> குருத்து: குற்றாலம் - அருவிகளின் கொண்டாட்டம்

June 19, 2026

குற்றாலம் - அருவிகளின் கொண்டாட்டம்

 


வருடத்திற்கு ஒருமுறை சீசனுக்கு குற்றாலத்திற்கு போய்விடுவதுண்டு.  மதுரையில் இருந்து அண்ணன் வீடு சொந்தங்களுடன், ஒரு வேன் பிடித்து, சமைப்பதற்கான ஏற்பாடுகளுடன் வந்துவிடுவார்.  நாங்கள் சென்னையில் இருந்து நேரடியாக தென்காசி சென்று குற்றாலத்திற்கு போய்விடுவதுண்டு. மூன்று நாட்கள் வழக்கமாய் இருப்பது வழக்கம்.

 

இரண்டு மாதங்களுக்கு முன்பு டிக்கெட் புக் செய்தால் தான் கிடைக்கும். ஆனால் குற்றாலம் என்பது அதன் சீசனைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். திடீரென நிறைய தண்ணீர் விழுந்து, குளிக்கவிடாமல் செய்யும்.  திடீரென தண்ணீர் குறைவாக விழுந்து சொதப்பும். 

 

கடந்த இருபது வருடங்களில், குற்றாலத்தில் தண்ணீர் குறைவாக விழுந்து, போட்ட டிக்கெட்டை ரத்து செய்ய மனமில்லாமல், என்னுடைய குடும்பம் மட்டும் மூன்று முறை கொடைக்கானல் போய் வந்ததுண்டு.

 

சின்ன சின்ன குழப்பங்கள் இருந்தாலும்… ஆண்டு தோறும் குற்றாலாம் செல்வது இன்னும் தொடர்கிறது. அருவியின் ஆசிர்வாதம் இல்லாமல் அந்த ஆண்டு நிறைவடையாது.

 

குற்றாலம் செல்வதால் ஒரு உறவினர் தெரிவித்தார்.  அவருக்கு சில ஆலோசனைகள் தெரிவித்தேன். உங்களுக்கும் பயன்பட்டால் நலம்.

 

***

 

பொதுவாக சனி, ஞாயிறுகளில் விடுமுறை என்பதால், மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். அதனால் தான் வழக்கமாய் வியாழன், வெள்ளி, சனி என திட்டமிடுகிறோம். அதுவும் பள்ளி, வேலை – விடுப்பு என நெருகடி இருப்பதால் இப்படி. முன்பெல்லாம் திங்கள்- புதன் என்றெல்லாம் போயிருக்கிறோம்.

 

ஆகையால் நீங்களும் சனி, ஞாயிறு என அங்கு போகவேண்டாம். வரிசை எல்லா அருவிகளிலும் இருக்கும். ஆகையால் திங்கள், செவ்வாய், புதன் என்கிற அளவில் திட்டமிடுவது நல்லது. ரயில் டிக்கெட்டும் கொஞ்சம் எளிதாக கிடைக்கும்.

 

இந்த பயணத்தை மூன்று நாட்கள் திட்டமிடுங்கள். இரண்டு நாள் போதுமானதாக இருக்காது.  போய் வந்த பிறகு இரண்டு, மூன்று நாட்கள் உடல் கடுமையாக வலிக்கும்.

 

இப்பொழுது முதன்மை அருவியில் கொஞ்சம் கட்டுமான வேலைகள் நடைபெறுவதால், அங்கு கொஞ்சம் கூடுதல் தண்ணீர் விழுந்தால் அனுமதிப்பதில்லை என செய்தியில் கேள்விபட்டேன். ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி - அருவிகளில் குளிக்கலாம். 

 


இரண்டாம் நாள் ஒரு காரை எடுத்துக்கொண்டு, குற்றாலத்தில் இருந்து 45 கிமீ தள்ளி இருக்கும், வற்றாத ஜீவ ஆறான தாமிரபணியில் குளியுங்கள்.  அங்கு இருக்கும் அகத்தியர் அருவியில் எப்பொழுதும் தண்ணீர் விழும். அங்கு அருமையாய் குளிக்கலாம்.  நாங்கள் இத்தனை ஆண்டுகள் போனதில்,  ஒரு வருடம் விட்டு ஒரு வருடமாவது அங்கு சென்று வந்திருக்கிறோம்.  இங்கு போய் வந்தாலே மாலையாகிவிடும்.

 


மூன்றாம் நாள் பாலருவி.  குற்றாலம்  தென்காசி மாவட்டம் என்பதால், தமிழகத்தின் எல்லை மாவட்டம் இது.   அதிகப்பட்சம் 30 கிமீ . கேரளாவின் கொல்லம் மாவட்டத்திற்குள் நுழைந்துவிடலாம்.    அது ஒரு நல்ல மரங்கள் அடங்கிய காட்டுப்பகுதி.  உள்ளே ஒரு கிமீ நுழைந்ததும், அருவிக்கான வண்டிகள் நமக்காக காத்திருக்கும்.  கொஞ்சம் காத்திருந்து, (வார நாட்களில் அங்கும் கூட்டம் இருக்காது) டிக்கெட் எடுத்து, அவர்களே அருவிக்கு அருகில் கொண்டு போய்விட்டுவிடுவார்கள்.  ஜூன்மாத துவக்கத்தில் இருந்தே கேரளாவில் மழை துவங்குவதால், அங்கு நிச்சயம் அருவியில் நீர் விழும். காலையில் விரைவாக வந்து சேர்ந்தால்,    அங்கு அருமையாக குளித்துவிட்டு, மதிய உணவிற்கு வெளியே வந்துவிடலாம்.

 

திரும்பவும் குற்றாலம் திரும்பி பேக் செய்துவிட்டு, தென்காசிக்கு சென்று, அங்கு புகழ்பெற்ற சிவன் கோவில் உண்டு. அங்கு போய்விட்டு, ரயிலில் ஏறிவிடலாம்.

 

இது நல்ல பிளான். ஆகையால் யோசியுங்கள். ஏதாவது சந்தேகம் இருந்தால் அழையுங்கள்.

 

-        - இரா. முனியசாமி

9551291721

0 பின்னூட்டங்கள்: