> குருத்து: உழைக்கும் மகளிர் தினம் - அம்மா!

March 8, 2014

உழைக்கும் மகளிர் தினம் - அம்மா!

”என்னிடம் ஏதாவது நல்ல குணம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அவைகள் என் அம்மாவிடமிருந்து வந்தவை!”

- என் திருமண ஏற்புரையில்!

அம்மாவோடு உடன்பிறந்தவர்கள் நாலு சகோதரிகள். அம்மா தான் மூத்தவர். தனது கணவனுடன் போட்ட சண்டையில் அம்மாவின் அம்மா ஒரு நாள் மருந்தை குடித்துவிட்டு செத்துப்போய்விட்டார்.  அம்மாவும், நான்கு சகோதரிகளும் பெரியம்மா வீட்டில் தான் வளர்ந்தார்கள்.

நெசவாளி குடும்பம்.  அம்மாவுக்கு 12 வயது இருக்கும் பொழுது அம்மாவின் அப்பாவும் உடல்நலக்குறைவில் இறந்துவிட்டார். நெசவுத் தொழிலை நம்பி, உழைத்து வளர்ந்தது அம்மாவின் குடும்பம்.

அம்மாவிற்கு திருமணம் முடியும் பொழுது வயது 18.. அப்பாவும் நெசவு தொழிலாளி தான்.  இரண்டு ஆண்டுகளில் தன் அம்மா வேலை பார்த்த மில்லில் வாரிசு அடிப்படையில் அப்பாவிற்கு வேலை கிடைத்தது.

சொத்தில்லை. எதுவும் சேமிப்பும் இல்லை. உழைத்தால் சோறு என்பது தான் யதார்த்தம்.  10 ஆண்டுகளில் 5 பிள்ளைகள்.  மூன்று பெண் பிள்ளைகள். இரண்டு பையன்கள்.(நான் கடைக்குட்டி)அப்பாவிற்கு குடிப்பழக்கம் தொற்றிக்கொண்டது. வேலைப்பார்த்த சம்பளத்தை குடித்தே செலவழித்துவிடுவார்.

அம்மாவின், அக்காகளின் உழைப்பில் வளர்ந்தது எங்கள் குடும்பம்.  எவ்வளவு சிரமம் வந்தாலும் சொந்தங்கள் வீட்டில் போய் அம்மாவும் உதவி கேட்டதில்லை. எங்களையும் நிற்க வைத்தவரில்லை.  பல நெருங்கிய சொந்தங்கள் யாரென்றே பல காலம் நாங்கள் அறிந்ததில்லை.

அபூர்வமாய் விசேச வீட்டிற்கு போனால், முக ஜாடையை வைத்து “ஜானகி பிள்ளையா நீ” என அடையாளம் காண்பார்கள்.  அம்மாவின் அடையாளத்தில் அறிமுகமாவதில் எனக்கும் சந்தோசம்.

எவ்வளவோ சிரமங்கள். அம்மா ஒருநாளும் புலம்பியதில்லை.  அழுததில்லை. சொந்தங்களின் விசேச வீட்டிற்கு போனால், அம்மாவின் வருகைக்காக காத்திருப்பார்கள்.  உழைப்பாளிகளின் வீடுகள் என்பதால், வேலைகளுக்கு யாரையும் வைக்கமுடியாது.  சொந்தங்களிடம் வேலை வாங்குவது என்பது சிக்கலான விசயம்.  அம்மா பலரையும் உழைப்பில் ஈடுபடுத்துவதை லாவகமாக செய்வார்கள். அம்மாவின் சொல்லுக்கு கட்டுப்படுவார்கள்.

எப்பொழுதும் உழைப்பை முழு மனதுடன் நம்பினார். அப்பா லாட்டரி வாங்கினால், உழைக்காத காசு உடம்பில் ஒட்டாது என்பார்! அம்மா கண்டிப்பானவர். அம்மாவின் அதட்டலுக்கே எல்லோரும் அடங்கிப்போவோம்.  எங்களை சுதந்திரமாகவும் இருக்கவும் அனுமதித்தார். நாங்கள் அறியாதவாறு கண்காணிப்பில் வைத்துக்கொள்வார்.

அம்மாவின் பட்டறிவில் அருமையாக விவாதிப்பார்.  அம்மாவிற்கும் எனக்கும் பொதுவான பல விசயங்கள் குறித்தும், பல நல்ல விவாதங்கள் காரசாரமாய் நடந்திருக்கின்றன.  அதனாலேயே அம்மாவிற்கும் எனக்கும் புரிதல் அதிகம்.  அப்பாவின் இறுதி நாட்களில் அப்பாவை மருத்துவமனையில் அருகில் இருந்து கவனித்துக்கொண்டேன்.  அப்பா இறந்த பிறகு நான் சடங்குகள் செய்ய மறுத்து சொந்தங்களுடன் விவாதித்துக்கொண்டு இருந்த பொழுது, அம்மா “அவனை விட்டுருங்கப்பா!  அப்பா முடியாம இருந்த பொழுது பார்த்தான்ல!” என்றார்.

ஒரு கட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் தான் முடிப்பேன் என சொல்லும் பொழுது அம்மாவிற்கு உடன்பாடு இல்லையென்றாலும், என்னை, என் கொள்கைகளை புரிந்து கொண்டு சரி என ஏற்று, என் திருமணத்தை நடத்திவைத்தார்.

எனக்கு அம்மாவை பிடித்ததைப் போலவே, சர்க்கரைக்கும் அம்மாவை பிடித்துபோய்விட்டது!  20 வருடங்கள். அம்மாவை உலுக்கி எடுத்துவிட்டது!  எதற்கும் கலங்காத அவரை, சர்க்கரை கலங்கவைத்துவிட்டது!  இருப்பினும் தன் துன்பங்களை எதிர்த்து போரிட்டதை போலவே, தன் நோயை எதிர்த்தும் இன்றைக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்.

அம்மாவின் உழைப்பிலும், உறுதியிலும் ஐந்து பிள்ளைகளில் என் பங்கான இருபது சதவிகிதத்தை பெற்றால் கூட நான் பெரும் பலசாலியாக என் வாழ்நாள் முழுக்க கம்பீரமாய் வாழ்வேன்!

எல்லோருக்கும் உழைக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்!

0 பின்னூட்டங்கள்: