யூடியூப்பில் குழம்பு வகைகளைத் தேடும் பொழுது, மழைக்காலத்திற்கேற்ற குழம்பு என கனகா பாட்டி கருவேப்பிலை குழம்பு சொன்னார். செய்துப் பார்த்துவிடலாம்.
தேவையான பொருட்கள் : நல்லெண்ணெய். கொஞ்சம் வெந்தயம். கொஞ்சம் உளுந்தம் பருப்பு. கொஞ்சம் கடலைப் பருப்பு. கொஞ்சம் பெருங்காயம். காய்ஞ்ச மிளகாய், கொஞ்சம் மிளகு. ஒரு கைப்பிடி கருவேப்பிலை. கொஞ்சம் மஞ்சள். கொஞ்சம் புளி. அதை ஒரு கிண்ணத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைத்துவிடுங்கள். (மிளகும், காய்ஞ்ச மிளகாய்களும் போடுவதால், உரைப்பைக் கொஞ்ம் தணிய வைக்க.. கொஞ்சம் அரிசி சேர்த்துக்கொள்ள சொன்னார். நான் தவிர்த்துவிட்டேன்.)
செய்முறை : கொஞ்சம் வடைச் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக்கொள்ளவும். (மற்ற சமையல் எண்ணெய்களும் ஊற்றலாம். நல்லெண்ணெய் ரெம்ப நல்லது. ) வெந்தயம் போடவும். கொஞ்சம் வறுபட்டதும், காய்ஞ்ச மிளகாய் போடுங்கள். பிறகு உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, பெருங்காயம் எல்லாம் போட்டு வதக்கி முடித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, கையளவு கருவேப்பிலையை போடவும். வடைச் சட்டி சூட்டிலேயே வதக்கவும்.
இதில் சின்ன ட்விஸ்ட். இந்த மசாலா கூட்டணியில் கொஞ்சம் பூண்டு, வெங்காயம், தேங்காய் போட்டாலும் நன்றாகத் தானே இருக்கும். ஏன் கனகா பாட்டி சொல்லவில்லை என யோசித்தால்… கனகா பாட்டி வீட்டில் பூண்டும், வெங்காயமும் பயன்படுத்த மாட்டார்கள் என அவர் பேசிய பேச்சில் புரிந்துகொண்டேன். அதனால் என்ன! நாம் சேர்த்துக்கொள்வோம் என முடிவு செய்து… நாலு பல் பூண்டு, ஒரு பெரிய வெங்காயம், கொஞ்சம் தேங்காயும் சேர்த்துக்கொண்டேன்.
வதக்கியதை எடுத்து கொஞ்சம் ஆற வைத்து, ஜாரில் மாற்றி, மிக்சில் அரைத்து எடுத்து வைத்துக்கொண்டேன்.
இப்பொழுது மீண்டும் வடைச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து போட்டு தாளித்தேன். கருவேப்பிலை கொஞ்சம் போடலாம். (ஆனால் வேண்டாம். ஏற்கனவே கருவேப்பில்லை குழம்பு என்பதால் தவிர்க்க சொன்னார் கனகா பாட்டி.) ஊறவைத்த புளிக் கரைசலை ஊற்றினேன். கொஞ்ச நேரத்தில் கொதிக்க ஆரம்பித்ததும், கொஞ்சம் மஞ்சள் போட்டு, அரைத்த வைத்த மசாலாவை அதில் கவிழ்த்தேன். ஏற்கனவே வறுபட்ட மசால் என்பதால், ரெம்ப நேரம் கொதிக்கவிட தேவையில்லை. (பாட்டி கொஞ்சம் வெல்லம் சேர்த்துக்கொண்டார். நான் தவிர்த்துவிட்டேன்.)
பார்ப்பதற்கு பச்சை நிறத்திலான சுவையான கருவேப்பிலை குழம்பு தயார். கொஞ்சம் கொத்தமல்லி இருந்தால் தூவிக்கொள்ளலாம். கைவசம் இல்லாததால் போடமுடியவில்லை. பாட்டி கூட இதைச் சொல்லவில்லை. நான் தான் சொல்கிறேன். இதற்கு பொருத்தமாக சுட்ட அப்பளம் பொருத்தம் என்றார்.
சொல்லிக்கொடுத்த கனகா பாட்டிற்கு நன்றி.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment