> குருத்து

February 8, 2023

பத்திரிக்கையாளருடன் ஒரு சந்திப்பு!

 

நிறைய செய்யலாம் என நினைத்து தான் உள்ளே வந்தேன். ஆனால் பத்திரிக்கையின் சூழல், நடைமுறை எல்லாம் அதற்கு சாத்தியமில்லை என உணர்த்திவிட்டது. அடக்கி வாசிக்கவேண்டும். வேலையை தக்க வைத்துக்கொள்ளலாம். அவ்வளவு தான்!”


*****

ரு நண்பரின் குடும்ப நிகழ்வில் கலந்துகொண்டேன். அங்கு ஒரு பத்திரிக்கையாளரும் குடும்ப சகிதம் வந்திருந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.

அவர் இப்பொழுது என்ன பத்திரிக்கையில் வேலை செய்கிறார் என்பதைச் சொன்னார். முதலில் வேலை செய்த பத்திரிக்கை பெயரையும் சொன்னார்.

”ஏன் அங்கிருந்து இங்கு மாறினீர்கள்? அங்குள்ள சூழ்நிலையை விட இந்த சூழ்நிலை சிக்கலாக இல்லையா!” என கேட்டதற்கு… ”அங்கு ஒரு குழுவாய் வேலை செய்துவந்தோம். ஒரு சமயத்தில் மொத்தமாய் மாறிய பொழுது, அவர்களோடு நானும் இந்த பத்திரிக்கைக்கு வந்துவிட்டேன்” என்றார்.

இரண்டு பத்திரிக்கையிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகம். அந்த சூழலில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருகிறார். அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவர் வேலை செய்த அனுபவம் எப்படிப்பட்டது என கேட்கும் பொழுது சில அம்சங்களைச் சொன்னார்.

“பத்திரிக்கையில் சில பிரிவுகள் இருக்கிறது அல்லவா?” நீங்கள் எந்தப் பிரிவில் வேலை செய்கிறீர்கள்?”

“பத்து ஆண்டுகளை கடந்துவிட்டதால்.. இப்பொழுது டெஸ்கில் இருக்கிறேன். அரசியல் செய்திகள் பிரிவில் வேலை செய்கிறேன்.”

” உங்கள் அனுபவத்தில் பார்ப்பனர்கள் தலித்துகளிடம் எப்படி பழகுவார்கள்?”

”நான் வேலை செய்த பத்திரிக்கைகளில், தலித்துகளை வேலைக்கு எடுத்தால் தானே! துவக்கத்திலேயே கழித்துக்கட்டிவிடுவார்கள்.”

”உங்கள் அனுபவம் எப்படி?”

“நேரடியாக சாதியை கேட்கமாட்டார்கள். நான் எந்த ஊரில் வாழ்ந்தேன். எந்த தெருவில் வாழ்ந்தேன் என்பது முதற்கொண்டு கேட்டு… நம் சாதியை கண்டுப்பிடிக்க பார்ப்பார்கள். தோளில் கைப்போட்டு பழகுவது போல நூல் இருக்கிறதா என பார்ப்பார்கள்.”

“எல்லா பார்ப்பனர்களும் அப்படி இருக்க மாட்டார்கள் தானே?”

“இத்தனை ஆண்டுகளில் என் அனுபவத்தில் பெரும்பாலான பார்ப்பனர்கள் அப்படித்தான் நடந்துகொண்டார்கள்.”

”இப்பொழுது உள்ள சூழ்நிலையில் மோடி கும்பலுக்கு ஆதரவான நிலையை பல பத்திரிக்கையாளர்கள் எடுத்திருக்கிறார்களே! செய்திகளை எப்படி வழங்குகிறார்கள்?”

“செய்திகளை மறைப்பதில்லை. எழுதுவார்கள். ஆனால், அதன் முனை மழுங்கடிக்கப்பட்டு இருக்கும். எதிராக எழுதமாட்டார்கள். அது செய்தால் போதும் என்று தான் மோடி கும்பல் எதிர்பார்க்கிறது. இவர்களும் கவனமாய் அதற்கேற்றபடி நடந்துகொள்கிறார்கள்”

“பத்திரிக்கையில் கட்டுரைகளை, செய்திகளை அனுமதிப்பது எப்படி?”

“ஒரு கட்டுரைக்காக/செய்திக்காக நிறைய உழைத்து எழுதியிருப்போம். இறுதி வடிவம் கொடுத்து பிரிண்டிங்குக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்கு போயிருப்போம். அடுத்தநாள் அந்த செய்தியோ/ கட்டுரையோ பத்திரிக்கையில் வராது. கேட்டால்… வேறு ஒரு முக்கிய செய்தி வந்துவிட்டது. அதனால் வெளியிடவில்லை என்பார்கள். அந்த செய்தியைப் படித்துப் பார்த்தால் மொக்கையாக இருக்கும்.”

“பேஸ்புக்கில் உங்கள் சொந்த பக்கத்தில் நீங்கள் நினைத்ததை எழுத முடியுமா? அதிலும் நிபந்தனைகள் விதிப்பார்களா?”

“வாய்ப்பேயில்லை. வேலைக்கு சேரும் பொழுதே, நமது பேஸ்புக் பக்கத்தின் முகவரி, டிவிட்டர் முகவரி என எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு தான் வேலையிலேயே சேர்க்கிறார்கள். தொடர்ந்து என்ன எழுதுகிறோம் என்பதையும் கண்காணிக்கிறார்கள்.”

“உங்களுக்கான பத்திரிக்கையாளர் சங்கம் உற்சாகமாக செயல்படுகிறதா?”

“சொல்லும்படி இல்லை. கவலைக்கிடம் தான்.”

”படித்தது வேறு துறை என்கிறீர்கள். பத்திரிக்கையாளர் துறையில் வந்ததற்காக சந்தோசப்படுகிறீர்களா?”

”நிறைய செய்யலாம் என நினைத்து தான் உள்ளே வந்தேன். ஆனால் பத்திரிக்கையின் சூழல், நடைமுறை எல்லாம் அதற்கு சாத்தியமில்லை என உணர்த்திவிட்டது. அடக்கி வாசிக்கவேண்டும். வேலையை தக்க வைத்துக்கொள்ளலாம். அவ்வளவு தான்!”

பத்திரிக்கையாளரை சந்தித்த விசயம் தொடர்பாக ஒரு மூத்த தோழரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, ”அந்த காலத்தில் இருந்து பத்திரிக்கை உலகம் இப்படித்தான் இருக்கிறது. தமிழகத்து சூழலில் கூட பெரிய மாற்றம் வராமல் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது என்பதைத் தான் இவர் சொல்வதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. குமுதத்தில் அதன் முதலாளி செட்டியார் சாதியை சார்ந்தவர் என்றாலும்.. நிர்வாகத்தை கையில் வைத்துக்கொண்டு… ஆசிரியராக ஒரு அய்யரை கூட அல்ல! குறிப்பாக அய்யங்காரை நியமித்துக்கொள்வார்கள். அய்யங்காரே பத்திரிக்கை முதலாளி என்றால்… சொல்லவே வேண்டாம். இன்னும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியிருப்பதைத் தான் இந்த சூழ்நிலை காட்டுகிறது” என்றார்.

January 24, 2023

மூன்றாம்பிறை - நடிகர் மம்முட்டியின் வாழ்க்கை அனுபவங்கள்


தன் வாழ்வில் எதிர்கொண்ட சில மனிதர்களை, சில சம்பவங்களை சொல்லி, அதன் மூலம் தான் என்ன கற்றுக்கொண்டேன், என்ன உணர்ந்தேன், சமூகம் எப்படியிருக்கிறது என்பதை எளிமையாக சொல்லி செல்கிறார் மம்முட்டி.


தன்னை தன் மூத்த மகனாக நினைத்து பேசிய எதைச்சையாய் சந்தித்த ஒரு தாயின் மனநிலையை புரிந்துகொண்டு தன் தாய், தந்தையின் மனநிலையை புரிந்துகொண்டு தன் தவறைத் திருத்திக்கொள்கிறார்.

ஒரு இரவில் வேகமாக சென்று கொண்டிருந்த பொழுது…மம்முட்டியை யாரென தெரியாமலேயே ஒரு முதியவர் பிரசவ வலியில் துடித்துக்கொண்டு இருக்கும் தன் பேத்தியை காப்பாற்ற உதவ கோருகிறார். மம்முட்டி உதவுகிறார். மருத்துவமனைக்குள் உள்ளே நுழையும் பொழுது… கசங்கிய இரண்டு ரூபாயை கையில் கொடுத்துவிட்டு செல்கிறார்.

காட்சியின் இயல்புக்காக உண்மையில் காடுகளில் வாழும் பழங்குடி மக்களை அழைத்து வந்து ஒரு விருந்து உண்ணும் காட்சியை படமாக்குகிறார்கள். அவர்களுக்கு திரைப்படம் என்றால் என்னவென்று தெரியாது. அவர்கள் படம் பார்த்ததில்லை. ஸ்டார்ட். கட். என்பதெல்லாம் அவர்களுக்கு புரியவில்லை. வைத்தால் சாப்பிடுகிறார்கள். இல்லையெனில் ”தீர்ந்துவிட்டதா” என கேள்வி கேட்கிறார்கள். மம்முட்டியின் அருகில் அமர்ந்திருந்த பழங்குடி சார்ந்தவர், சாப்பிட்டுக்கொண்டிருந்த மம்முட்டியின் இலையில் அவியல் இல்லையென பார்க்கிறார். கொஞ்சமும் யோசிக்காமல்… தன் இலையில் இருந்ததை அவருக்கு எடுத்து வைக்கிறார். சாதி, மதம், ஏற்றத்தாழ்வு என ஏகப்பட்ட கோளாறுகளுடன் வாழ்ந்துவரும் நம்மிடையே சாத்தியமா? என கேட்கிறார்.

பெரிய நடிகன் என்ற பந்தா இல்லாமல்... தன் எண்ணங்களை, உணர்வுகளை மலையாள மண்ணின் தன்மைக்கேற்றவாறு எளிமையாக பேசுகிறார். எதைச் சொன்னாலும், பொதுவாக குறை சொல்லாமல், அந்த தவறுக்கான பரிசீலனையை தன்னிலிருந்து துவங்கி எழுதியிருப்பது சிறப்பு.

பொதுவாக ஒரு துறையில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் தங்கள் அனுபவங்களை பொதுவெளியில் சொல்வது எப்பொழுதுமே குறைவு தான். அப்படி நல்லமுறையில் ஒரு படைப்பாக கொண்டு வந்துவிட்டால் அந்த புத்தகம் எப்பொழுதுமே சிறந்துவிளங்கும்.

பொதுவாக நடிகர்கள் இப்படி எழுதுவது குறைவு. தமிழில் விகடன் போன்ற பத்திரிக்கைகள் ஆசிரியர் குழுவில் இருப்பவரில் ஒருவர் நடிகர்களிடம் விவாதித்து அதனை செழுமைப்படுத்தி எழுதி வெளியிடுவார்கள். இந்த வடிவத்தில்…உள்ளடக்கத்திலும், எழுதிய வடிவத்திலும், படித்ததில் மிகவும் பிடித்தது நடிகர் பிரகாஷ்ராஜின் ”சொல்லாததும் உண்மை.”

மம்முட்டி 2002 காலக்கட்டத்தில் ஏதோ ஒரு வாரப் பத்திரிக்கைக்காக வாரம் வாரம் தொடர்ந்து எழுதியதை “காழ்ச்சப்பாடு” (Perspective) என்ற தலைப்பில் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார்கள். அதை தமிழில் கே.வி.ஷைலஜா அவர்கள் மலையாளத்திலிருந்து வந்த புத்தகம் என்கிற உணர்வு வராமல், தமிழிலேயே எழுதப்பட்டது போல மொழிபெயர்ப்பை சிறப்பாக செய்திருக்கிறார். ”மூன்றாம்பிறை” என அதற்கு ஒரு நல்ல தலைப்பையும் கொடுத்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தாராளமாய் சொல்லலாம்.

புத்தக காட்சியில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. இரண்டு மாலை வேளையில் படித்து முடித்துவிட்டேன். நீங்களும் படித்துப் பாருங்கள்.

ஆசிரியர் : மம்முட்டி
தமிழில் : கே.வி. ஷைலஜா
வெளியீடு : வம்சி புக்ஸ்
பக்கங்கள் : 128
விலை : ரூ. 150

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை



இப்பொழுதுள்ள பெரும்பாலான குழந்தைகள் கழுதைகளை பார்த்திருக்க வாய்ப்பேயில்லை! குதிரையின் இனங்களில் ஒன்றாக கழுதை இருக்கிறது. வெப்ப மண்டல பகுதிகளில் வாழ்கின்றன. சுமை தூக்குவதற்கு பயன்படுவதால்… மனிதர்களின் வாழ்வில் பல ஆண்டு காலம் உடன் பயணித்திருக்கிறது.


என்னுடைய சிறுவயதில் மதுரையின் வைகையில்… துணிகளை துவைக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் அழுக்குத் துணிகளை, துவைத்த துணிகளை தூக்கிச் செல்ல கழுதைகளை பயன்படுத்துவார்கள்.

கழுதையை ஒரு முக்கிய பாத்திரமாக வைத்து ”பஞ்ச கல்யாணி ” என்ற பெயரில் 1979ல் ஒரு படம் தமிழில் வெளிவந்தது. இப்பொழுதும் யூடியூப்பில் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் சில கடைகளில் கழுதைப் படத்தை வைத்திருப்பார்கள். ”என்னைப் பார் யோகம் வரும்” என எழுதி வைத்திருப்பார்கள். இப்பொழுது கழுதைகள் அருகி வருவதால், கடைகளில் அந்த கழுதைப் படங்களும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

1952ல் இந்தியாவில் இருந்த கழுதைகளின் எண்ணிக்கை 13 லட்சம் என்கிறார்கள். இப்பொழுது 1 லட்சத்திற்கும் கீழே குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் எண்ணிக்கை கடந்த ஆண்டு கணக்கின்படி 1428 என சுருங்கிவிட்டது. நமது வாழ்வில் துவைக்கும் மிஷின்கள் வந்து, அவரவர் துவைக்க துவங்கிய பிறகு … துவைக்கும் தொழிலும் நசிய துவங்கிவிட்டது. மெல்ல மெல்ல கழுதைகளும் காணாமல் போன துவங்கின. கழுதையைப் பார்த்து பல வருடங்களாயிற்று!

சமீபத்தில் ராஜஸ்தான் போயிருந்த பொழுது… அஜ்மீர் நகரத்தின் நெருக்கடியான தெருக்களில் கழுதைகள் கடந்து சென்றன. புகைப்படம் எடுப்பதற்குள் வேகமாக சென்றுவிட்டன. அங்கு செங்கல் சூளைகளில் செங்கலை எடுத்துச் செல்ல பயன்படுத்துகிறார்கள். ராஜஸ்தானில் மட்டும் 23000 கழுதைகள் இருப்பதாக பிபிசி தளம் தெரிவிக்கிறது.

ஆகையால், கழுதைக்கு அங்கு நல்ல மதிப்பு இருக்கிறது. சமீபத்தில் கழுதை வளர்ப்பவர்கள், மேய்ச்சலுக்கு விட்ட கழுதைகளை காணோம் என புகார் கொடுத்திருக்கிறார்கள். மொத்தம் 70 கழுதைகள். ஒரு கழுதையின் விலை ரூ. 20000. மொத்த மதிப்பு 14 லட்சம்.

போலீசார் புகாரை வழக்கம் போல கண்டுகொள்ளவில்லை. தொடர்ச்சியாய் போராட துவங்கி, விசயம் பெரிதாகிவிட்டது. பிரச்சனையை முடிப்பதற்காக… போலீசு தனது வழக்கமான பார்முலாவான எங்கோ ”கிடைத்த” 15 கழுதைகளை கொண்டு வந்து புகார் கொடுத்தவர்கள் முன்னால் நிறுத்தியிருக்கிறார்கள். தொலைத்தவர் வந்து… ”பிங்கு, பபுலு” என அழைத்திருக்கிறார். எந்த கழுதையும் சமிக்ஞையும் கொடுக்காததால்… இது எங்கள் கழுதையில்லை என போய்விட்டார்கள். இரும்பு கோடாரி கதை நினைவுக்கு வருகிறதா? 🙂

”கழுதை கெட்டால் குட்டிச்சுவர்!”

”வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்!”

”கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!”

- இப்படி நம் பேச்சு வழக்கில் கழுதைகள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.

அழிந்து வரும் கழுதைகளை காப்பாற்ற 2020ல் தமிழக அரசு கவனத்தில் கொண்டு சில முயற்சிகளை செய்யப்போவதாக ஒரு செய்திப் படித்தேன்.

உழைத்து தரும் மனிதர்களையே அரசுகள் கண்டு கொள்வதில்லை! கழுதைகளையா கண்டு கொள்ளப் போகிறார்கள்?

கழுதைகளைப் பற்றி உங்களுக்கு என்ன நினைவுகள் இருக்கின்றன?