> குருத்து: குழந்தைகள் கேட்டது பொம்மை அல்ல... பெற்றோர்களின் நேரம்!

June 25, 2026

குழந்தைகள் கேட்டது பொம்மை அல்ல... பெற்றோர்களின் நேரம்!

 

குழந்தைகள் கேட்டது பொம்மை அல்ல... பெற்றோர்களின் நேரம்!

 

"உங்கள் குழந்தையின் நினைவில் நிற்பது நீங்கள் வாங்கி கொடுத்த பொருள் அல்ல; நீங்கள்  கவனத்துடன் அவர்களுடன் செலவழித்த நேரம் தான்”

 

****

2018-ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு வித்தியாசமான ஊர்வலம் நடந்தது. பொதுவாக மக்கள் தெருவில் இறங்கினால் என்ன கேட்பார்கள்? சம்பள உயர்வு கேட்பார்கள். சாலை கேட்பார்கள். தண்ணீர் கேட்பார்கள். மின்சாரம் கேட்பார்கள்.

 

ஆனால் அந்த நாள் தெருவில் இறங்கியது குழந்தைகள். அவர்களது கோரிக்கையும் வித்தியாசமானது. "எங்களுடன் விளையாடுங்கள்; உங்கள் மொபைலுடன் அல்ல!" என்று பதாகை தூக்கிக்கொண்டு நடந்தார்கள். இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்தது 7 வயது சிறுவன் Emil என்றால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.

 

சில குழந்தைகள், "நாங்கள் இங்கே இருக்கிறோம். ஆனால் நீங்கள் மொபைலைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்றும் எழுதிக்கொண்டு வந்திருந்தார்கள்.

 

செய்தியைப் படித்தபோது முதலில் சிரிப்புதான் வந்தது. ஜெர்மனியில் கூட இதற்காகவா போராட்டம்? பிறகு கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சிரிப்பு மெதுவாக மறைந்துவிடுகிறது. ஏனென்றால் அது ஜெர்மனியின் பிரச்சினை மட்டும் அல்ல. அது நம்முடைய வீட்டுக் கதையும் கூட.

 

ஒரு காலத்தில் வீட்டில் குழந்தைகள் அம்மா அப்பாவைத் தேடினார்கள். இப்போது சில வீடுகளில் குழந்தைகள் அம்மா அப்பாவின் முகத்தைக் காண்பதற்கே நேரம் தேட வேண்டியிருக்கிறது.

 

காலை எழுந்ததும் மொபைல். உணவு சாப்பிடும்போது மொபைல். பயணத்தில் மொபைல். இரவு தூங்குவதற்கு முன் மொபைல். சில நேரம் பார்த்தால் வீட்டில் நான்கு பேர் இருப்பார்கள். ஆனால் நான்கு பேரும் நான்கு உலகத்தில் இருப்பார்கள்.

 

ஒருவர் காணொளி பார்க்கிறார். ஒருவர் குறுஞ்செய்தி அனுப்புகிறார். ஒருவர் விளையாட்டு விளையாடுகிறார். மற்றொருவர் சமூக வலைத்தளத்தில் மூழ்கியிருக்கிறார்.

 

வீடு இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. ஆனால் உரையாடல் இல்லை.  ஒரு குழந்தைக்கு உண்மையில் என்ன வேண்டும்?

 

பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொம்மையா? புதிய மிதிவண்டியா? புதிய உடையா? இல்லை. அது அப்பாவிடம் ஒரு கதையைச் சொல்ல வேண்டும். அம்மாவுடன் ஐந்து நிமிடம் சிரித்துப் பேச வேண்டும். பள்ளியில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  அவ்வளவுதான்.

 

குழந்தைகளின் ஆசைகள் பெரியவை அல்ல. நாம் அவற்றைக் கவனிக்காததால்தான் அவை பெரியதாகத் தோன்றுகின்றன.

 

ஒரு சிறுவன் சொன்னதாக ஒரு வரி படித்தேன். "அப்பா, உங்கள் கையில் இருக்கும் மொபைலுடன் நான் போட்டி போட முடியவில்லை." இந்த ஒரு வரி போதும். குழந்தை தோற்றுப் போய்விட்டதாக ஒப்புக்கொள்கிறது.

 

அப்பாவை வெல்ல வந்தது இல்லை. அப்பாவின் கவனத்தில் ஒரு சிறிய இடம் கேட்டது. அதுவும் கிடைக்கவில்லை.

 

வாழ்க்கையில் ஒரு விசித்திரமான உண்மை இருக்கிறது. பணம் சம்பாதிக்காமல் இருந்தால் பிறகு சம்பாதிக்கலாம். வீடு கட்டாமல் இருந்தால் பிறகு கட்டலாம். வண்டி வாங்காமல் இருந்தால் பிறகு வாங்கலாம். ஆனால் குழந்தையின் பத்து வயதை பிறகு வாங்க முடியாது. அதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய கணக்கு.

 

இன்று உங்கள் அருகில் உட்கார்ந்து பேச விரும்பும் குழந்தை, பத்து ஆண்டுகள் கழித்து தனது உலகத்தில் பிஸியாகிவிடும். அப்போது நேரம் இருக்கும். ஆனால் அந்த வயது இருக்காது.

 

ஒரு நாளில் ஒரு மணி நேரம் கூட வேண்டாம். இருபது நிமிடம் போதும். மொபைலை ஓரமாக வைத்துவிட்டு, "இன்று என்ன நடந்தது?" என்று கேட்டுப் பாருங்கள். குழந்தையின் முகத்தில் வரும் ஒளி எந்த திரையிலும் கிடைக்காது.

 

இறுதியாக...

 

ஜெர்மனியில் குழந்தைகள் தெருவில் இறங்கி போராடியது உணவுக்காக அல்ல. புதிய பொம்மைக்காக அல்ல. பெற்றோரின் நேரத்திற்காக. குழந்தைகள் நம்மிடம் கேட்பது பணத்தை அல்ல. நேரத்தை.

 

அவர்கள் எதிர்பார்ப்பது பரிசுகளை அல்ல. நம் இருப்பை.

 

-        -  இரா. முனியசாமி

 


புகைப்படம் : ஜெர்மனியில் அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சிறுவர்களில் ஒரு பையனின் படம்.


0 பின்னூட்டங்கள்: