> குருத்து

April 11, 2014

பகத்சிங்கின் இறுதி நாள்...

புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்! 
 
லாகூர் மத்திய சிறைச்சாலையில் மற்ற நாட்களை போல சாதாரணமாகவே விடிந்தது 23, மார்ச், 1931. வழக்கம்போல காலை வேளையில் அரசியல் கைதிகள் தங்களது சிறைக்கூடங்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். சாதாரணமாக, அவர்கள் பகற்பொழுதுகளில் வெளியே இருப்பார்கள். சூரியன் மறைந்த பிறகு மீண்டும் சிறையறைகளில் அடைக்கப்படுவார்கள். அதனால் அன்று மாலை நான்கு மணிக்கே வார்டன் சரத் சிங் அவர்களிடம் வந்து சிறையறைகளுக்குத் திரும்பச் செல்லும்படி சொன்னபோது, ஆச்சரியப்பட்டார்கள்.

பிறகுதான், சிறைச்சாலையின் சவரத் தொழிலாளி பர்கத் சிறையின் ஒவ்வொரு அறையாகச் சென்று, அன்றிரவு பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு தூக்கிலிடப்படப்போவதை அடிக்குரலில் சொன்னார். 

கைதிகள் நிலைகுலைந்துபோனார்கள். பகத் சிங்கும் அவரது தோழர்களும் இறந்துவிடுவார்கள் என்று தெரிந்தாலும் அந்த நேரம் நெருங்கும்போது அதிர்ந்துபோனார்கள். சீப்பு, பேனா, கைக்கடிகாரம் போன்ற பகத் சிங்கின் பொருட்கள் எதையாவது கடத்திவர முடியுமா என்று பர்கத்திடம் கேட்டார்கள்.
ஒரு தேசத்தையே உத்வேகப்படுத்திய இளம் புரட்சியாளரின் நினைவின் பொருட்டு அவர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டது. அவர்களுக்கு அது வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாக்கப்படக்கூடிய பொருளாக இருக்கும். பர்கத், பகத் சிங்கின் சிறையறைக்குச் சென்று ஒரு சீப்புடனும் பேனாவுடனும் திரும்பினார். அதற்கு எல்லோரும் உரிமை கொண்டாடினார்கள். பிறகு, குலுக்கல் நடந்தது. 

எல்லோரும் மீண்டும் அமைதியானார்கள். தங்கள் அறைகளுக்கு வெளியே இருந்த பாதையிலிருந்து இப்போது அவர்களின் பார்வை விலகவில்லை. பகத் சிங் தூக்கு மேடைக்கு அந்த வழியாகப் போவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஒருமுறை அப்படி அந்த வழியாக பகத் சிங் மற்றும் தோழர்கள் தங்கள் சிறையறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, லாகூர் சதி வழக்கில் பகத் சிங்கும் அவரது தோழர்களும் நீதிமன்றத்தில் தங்களை ஏன் தற்காத்துக்கொள்ளவில்லை என்று பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பீம்சென் சச்சார் கேள்வி எழுப்பினார். 

“புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்” என்று பதிலளித்தார் பகத் சிங். “அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலமாகத்தான் வலுவடையும், நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல.”
 
ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?

பகத் சிங்கின் கடைசி விருப்பத்தைக் கேட்டறிய வேண்டும் என்கிற சாக்கில் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு பகத் சிங்கை அவரது வழக்கறிஞர் பிராணநாத் மேத்தா சந்தித்தார். சிறையறைக்குள், கூண்டில் அடைபட்ட சிங்கம்போல குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த பகத் சிங், வழக்கறிஞரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்று, தான் கேட்ட ‘தி ரெவெல்யுஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தாரா என்று அவரிடம் கேட்டார். 

அந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு நாளிதழில் வந்திருந்த மதிப்புரையால் மிகவும் கவரப்பட்டிருந்தார் பகத் சிங். அதனாலேயே புத்தகம் கேட்டு வழக்கறிஞருக்குத் தகவல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்துபோய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார், தனக்கு நேரம் அதிகமில்லை என்பதை உணர்ந்தவர்போல. நாட்டுக்கு எதாவது செய்தி உண்டா என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள், எதேச்சாதிகாரம் ஒழியட்டும். புரட்சி ஓங்கட்டும்.” 

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று மேத்தா கேட்டபோது, பகத் சிங் பதில் சொன்னார்: “மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும் போல.” ஏதாவது ஆசை இருக்கிறதா என்று மேத்தா கேட்டார். “ஆமாம், மீண்டும் இந்த தேசத்திலேயே பிறக்க வேண்டும். இந்த தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும்,” என்றிருக்கிறார். பிறகு, மேத்தாவிடம் தனது வழக்கில் நிறைய அக்கறை காட்டிய நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் நன்றி சொல்லும்படி பகத் சிங் சொல்லியிருக்கிறார். 

பகத் சிங்கை சந்தித்ததைத் தொடர்ந்து ராஜகுருவையும் மேத்தா சந்திக்கிறார். ராஜகுரு அவரிடம் சொல்லும் கடைசி வார்த்தைகள்: “நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம்.” 

சுகதேவ் ஒன்றும் சொல்லாமல் தனக்கு சில மாதங்களுக்கு முன்பு மேத்தா தந்த கேரம் போர்டை ஜெயிலரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மேத்தாவுக்கு நினைவுபடுத்துகிறார். 

மேத்தா சென்ற பிறகு அவர்களிடம் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 11 மணி நேரங்கள் முன்பே அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பதில் அதே நாள் ஏழு மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள். 

பகத் சிங் அந்த புத்தகத்தின் ஒரு சில பக்கங்களையே படித்து முடித்திருந்தார்.
“ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?” என்று கேட்டார்.
 
தூக்குமேடை நோக்கி... 
 
மூன்று புரட்சியாளர்களையும் தூக்குமேடைக்குத் தயார் செய்வதற்காக சிறை அறைகளிலிருந்து அழைத்துச் சென்றார்கள். பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு மூவரும் கைகளைக் கோத்துக்கொண்டு காவலாளிகள் பின்னால் நடந்தவாறு தங்களுக்கு மிகவும் பிடித்த சுதந்திரப் பாடலை பாடினார்கள்.
“நாங்கள் சுதந்திரமாக இருக்கும் ஒரு நாள் வரும்
இது எங்கள் மண்ணாக இருக்கும்
இது எங்கள் வானமாக இருக்கும்
தியாகிகளின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலங்களில்
மக்கள் கூடுவார்கள்
மண்ணுக்காக உயிர்நீத்த அவர்களுக்கு
மரியாதை செலுத்துவார்கள்.” 
 
மூன்று பேருடைய எடையும் தனித்தனியாகப் பார்க்கப்பட்டது. மூவருமே எடை கூடியிருந்தார்கள். அவர்களைக் குளிக்குமாறு சொன்னார்கள். பிறகு, அவர்களுக்குக் கறுப்பு உடைகள் அணிவிக்கப்பட்டன. அவர்கள் முகங்கள் மறைக்கப்படவில்லை. வாகே குருவிடம் வேண்டிக்கொள்ளுமாறு பகத் சிங்கின் காதுகளில் கிசுகிசுத்தார் சரத் சிங். 

“எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், ஏழைகளின் துயரங்களுக்குக் காரணமாக இருக்கிறார் என்று கடவுளைப் பல முறை ஏசியிருக்கிறேன். இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால், தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் இந்தக் கோழை என்று கடவுள் சொல்வார்” என்று புன்னகையோடு மறுத்துவிட்டார் பகத் சிங்.
தூக்குமேடை பழையது. ஆனால், பருமனாக இருந்த தூக்கிலிடுபவர் புதியவர். மூன்று பேரும் தனித் தனி மரப் பலகைகள் மீது ஏறி நின்றார்கள். அவர்களுக்குக் கீழ் ஒரு ஆழமான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. பகத் சிங் நடுவில் நின்றிருந்தார். 

அவர்களது கழுத்துகளில் சுற்றப்பட்டிருந்த தூக்குக் கயிறுகள் இறுக்கப்பட்டன. அவர்களது கைகளும் கால்களும் கட்டப்பட்டன. தூக்குக் கயிறுகளை அவர்கள் முத்தமிட்டார்கள். யாரை முதலில் தூக்கிலிட வேண்டும் என்று தூக்கிலிடுபவர் கேட்டார். சுகதேவ், தான் போக விரும்புவதாகச் சொன்னார். ஒவ்வொரு கயிறாக இழுத்து, பின்னர் அவர்களின் கால்களுக்குக் கீழிருந்த மரப் பலகைகளை உதைத்து விலக்கினார். 

சடலங்கள் தூக்குமேடையில் நெடுநேரத்துக்குத் தொங்கியபடியே இருந்தன. பிறகு, கீழிறக்கப்பட்டு ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டன. பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
புரட்சியால் மட்டுமே முடியும்! 
 
பகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக்கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதேபோல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை. 

சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்த பகத் சிங்குக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என்கிற தாகம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவர் ஜமீன்தார் பரம்பரையிலும் வந்தவர். சமூக வேறுபாடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனிதர்களாலேயே நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை அவர் வாசிப்பின் மூலம் அறிந்தார். காரல் மார்க்ஸ் அவருடைய குரு. 

பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரத்தில் என்ன அர்த்தம்தான் இருக்க முடியும்? ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் என்றால் சுதந்திரத்துக்குதான் என்ன அர்த்தம்? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசங்கள் எப்படி முடிவுக்கு வரும்? சோஷலிசத் தத்துவங்களைத் தெரிந்துகொள்வது அவருக்குப் புதிதாக இருந்தது. 

பொருளாதாரப் பிரச்சினைகளின் கருவறையிலிருந்துதானே அரசியல் வரலாறு, எண்ணங்களின் வரலாறு, மதங்களின் வரலாறு உள்பட எல்லாமே பிறக்கிறது? அரசியல் பாடம் என்பது அரசியல் உண்மைகளுக்கு முன்னால் இல்லாமல் பின்னால்தான் இருக்கிறது என்கிற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கருத்தை முதல்முறையாகத் தீவிரமாக உணர்ந்தார் பகத் சிங். அரசியல் நடவடிக்கைகள் என்பன ஒரே ஒரு காரணத்துக்கானவை அல்ல; அவை, பொருளாதார சக்திகளால் உற்பத்திசெய்யப்படுபவை என்று மார்க்ஸ் அவரை உணர வைத்தார். 

ஒரு முறை பகத் சிங், அவரது தாய் வித்யாவதி கௌருக்கு ஒரு கடிதம் எழுதினார்: 

“அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரமடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.” 

பிரிட்டிஷ் அரசின் முடிவு என்பது அதிகாரத் தலைமையின் மாற்றம் மட்டும்தான் என்றாகிவிட்டால் மக்களின் கஷ்டங்கள் அப்படியேதான் இருக்கும் என்று நம்பினார் பகத் சிங். 

இந்தியாவின் பழமை வாய்ந்த அமைப்பை முற்றிலுமாகத் தகர்க்கும் வரை எந்த முன்னேற்றமும் சாத்தியம் இல்லை. இந்த அமைப்புதான் முன்னேற்றத்துக்கான தடையாக இருக்கிறது. தத்துவஞானிகள் உலகைப் பல விதங்களில் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றுவதுதான் முக்கியம். அதைச் செய்வதற்குப் புரட்சியால் மட்டுமே முடியும். 

குல்தீப் நய்யார் எழுதிய ‘வித்தவுட் ஃபியர்: த லைஃப் அண்ட் ட்ரையல் ஆஃப் பகத் சிங்’ என்ற நூல் கவிதா முரளிதரனின் மொழிபெயர்ப்பில் ‘மதுரை பிரஸ்’ வெளியீடாக வரவிருக்கிறது. அந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

- தி இந்து , 23 மார்ச் 2014 

March 26, 2014

சட்டத்தை நீதிபதிகள் மீறலாம்! நாம் மீறக்கூடாதா?



சட்டத்தை நீதிபதிகள் மீறலாம்! பொதுமக்கள் மீறக்கூடாதா? – தமிழை வழக்காடும் மொழியாக்கும் வரை விடாது போராடுவோம்!

அன்பார்ந்த பொதுமக்களே!

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை உயர்நீதி மன்றத்திலும், உயர்நீதி மன்ற கிளை இருக்கும் மதுரையிலும் வழக்கறிஞர்கள் தமிழை வழக்காடும் மொழியாக்க தொடர் உண்ணாவிரதம், உள்ளிருப்பு போராட்டம் என பலவகைகளில் போராடி வருகிறார்கள்.  

தமிழை வழக்காடும் மொழியாக்கும் கோரிக்கை என்பது வழ்க்கறிஞர்களுக்கான கோரிக்கை என்பதை விட, பொதுமக்களான நமது கோரிக்கை என்பது தான் சரி! நம் வாழ்வில் குடும்பத்திலோ; சொந்தங்களில் மத்தியில் ஏற்படும் சச்சரவுகள் ஏற்படும் பொழுதோ;  ஒரு மாணவன் அரசின் தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகளுக்காகவோ, தங்களது கல்வி உரிமைக்காகவோ;  ஒரு தொழிலாளி முதலாளியால் வேலையிலிருந்து அநியாயமாக துரத்தப்பட்டாலோ; தொழிலாளிகள் தனது தொழிற்சங்க உரிமைகளுக்காகவோ,   நிலங்களை கையகப்படுத்தும் திட்டங்களினால் ஒரு விவசாயி தனியாகவோ, சக விவசாயிகளுடன் ஒன்று சேர்ந்து போராடும் பொழுது, காவல்துறையினரையும், அதை தொடர்ந்து நீதிமன்றத்தையோ சந்திக்கவேண்டியிருக்கிறது.

நீதிமன்ற நடவடிக்கைகளோ நமக்கு புரியாத ஒன்றாகவும், எப்பொழுதும் அந்நியமாகவே இருக்கிறது.  காரணம்,  கீழமை நீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்றங்களிலும் ஆங்கிலத்தை வழக்காடு மொழியாகவும் அலுவலக மொழியாகவும் பயன்படுத்துகிறார்கள். 

சுதந்திரம் பெற்றதாய் சொல்லப்படும் இந்த 67 ஆண்டுகளில் தனது குடிமக்களுக்கு இந்த அரசால் அடிப்படை கல்வி கூட கொடுக்கமுடியவில்லை. இதை மத்திய அரசே வெட்கி தலைகுனிந்து வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.

நம்மில் பெரும்பான்மையான மக்களுக்கு தமிழே எழுத படிக்க தெரியாமல் இருக்கும் பொழுது,  நம் சம்பந்தபட்ட வழக்குகளை வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் ஆங்கிலத்தில் உரையாடுவது அநீதி அல்லவா!

இந்த நிலைக்கு யார் காரணம்? நமது இந்திய அரசியலமைப்பு சட்டப்படியே அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆட்சி மொழியை உயர்நீதி மன்றத்தில் வழக்காடுவதற்கான மொழியாக்க முடியும்.  அதன்படி, இந்தியாவில் பல பத்தாண்டுகளாக ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், பீகார் மற்றும் மத்திய பிரதேசம் என நான்கு மாநிலங்களில் இந்தியை வழக்காடும் மொழியாக்கியுள்ளனர்.  இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் ஆட்சி மொழியான தமிழையும், மேற்கு வங்கத்தில் ஆட்சி மொழியான வங்காளத்தையும் வழக்காடும் மொழியாக்க கோரி போராடும் பொழுது, மத்திய அரசும், உச்சநீதி மன்றமும் கூட்டு சேர்ந்து கொண்டு தமிழை வழக்காடும் மொழியாக்க தடையை ஏற்படுத்தியிருக்கிறது.

உயர்நீதிமன்றத்தில் த்மிழை மத்திய அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது என்றால், கீழமை நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக்கமல் தடுத்து தடை போட்டிருப்பது சென்னை உயர்நீதிமன்றம்.

1956ம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது,  தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டப்படி கீழமை நீதிமன்றங்களில் ஆட்சி மொழியான தமிழை வழக்காடும் மொழியாக்க உத்தரவிட்டது. இருபது ஆண்டுகள் ஜவ்வாக இழுத்து, பல போராட்டங்களுக்கு பிறகு குற்றவியல் நீதிமன்றங்களில் 1976ம் ஆண்டும், உரிமையியல் நீதிமன்றங்களில் 1982ம் ஆண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

தமிழ் தெரியாத ஒன்றிரண்டு நீதிபதிகளுக்காக ‘இரக்கப்பட்டு, பெரும்பான்மை தமிழக மக்களின் உரிமைகளையும், உணர்வையும் காலில் மித்தித்து,  1994ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளும் ஒன்று கூடி, தீர்ப்புகளை ஆங்கிலத்திலும் எழுதலாம் என ஒரு தீர்மானத்தை இயற்றி, ஆட்சிமொழி சட்ட்த்தை குப்பையில் போட்டுவிட்டார்கள்.

ஆங்கிலத்தில் வழக்காடுபவன், தீர்ப்பு எழுதுபவன் அறிவாளிஎன்ற பொதுப்புத்திக்கேற்ப ஆங்கிலம் இன்று நீதிமன்றங்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் சகலத்தையும் ஆக்கிரமித்து இருக்கிறது.
இதன் விளைவாக அதிகம் பாதிக்கப்பட்ட்தும், பாதிக்கப்படுவதும் பொதுமக்களாகிய நாம் தான்! வழக்கு விவரங்கள் எதுவுமே தெரியாமல், மந்தைகளைப் போல நீதிமன்றங்களில் வழக்கறிஞர் சொல்வதையே உண்மை எனவும், நீதிபதிகள் தீர்ப்பு எழுதுவதற்கு கட்டுப்பட்டும் வருகிறோம்.

இன்றைக்கும் காலனிய அடிமைப் புத்திக் கொண்டவர்களும், மக்களின் அறியாமையை பயன்படுத்தி, கல்லா கட்டும் வழக்கறிஞர்களும் ஆங்கிலம் தான் சிறந்தது என வாதாடுகிறார்கள். 
சட்டத்தின் ஆட்சி சட்டத்தின் ஆட்சிஎன மூச்சுக்கு முன்னூறு முறை பேசும் மகா கணம் பொருந்திய நீதிபதிகள் தான் ஆட்சி மொழிச் சட்ட்த்த்தை ஒரு தீர்மானத்தின் மூலம் செல்லாகாசாக்கி வைத்திருக்கிறார்கள்.

பொதுமக்களாகிய  நாம் சட்ட்த்தை இம்மி மீறினாலும், காவல்துறையும், நீதித்துறையும் உடனே பொங்கி எழுந்து வழக்குகளை போட்டு, சிறையில் தள்ளுகிறார்கள். படித்த ‘மேன்மக்களாகியநீதிபதிகள் அதை மதிக்க மறுக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் சொல்லும் நீதி “இராஜா மட்டும் குசுவிடலாம்!”

இந்தி திணிப்புக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழகம் பிறகு மெல்ல மெல்ல அடங்கி போனதால், இன்று பள்ளிகளில் ஆங்கிலம், கோயில்களில் சமஸ்கிருதம் எங்கும் பிறமொழி ஆதிக்கம் என மாறிப்போய் தாய்த்தமிழை இழந்து நிற்கிறோம். இந்நிலையை மாற, நீதிமன்றங்களில் போராடிக்கொண்டிருக்கும் வழக்கறிஞர்களோடு கரம் கோர்ப்போம்!

மத்திய அரசே!

உ.பி. உள்ளிட்ட நான்கு மாநில உயர்நீதிமன்றங்களில் இந்திய வழக்காடும் மொழியாக்கியது போல தமிழ்நாடு உயர்நீதி மன்றங்களிலும் தமிழை வழக்காடும் மொழியாக்கு!

சென்னை உயர்நீதி மன்றமே!

தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்ட்த்தை முடக்கி கீழமை நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடும் மொழியாவதை தடுத்து நிறுத்தி உள்ள உயர்நீதி மன்ற தீர்மானத்தை உடனே திரும்ப பெறு!

உழைக்கும் மக்களே!


தமிழை வழக்காடும் மொழியாக்கும் வரை தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம்!

March 8, 2014

உழைக்கும் மகளிர் தினம் - அம்மா!

”என்னிடம் ஏதாவது நல்ல குணம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அவைகள் என் அம்மாவிடமிருந்து வந்தவை!”

- என் திருமண ஏற்புரையில்!

அம்மாவோடு உடன்பிறந்தவர்கள் நாலு சகோதரிகள். அம்மா தான் மூத்தவர். தனது கணவனுடன் போட்ட சண்டையில் அம்மாவின் அம்மா ஒரு நாள் மருந்தை குடித்துவிட்டு செத்துப்போய்விட்டார்.  அம்மாவும், நான்கு சகோதரிகளும் பெரியம்மா வீட்டில் தான் வளர்ந்தார்கள்.

நெசவாளி குடும்பம்.  அம்மாவுக்கு 12 வயது இருக்கும் பொழுது அம்மாவின் அப்பாவும் உடல்நலக்குறைவில் இறந்துவிட்டார். நெசவுத் தொழிலை நம்பி, உழைத்து வளர்ந்தது அம்மாவின் குடும்பம்.

அம்மாவிற்கு திருமணம் முடியும் பொழுது வயது 18.. அப்பாவும் நெசவு தொழிலாளி தான்.  இரண்டு ஆண்டுகளில் தன் அம்மா வேலை பார்த்த மில்லில் வாரிசு அடிப்படையில் அப்பாவிற்கு வேலை கிடைத்தது.

சொத்தில்லை. எதுவும் சேமிப்பும் இல்லை. உழைத்தால் சோறு என்பது தான் யதார்த்தம்.  10 ஆண்டுகளில் 5 பிள்ளைகள்.  மூன்று பெண் பிள்ளைகள். இரண்டு பையன்கள்.(நான் கடைக்குட்டி)அப்பாவிற்கு குடிப்பழக்கம் தொற்றிக்கொண்டது. வேலைப்பார்த்த சம்பளத்தை குடித்தே செலவழித்துவிடுவார்.

அம்மாவின், அக்காகளின் உழைப்பில் வளர்ந்தது எங்கள் குடும்பம்.  எவ்வளவு சிரமம் வந்தாலும் சொந்தங்கள் வீட்டில் போய் அம்மாவும் உதவி கேட்டதில்லை. எங்களையும் நிற்க வைத்தவரில்லை.  பல நெருங்கிய சொந்தங்கள் யாரென்றே பல காலம் நாங்கள் அறிந்ததில்லை.

அபூர்வமாய் விசேச வீட்டிற்கு போனால், முக ஜாடையை வைத்து “ஜானகி பிள்ளையா நீ” என அடையாளம் காண்பார்கள்.  அம்மாவின் அடையாளத்தில் அறிமுகமாவதில் எனக்கும் சந்தோசம்.

எவ்வளவோ சிரமங்கள். அம்மா ஒருநாளும் புலம்பியதில்லை.  அழுததில்லை. சொந்தங்களின் விசேச வீட்டிற்கு போனால், அம்மாவின் வருகைக்காக காத்திருப்பார்கள்.  உழைப்பாளிகளின் வீடுகள் என்பதால், வேலைகளுக்கு யாரையும் வைக்கமுடியாது.  சொந்தங்களிடம் வேலை வாங்குவது என்பது சிக்கலான விசயம்.  அம்மா பலரையும் உழைப்பில் ஈடுபடுத்துவதை லாவகமாக செய்வார்கள். அம்மாவின் சொல்லுக்கு கட்டுப்படுவார்கள்.

எப்பொழுதும் உழைப்பை முழு மனதுடன் நம்பினார். அப்பா லாட்டரி வாங்கினால், உழைக்காத காசு உடம்பில் ஒட்டாது என்பார்! அம்மா கண்டிப்பானவர். அம்மாவின் அதட்டலுக்கே எல்லோரும் அடங்கிப்போவோம்.  எங்களை சுதந்திரமாகவும் இருக்கவும் அனுமதித்தார். நாங்கள் அறியாதவாறு கண்காணிப்பில் வைத்துக்கொள்வார்.

அம்மாவின் பட்டறிவில் அருமையாக விவாதிப்பார்.  அம்மாவிற்கும் எனக்கும் பொதுவான பல விசயங்கள் குறித்தும், பல நல்ல விவாதங்கள் காரசாரமாய் நடந்திருக்கின்றன.  அதனாலேயே அம்மாவிற்கும் எனக்கும் புரிதல் அதிகம்.  அப்பாவின் இறுதி நாட்களில் அப்பாவை மருத்துவமனையில் அருகில் இருந்து கவனித்துக்கொண்டேன்.  அப்பா இறந்த பிறகு நான் சடங்குகள் செய்ய மறுத்து சொந்தங்களுடன் விவாதித்துக்கொண்டு இருந்த பொழுது, அம்மா “அவனை விட்டுருங்கப்பா!  அப்பா முடியாம இருந்த பொழுது பார்த்தான்ல!” என்றார்.

ஒரு கட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் தான் முடிப்பேன் என சொல்லும் பொழுது அம்மாவிற்கு உடன்பாடு இல்லையென்றாலும், என்னை, என் கொள்கைகளை புரிந்து கொண்டு சரி என ஏற்று, என் திருமணத்தை நடத்திவைத்தார்.

எனக்கு அம்மாவை பிடித்ததைப் போலவே, சர்க்கரைக்கும் அம்மாவை பிடித்துபோய்விட்டது!  20 வருடங்கள். அம்மாவை உலுக்கி எடுத்துவிட்டது!  எதற்கும் கலங்காத அவரை, சர்க்கரை கலங்கவைத்துவிட்டது!  இருப்பினும் தன் துன்பங்களை எதிர்த்து போரிட்டதை போலவே, தன் நோயை எதிர்த்தும் இன்றைக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்.

அம்மாவின் உழைப்பிலும், உறுதியிலும் ஐந்து பிள்ளைகளில் என் பங்கான இருபது சதவிகிதத்தை பெற்றால் கூட நான் பெரும் பலசாலியாக என் வாழ்நாள் முழுக்க கம்பீரமாய் வாழ்வேன்!

எல்லோருக்கும் உழைக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்!