> குருத்து: சமையல்
Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

December 6, 2022

ஆரோக்கியமான கருவேப்பிலை குழம்பு


யூடியூப்பில் குழம்பு வகைகளைத் தேடும் பொழுது, மழைக்காலத்திற்கேற்ற குழம்பு என கனகா பாட்டி கருவேப்பிலை குழம்பு சொன்னார். செய்துப் பார்த்துவிடலாம்.


தேவையான பொருட்கள் : நல்லெண்ணெய். கொஞ்சம் வெந்தயம். கொஞ்சம் உளுந்தம் பருப்பு. கொஞ்சம் கடலைப் பருப்பு. கொஞ்சம் பெருங்காயம். காய்ஞ்ச மிளகாய், கொஞ்சம் மிளகு. ஒரு கைப்பிடி கருவேப்பிலை. கொஞ்சம் மஞ்சள். கொஞ்சம் புளி. அதை ஒரு கிண்ணத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைத்துவிடுங்கள். (மிளகும், காய்ஞ்ச மிளகாய்களும் போடுவதால், உரைப்பைக் கொஞ்ம் தணிய வைக்க.. கொஞ்சம் அரிசி சேர்த்துக்கொள்ள சொன்னார். நான் தவிர்த்துவிட்டேன்.)

செய்முறை : கொஞ்சம் வடைச் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக்கொள்ளவும். (மற்ற சமையல் எண்ணெய்களும் ஊற்றலாம். நல்லெண்ணெய் ரெம்ப நல்லது. ) வெந்தயம் போடவும். கொஞ்சம் வறுபட்டதும், காய்ஞ்ச மிளகாய் போடுங்கள். பிறகு உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, பெருங்காயம் எல்லாம் போட்டு வதக்கி முடித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, கையளவு கருவேப்பிலையை போடவும். வடைச் சட்டி சூட்டிலேயே வதக்கவும்.

இதில் சின்ன ட்விஸ்ட். இந்த மசாலா கூட்டணியில் கொஞ்சம் பூண்டு, வெங்காயம், தேங்காய் போட்டாலும் நன்றாகத் தானே இருக்கும். ஏன் கனகா பாட்டி சொல்லவில்லை என யோசித்தால்… கனகா பாட்டி வீட்டில் பூண்டும், வெங்காயமும் பயன்படுத்த மாட்டார்கள் என அவர் பேசிய பேச்சில் புரிந்துகொண்டேன். அதனால் என்ன! நாம் சேர்த்துக்கொள்வோம் என முடிவு செய்து… நாலு பல் பூண்டு, ஒரு பெரிய வெங்காயம், கொஞ்சம் தேங்காயும் சேர்த்துக்கொண்டேன்.

வதக்கியதை எடுத்து கொஞ்சம் ஆற வைத்து, ஜாரில் மாற்றி, மிக்சில் அரைத்து எடுத்து வைத்துக்கொண்டேன்.

இப்பொழுது மீண்டும் வடைச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து போட்டு தாளித்தேன். கருவேப்பிலை கொஞ்சம் போடலாம். (ஆனால் வேண்டாம். ஏற்கனவே கருவேப்பில்லை குழம்பு என்பதால் தவிர்க்க சொன்னார் கனகா பாட்டி.) ஊறவைத்த புளிக் கரைசலை ஊற்றினேன். கொஞ்ச நேரத்தில் கொதிக்க ஆரம்பித்ததும், கொஞ்சம் மஞ்சள் போட்டு, அரைத்த வைத்த மசாலாவை அதில் கவிழ்த்தேன். ஏற்கனவே வறுபட்ட மசால் என்பதால், ரெம்ப நேரம் கொதிக்கவிட தேவையில்லை. (பாட்டி கொஞ்சம் வெல்லம் சேர்த்துக்கொண்டார். நான் தவிர்த்துவிட்டேன்.)

பார்ப்பதற்கு பச்சை நிறத்திலான சுவையான கருவேப்பிலை குழம்பு தயார். கொஞ்சம் கொத்தமல்லி இருந்தால் தூவிக்கொள்ளலாம். கைவசம் இல்லாததால் போடமுடியவில்லை. பாட்டி கூட இதைச் சொல்லவில்லை. நான் தான் சொல்கிறேன். இதற்கு பொருத்தமாக சுட்ட அப்பளம் பொருத்தம் என்றார்.

சொல்லிக்கொடுத்த கனகா பாட்டிற்கு நன்றி.

November 12, 2022

Cook up a storm (2017)



விதவிதமாய் வண்ணமயமாய் சமைக்கிற படம்.

சீனாவின் ஹாங்காங். அங்கு வகை வகையான சுவையான உணவுகளுக்கு பிரபலமான பகுதி. அங்கு ஒரு உணவகத்தில் நாயகன் சமையல் கலை நிபுணராக (Chef) வேலை செய்கிறார். அவர் வேலை செய்யும் உணவகத்திற்கு எதிரே போட்டியாக ஒரு புதிய உணவகத்தை தொடங்குகிறார்கள். அங்கு கொரியாவைச் சேர்ந்த ஒரு சமையல் நிபுணர் பிரெஞ்ச் ஸ்டைலில் சமைப்பதில் தேர்ந்தவராக உள்ளவரை அங்கு வேலைக்கு நியமிக்கிறார்கள்.


எதிரெதிரே உணவகம் என்பதால், ஒரு நல்ல மீனை வாங்குவதில் இருந்து, வாகனங்களை நிறுத்துமிடம் என வேறு வேறு விசயங்களுக்காக மோதிக்கொள்கிறார்கள். அதே போல சமையலிலும்! ஒரு பிரபல சமையல் போட்டி நடக்கிறது.

இந்த தேர்ந்த இரு கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். இதில் இருவரும் இணையான மதிப்பெண்கள் பெற்றாலும், சமைப்பது, அதை ஈர்க்கும் விதமாக படைப்பது, மணம் என்பவற்றில் பிரெஞ்ச் ஸ்டைலில் சமைக்கும் கொரியாக்காரர் ஜெயிக்கிறார். அது தான் இப்பொழுது உணவு தொழிலுக்கு அவசியம் எனவும் நடுவர் சொல்கிறார். இனி அடுத்து இதைவிட மிகப்பெரிய போட்டியில் கலந்துகொள்ளவேண்டும். கொரியக்காரருக்கு உப்பு சுவை அறிவதில் அவருக்கு குறைபாடு ஏற்படுகிறது.

இடையில் சில சில பஞ்சாயத்துகளில், இருவரும் ஒன்றிணைகிறார்கள். அந்த போட்டியில் பரஸ்பரம் இணைந்து சமைத்து, வெற்றி பெறுகிறார்கள். நாயகனுக்கு சமையலில் பெரிய ஆளான தன் அப்பாவோடு குமரன் சன் ஆப் மகாலெட்சுமி போல ஒரு பழைய தகராறு இருக்கிறது. நாயகன் அந்த தகராறை தீர்த்தாரா? என்பதை வண்ணமயமாக சமைத்தும், உணர்வுபூர்வமாகவும் முடித்திருக்கிறார்கள்.
****

1841ல் ஹாங்காங் தீவை பிரிட்டன் கைப்பற்றியது. ஒப்பந்தப்படி 1997ல் சீனாவிற்கு கைமாற்றிவிட்டது. 2047 வரை ஹாங்காங்கில் முதலாளித்துவ கொள்கை தான் கடைப்பிடிக்கவேண்டும் என ஒப்பந்தவிதி சொல்கிறதாம்.

முதலாளித்துவ உலகம் நுகர்வு பண்பை தூண்டிக் கொண்டே இருக்கக்கூடியது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்ற சிந்தனை இருக்காது. லாபம் தான் அதன் பிரதான குறிக்கொள். ஆகையால், வசதி உள்ள வாடிக்கையாளர்களை எப்படி எப்படி விதவிதமாக நுகர வைக்கலாம். அவர்களிடமிருந்து எப்படி துட்டை கறக்கலாம் என்பதை விடாமல் சிந்தித்துக்கொண்டே இருக்கக்கூடியது.

அது போல சமையலிலும், புதிது புதிதாக வண்ணமயமாக சமைத்து உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். விதவிதமாய் சாப்பிடுவதற்காக ஊர் ஊராக பயணம் செய்கிற ஆட்களும் உலகத்தில் பெருகிகொண்டே வருகிறார்கள்.

அதனுடைய தொடர்ச்சியில் தான் தொலைக்காட்சிகளில் புதிது புதிதாக சமைக்கிற ஆட்கள் தோன்றினார்கள். விதவிதமாய் சமைத்தார்கள். சமைக்கிறார்கள். சமையல் கலையையும் நகைச்சுவையும் இணைந்து கொடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தமிழகத்தில் மிகப்பிரபலமானது.

அதன் தொடர்ச்சியில் தான் இந்தப் படமும் உருவாகியிருக்கிறது. படத்தை ஏனோ தானோ என எடுக்காமல், படத்தில் ஒவ்வொரு முறையும் சமைக்கும் பொழுது விசேச கவனம் கொடுத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

படம் பார்த்து முடிக்கும் பொழுது, எப்படியெல்லாம் விதவிதமாய் சமைக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள் என்ற எண்ணம் தான் மேலோங்குகிறது. படத்தில் நடித்த பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

படம் மாண்ட்ரின் மொழி. இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் நெட் பிளிக்சில் இருக்கிறது. வாய்ப்பு இருக்கிறவர்கள் பாருங்கள்.

August 2, 2018

காளான் தோசை!

உணவகத்தில் நுழையும் பொழுதே கவனித்தேன். ஏழு, எட்டு வகையான தோசைகளை வாசலிலேயே வெள்ளை போர்டில் எழுதி வைத்திருந்தார்கள். அதில் முதல் தோசை காளான் தோசை.

உள்ளே போய் பல யோசனைக்கு பிறகு,  காளான் தோசை என்றேன். போய் வந்து "காளான் தோசை இல்லை" என்றார் பரிமாறுகிறவர். முதல் தோசையாக எழுதி வைத்துவிட்டு, இல்லை என்கிறார்கள். சரி. வேறு என்ன தோசைகள்?

"மசால் தோசை, மஸ்ரூம் தோசை, பொடி தோசை" என்றார். நான் "மஸ்ரூம் தோசை" என்றேன். எதிரே சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் என்னைப் பார்த்து புன்முறுவல் செய்தார்.

இரண்டு நிமிடங்களில் மஸ்ரூம் தோசை தந்தார். இப்பொழுது அவர் முகத்தைப் கவனித்தேன். வடகிழக்கு மாநிலத்தைச் சார்ந்தவர். மாஸ்டரையும் பார்த்தேன். அவரும் வ.கி. மாநிலம் சார்ந்தவர் தான்!
காளான் தோசையை இனி மஸ்ரூம் தோசை என பழகிகொள்ளவேண்டியது தான்!

- தமிழ்_தெரியாத_பரிதாபங்கள்

கல்தோசை!

அவசரம் அவசரமாய் கிளம்புகிற வேளையில்
கல்தோசைதான் தோதாய் இருக்கிறது!
கல்தோசை சுடும்பொழுதெல்லாம்
அம்மா நினைவு வருகிறது!

சிறுவயதில் எப்பொழுதும்
கனமான கல்தோசை தான்
ஐந்து பிள்ளைகளுக்கும்!

எவ்வளவு அடம்பிடித்தாலும்
நைஸ் தோசை கிடைக்காது!
'அப்படி சுட்டா... மதியம் வரைக்கும் 

தோசை சுடவேண்டியது தான்" என்பார் கோபமாய்!
"அதெல்லாம் பிள்ளைகளுக்கு பசியடங்காது" என்பார்
பிறிதொரு சமயத்தில்!

அம்மாவிற்கு ஐந்து பிள்ளைகள்! 

எனக்கு ஒரு அம்மா தானே!
அம்மாவை உட்காரவைத்து
நைஸ் தோசைகள்
சுட்டுத்தர நிறைய ஆசை!
அம்மாதான் இல்லை!

February 23, 2015

அம்மா சுட்ட தோசை!



·       
  அம்மாவிற்கு பிடித்தது இட்லி.
ஐந்து குழந்தைகளுக்கு தோசை சுட்டால்
நேரம் என்ன ஆவது என்பார்.

·         பிடிவாதத்தால் தோசைகளும் கிடைக்கும்.
பல நேரங்களில் ‘அடி’தோசை தான் கிடைக்கும்.

·         வளர்ந்த பிறகு தான் தெரிந்தது.
கனமான கல்தோசையை தான்
தோசை என பலகாலம் ஏமாற்றியிருக்கிறார் என!

·         வளர்ந்த நாட்களில்
மெல்லிசா ஏன் சுட்டுத்தரவில்லை என்றால்,
’பசங்களுக்கு பசி அடங்காதுடா! என்பார் அன்புடன்.

·         உட்கார வைத்து விதவிதமாய் மணக்க மணக்க
சுட்டு பரிமாறலாம் என்றால்
காலம் இருவருக்கும் ஐநூறு கி.மீட்டர்
தூரம் வைத்திருக்கிறது.

·         எத்தனை விதமாய் சுட்டாலும்,
அம்மா தரும் கனமான தோசைக்கும், சாம்பருக்கும் தான்
சுவை அதிகம் இருக்கிறது.