March 22, 2010
"இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!" - பகத்சிங்!
23/03/1931- பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தோழர்கள் தூக்கிலிட்ட நாள் - அவர்களின் நினைவாக!
***
"முதலிலிருந்தே ஜெயதேவ் என்னைக் காட்டிலும் உடல் வலிமை பெற்றவர். ஆபத்துகளை எதிர்கொள்வதென்பது அவருக்கு மிகச் சாதாரண விஷயம்! அடிதடிச் சண்டைக்கு அவர் எப்போதுமே முன்னே நிற்பார். ஜெயதேவின் இச்சிறப்புக்களைக் கண்டே பகத்சிங், பிஸ்மில்லை விடுவிக்கும் 'ஆக்சனுக்கு'(Action) ஜெயதேவை அழைத்துச் செல்ல வேண்டுமென்று முடிவு செய்தார். ஒரு நாள் மத்தியானம் பகத்சிங் தன் முடிவைத் தெரிவித்தபோது, என் பலவீனமான உடலை வெறுத்தேன். கட்சியின் பணி செய்யத் தகுதியில்லாதவன் என நான் கருதப்பட்டதற்காக மிகவும் வருந்தினேன். அதனால் சற்று நேரமே உட்கார்ந்துவிட்டு தூக்கம் வருகிறதென்று சாக்குக் கூறி ஒரு பக்கமாகப் படுத்துக்கொண்டுவிட்டேன். நான் உறங்கவில்லை என்பதை பகத்சிங் அறிவார். அவர் கொஞ்ச நேரம் பக்கத்திலிருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்துவிட்டு, என் தோளை மெல்ல உலுக்கி, "சிவா" என்று கூப்பிட்டார்.
"என்ன?" நான் அவர் பக்கம் திரும்பிக் கேட்டேன்.
"ஒரு விஷயம் கேட்கவா?"
"கேளேன்!"
ஒரு நபரின் பெயர் பெரிதா? கட்சியின் வேலை பெரிதா?"
"கட்சி வேலை தான் பெரிது"
"கட்சி வேலை தடங்கலின்றி நடந்து கொண்டே இருக்க வேண்டும். நாம் கைக்கொள்ளும் "ஆக்சன்'கள் எல்லம் வெற்றியடைந்து கொண்டிருக்க வேண்டும். நம்மைப் பற்றிய செய்தி நாட்டு மக்களுக்குத் தடையின்றிக் கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும். இந்த சுதந்திரப் போராட்டத்திலே நாம் ஒவ்வொரு திருப்பத்திலும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்க வேண்டுமல்லவா? இதற்கான முதல் நிபந்தனை என்ன தெரியுமா?"
"வலிமையாகவும், விரிவாகவும் மக்களைத் திரட்டுவதுதான்!"
"மக்களைத் திரட்டுவதும், பிரச்சாரமும் முக்கியம். நாட்டு மக்கள் நமது துணிவையும், செயல்களையும் பாராட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் நம்முடன் நேரடித் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். நாமும் மக்களுக்கு இதுவரை நாம் குறிப்பிடும் சுதந்திரம் எவ்வாறு இருக்கப்போகிறது, வெள்ளையர்கள் வெளியேறிவிட்ட பிறகு ஏற்பட போகும் நமது அரசு எப்படி இருக்கும் என்கிற விஷயங்களை விளக்கிக் கூறவில்லை. நாம் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டி நம்முடைய லட்சியங்களை மக்கள் மத்தியிலே கொண்டு செல்லவேண்டும். காரணம், பொதுமக்களின் ஆதரவைப் பெறாமல் நாம் இதுவரை செய்து வந்ததைப் போல, வெள்ளை அதிகாரிகளையும், அவர்களின் ஏஜெண்டுகளையும், கொன்று குவிப்பதிலேயே இனியும் காலத்தைக் கடத்த முடியாது. நாம் இதுவரை மக்களைத் திரட்டுவதையும், பிரச்சாரத்தையும் அலட்சியப்படுத்தி "ஆக்சன்'களுக்கே முக்கியத்துவம் அளித்து வந்தோம். இச்செயல்முறையை நாம் விட்டுவிட வேண்டும். நான் உன்னையும், விஜயையும் மக்களைத் திரட்டவும், பிரச்சாரத்தை நிர்வகிக்கவும் விட்டுச்செல்ல விரும்புகிறேன்" என்று கூறி பகத்சிங் சற்று நிறுத்தி,
"நாமெல்லாம் படை வீரர்கள். படைவீரர்களுக்கு எல்லாவற்றையும் போர்க்களம் தான் விருப்பமானது. அதனாலேயே எல்லோருமே "ஆக்சன்'களுக்குப் போகத்துடிக்கிறார்கள். என்றாலும், நம் இயக்கத்தை முன்னிறுத்தி சிலராவது "ஆக்சன்'கள் மேலுள்ள மோகத்தை விட்டுவிட வேண்டியது தான்; சாதாரணமாக "ஆக்ஷன்'களில் பங்கெடுப்பவர்களையும், தூக்குமேடை ஏறுபவர்களையும் தான், புகழ் தேடி வருகிறது. அவர்கள் நிலை ஒரு பெரிய மாளிகையின் தலைவாசலில் பதிக்கபட்ட வைரம் போன்றது; ஆனால் அஸ்திவாரத்திற்குள் விழுந்து கிடக்கும் ஒரு சாதாரணக் கல்லுக்குள்ள முக்கியத்துவம் அந்த வைரத்திற்கில்லை"....
"வைரங்கள் மாளிகையின் எழிலை அதிகரிக்கலாம், பார்ப்பவர்களை வியப்பிலாழ்த்தலாம். ஆனால், அவை மாளிகையின் அஸ்திவாரம் ஆக முடியாது. பல நூறாண்டுகள் தமது தோள்கள் மேல் சுமந்திருக்கமுடியாது. இதுவரையிலும் நம் இயக்கம் வைரங்களைத் திரட்டியதே தவிர, அஸ்திவாரக் கற்களைச் சேர்த்து வைக்கவே இல்லை. அதனால் தான் நாம் இத்தனை மாபெரும் தியாகங்கள் புரிந்தும் மாளிகையைக் கட்டவும் ஆரம்பிக்கவில்லை. இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!"
பகத்சிங் மேலும் தொடர்ந்தார்: "தியாகமும், உயிர்ப்பலியும் இரண்டு விதமானவை. ஒன்று, குண்டடிப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் மரணத்தைத் தழுவுவது. இதில் கவர்ச்சி அதிகமிருந்தாலும், கஷ்டம் குறைவு தான்! இரண்டாவது, வாழ்க்கை பூராவும் மாளிகையைச் சுமந்து கொண்டிருப்பது. போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, நமக்கு எதிரான சூழ்நிலையில் நமது தோழர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டுப் போய்க் கொண்டிருக்கும் போது நாம் ஒரு சில தேறுதல் வார்த்தைகளுக்காகத் தவிக்கிறோம். அப்படிப்பட்ட நேரங்களிலே தட்டுத்தடுமாறாமல் தமது லட்சியப் பாதையை விட்டு செல்லாதவர்கள், மாளிகையின் சுமையால் அசைந்து கொடுக்காதவர்கள், பளுவுக்குப் பயந்து தோள்களைக் கீழே இறக்காதவர்கள், ஒளி மங்கிவிடக்கூடாதென்பதற்காகத் தம்மைத் தாமே எரித்துக்கொள்பவர்கள், தன்மையான பாதையிலே இருள் சூழ்ந்துகொள்ளக்கூடாதென்று தம்மைத் தாமே மெழுகுவர்த்தியைப் போல் கரைத்துக்கொள்பவர்கள், உயிர்த்தியாகம் புரிபவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லையா?"
- சிவவர்மா
விடுதலைப் பாதையில் பகத்சிங்.... புத்தகத்திலிருந்து... பக் 39 முதல் 41 வரை.
குறிப்பு : "ஆக்சன்" (Action) என்றால்... சிறையிலிருந்து யாரையாவது விடுவிப்பதையும், எந்த அதிகாரியையாவது கொல்வதையும், கொள்ளையடிப்பதையும், போலீசாரை எதிர்த்துப் போராடுவதையும் புரட்சியாளர் மொழியில் ""ஆக்சன்' என்பர்.
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
அரசின் நிர்பந்தமே மாவோயிஸ்டுகளின் வன்முறைக்கு காரணம்- அருந்ததி ராய்
http://vrinternationalists.wordpress.com/2010/04/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF/
Post a Comment