> குருத்து: குழந்தைகள் உலகம்
Showing posts with label குழந்தைகள் உலகம். Show all posts
Showing posts with label குழந்தைகள் உலகம். Show all posts

June 25, 2026

குழந்தைகள் கேட்டது பொம்மை அல்ல... பெற்றோர்களின் நேரம்!

 

குழந்தைகள் கேட்டது பொம்மை அல்ல... பெற்றோர்களின் நேரம்!

 

"உங்கள் குழந்தையின் நினைவில் நிற்பது நீங்கள் வாங்கி கொடுத்த பொருள் அல்ல; நீங்கள்  கவனத்துடன் அவர்களுடன் செலவழித்த நேரம் தான்”

 

****

2018-ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு வித்தியாசமான ஊர்வலம் நடந்தது. பொதுவாக மக்கள் தெருவில் இறங்கினால் என்ன கேட்பார்கள்? சம்பள உயர்வு கேட்பார்கள். சாலை கேட்பார்கள். தண்ணீர் கேட்பார்கள். மின்சாரம் கேட்பார்கள்.

 

ஆனால் அந்த நாள் தெருவில் இறங்கியது குழந்தைகள். அவர்களது கோரிக்கையும் வித்தியாசமானது. "எங்களுடன் விளையாடுங்கள்; உங்கள் மொபைலுடன் அல்ல!" என்று பதாகை தூக்கிக்கொண்டு நடந்தார்கள். இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்தது 7 வயது சிறுவன் Emil என்றால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.

 

சில குழந்தைகள், "நாங்கள் இங்கே இருக்கிறோம். ஆனால் நீங்கள் மொபைலைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்றும் எழுதிக்கொண்டு வந்திருந்தார்கள்.

 

செய்தியைப் படித்தபோது முதலில் சிரிப்புதான் வந்தது. ஜெர்மனியில் கூட இதற்காகவா போராட்டம்? பிறகு கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சிரிப்பு மெதுவாக மறைந்துவிடுகிறது. ஏனென்றால் அது ஜெர்மனியின் பிரச்சினை மட்டும் அல்ல. அது நம்முடைய வீட்டுக் கதையும் கூட.

 

ஒரு காலத்தில் வீட்டில் குழந்தைகள் அம்மா அப்பாவைத் தேடினார்கள். இப்போது சில வீடுகளில் குழந்தைகள் அம்மா அப்பாவின் முகத்தைக் காண்பதற்கே நேரம் தேட வேண்டியிருக்கிறது.

 

காலை எழுந்ததும் மொபைல். உணவு சாப்பிடும்போது மொபைல். பயணத்தில் மொபைல். இரவு தூங்குவதற்கு முன் மொபைல். சில நேரம் பார்த்தால் வீட்டில் நான்கு பேர் இருப்பார்கள். ஆனால் நான்கு பேரும் நான்கு உலகத்தில் இருப்பார்கள்.

 

ஒருவர் காணொளி பார்க்கிறார். ஒருவர் குறுஞ்செய்தி அனுப்புகிறார். ஒருவர் விளையாட்டு விளையாடுகிறார். மற்றொருவர் சமூக வலைத்தளத்தில் மூழ்கியிருக்கிறார்.

 

வீடு இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. ஆனால் உரையாடல் இல்லை.  ஒரு குழந்தைக்கு உண்மையில் என்ன வேண்டும்?

 

பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொம்மையா? புதிய மிதிவண்டியா? புதிய உடையா? இல்லை. அது அப்பாவிடம் ஒரு கதையைச் சொல்ல வேண்டும். அம்மாவுடன் ஐந்து நிமிடம் சிரித்துப் பேச வேண்டும். பள்ளியில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  அவ்வளவுதான்.

 

குழந்தைகளின் ஆசைகள் பெரியவை அல்ல. நாம் அவற்றைக் கவனிக்காததால்தான் அவை பெரியதாகத் தோன்றுகின்றன.

 

ஒரு சிறுவன் சொன்னதாக ஒரு வரி படித்தேன். "அப்பா, உங்கள் கையில் இருக்கும் மொபைலுடன் நான் போட்டி போட முடியவில்லை." இந்த ஒரு வரி போதும். குழந்தை தோற்றுப் போய்விட்டதாக ஒப்புக்கொள்கிறது.

 

அப்பாவை வெல்ல வந்தது இல்லை. அப்பாவின் கவனத்தில் ஒரு சிறிய இடம் கேட்டது. அதுவும் கிடைக்கவில்லை.

 

வாழ்க்கையில் ஒரு விசித்திரமான உண்மை இருக்கிறது. பணம் சம்பாதிக்காமல் இருந்தால் பிறகு சம்பாதிக்கலாம். வீடு கட்டாமல் இருந்தால் பிறகு கட்டலாம். வண்டி வாங்காமல் இருந்தால் பிறகு வாங்கலாம். ஆனால் குழந்தையின் பத்து வயதை பிறகு வாங்க முடியாது. அதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய கணக்கு.

 

இன்று உங்கள் அருகில் உட்கார்ந்து பேச விரும்பும் குழந்தை, பத்து ஆண்டுகள் கழித்து தனது உலகத்தில் பிஸியாகிவிடும். அப்போது நேரம் இருக்கும். ஆனால் அந்த வயது இருக்காது.

 

ஒரு நாளில் ஒரு மணி நேரம் கூட வேண்டாம். இருபது நிமிடம் போதும். மொபைலை ஓரமாக வைத்துவிட்டு, "இன்று என்ன நடந்தது?" என்று கேட்டுப் பாருங்கள். குழந்தையின் முகத்தில் வரும் ஒளி எந்த திரையிலும் கிடைக்காது.

 

இறுதியாக...

 

ஜெர்மனியில் குழந்தைகள் தெருவில் இறங்கி போராடியது உணவுக்காக அல்ல. புதிய பொம்மைக்காக அல்ல. பெற்றோரின் நேரத்திற்காக. குழந்தைகள் நம்மிடம் கேட்பது பணத்தை அல்ல. நேரத்தை.

 

அவர்கள் எதிர்பார்ப்பது பரிசுகளை அல்ல. நம் இருப்பை.

 

-        -  இரா. முனியசாமி

 


புகைப்படம் : ஜெர்மனியில் அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சிறுவர்களில் ஒரு பையனின் படம்.


November 11, 2022

பிறந்தநாள் வாழ்த்துகள் இலக்கியா



”நாளைக்கு எனக்கு பிறந்தநாள். என்ன பரிசு தரப்போகிறீர்கள் அப்பா?” என முதல்முறை கேட்டாள். ஆச்சர்யமாய் இருந்தது.


பிறந்தநாளுக்கு வழக்கமாய் ஆடை வாங்கித் தருவோம். பிறந்தநாளில் பள்ளி இருந்தால், பள்ளி. மாலை அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு சாக்லெட்டுகள் தருவாள்.

அவளின் அம்மாச்சி கடலைப்பருப்பு, தேங்காய், இனிப்பு வைத்து ஒரு இனிப்பு பொருள் செய்து தருவார்கள். சுவையாக இருக்கும். விடுமுறை நாளாய் இருந்தால், கடற்கரை செல்வோம். திரும்பி வரும் பொழுது பாரதி உணவகம் போன்ற உணவகத்தில் சாப்பிட்டு வீடு வந்து சேர்வோம். தனியாக பரிசு பொருள் என வாங்கித் தந்ததில்லை. முதல்முறை கேட்ட பொழுது கொஞ்சம் ஆச்சர்யமாய் இருந்தது.


இப்படித் தான் கடந்த 15 பிறந்தநாள்களும்! ஒரு கேக் வெட்டி கொண்டாடியதில்லை. அவளைப் பொறுத்தவரையில் பிறந்தநாள் என்பது எப்பொழுதும் விசேசமான நாளாகத் தான் நினைத்து வந்திருக்கிறாள். மூன்று மாதத்திற்கு முன்பே இன்னும் மூணு மாதம் தான் இருக்கிறது என சொல்ல ஆரம்பிப்பாள். இப்பொழுது வளர்ந்துவிட்டாள். அம்மாவுடன் சென்று ஆடை வாங்குவது என்பது மாறி, இந்தமுறை உடன் படிக்கும் தோழிகளோடு போய் ஆடை வாங்கி வந்தாள். நன்றாகத் தான் இருந்தது.

இதோ வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. இப்படித்தான் தொடர்ச்சியாய் பெய்த மழை நாட்களில் ஒன்றில் தான் இலக்கியா பிறந்தாள். ஏரிகள் நிரம்பி வழிந்தன. தொலைக்காட்சிகளில் மழையைப் பற்றி சொல்லி சொல்லி அலுத்துப் போயிருந்தார்கள்.

சாலைகளில் வெள்ளம் வழிந்தோடி கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் நீரின் நடனம் தான். எப்படி இலக்கியாவின் அம்மாவை மருத்துவமனையில் சேர்ப்பது என குழம்பி போயிருந்தேன்.

அம்பத்தூர் ரோட்டரி மருத்துவமனைக்கு தட்டுத் தடுமாறி கொண்டு போய் சேர்த்துவிட்டேன். சுகப்பிரவசம் என கடைசி வரை சொல்லி... திடீரென பனிக்குடம் உடைந்துவிட்டது. ஆகையால் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என சொன்னதும். வருத்தமாக இருந்தது. மருத்துவர் சொல்கிறாரே! என ஒத்துக்கொண்டேன். 11/11/2006 சனிக்கிழமை மதியம் 1.28க்கு பிறந்தாள்.

எப்பொழுதாவது இலக்கியாவிடம் விளையாட்டாய் சொல்வேன். “நீ ஒரு வயலண்டான குழந்தை. பிறக்கும் பொழுது அம்மாவின் நிறைய ரத்தம் பார்த்து தான் பிறந்தாய். அம்மாவை கவனமாய் பார்த்துக்கொள்”.

இருவருமே பொது வாழ்வில் இருக்கிறோம். ஒரு குழந்தை தான். அது பெண் குழந்தையோ, ஆண் குழந்தையோ ஒன்று போதும் என உறுதியாய் இருந்தோம். இலக்கியா பிறந்து, அதற்கு பிறகான இத்தனை வருடங்களில் இது குறித்து இரண்டாவது எண்ணம் எங்களுக்கு எப்பொழுதும் வந்ததேயில்லை. நாங்கள் இருவருமே வெளி வேலைகளுக்கு அலைந்து கொண்டிருந்த பொழுது, அவளை வளர்த்தது அவளின் அம்மாச்சி தான்.

இலக்கியா வளர வளர பெற்றோராகிய எங்கள் இருவரின் குடும்பத்து ஆட்களைப் போல மாறி மாறி முகச்சாடை வந்துகொண்டே இருந்தது. இப்பொழுது பெரும்பாலும் என் சாயலில் இருக்கிறாள். ஆனால் குணங்களை, பழக்க வழக்கங்களைப் பொறுத்தவரையில் இருவருடைய கலப்பு தான். இருவரிடம் இல்லாத தனித்துவமான குணங்களும் உண்டு. இருவருமே உணர்ச்சிப்பூர்வமானவர்கள். இலக்கியாவும் அப்படித்தான்.

சின்ன வயதில் இருந்தே பெரிய தொந்தரவுகள் தந்ததில்லை. குழந்தையாய் கட்டிலை விட்டு இறங்கும் பொழுது கூட பொறுப்பாய் இறங்குவாள். எங்கும் அடிப்பட்டு, யாரிடமும் சண்டையிட்டு பஞ்சாயத்துக்களை வீட்டுக்கு இழுத்து வந்ததில்லை. இது தான் வேண்டும் என அடம் பிடித்ததில்லை. பெரிதாய் செலவுகளும் வைத்ததில்லை. சிக்கனம் தான். அதை சிலமுறை கவனித்திருக்கிறேன். சொன்னால் கேட்டுக்கொள்கிற ஆள். உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? என சிறுவயதில் யாராவது கேட்டால், இருவரையுமே பிடிக்கும் என்பாள்.

ஒரு நாளும் அவளுடன் உட்கார்ந்து பாடங்களை சொல்லித் தந்ததில்லை. படிப்பில் முதல் பத்துக்குள் வந்துவிடுவாள். அவள் பள்ளியில் நடந்தவைகளை பற்றியோ, அவளின் தோழிகளைப் பற்றியோ ஏதாவது சொன்னால் மட்டும், கவனமாய் கேட்டுக்கொள்வேன். அவள் வளர்ந்துவிட்டாள். அவள் சொல்வதை கவனமாக கேள் என அவளின் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அவளுக்கு இன்னும் தன் பிள்ளை சிறுபிள்ளையாகவே தெரிகிறாள்.

பத்தாவது தேர்வு எழுதுவதற்கு முன்பு எந்த குரூப் படிப்பது என அவ்வப்பொழுது கேட்பாள். அறிவியல், கணக்குப் பாடங்களை கவனமாய் படி என சொல்லிக்கொண்டிருப்போம். தேர்வு தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, “அறிவியல் கஷ்டமா இருக்குதுப்பா!

அறிவியல் குரூப் வேண்டாமே! என குழப்பம் இல்லாமல் முடிவெடுத்து சொன்னது போல சொன்னாள். ”ஏன்?” என்றேன். ”அறிவியல் ஆசிரியர் புரிகிற மாதிரி சொல்லித் தரவில்லை. ஆகையால் எனக்கு மதிப்பெண்கள் குறைகிறது”. என்றாள்.
சொல்லியிருக்கலாமே! பள்ளியில் வந்து பேசியிருக்கலாம்! அல்லது மாற்று ஏற்பாடு செய்து இருக்கலாமே!” என பேசுகிற பொழுது காலம் கடந்துவிட்டிருந்தது. இப்பொழுது வணிகம் சம்பந்தப்பட்ட பிரிவு எடுத்துத்தான் படிக்கிறாள்.
தன் அம்மாவோடு பல போராட்டங்களுக்கு போயிருக்கிறாள். தோழர்களோடு எப்பொழுதும் பழகிக்கொண்டு இருக்கிறாள்.

அவள் வளர்கிறாள். அவள் விரும்பிய படிப்பை படிக்கட்டும். பிடித்த தொழிலை செய்யட்டும். எங்களைப் பொறுத்தவரையில் இந்த உலகம் இரண்டாகத் தான் இயங்குகிறது. ஒடுக்குபவர்கள். ஒடுக்கப்படுபவர்கள். எப்பொழுதும் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கவேண்டும். அவள் நிற்பாள். எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது.

குழந்தை வளர்ப்பில்.... கவிஞர் கலீல் ஜிப்ரானின் இந்த வரிகள் தான் அவ்வப்பொழுது நினைவுக்கு வரும்.

உங்கள் குழந்தைகள்
உங்களின் குழந்தைகள் அல்ல.
அவர்கள் காத்திருக்கும்
எதிர்கால வாழ்வின் மகன் மற்றும் மகள்கள்
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்.
ஆனால், அவர்கள்
உங்களில் இருந்து வரவில்லை.

அவர்களுக்கு நீங்கள்
உங்களுடைய அன்பைத் தரலாம்;
ஏனெனில் அவர்களுக்கென்று
அழகான சிந்தனைகள் உண்டு.
அவர்களின் உடலுக்கு மட்டுமே
நீங்கள் வீடமைக்கலாம்.
அவர்களின் ஆன்மாவிற்கு அல்ல
ஏனென்றால் அவர்களின் ஆன்மா
வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது
அந்த வீட்டை நீங்கள் கனவில் கூடச்
சென்றடைய முடியாது.

மீண்டும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துகள் இலக்கியா!

April 14, 2022

கேள்விகளால் ஆன இரவு


 'பேராசை இல்லாத விறகுவெட்டி' கதை சொல்லி

தூங்கவைக்க முயற்சித்தேன் என் மகளை.
எங்கிருந்துதான் வருமோ
இத்தனை கேள்விகள்!
அவர் ஏன் மரத்தை வெட்றாரு?
வெட்டினா வலிக்காதா?
'கோடாலி'னா என்னப்பா?
'ஆறு'னா சிக்ஸ் தானே?
'தங்கம்'னா நான் தானே?
நான் எப்படி கோடாலி ஆவேன்?
கோடாலி ரொம்ப வெயிட்டா இருக்கும்லனு
சொன்னேல்லே,
அப்படின்னா மூணு கோடாலியைத்
தூக்கி அவரு எப்படி வெட்டுவாரு?
எனக்கு ஒரு கோடாலி வாங்கித் தர்றாயா?
நாளைக்கு வாங்கித் தாரேன் மீனாட்சி...
நாளைக்கு எப்பப்பா வரும்?
நீ இன்னைக்குத் தூங்கி எழுந்து பாரேன்,
நாளைக்கு வந்திருக்கும்.
சரிப்பா... குட் நைட் பா.
ஐந்து விநாடிகள் இடைவெளியில்...
அப்பா, நான் தூங்கி எந்திரிக்கிறப்பெல்லாம்,
'இன்னைக்கு' ஏன்ப்பா 'நாளைக்கு' ஆகிருது?

- மூர்த்தி

February 7, 2018

சர்க்கஸ்!


”சனங்களைக் குஷிப்படுத்தி கைதட்டலைப் பெறத்தான் நீங்க சாகசம் செய்றீங்க, காசுக்காக அல்ல! அதனால ஆட்கள் நூற்றுக்கணக்கில் வந்தாலும் சரி, கொஞ்ச பேர் வந்தாலும் சரி, எப்போதும் அருமையாக செய்யனும்”


 #பெண் சர்க்கஸ் கலைஞர் தன் பிள்ளைகளிடம்!!

சிறுவயதில் சர்க்கஸ் பார்க்க அத்தனை ஆர்வமாக இருக்கும். சிங்கம், புலி, யானை, குதிரை என மிருகங்களைப் பார்க்கவே உற்சாகமாக சர்க்கஸ் போவோம்.

மிருகங்களை பயன்படுத்தக்கூடாது என்ற தடைக்கு பிறகு வண்ண வண்ண கிளிகளை, நாய்களை பயன்படுத்தினார்கள். இப்பொழுதும் அவைகளுக்கும் தடை போட்டுவிட்டார்கள். எதுவும் இல்லை.

சுதந்திரத்திற்காக சிந்திக்கிற, செயல்படுகிற நாம் விலங்களையும். பறவைகளையும் கூண்டுக்குள் அடைத்து வைத்து வித்தை காட்ட வைப்பது அபத்தம் தான்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, என் பெண்ணுக்காக சர்க்கஸ் போயிருந்தேன். பார்த்த சர்க்கஸை என் பெண் மறந்துவிட்டபடியால், சமீபத்தில் ஜம்போ சர்க்கஸ் (சென்னை மூர் மார்க்கெட் அருகே ) போயிருந்தோம்.

முழுக்க மனிதர்களின் சாகசம் தான். 40 அடி உயரத்தில் பறந்த படி சாகசம், நீளத்துணியினால் ஒரு ஜோடி அந்தரத்தில் ஸ்டைலான சாகசம் என ஐந்தாறு வகைகள் மிக அருமையாக இருந்தன.


ஜோக்கர்கள் எப்பொழுதும் போரடிக்காமல் பார்த்துகொள்வார்கள். இப்பொழுதோ ஜோக்கர்களே ரெம்பவும் போரடிக்கிறார்கள்.

மற்றபடி, சர்க்கஸ் கலைஞர்கள் வண்ண வண்ண உடைகளில் பளபளப்பாக வந்தாலும், சர்க்கஸ் கலை வளரவில்லை என்பது அதன் வடிவத்திலேயே தெரிகிறது. செய்த சாகசங்களே செய்யப்படுகின்றன. அதே டெண்ட் கொட்டாய் தான். புழுதியில் தான் சேர்கள் போட்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் காலரி போடப்பட்டிருக்கும். கொஞ்சம் வசதியாக இருக்கும்.

கலைஞர்கள் முகத்தில் மலர்ச்சி இல்லாமல், ஒருவித இறுக்கத்துடன் தான் இருக்கிறார்கள். கனமான வெயிட்டை தூக்கி சாகசம் செய்த ஒரு கறுப்பின கலைஞன் கைதட்டை கேட்டு கேட்டு வெயிட்டை தூக்கி சாகசம் செய்தார். மார்கழி மாதத்திலும் அத்தனை வியர்வை!

சமீபத்தில் ஒரு சீனப் பெண்களின் ஐந்து நிமிட சர்க்கஸ் பார்த்தேன். அத்தனை துல்லியம். முகத்தில் மகிழ்ச்சி. பார்க்கவே அத்தனை சந்தோசமாக இருந்தது!
ஒருவேளை அரசு ஏதும் மானியம் கொடுத்தால் இந்த கலையை இன்னும் கொஞ்ச காலம் காப்பாற்றலாம். அரசு செய்யுமா? எல்லா பொறுப்புகளையும் கழட்டிவிட நினைக்கும் இந்த அரசு செய்ய வாய்ப்பேயில்லை.

மற்றபடி, புதிது, புதிதாய் இந்த மண்ணில் பிறக்கும், விழிகள் விரித்து ஆச்சர்யமாய் பார்க்கும் குழந்தைகள் தான் சர்க்கஸ் கலையை இன்னும் வாழவைக்கிறவர்கள் என சொல்லலாம்!

January 1, 2018

வானவியல்!

15 ஆண்டுகளுக்கு முன்பு குமரவேல் என்றொரு நண்பர் இருந்தார்.
மொட்டை மாடியில் தூங்கும் பொழுது, வானத்தில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், எரி நட்சத்திரங்களைப் பற்றியெல்லாம் மிக சுவாரசியமாக விளக்குவார்.

கேட்டுவிட்டு அப்படியே கண்ணசந்தால்... நட்சத்திரங்களுக்கு மத்தியில் கனவில் விளையாடிக்கொண்டிருப்போம்.

பிறகு திருச்சூருக்கு வேலைக்கு போய் செட்டிலானவரை திரும்ப பார்க்கவேயில்லை.

மீண்டும் குமரவேலை நினைவுப்படுத்தியது சென்னை கோளரங்கம் தான்!

சமீபத்தில் குடும்பத்தோடு போயிருந்தோம். வானவியல் குறித்த காணொளி காட்சியை யாருக்கும் எதுவும் புரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக தயாரித்திருந்தார்கள். தயாரித்து வைத்திருந்த ஒரு மொழி பெயர்ப்பு கட்டுரையை கட கடவென ஒப்பித்தது ஒரு பெண்குரல்.

ஆந்திராவிலிருந்தும், தமிழ்நாட்டில் வெகு தொலைவிலிருந்தும் கூட பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக மாணவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். வருத்தமாக தான் இருந்தது!

வானவியல் சம்பந்தமாக படித்து என் பொண்ணுக்கு சொல்லலாம் என நினைக்கிறேன். வானவியல் குறித்த புத்தகங்கள் தமிழில் இருந்தால் தெரியப்படுத்துங்கள். எளிய ஆங்கிலத்தில் இருந்தாலும் சொல்லுங்கள்!

November 22, 2015

சிவப்பு பலூன் நண்பன்! – மிகச் சிறந்த படம்!



பாரிஸ். பள்ளி செல்லும் வழியில், ஒரு கம்பத்தில் சிக்கித் தவிக்கிறது ஒரு அழகான சிவப்பு பலூன். காப்பாற்றுகிறான்.

பலூனோடு பேருந்தில் ஏற அனுமதி மறுக்கிறார்கள்.  பலூனை கைவிட மனசே இல்லாமல், ஓடியே பள்ளியை அடைகிறான்.   மழையிலிருந்தும், பனியிலிருந்தும் பாதுகாத்து வீடு வந்துசேர்கிறான்.  அம்மாவும் வீட்டில் அனுமதிக்க மறுத்து, பலூனை வெளியே துரத்தி விடுகிறார்.

அந்த நிமிடத்திலிருந்து பலூனுக்கு ’உயிர்’ வந்துவிடுகிறது.  மறுநாள் பள்ளி கிளம்பும் பொழுது பலூனும் பள்ளித் தோழனை போல சேர்ந்து கிளம்புகிறது.  பேருந்தில் பையன் போகும் பொழுது, ஒரு பறவையை போல பின்தொடர்கிறது.  போகிற வழியில் ஒரு சிறுமி நீலவண்ண பலூனோடு செல்கிறாள்.  சிறிது நேரம் இரண்டு பலூன்களும் விளையாடுகிறது. பிறகு பையனோடு கிளம்புகிறது.

பையனோடு வகுப்பறைக்கும் வந்துவிடுகிறது. மாணவர்கள் குதூகலிக்கிறார்கள்.  நம் பள்ளி முதல்வர்கள் எல்லாம் மிகவும் கண்டிப்பானவர்கள் அல்லவா!  அந்த பையனை தனியாக ஒரு அறையில் பூட்டுகிறார்.  பலூன் கோபம் கொண்டு, முதல்வரை துரத்தி துரத்தி தொந்தரவு செய்கிறது. வேறு வழியில்லாமல் பையனை விடுவிக்கிறார்.

மகிழ்ச்சியுடன் இருவரும் வீடு வரும் வழியில், பகுதியில் வாழும் குறும்பு சிறுவர்கள் சிவப்பு பலூனை சிறைபிடிக்க விடாது துரத்துகிறார்கள்.  இறுதியில் பலூனை பிடித்து, உடைத்தும் விடுகிறார்கள்.  மெல்ல மெல்ல மடியும் பொழுது உற்ற நண்பன் இறப்பது போல மிகவும் வருந்துகிறோம்.

இதைக் கேள்விப்பட்டதும், அவனுக்கு ஆறுதல் சொல்ல பாரிஸில் உள்ள எல்லா பலூன்களும் கூட்டமாக பறந்து வந்து அந்த பையனிடம் சேர்கின்றன. குதூகலமடைகின்றான். அவனை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வானத்தில் உற்சாகமாய் பறக்கின்றன. 
***
1956ம் ஆண்டு.  பிரெஞ்சு மொழி.  35 நிமிடம்.  ஆஸ்கார் வென்றிருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்கவேண்டிய படம். யூ டியூப்பில் கிடைக்கிறது.
படத்தை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.


https://www.youtube.com/watch?v=e2Y1tRBOXfA