> குருத்து: மொபைல் அடிக்சன் எந்த அளவிற்கு பாதிக்கிறது?

June 25, 2026

மொபைல் அடிக்சன் எந்த அளவிற்கு பாதிக்கிறது?


 

1.    1.  வேலை தொடங்கும் திறன் குறைகிறது

 

பலர் கவனிப்பது இதுதான். ஒரு வேலை செய்ய அமர்கிறார்கள். அப்போது ஒரு WhatsApp செய்தி வருகிறது. "இதற்கு மட்டும் பதில் சொல்லிவிடலாம்" என்று நினைக்கிறார்கள்.

 

அதிலிருந்து YouTube. அதிலிருந்து Facebook. அதிலிருந்து செய்திகள். அரை மணி நேரம் எங்கே போனது என்று தெரியாது. வேலையைச் செய்வதில் உள்ள சிரமம் அல்ல, வேலையைத் தொடங்குவதிலேயே சிரமம் உருவாகிறது.

 

2. ஆழமாக சிந்திக்கும் திறன் குறைகிறது

 

வரி ஆலோசனை, சட்ட ஆய்வு, கணக்குப் பணி, எழுத்துப் பணி போன்ற வேலைகளுக்கு தொடர்ச்சியான சிந்தனை தேவை.

 

மொபைல் தொடர்ந்து கவனத்தை உடைத்துக்கொண்டே இருந்தால், மூளை "ஆழமான வேலை" (Deep Work) செய்ய முடியாமல் போகிறது.

அதன் விளைவு சாதாரண விஷயங்களிலும் தவறுகள் , கணக்கில் கவனக்குறைவு , ஆவணங்களை முழுமையாகப் படிக்க இயலாமை ,மேலோட்டமான புரிதல்

 

3.      நினைவாற்றல் பலவீனமாகிறது

 

முன்பு ஒரு தொலைபேசி எண், ஒரு முகவரி, ஒரு சட்டப் பிரிவு எண் மனதில் இருக்கும். இப்பொழுது "தேவைப்பட்டால் Google பார்க்கலாம்" என்ற மனநிலை உருவாகிறது. தகவலை நினைவில் வைத்துக்கொள்வதற்கு பதிலாக, தகவல் இருக்கும் இடத்தை மட்டும் நினைவில் வைக்கத் தொடங்குகிறோம்.

 

4. முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படுகிறது

 

மொபைல் உலகம் உடனடி இன்பத்தை தருகிறது. ஒரு வீடியோ  ஒரு Like  ஒரு Message  ஒரு Notification  எல்லாமே உடனடி மகிழ்ச்சி.

 

ஆனால் வாழ்க்கையின் முக்கிய வேலைகள் -  தொழில் வளர்ச்சி தேர்வு தயாரிப்பு , புதிய திறன் கற்றல், உடல்நலம் , இவை எல்லாம் தாமதமான பலனைத் தருபவை. அதனால் நீண்டகால நன்மையை விட உடனடி மகிழ்ச்சியைத் தேர்வு செய்யும் பழக்கம்  ருவாகிறது.

 

5. வேலை நேரம் அதிகரிக்கிறது

 

இது ஒரு வித்தியாசமான பிரச்சினை. ஒரு வேலையை 2 மணி நேரத்தில் முடிக்க முடியும். ஆனால் இடையில் 20 முறை மொபைல் பார்த்ததால், அதே வேலை 5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.

 

பிறகு:  "வேலை அதிகம்" என்று தோன்றுகிறது. உண்மையில் வேலை அதிகமாகவில்லை. கவனம் சிதறியது.

 

6. மனஅழுத்தம் அதிகரிக்கிறது

 

செய்ய வேண்டிய வேலைகள் முடிவதில்லை. நாள் முடிவில் குற்ற உணர்வு வருகிறது. "இன்று என்ன செய்தேன்?" என்ற கேள்வி எழுகிறது. இதுவே மனஅழுத்தத்திற்கும் தன்னம்பிக்கை குறைவிற்கும் வழிவகுக்கிறது.

 

மொபைல் அடிமைத்தனம் என்பது நேரத்தைத் திருடும் திருடன் மட்டும் அல்ல.

அது மெதுவாக: கவனத்தைத் திருடுகிறது,  சிந்தனையைத் திருடுகிறது,  நினைவாற்றலைத் திருடுகிறது,  வேலை முடிக்கும் திறனைத் திருடுகிறது.

 

ஒரு நாள் முழுவதும் மொபைலில் இருந்தவர் சோர்வாக இருப்பார். ஆனால் அவர் கடினமாக உழைத்ததால் அந்த சோர்வு வரவில்லை. ஆயிரம் சிறிய கவனச்சிதறல்களால் மூளை களைத்துப் போனதால் அந்த சோர்வு வருகிறது.


இறுதியாக...

 

மொபைல் அடிமைத்தனத்தின் மிகப்பெரிய பாதிப்பு நேர இழப்பு அல்ல. தனது வாழ்க்கையைத் தானே நடத்தும் திறன் மெதுவாகக் குறைவதுதான் அதன் மிகப்பெரிய விலை.

 

-          இரா. முனியசாமி

 

#Mobile_Addiction_Series2

0 பின்னூட்டங்கள்: