிழமை வார நாள் என்பதால், மிக மிக குறைவாக கூட்டம் இருந்தது.

ஒரு நபருக்கு ரூ. 70 வசூலிக்கிறார்கள். ஏர்டெல் நெட் வொர்க் சுத்தமாக வரவில்லை. அவர்களே வைபை நமக்கு தருகிறார்கள். காட்டிற்குள் நான்கு கிமீ தூரத்தை அவர்களே பேருந்து வைத்து அழைத்து செல்கிறார்கள்.


அவர்கள் இறக்கிவிட்ட இடத்தில் இருந்து அதற்கு பிறகு அருவையைத் தொட ஒரு கிமீ நடந்து செல்லவேண்டும். முன்பு இதன் பாதை நிறைய ஈரத்துடன், மேடும் பள்ளமுமாய் இருந்ததை இப்பொழுது பதப்படுத்தி, நடந்த செல்ல வசதி ஏற்படுத்தியிருக்கிறார்கள்.


அருவியை அடையும் பொழுது அதன் சத்தம் மட்டும் தனியாக கேட்கிறது. சீசன் காலத்தில் நேரடியாக குளிக்க முடியாத அளவிற்கு தண்ணீர் விழும் பொழுது, அதன் வழியில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும், குட்டி அருவிகளில் நாம் குளிக்கலாம். இப்பொழுது செப்டம்பர் என்பதால், நேரடியாக அருவி கொட்டும் இடத்திலேயே ஆண்கள் குளிக்க அனுமதிக்கிறார்கள்.

மக்கள் கூட்டமும் குறைவு. ஆகையால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அருவியோடு மல்லுக்கட்டி குளியல் போட்டோம்.


மீண்டும் அவர்களுடைய பேருந்து இடத்திற்கு வந்தால், குளித்ததற்கு இதமாக, அவர்களே தேநீர், கொழுக்கட்டை, பழம்பொரி, முட்டைப் போண்டா சுடச்சுட விற்கிறார்கள். விலையும் கட்டுப்படியானதாக இருக்கிறது.

பிறகு மீண்டும் வாயிலுக்கு வந்து, கேரள பேருந்தில் ஏறி செங்கோட்டை வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து குற்றாலம் வந்து சேர்ந்தோம்.

நல்ல அனுபவம்.

0 பின்னூட்டங்கள்: