> குருத்து: வங்கி
Showing posts with label வங்கி. Show all posts
Showing posts with label வங்கி. Show all posts

March 1, 2023

வங்கிகளை சூறையாடும் கார்ப்பரேட் காவி கும்பல்




பிஎஸ்.என்.எல், ரயில்வே, இந்திய ரிசர்வ் வங்கி, சிபிஐ,  தேர்தல் ஆணையம், ஜி.எஸ்.டி, அமுலாக்க துறை என கார்ப்பரேட் காவி கும்பல் நம் நாட்டில் நொறுக்கிய  பர்னிச்சர்களின் எண்ணிக்கை அதிகம்.  அந்த வரிசையில் வங்கிகளையும் இணைத்திருக்கிறார்கள். எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்க காத்திருக்கும் வெடிகுண்டு போல வங்கிகளின் நிலைமை இருக்கின்றன.

 

அரசுடைமையாகிய வங்கிகள்

 

1947-க்கு பிறகான காலங்களில் வங்கிகள் பெரும் நிலப்பிரபுக்கள், தரகு முதலாளிகள் உள்ளிட்ட தனியார்வசம் தான் இருந்தன. 1947 – 1969க்கும் இடைப்பட்ட காலத்தில் 559 வங்கிகள் திவாலாகியதால், அரசு சுதாரித்து மக்களின் வைப்புத்தொகையை காப்பாற்றுவதற்கும், இந்தியாவை தொழில்துறையில் முன்னேற்ற வேண்டுமென்றால், அரசு வங்கிகளின் அவசியத் தேவையை உணர்ந்து வங்கிகள் தேசியமயமாக்கபட்டன.

 

இந்தியாவில் உள்ள வங்கிகள்

 

இந்தியாவில் 96 அட்டவணையிட்ட வணிக வங்கிகள் உள்ளன.  இந்திய அரசு தன் வசம் பணயப் பிணைப்பு வைத்துள்ள 27 பொதுத்துறை வங்கிகள்.  31 தனியார் வங்கிகள். அவை அரசின் பணய பிணைப்பு பெறாதவை.  பொதுப்படையான பட்டியலில் உள்ளவை, பங்குச் சந்தையில் வணிகம் புரிய அதிகாரம் பெற்றவை. 38 அயல்நாட்டு வங்கிகளும் உ ள்ளன.  அனைத்தும் தனித்தனியாக செயல்பட்டாலும், ஒருங்கிணைந்த ஒரு வலையமைப்பாக 53,000 கிளைகள், 17,000 தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM) என இயங்கி வருகின்றன.

 

பொதுத்துறை வங்கிகள் வங்கித்தொழிலின் மொத்த சொத்துக்களில் 75% பங்கையும், தனியார் மற்றும் அயல் நாட்டு வங்கிகள் முறையே 18.2% மற்றும் 6.5% பங்குகளையும் வைத்துக்கொண்டுள்ளன.

 

வராக்கடன் என்றால் என்ன?

 

வங்கிகள் மக்களிடமிருந்து வைப்புத்தொகைகளை குறைவான வட்டிக்கு பெறுகின்றன. அதை தனிநபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ, தான் வாங்கியதை விட கூடுதல் வட்டிக்கு கொடுத்து வருமானத்தை ஈட்டுகின்றன.  அப்படி கடன்கள் வழங்கப்பட்டு பல்வேறு காரணங்களால்  தொழில் நொடித்துப்போனால், ஏமாற்றப்பட்ட  நிலையிலோ சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்தும், குறிப்பிட்ட காலத்திற்குள் வசூலிக்க முடியாத கடனைத் தான் வராக்கடன் என்கிறார்கள்.  இந்த வராக்கடனை கணக்கிட்டு நட்டக் கணக்காக எழுதிவிடுவார்கள்.

 

வங்கிகள் வெடிக்க காத்திருக்கின்றன

 

2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்பது வருடங்களில் வங்கிகளின் வராக்கடன் எக்குத்தப்பாக எகிறியிருக்கிறது.  காரணம் ஆட்சியில் இருக்கும் காவி கும்பல்கள் கார்ப்பரேட்டுகளுக்கு கடன் கொடுக்க  வங்கிகளுக்கு அழுத்தம் கொடுத்து கடன்களை வகை தொகையில்லாமல் வாங்கி, திரும்ப செலுத்தவில்லை.

 

நிதியமைச்சர் நிர்மலா கொடுத்த தகவலின் படியே 2014 -2015 ஆண்டு துவங்கி, 2021 – 2022 காலம் வரை 66.5 லட்சம் கோடிகளை செயல்படாத (NPA – Non performing assets) சொத்துக்களாக மாற்றியிருக்கிறார்கள்.  இதில் வராக்கடனாக 14.5 லட்சம் கோடிகள் அறிவிக்கப்பட்டு நட்ட கணக்கில் எழுதி ஊத்தி முடித்துவிட்டார்கள்.

 

வராக்கடனை வசூலிப்பதற்காக உருவாக்கிய அவசர சட்டத்தை கொண்டு  சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை பிழிந்தெடுத்து ஓரளவிற்கு திரும்ப பெற்றுவிட்டார்கள்.  ஆனால் பெரும்பாலான கடன்களை பெற்ற  அரசியல் செல்வாக்கு கொண்ட கார்ப்பரேட்டுகளை தொடக்கூட முடியவில்லை. அப்படி வசூலிக்க முயன்ற தனியார் வங்கியான ஐசிஐசிஐ கூட சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது என குறிப்பிடுகிறார்கள்.

 

வராக்கடன் எவ்வளவு இருக்கலாம்?

 

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2021 அறிக்கையின் படி,  மொத்தக் கடனுடன் ஒப்பிடும் பொழுது NPA விகிதம் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சுமார் 1%யாக இருக்கிறது.  அங்கு கடுமையான சட்டங்கள் அமுலில் இருப்பதால் இந்த நிலை. கனடாவில் 0.4% என சிறப்பாக இருக்கிறது.  தென்கொரியாவில்  (2020) 0.2% தான். சுவிட்சர்லாந்தில் 0.7% தான். ஆனால் சீனாவின் நிலைமை 1.7%. கொஞ்சம் அதிகம் தான்.  ஆனால் ரசியாவிலோ 8.3%.  அங்குள்ள ஆட்சியாளர்கள் செல்வந்தர்களுடன் கைகோர்த்து பொதுச் சொத்துக்களை சூறையாடுவதால் இந்த அபாயகரமான நிலை.  இந்தியாவின் நிலைமையும் ரசியாவோடு போட்டிப்போடுவதாக இருக்கிறது.  ஆனால் இந்த உண்மைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய பெரும்பாலான ஊடகங்களோ கள்ள மெளனம் சாதிக்கின்றன.

 

வங்கிகளின் இந்த அபாய நிலைக்கு ஆறு காரணங்களை முன்வைக்கிறார் பேராசிரியர் பிரபாத் பட்நாயக்.

 

11.குறுகிய கால கடன்களும், மூலதன கடன்களும்!

 

1990ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கிகள் பெரும்பாலும் தொழில் நிறுவனங்களுடைய நடப்பு தேவைகள், உற்பத்திக்கு சரக்குகள் கொள்முதல் வாங்குவதற்கான  கடனை மட்டும் தான் கொடுத்துக்கொண்டிருந்தன.   புதிய, பெரிய தொழில்கள் துவங்குவதற்கு தேவையான மூலதன கடன்களை வழங்குவதற்காகவே   ஐடிபிஐ (IDBI)  போன்ற வங்கிகள் இதற்காக துவங்கப்பட்டன.  தொழில்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இந்த கடன்களுக்கு மிக குறைவான வட்டி விகிதத்தை விதித்தார்கள்.

 

2. கடன் கொள்கைகளில் மாற்றம்

 

இந்தியாவில் புதிய தாராளமய பொருளாதார கொள்கைகள் அமுலாக்கப்பட்ட பொழுது வங்கி கொள்கைகளிலும் மாறுதல்களை உருவாக்கினார்கள்.  முதலீடுகளுக்காக துவங்கப்பட்ட ஐடிபிஐ (IDBI) போன்ற நிதி நிறுவனங்கள் வணிக வங்கிகளாக மாற்றம் பெற்றன.  இதனால் மூலதனத் தேவைகளுக்கான நீண்ட கால கடன்களைப் பெறுவதற்கு  சந்தையை நோக்கி திரும்பினார்கள். உடனடி லாபத்திற்கு உத்தரவாதமில்லாத இவ்வகை கடன்களுக்கு நிதி திரட்டுவதில் பல சிக்கல்கள் உருவாயின.  எனவே வேறு வழியில்லாமல் பொதுத்துறை வங்கிகளை நோக்கி திரும்பினார்கள்.  அரசியல் ரீதியான அழுத்தங்களும் இருந்ததால், வணிக வங்கிகள் முதலீட்டாளருக்கு நீண்டகால  கடன்களை கொடுக்க ஆரம்பித்தன.

 

3. எரிமலையின் விளிம்பில் வங்கிகள் :

 

வங்கிகள் மக்களிடமிருந்து வைப்புத்தொகைகள் பெறுகின்றன.  மக்கள் எப்பொழுது திருப்பிக் கேட்டாலும் பணத்தை உடனடியாக திரும்ப கொடுக்கவேண்டும் என்பதே விதிமுறை.  இப்படி மக்களிடமிருந்து பெறப்பட்ட நிதியில் இருந்து பெரிய பங்கை நீண்ட கால கடன்களுக்காக வழங்கும் பொழுது,  வங்கியின் பணப்புழக்கம் பெரிய அளவில் குறைகிறது. பணம் போட்ட மக்கள் பெரும்பாலோர் திரும்பி கேட்டால், வங்கி திவால் நிலைக்கு போய்விடும் அபாயம் இருக்கிறது.  நீண்ட காலக் கடன்கள் பெரும்பாலும் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்காகவே வழங்கப்படுகின்றன.  இந்த மூலதனங்களிலிருந்து லாபத்தை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகே லாபத்தை எதிர்பார்க்கமுடியும்.  அதுவரைக்கும் மக்களுக்கு திரும்ப கொடுக்க முடியாத நிலை.

 

வங்கிகளின் விதிமுறையின் படி..  வாங்கிய கடனைத் திரும்ப செலுத்த நீண்ட காலத்திற்கு இழுக்கும் பொழுது வராக்கடனாக மாற்றம் பெறுகின்றன.  இதன் மூலம் வங்கிகள் எந்நேரமும் பற்றி எரிந்து விழும் அபாயம் கொண்ட எரிமலையின் விளிம்பில் அமர்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.  இன்னும் வெடிக்காமல் இருப்பதற்கு காரணம், வங்கிகள் அரசின் வசம் இருப்பது தான். வைப்புத் தொகைகளுக்கு ஏதாவது ஆபத்து என்றால் அரசு காப்பாற்றும் என்ற மக்களின் நம்பிக்கை தான்.


 

4. கிழக்காசிய நிதிநெருக்கடி அனுபவம்:


 

உலகில் எங்கெல்லாம் தனியார் வங்கிகள் இதுபோல் சொத்துக்கும் – கடன் பொறுப்புகளுக்கும் இடையிலான விகிதாச்சார பிரச்சனைகளில் சிக்குகிறதோ அங்கெல்லாம் தீவிரமான நிதி நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்பது கடந்த கால வரலாறு.   கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட கிழக்காசிய நிதி நெருக்கடி இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.  உதாரணத்திற்கு தென்கொரிய வங்கிகள் வைப்புத்தொகையாக பெறப்பட்ட  வெளிநாட்டுப் பணத்தை எடுத்து உள் கட்டமைப்பு முதலீட்டுத் திட்டங்களுக்கு நீண்டகால கடன்களாக வழங்கினர்.  உடனடியாக மக்களுக்கு திருப்பிக்கொடுப்பதிலும் பிரச்சனை எழுந்தது. நாட்டிற்குத் தேவையான அந்நிய செலாவணியிலும் அடிவாங்கியது.  இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடி அந்நாட்டை தீவிரமாக பாதித்தது.

 

5. அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நெருக்கடி அனுபவம் :


 

2008ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிதி நெருக்கடியும் இதே போல தனியார் வங்கிகள் செய்த தவறுகளால் தான் நடந்தது.   இருபதாம் நூற்றாண்டின் பெரும் நிதி நெருக்கடியாக பார்க்கப்பட்ட 1933ம் ஆண்டு நிதி நெருக்கடியின் பொழுது அதனைச் சமாளிக்க அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் அரசாங்கம் ’கிளாஸ் ஸ்டீகல் சட்டம்” (Glass – Steagall Act) என்ற முக்கிய சட்டத்தை இயற்றியது.   அச்சட்டம் வணிக வங்கிகளை மூலதன முதலீட்டுத் திட்டங்களில் இருந்து முற்றிலும் விலகி இருக்கவேண்டும் என நிர்பந்தித்தது.  சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த இச்சட்டத்தை 1999ஆம் ஆண்டு பில் கிளிண்டன் விலக்கிக்கொண்டார்.  இதன் மூலம் வங்கிகள் முதலீட்டு திட்டங்களுக்கு கடன் கொடுப்பதன் மூலம் அதிக லாபத்தை அடைய முடியும் என நம்பினார்கள். பத்தாண்டுகள் முடிவதற்குள்ளேயே 2008ம் ஆண்டில் அமெரிக்கா ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. வங்கிகள் முதலீட்டுத் திட்டங்களை நோக்கி நகர்ந்ததால், மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியது.

 

6. உலக பொருளாதார வரலாறுகள் கூறும் படிப்பினைகள்

 


மோடி ஆட்சிக்கு வந்து கடந்த ஒன்பது ஆண்டுகளில் வங்கிகளில் இத்தனை கோளாறுகள் நடந்த பிறகும்  இன்னும் பொதுத்துறை வங்கிகள் தாக்குப்பிடித்து நிற்பதற்கு காரணம் நாட்டின் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே ஆகும்.  இந்த அபாய நிலையில், வங்கிகள் தனியார் வசமாக்கப்பட்டால் வங்கிகளின் மீதான அரசின் கட்டுப்பாடு விலகும்.  இதனால் வங்கிகளின் மீதான மக்களின் நம்பிக்கைகள் தகர்ந்துபோகும்.  வங்கிகளின் இருப்பு கேள்விக்குள்ளாகும்.   ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் எரிமலையின் உச்சியில் அமர்ந்து கொண்டிருக்கும் வங்கிகள் நொறுங்கிவிழும்.  வங்கிகள் வீழும் பொழுது. பணப் பதுக்கல்கள் அதிகமாகும். பொருளாதாரத்திலும் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தி நாட்டின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.

 

இந்தியாவில் உள்ள வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளுக்கு பின்னால், மேற்கண்ட அபாயகரமான போக்குகளும் உள்ளது.

 


எதிர்காலம், மக்களின் நலன் மீது அக்கறை கொள்ளாத கார்ப்பரேட் காவி கும்பல்

 


நாட்டின் எதிர்காலம் பற்றி எந்தவித கவலையுமே இல்லாமல் கார்ப்பரேட்டுகளும், அவர்களைப் பாதுகாக்குகின்ற காவி கும்பலும் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு அழுத்தம் கொடுத்து  கடனை வாங்கி திரும்ப செலுத்தாமல் பொதுச்சொத்தை சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள்.  பணமதிப்பிழப்பு கூட இந்த சதியின் அங்கம் தான் என இப்பொழுது துலக்கமாக அம்பலமாகியுள்ளது. மக்களிடம் இருக்கும் பணத்தை எல்லாம் வங்கியில் ஒருங்கிணைப்பதற்கு தான் “கருப்பு பணத்தை ஒழிக்கப் போகிறேன்” என பச்சையாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். அலைக்கழித்திருக்கிறார்கள்.

 


வங்கிகளில் நிலைமை இப்படி அபாயத்தில் இருக்கும் பொழுதும், நிலவரத்தின் தீவிரத்தன்மையைப் மறைத்துவிட்டு, ஒன்றிய அரசின் அமைச்சர்கள் வங்கிகளை தனியார்மயமாக்கப் போகிறோம் என அவ்வப்பொழுது பொதுவெளியில் அறிவிப்பது தேசத்துரோக நடவடிக்கையாகும். அது மட்டுமின்றி வங்கிகளில் திரண்டு கிடக்கும் 160 லட்சம் கோடி ரூபாயை அம்பானிக்கும், அதானிக்கும் படையல் வைக்க துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 


இலங்கை, பாகிஸ்தான், எகிப்து திவால் வரிசையில்.. இந்தியாவும்!

 


இலங்கையின் பல ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போர் அதன் விளைவாக  உலக அளவில் வாங்கிய கடன்களும்  நாட்டை திவாலாக்கியது. கழுத்தில் துண்டை இறுக்கி, சீனா இலங்கையின் துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு எழுதி வாங்கியிருக்கிறது. ஏகாதிபத்தியங்களும் புதிய புதிய அடிமை ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைக்கின்றன.

 


இதோ பாகிஸ்தானில் பொருளாதார பிரச்சனைகள் வெடித்து கிளம்புகின்றன. டாலருக்கு இணையான பாகிஸ்தான் பணத்தின் மதிப்பு ரூ. 230 என வீழ்ச்சியடைந்திருக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பு பிரச்சனையால் எரிபொருள் இறக்குமதி செய்யமுடியாமல், பன்னிரெண்டு மணி நேரம் மின்வெட்டால், இருண்டு கிடக்கிறது. மக்கள் கோதுமைக்காகவும், அரிசிக்காகவும் சண்டையிட்டு கொள்ளும் காணொளிகளை காண சகிக்கமுடியவில்லை.

 


அடுத்து எகிப்து திவால் வரிசையில் தயாராய் நிற்கிறது.  இந்த வரிசையில்  இந்தியாவையும் திவாலாக்குவதற்கான அத்தனை வேலைகளையும் கார்ப்பரேட்டுகளும், அவர்களை பாதுகாக்குகிற காவி கும்பலும் கண்ணும் கருத்துமாக செய்துவருகிறார்கள்.

 

 

கார்ப்பரேட் காவி கும்பலை இன்னும் அரசியல் அரங்கிலிருந்து விரட்டாமல் விட்டோம் என்றால், இந்தியாவை மிகப்பெரிய காரிருளில் மூழ்கடித்துவிடுவார்கள். பெரும்பாலான மக்களை அரிசிக்கும் பருப்புக்கும் அலையவிட்டு கொத்து கொத்தாய் சாவதற்கு விட்டுவிடுவார்கள்.  ஆனால் அத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகும் முன்னரே அனைவரும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் ஓரணியில் திரள்வோம்.  கீழிருந்து அதிகாரத்தை கட்டியமைக்கும் வகையில் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுப்போம்!

 


- தமிழ்ச்செல்வன்

 

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2023 மாத இதழில் வெளிவந்தது.

August 4, 2011

வங்கி ஊழியர்கள் போராட்டம்!

இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட தேசிய‌ வங்கிகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் இணைத்து, டாப் 10 வங்கிகள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற அளவில் மத்திய அரசு காய்கள் நகர்த்துகிறது. தனியார்மயப்படுத்துவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன.

இதனை எதிர்த்தும், வங்கி ஊழியர்களின் பற்றாக்குறை 3 லட்சம் அளவில் இருக்கிறது. வங்கிகளுக்கெல்லாம் போனால், வாடிக்கையாளர்களையே எல்லா வேலைகளையும் செய்ய வைக்கிறார்கள். ஒருமுறை இந்தியன் வங்கியில் இதற்காக சண்டையே போட்டிருக்கிறேன். ஆகவே, ஏற்கனவே இழுத்துமூடப்பட்ட‌ தேர்வு செய்து நியமனம் செய்யும்BSRB ஐ- மீண்டும் திற! என்ற கோரிக்கையும் உண்டு.

இப்படி பல்வேறு நீண்ட கால கோரிக்கைகளை 21 அம்ச திட்டத்தை வைத்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட‌ வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

கடந்த ஜூலை 7ந் தேதி ஸ்டிரைக் அறிவித்து, பின்பு, இன்றைக்கு தள்ளி வைத்தார்கள்.

காலையிலிருந்து பேசிய மூவர் என்னவென்று கோரிக்கை என்று தெரியாமலே, வங்கி ஸ்டிரைக்கை எதிர்த்து பேசுகிறார்கள். (இன்னைக்கு செக்‍‍ஐ போடமுடியலையாம்!) இது என்ன பண்பு? எனபுரியவில்லை. அவர்களின் நியாய கோரிக்கைகளை எடுத்து சொன்னபிறகு, ஆமோதிக்கிறார்கள்.

தொடர்புடைய சுட்டிகள் :



December 20, 2009

அமெரிக்கா - நடப்பு டிசம்பரில் இதுவரை 16 வங்கிகள் திவால்!

அமெரிக்காவில், சென்ன ஒரே வாரத்தில் ஏழு வங்கிகள் திவால் ஆகியுள்ளன. இதனையடுத்து, இவ்வாண்டில், இதுவரையிலான காலத்தில், அமெரிக்காவில் மொத்தம் 140 வங்கிகள் திவால் ஆகியுள்ளன். சென்ற 2008-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது (25 வங்கிகள்) இது ஐந்து மடங்கிற்கும் மேல் அதிகமாகும்.

நடப்பு டிசம்பர் மாதத்தில், இதுவரையில் 16 வங்கிகள் திவால் ஆகியுள்ளன. கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் வங்கிகள் திவால் ஆகியுள்ளன.

அமெரிக்காவில், லேமான் பிரதர்ஸ் திவால் ஆன பிறகு, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவடைந்து வந்தது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இதில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வேலை இழப்பு விகிதமும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் வங்கிகள் தொடர்ந்து திவால் ஆகிவருவது, சென்ற ஆண்டில், பொருளாதாரத்தில் ஏற்பட்ட கடும் பாதிப்பு இன்னும் குறையவில்லை என்பதை காட்டுகிறது.

நன்றி : தினத்தந்தி - 21/12/2009

November 26, 2009

தேசம் கடக்கும் முதலாளிகளும் தற்கொலையால் சாகும் விவசாயிகளும்!


பாட்ஷா படத்தில் ஒரு காட்சி!

மாணிக்கத்திற்கும் (ரஜினி) அப்பாவிற்கும் (விஜயகுமார்)க்கும் உரையாடல்.

"ஏதோ நீ என் பிள்ளைன்றதால தப்பிச்சே!"

பதறிப்போய், ரஜினி "அப்ப அனவர்?" என்பார்.

'அவ்வளவு தான்" என வார்த்தையை முடிக்கிற பொழுது....

அன்வரை சுற்றி நின்று வில்லனின் ஆட்கள் கொடூரமாக வாளால் வெட்டிக்கொண்டிருப்பார்கள்.

நிற்க!

***

அன்வரை போல அநாதையாய், இந்திய அரசால் கைவிடப்பட்டவர்களாய் இந்த நாட்டின் விவசாயிகள் கொத்து கொத்தாக தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். (மறைமுகமாக) கொலை செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்)

இந்நாட்டில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகள் அமுல்படுத்த துவங்கி 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிவிட்டன. கடந்து வந்த பாதையெங்கும் விவசாயிகளின் பிணங்கள். (அரசு தரப்பே 1 லட்சத்திற்கும் மேலாக தற்கொலை என ஒப்புக்கொண்டுள்ளது - 8 மணி நேரத்திற்கு 1 தற்கொலை).

இந்த ஆண்டில் நவம்பர் இன்றைய தேதி வரைக்கும் 892 விவசாயிகள் தற்கொலை. மராட்டியத்தின் விதர்பா மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 6 பேர் தற்கொலை (தினமணி - 27/11/2009 - பக். 10)

மரபணு மாற்ற விதைகள், உரங்களின் கட்டுபடியாகாத விலை, அரசு கடன், அதன் மீதான வட்டி, கந்து வட்டி கும்பலிடம் கடன், இப்படி பல மலைகளை கடந்து, விளைச்சல் விளைந்து, துன்பம் தொலையும் நினைக்கும் பொழுது, பருவநிலை மாற்றம், விளைச்சல் பல்லிளிப்பது, விளைச்சல் வந்தாலும், உரியவிலை கிடைக்காதது என்பதில் விவசாயிகள் துவண்டு போகிறார்கள்.

இதே இந்தியாவில், இன்னொரு புறம், தரகு முதலாளிகளின் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது. காரணம் - அரசு இவர்களை செல்லப்பிள்ளையாக நடத்துகிறது.

கடந்த பல ஆண்டுகளாக பெருமுதலாளிகள் வங்கிகளில் வாங்கிய கடன் 'வராக்கடன்' என தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் ஜப்தி, கைது நடவடிக்கைகளை தரகு முதலாளிகளுக்கு, பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிராக அரசு எடுக்க மறுக்கிறது.


39000 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி, 20000 கோடி ரூபாய் சுங்கவரி, கலால் வரி, சேவை வரி என நிலுவையாக உள்ளதை அரசு கறாராக வசூலிக்க மறுக்கிறது.

இது தவிர, (2007 - 08) கார்ப்பரேட் வரி, கலால் வரி, சுங்க வரி என பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வரியில் 2.3 லட்சம் கோடி அரசால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மொத்த வரியில் இதன் பங்கு 50%. மேலும், 42100 கோடி வருமான வரியை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறடு.

இப்படி அரசு செய்கிற தள்ளுபடிகள், மானியங்கள், சலுகைகள், தன் தொழிலில் வருகிற வருமானம், வெளிநாட்டு கடன் என எல்லாம் சேர்ந்து, கடந்த சில ஆண்டுகளில், தரகு முதலாளிகள் வெளிநாட்டு நிறுவனங்களை நாளும் வாங்கி குவித்து, தேசங்கடந்த தரகு முதலாளிகளாக பரிணாமம் பெற்றிருக்கிறார்கள்.

டாட்டா குழுமம் கோரஸ் உருக்காலையை (13000 கோடிக்கு) வாங்கியிருக்கிறது. இது தவிர, டாட்டா குழுமத்திற்கு இங்கிலாந்தில் மட்டும் 18 நிறுவனங்களை வாங்கியிருக்கிறார்கள். பிர்லா குழுமத்திற்கு ஆஸ்திரேலியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இரும்பு தாது சுரங்கங்கள் இருக்கின்றன.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, விவசாயிக்கு வட்டியை தள்ளுபடி செய்தாலோ, கடன் தள்ளுபடி செய்தாலோ இங்குள்ளவர்கள் முனகுகிறார்கள். அரசுக்கு இதே வேலையா போச்சு! என சலித்துக்கொள்கிறார்கள். அறியாமை கூட வன்முறை தான்.

தொடர்புடைய சுட்டிகள் :

2 ஆண்டில் 143 அமெரிக்க நிறுவனங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கி சாதனை - தமிழ் தேசம்

Tata steel gets corus boost, net at Rs. 12322 Cr. - Financial Express


One Farmer's sucide Every 30 minutes - பத்திரிக்கையாளர் சாய்நாத்

July 31, 2009

நிதி நெருக்கடி : அமெரிக்காவில் 7 மாதத்தில் 64 வங்கிகள் திவால்!

முன்குறிப்பு : நேற்று தான் 4 மாதத்தில் 32 வங்கிகள் என மே மாத இறுதி செய்தி பார்த்தோம். இப்பொழுது புதிய செய்தி 7 மாதத்தில் 64 வங்கிகள் திவால்.

***

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் கடந்த 7 மாதங்களில் 64 வங்கிகள் திவாலாகியுள்ளன. சராசரியாக மாதத்துக்கு 9 வங்கிகள் அங்கு மூடப்பட்டு வருகின்றன. பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா முழுமையாகச் சிக்கித் தவிப்பதையே இது காட்டுகிறது. இதிலிருந்து மீள அமெரிக்காவிற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க வங்கிகளில் கடந்த ஆண்டே நிதி நெருக்கடி தலை தூக்கத் தொடங்கிவிட்டது. 2008-ம் ஆண்டில் 25 வங்கிகள் திவலானதாக அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை இப்போதே இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது. ஜூலை மாதத்தில் மட்டும் 19 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை செக்யூரிட்டி வங்கியின் கிளைகளாகும்.

இந்த வங்கிகளின் பெரும்பாலனவைகளின் மொத்த சொத்து மதிப்புக்கும் வங்கியில் உள்ள வாடிக்காளையாளர்களின் பண இருப்புக்குமான இடைவெளி மிகவும் குறைந்துவிட்டது. இதனால் சொத்துக்களை விற்றால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியும் என்ற பரிதாப நிலைக்கு இந்த வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன. கிராம அளவில் செயல்படும் வாட்டர் போர்டு கிராம வங்கியும் நிதி நெருக்கடியின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை.

மிகப்பெரிய வங்கிகளான சிட்டி குரூப், கோல்ட்மேன் ஆகியவை மற்றுமே கடைசி காலாண்டு முடிவில் குறைந்த அளவு லாபத்துடன் செயல்பட்டுள்ளன. வட்டார அளவில் செயல்பட்டு வந்த வங்கிகள் அனைத்தும் நிதி நெருக்கடியில் சிக்கி நஷ்டத்தை சந்தித்துள்ளன. இதனால் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என்றும், பொருளாதார நிலைமை மேலும் மோசமாக என தெரிகிறது.

நன்றி : தினமணி (26.07.2009)

July 29, 2009

நான்கே மாதங்களில் 32 யு.எஸ். வங்கிகள் திவால்!



முன்குறிப்பு : அமெரிக்காவில் வங்கிகள் திவாலாவது தொடர்கதையாகி வருகிறது. மாதம் ஒரு முறை இந்தந்த வங்கிகள் திவால் என செய்திகள் அறிவிக்கின்றன. இது உண்மையான திவாலா! என்பதும் முதலாளித்துவ சமுதாயத்தில் கேள்விக்குறியது. இந்த பொருளாதார மந்தத்தை பயன்படுத்தி கொண்டு, உலக முதலாளிகளிலிருந்து உள்ளூர் முதலாளிகள் வரை பல வகைகளில் நிறைய லாபம் பார்த்திருக்கிறார்கள். தொழிலாளர்களை மந்தத்தைக் காரணம் காட்டி மிரட்டி பணிய வைக்கிறார்கள். இதற்கு பின்னால் உள்ள சதியை நாம் புரிந்து கொள்ள இந்த செய்திகளை தொகுத்துப் பார்க்க வேண்டும். முதலில் செய்திகளை தொகுப்போம். பிறகு விவாதிக்கலாம்.

நியூயார்க்: 2009 புத்தாண்டு தொடங்கிய நான்கே மாதங்களில் 32 வங்கிகள் வீழ்ச்சியடைந்துள்ளன. அதாவது மாதத்துக்கு 8 வங்கிகள் என்ற விகிதத்தில் வங்கிகள் திவால் அல்லது பெரும் நஷ்டம் காரணமாக இழுத்து மூடப்பட்டுள்ளன.

s1600-h/ameican_westbank.jpg">
இந்த திவாலான வங்கிகள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளது சில்வர்டன் வங்கி, சிட்டிஸன்ஸ் கம்யூனிட்டி வங்கி மற்றும் அமெரிக்கா வெஸ்ட் வங்கி. நேற்று முன்தினம்தான் இந்த வங்கிகள் மூடப்பட்டன.

சில்வர்டன் வங்கிக்கு 4.1 பில்லியன் டாலர் சொத்துக்களும், 3.3 பில்லியன் டாலர் வைப்புத்
தொகையும் உள்ளன. ஆனாலும் கடன் காரணமாக இந்த வங்கி திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

நாடு பொருளாதார மீட்சி நிலைக்கான அறிகுறி தெரியத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்காவின் நடுத்தர மற்றும் சிறிய வங்கிகள் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு என மூடப்பட்டு வருவது அந்நாட்டு நிதித்துறையை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

2008-ம் ஆண்டிலிருந்து இததுவரை 57 வங்கிகள் அமெரிக்காவில் மூடப்பட்டுள்ளன.

நன்றி : தட்ஸ்தமிழ்

http://thatstamil.oneindia.mobi/news/2009/05/03/98821.html

January 2, 2009

வங்கிகளின் ‘சேவை’த் தரம்?


பாரத ஸ்டேட் பாங்கு (SBI) வங்கிக்கு நீங்கள் போயிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் நிச்சயம் கோபபட்டிருப்பீர்கள் அல்லது புலம்பியாவது இருப்பீர்கள். உண்மையா? இல்லையா?

இந்தியாவின் முன்ணணி வங்கிகள் எல்லாம் வாடிக்கையாளர் சேவையில் எரிச்சல் தான் ஊட்டுகின்றன.


***

இந்த பதிவிற்கான தேவை - எஸ்.பி.ஐ. இன்றைக்கு தந்திருக்கிற நாளிதழ்களில் ஒரு விளம்பரம் தந்திருக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி தனது 11,111 வது வங்கி கிளையை அசாம் மாநிலத்தில் சோனாபூரில் துவக்கி வைக்க.. உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களை அழைத்து இருக்கிறது.

அந்த விளம்பரத்தில் “வாடிக்கையாளர்களுடன் எப்போதுமே நேசமிகு நெருக்கத்தை பராமரித்து வருகிறது” என வாசகம் வருகிறது.

எஸ்.பி.ஐ - அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் வழங்குவது என அரசினுடைய பல்வேறு தேவைகளை நிறைவேற்றுகிறது. மேலும், இந்தியாவில் நிறைய கிளைகள், நிறைய ஏடிஎம் மையங்கள் அதிகம் வைத்திருப்பது எஸ்.பி.ஐ தான். இதனால் எப்பொழுமே கூட்டம் நிரம்பி வழிகிறது.

பணம் கட்ட, டிடி எடுக்க என டோக்கன் வாங்கினால் குறைந்த பட்சம் நமக்கு முன்னால் 50
பேர் காத்திருக்கிறார்கள். விடுமுறை நாளுக்கு அடுத்த நாள் போனால்.... 100 க்கும் குறையாமல் காத்திருக்கிறார்கள். கிட்டதட்ட அந்த வேலையை முடிக்க அரை நாள் ஆகிவிடுகிறது. காத்திருக்கும் பொழுதில் அங்கு அமர்ந்திருக்கிற எல்லா வாடிக்கையாளர்களுமே புலம்பித்தள்ளுவார்கள். டென்சனுடன் அமர்ந்திருப்பார்கள்.

மிச்சம் பிடிக்கிறேன் பேர்வழி என தேவையான ஆட்களை நியமிக்காமல், வங்கிக்கு வருகிற எல்லா வாடிக்கையாளர்களையும் காக்க வைப்பது மக்களின் நேரத்தை மதிக்காத போக்குதான்.

எஸ்.பி.ஐ மட்டுமில்லை ஐ.சி.ஐசிஐ, இந்தியன் வங்கி, கனரா வங்கி என எல்லா வங்கிகளும் வாடிக்கையாளர்களை பல்வேறு வேலைகளில் அலைகழிக்கிறார்கள்.

எப்பொழுதும் கூட்டமாய் இருக்கிற எங்கள் பகுதியில் உள்ள இரண்டு இந்தியன் வங்கி-களில்
பியூனே நியமிக்காமல், வாடிக்கையாளர்களையே அங்கே போய் கையெழுத்து வாங்கி வாருங்கள் என பியூனாக பயன்படுத்திக்கொள்வார்கள். இதை அங்குள்ள வங்கி சீனியர் மேனேஜரிடமே இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறேன். நேரிடையாக பதில் சொல்லாமல், மழுப்பலாய் பதில் சொன்னார்.

இதுதவிர, வாடிக்கையாளர்களை படித்தவர்கள், படிக்காதவர்கள் என பார்த்து, இவர்கள் கையாளுகிற விதம் மக்களைவிட “தாம் மேம்பட்ட மக்கள்” என்கிற போக்கு தெரிகிறது. இதற்கு பல்வேறு உதாரணங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

சமகால நிலைமை என்னவென்றால், இந்திய அரசு பல வழிகளில் நிதிமூலதன கும்பல்களுக்காக வங்கி நடவடிக்கைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது.

உதாரணமாய், வருங்கால வைப்பு நிதி பணத்தை எஸ்.பி.ஐ. வங்கி தான் பாரமரித்து வந்தது. பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும், அரசு அதை கண்டுகொள்ளாமல், பங்குச்சந்தை வீழ்ச்சியை சரி செய்கிறேன் என்ற பெயரில், வைப்புநிதியை கையாள ஐசிஐசிஐ, ஹச்.எஸ்.பி.சி, ரிலையன்ஸ் கேப்பிடல் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் பிரித்து கொடுத்தது.

இந்த போக்கு தொடரும் பட்சத்தில்... ஒருநாள் அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் போல தேசிய வங்கிகளும் மற்ற வங்கிகளும், திவால் நோட்டீஸ் கொடுக்கும் நிலை வந்தாலும் வரலாம்.

மக்கள் தான் மகத்தானவர்கள். மக்களோடு ஐக்கியப்பட்டு அரசு செய்யும் தில்லுமுல்லுகளை மக்களிடம் அம்பலப்படுத்தி போராட்டங்களை கட்டியமைத்தால் மட்டுமே இந்த நிலை வராமல் தடுக்க முடியும். இல்லையெனில், இந்த வங்கி ஊழியர்கள் தனிமைப்பட்டு வேலை இழந்து தெருவில் நிற்கும் காலம் வெகுதூரமில்லை.